Sunday, September 7, 2014

ஸ்ரீ ஹரி ஓம் அம்மா!


பவள சங்கரி
“துறவியரில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் காமத்தையும் செல்வத்தையும் துறந்துவிட்ட பிறகும்கூட, பெயர், புகழ் ஆசையால் விலங்கிடப்படுகிறார்கள். மாபெரும் உள்ளங்களுக்கும் கடைசியாக உள்ள பலவீனம் புகழில் உள்ள ஆசை” 
சுவாமி விவேகானந்தர்
நம் இந்தியத் திருநாடே ஆன்மீகம் என்னும் அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட ஒரு மாபெரும் கோட்டை என்பதே உலகறிந்த உண்மை. நம் நாட்டில் மட்டுமே பல மதங்கள், பல இனங்கள், பல தெய்வங்கள், ஒவ்வொன்றிற்கும் ஒருவிதமான தத்துவங்கள், எண்ணற்ற வழிபாட்டு முறைகள் என்று திரும்பிய புறமெல்லாம் ஏதோவொரு ஆன்மீகச் சின்னம் நம் கண்ணில் பட்டவாறே இருக்கும். அந்த வகையில் துறவறம் பூண்டு, நாட்டை விட்டு காட்டில் சென்று தவம் புரிந்த சங்க காலத்தின் சக்கரவர்த்திகளாகட்டும், சகல செல்வங்களும் கொட்டிக்கிடக்க, எந்தச் சுகமும் தேவையில்லை என்று துறந்து தெருவில் இறங்கிச் செல்லும், செல்வந்தராகட்டும், நாகரீக உலகில் பிறந்து, வளர்ந்தாலும் இளமை முதல் எதிலும் எதுவித நாட்டமும் இன்றி, இறைமையை அல்லும், பகலும் மனதிலேற்றி மெல்ல, மெல்ல துறவை நாடியோராகட்டும், அனைவரின் இலக்கும் இறைவனை அடைவது என்பதோடு, உள்ளத் தூய்மையும், அதனால் பெறக்கூடிய மன நிம்மதியும்தான். அந்த வகையில், இறைவனின் படைப்பில் ஒவ்வொரு மலரும் ஒரு தனிப்பட்ட குணமும், மணமும், நிறமும் கொண்டிருப்பது ஆச்சரியப்படத்தக்கது. இயல்பாகவே பெண்கள் இளம் வயதிலிருந்தே, தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் தனி விருப்பம் கொண்டவர்களாக இருப்பவர்கள். ஒரு இளம் பெண் மனதில் ஆசா, பாசங்கள் அனைத்தும் மறைந்து, அன்பும், அமைதியும், பேரானந்தமும் நிலைத்து நிற்கும் வண்ணம் துறவு நிலையை தேர்ந்தெடுப்பது என்பது சாமான்ய காரியம் அல்ல. பிறவியிலேயே அப்படி ஒரு எண்ணம் வாய்க்கப் பெற்றவர்களுக்கே இது சாத்தியம் என்பதே நிதர்சனம்.
வண்ண வண்ணச் சிற்றாடையுடன், சிங்காரம் செய்து, இன்பமாய் வலம் வரும் காலத்தில், பாண்டியும், பல்லாங்குழியும் விளையாடும் பருவத்தில், தூய வெண்ணாடையை உடுத்தி, அதே தூய்மையை உள்ளத்திலும் புகுத்தி, மங்கையரில் தாம் ஒரு தனி ரகம் என்பதை ஆச்சரியமாகக் காணச் செய்துள்ளவர் ஸ்ரீ ஹரிஓம் அம்மையார் அவர்கள். தம் இளம் பருவத்திலேயே இறைவனின் மீது நாட்டம் கொண்டு, இயற்கையாய் ஒரு இளம் பெண்ணிற்கு உள்ள எந்த உணர்வினாலும் ஆட்படாமல், அறிவும், இறைமையும் தம் இரு கண்களாக எண்ணி தம் வாழ்நாளைத் தவமாக கழித்துக் கொண்டிருப்பவர். அதற்கு இணையான ஆசிரியப் பணியில் தம் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி, எண்ணிலடங்கா பெண் குழந்தைகளை ஒழுக்கச் சீலர்களாக உருவாக்கியுள்ள பெருமை அம்மையாரையேச் சேரும். தாம் புனிதமாகக் கருதியத் தம் ஆசிரியப் பணியிலும், மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர், 72 வயது நிரம்பிய ஸ்ரீஹரிஓம் அம்மையார் அவர்கள்.

ஒரு மனிதரின் தனிப்பட்ட அடையாளத்தை அவருக்கே புரிய வைப்பவரே நல்லாசிரியர் என்பவர். இளம் சிறார்கள், ஊக்கம், தன்னம்பிக்கை , விடா முயற்சி ஆகிய நற்பண்புகளைக் கொண்டு ஒரு நாட்டின் சிறந்த குடிமகனாக உருவாகுவதற்கு ஆசிரியத் தொழில் பெரும்பங்கு வகிப்பதை எவரும் மறுக்க இயலாது. அந்த வகையில் சுயநலம் மட்டுமே கருத்தில் கொண்டு, தம் ஆன்மா கடைத்தேற வழிவகுக்கும் எண்ணம் மட்டுமேயன்றி, சமுதாயத்திற்கும் தம்மால் ஆன சேவையைச் செய்துள்ள மன நிறைவையும் பெற்று ஈரோடை மாநகரின், அவல் பூந்துறை கிராமத்தில், பெரியமணியம்பாளையம் என்னும் புனிதமான இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூர்ண வித்யா குருகுலத்தில் தம் தவ வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும், அம்மையாரைச் சந்தித்து உரையாடினோம்.
 paval
வினா : துள்ளி விளையாடும் பருவத்திலேயே, தூய வாழ்வைப் பற்றிய சிந்தை தோன்றியதன் பிண்ணனி குறித்து அறியத் தாருங்கள் அம்மா.
அம்மா: ஆம். இளம் வயதிலேயே எனக்கு ஆழ்ந்த வாசிப்பின்பாற் ஈடுபாடு ஏற்பட்டது. அதுவே எனக்குக் கிடைத்த வரமாக எண்ணுகிறேன். பத்து, பன்னிரெண்டு வயதிலேயே, மு.வரதராசனார் புத்தகங்களும், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ எனும் புதினமும் என்னை அதிகமாகவேக் கவர்ந்தன. ஆன்மீகமும், சரித்திரமும், தேச பக்தியும் என்னை ஆட்கொண்டது என்றே சொல்ல வேண்டும். நல்ல வாசிப்பு, ஒரு நல்ல மனிதனை உருவாக்குகிறது என்பதற்கு ஆதாரமே என் வாழ்க்கை. வளர் இளம் பருவத்திலேயே மற்ற குழந்தைகள் போல இயல்பான இச்சைகள் எதுவுமே எனக்கு இல்லாமலே போனது. வெள்ளை ஆடை உடுத்துவது மட்டுமே என் விருப்பமாக இருந்தது. உடன் பயின்ற மாணவர்களுக்கும் நான் ஒரு வித்தியாசமான பிறவியாகவே காட்சியளித்திருக்க வேண்டும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.
pavala2
வினா : ஆன்மீகப் பாதையில் தங்களின் வளர்ச்சி பற்றி சொல்லுங்களேன்
pavala1அம்மா: நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, என் பள்ளிக் கல்வியுடன், பற்றில்லாத ஒரு நிலையும் என்னையறியாமல் என்னுடன் வளர்ந்து வந்தது என்றே சொல்ல வேண்டும். பெற்றோர் (இவர் தந்தை பிரபலமான ஒரு மருத்துவராக இருந்தவர்) சகோதரிகள் என அனைவரும் என்னுடன் இருந்தபோதும், தனிமை மட்டுமே என் உள்ளொளியை பெருகச் செய்தது என்றே சொல்ல வேண்டும். அதன் காரணமாகவே என் முதுகலை கல்லூரிப் படிப்பை முடித்தவுடனே, வினோபாஜியின் மடத்தில் சென்று இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டேன். அங்குதான் தேசபக்தியும், என் ஆன்மீகமும் இணைந்த பயணம் தலை தூக்கியது. வினோபாஜியின் உரைகள் என்னை மென்மேலும் பண்படுத்தியதோடு, என் ஆன்மீகத் தேடலுக்கும் நிறைய நூல்கள் களம் அமைத்துக் கொடுத்தன. கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் தயாராக முடிந்தது.
வினா : தேச பக்தியும், துறவும் ஒன்றிணைந்து பயணிக்க இயலுமா?
அம்மா: இல்லை. என்னைப் பொருத்தவரை தேசப்பற்றும், என்னுள் இருந்த கலைப்பற்றும் என் ஆன்மீக வாழ்க்கைக்குத் தடையாகவே இருந்தது. நாட்டியம், பாடல், கவிதை எழுதுவது போன்ற கலைகள் நான் கற்றிருந்தேன். ஆனாலும் அதைச் சுமக்க விரும்பாமல் விட்டுவிட்ட பின்புதான் என் துறவு வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதாவது எதுவுமற்ற வெறுமையே வழிபாடு என்ற நிலை அரும்பியது. எந்தத் தேவையும் இருக்கவில்லை. தம் தொண்ணூறு வயதுகளில் இருந்த வினோபாஜியின் அறிவுரைகளும், வாழ்க்கை முறைமைகளும் எனக்குள் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்தியது. அதன் பின் ஆசிரியத் தொழிலைத் தேர்ந்தெடுத்து, மாணவச் செல்வங்களுக்கும் நல்ல ஆன்மீக ஒழுக்க நெறியுடன் இயைந்த கல்வியைப் புகட்ட முடிந்தது. என்னுடைய இந்த எழுபத்தி இரண்டு வயதிலும், இன்று திருமணம் ஆகி நல்ல நிலையில் வாழும் பெண்கள் பலர் தங்கள் அமைதியான வாழ்வின் ஆதாரமாக என் பயிற்சி முறைகள் இருந்துள்ளது என்று மகிழ்வுடன் சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
வினா: துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்த ஒருவர் நாட்டிற்கான சேவை ஏதும் செய்யத் தேவையில்லையா? குறிப்பாக அரசியலில் அவர்கள் ஈடுபடலாமா?
அம்மா : தேவையில்லை. சும்மா இருத்தலே துறவறம். (உண்மையான துறவிகளுக்கு). அவர்களின் இருப்பே நன்மை. ஏதும் செய்ய வேண்டிய தேவையே இல்லை.
வினா: புரியவில்லை அம்மா. சும்மா இருப்பதில் யாருக்கு என்ன நன்மை விளையப் போகிறது. நாட்டிற்கும், வீட்டிற்கும் நம் சக மனிதர்களுக்கும் கூட எந்த சேவையும் செய்யாமல் சும்மாயிருப்பதில் தன்சுகம் காண்பதன்றி வேறு என்ன நன்மை விளையப்போகிறது.
அம்மா: ஆம். உண்மையான துறவு நிலையை மேற்கொண்டிருப்பவர்களின் இருப்பே நாட்டிற்கு நலம் விளைவிப்பவை. ஒரு தீபச் சுடர் போல ஒளி பரவும். அந்த ஒளியில் எண்ணற்ற நலம் பெருகும்.
வினா: அப்படி ஒரு நல்ல அலை பரவும் என்ற நம்பிக்கையில் வாழ்நாள் முழுவதும் ஏதும் செய்யாமலே காத்திருப்பது சரியா? அப்படி ஒரு நிலை வந்துவிட்டது என்பதை ஒருவரால் உணர முடியுமா?
அம்மா: நிச்சயம் உணர முடியும். உண்மையான துறவு நிலையில் இருப்பவர்களுக்கு அந்த பேருண்மையை உணர முடியும். உள்ளத்தில் ஒரு நிரந்தர மகிழ்ச்சியும், அமைதியும் குடிகொண்டிருக்கும். தன்னைச் சுற்றி இருக்கும் சகல சீவன்களும் அதன் பலனை அனுபவிக்கவும் முடியும்.
வினா: அம்மா, தவறாக எண்ண வேண்டாம். என் ஐயம் தீர வேண்டியே இப்படி ஒரு வினா. துறவு நிலையில் இருப்பவர்கள் ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதே நலம் என்ற தங்களின் வாதம் உண்மையென்றால், சுவாமி விவேகானந்தர் நாடு முழுவதும் சுற்றி மக்களுக்கு நாட்டுப் பற்றை ஏற்படுத்தியதோடு, பல வெளிநாடுகளுக்கும் சென்று நம் நாட்டின் பெருமையை பரவச் செய்தாரே அந்த துறவறமும் சரிதானே?
அம்மா: நிச்சயமாக ஆம். சுவாமிஜி, நாட்டின் அப்போதையத் தேவையைக் கருத்தில்கொண்டு, மக்களுக்கு தேசப்பற்றுpavala4 வளரவேண்டும், சுதந்திரப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் தம் செயல்களை மேற்கொண்டிருந்தார். அதனால் நாட்டில் பெரும் நன்மைகளும் விளைந்தது. இந்து மதத்தை எப்படியும் உயர்வான நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு விதத்தில் அது அவருடைய மறைமுகமான ஒரு சுதந்திரப் போராட்டம் என்றே சொல்ல வேண்டும். நம் இந்தியாவில் சமஸ்கிருதம், வேதங்கள், உபநிசத்துகள் போன்ற பல அற்புதமான வளங்கள் இருக்கின்றன என்பதை உலக அரங்கில் எடுத்துச் சென்றார். அவருடைய உள்நோக்கம் துறவறம் என்பதைக்காட்டிலும், நாட்டுப் பற்று என்பதிலேயே இருந்தது. ஆனாலும் அவரும் தனக்குள் ஏதும் இல்லாமலேதான் இருந்தார். துயரப்படுவோருக்காக அவர் மனம் அழுதாலும், அவருக்குள் தனிப்பட்ட எந்தவிதப் பற்றும் இல்லாத வெறுமையே இருந்தது. அதுவே அவருக்கு வெற்றியையும் தந்தது.
வினா: அப்படியானால் துறவு நிலையிலும் வேறுபாடுகள் உள்ளது என்கிறீர்களா?
அம்மா : ஆம். அவரவர் சூழலுக்கேற்ப மாற்றங்கள் உண்டு. வாழ்க்கையில் படாத துன்பங்களெல்லாம் பட்ட பின்பு, துறவு நிலையைத்
தேர்ந்தெடுத்தவர் பலர் மிகவும் மனம் ஒன்றிய நிலை துறவில் இருப்பதை பார்த்திருக்கிறேன்.
வினா : காலம் குறித்து தங்களுடைய கருத்து என்ன? எதிர்காலம் பற்றி தங்களால் சொல்ல முடியுமா?
அம்மா: காலம் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இறந்த காலம் முடிந்துபோன ஒன்று. எதிர்காலம் நம் கையில் இல்லை. நிகழ் காலமென்றாலும் அடுத்த நொடி என்றாலே அது முடிந்துபோன காலம். ஆக காலம் என்பது இல்லாத ஒன்று. இருப்பில் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது…
வினா : உங்கள் குடும்பம் பற்றி?
அம்மா: ஒரு சன்யாசிக்கு இந்த உலகமே குடும்பம்தான். அவர்களுக்கென்று தனிப்பட்ட குடும்பம் இல்லை என்றாலும், தாய் தந்தை இல்லாமல் எவரும் பிறக்க முடியாது. என் தந்தை ஒரு பிரபல மருத்துவராக இருந்தவர். தாய் மிக நல்லதொரு ஆத்மா..
வினா: குடும்பம் எனும் சாகரத்தில் நீந்தி இன்ப துன்பங்கள் அனைத்தும் கடந்த நிலையில் பிற்காலங்களில் சன்னியாசம் பெறுவது நல்லதா? அது தேவையா?
அம்மா: நம் இந்து மதம் இதை வானப்பிரஸ்தம் என்று முழுமையாக ஆதரிக்கிறது. நம் முன்னோர்கள், அரசர் முதல் ஆண்டி வரை எண்ணற்றோர் அப்படி வானப்பிரஸ்தம் சென்றுள்ளார்கள். இன்றும் வயதான காலத்தில் பெற்றோர் பிள்ளைகளை விட்டு விலகி இருத்தலே நலம். அதற்காக காவி உடுத்தி காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதல்ல. மனதில் எந்த எதிர்பார்ப்பும், ஆசைகளும் இன்றி தனிமையில் அமைதியான நிலையை மேற்கொள்வதே தவம். வாழ்ந்து முடித்தவர்கள் வாழ வேண்டியவர்களுக்கு வழி விட்டு விலகி இருத்தலே சிறந்த தவம்.
வினா: அப்படியாயின் கூட்டுக் குடும்பம் என்ற ஒரு விசயமே தேவையில்லையா? தாத்தா, பாட்டி என்ற உறவு குழந்தைகளுக்கு அத்தியாவசியம் இல்லையா?
அம்மா: எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டு இருந்தாலே அமைதியான வாழ்க்கை கிடைக்கும். குடும்பத்தில் உழன்று கொண்டே இருப்பதால், தன் மன அமைதி, இறை நிலை ஆகிய அனைத்தும் இழக்க வேண்டியும் வந்துவிடுகிறது. மின் கட்டணமும், பால் அட்டையும், காய்காரி பிரச்சனையிலேயே வாழ்க்கையை ஓட்டிவிட்டு ஆன்மா கடைத்தேறும் வழியறியாது திகைத்து நிற்பதே முடிவாகிவிடும். அவரவர் கடமையை அவரவர் காலமறிந்து செய்வதே சிறந்த தவம். அதுவே மன அமைதிக்கும் வழி.
வினா: புனிதப் பயணங்கள் செல்வது தேவையா?
அம்மா: புனிதப் பயணங்கள் செல்வதன் மூலம் மனம் தூய்மை அடைகிறது. நம் முன்னோர்கள், புண்ணிய ஆத்மாக்கள் பாதம் பதிந்த மண்ணையும், ஆதிசங்கரர் போன்ற மகான்கள் கண்ணுற்ற தெய்வங்களை நாமும் தரிசிக்கும் போது நல்ல அலைகள் பரவும் வாய்ப்பு அதிகமாகிறது.
ஆனால் ஒரு துறவிக்கு அதுவும் தேவையில்லை. தானே இறைவனுமாய் இருப்போரே உண்மையான துறவிகள். காட்டில் சென்று அமைதியாக தனிமையில் வாழுவதே சிறந்த தவம்.
வினா: வினோபாஜியின் ஆசிரமத்தில் இருந்தபோது நீங்கள் கற்றுக்கொண்டவைகள் எவை?
booksஅம்மா: ‘கேதாரேஷ்வர் தாம்’ நதிக்கரையில் உள்ள அந்த ஆசிரமத்தில், வாழ்க்கையின் நெறி முறைகள் அனைத்தும் அங்குதான் கற்றேன். வினோபாஜியின் ஆசிரமத்தில் என்னுடைய இரண்டாண்டு வாழ்க்கையில் நான் தவ வலிமையும், யோகமும், வேத சாத்திரங்கள் மற்றும் உபநிசங்களும் ஞானமாய் பெற்றேன். ஒரு வேளை உணவு மட்டுமே உயிர் வாழப் போதுமானது என்று அங்கு பழகி வந்ததை கடந்த ஐம்பது ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறேன். அதனால்தானோ என்னவோ இந்த 72 வயதிலும் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அவரவர் உழைப்பிற்கேற்ற உணவு எடுத்துக்கொள்வதே சிறந்தது. சத்தான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்றாலும், கூலித் தொழிலாளி தன்னுடைய கடிமான வேலைக்குப் பிறகு சாப்பிடும் அதே அளவு உணவை உடலுழைப்பு அதிகம் இல்லாத அலுவலக அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்க்குத் தேவையில்லை. அந்த வகையில் துறவு நிலையில் சும்மா இருப்பவர்கள் இன்னும் கட்டுப்பாடான உணவுப் பழக்கம் கொள்வதே சரியாகும்.
வினா: தியானம் யாருக்கெல்லாம் அவசியம்?
அம்மா: தியானம் அனைவருக்கும் அவசியமான ஒன்று. குறிப்பாக குடும்பத்தில் உள்ளவர்கள் அன்றாடம் இருபது நிமிடங்களேனும் செய்ய வேண்டியது அவசியம். நான் தியானம் பயின்றது, தம்மகிரியில் கோயங்காவிடம். அதன் பிறகு தயானந்த சரசுவதி சுவாமிகளிடம் தியானம் பயின்றேன். நான் மிக அதிகமாகக் கற்றுக்கொண்டது என்றால் அது நுவரேலியாவில், காயத்ரி பீடத்தின், காயத்ரி சுவாமிகளிடம்தான். “கடைசி காலத்தில் நீ ஸ்ரீலங்காவில்தான் வந்து சேருவாய்” என்றும் சொல்லியிருக்கிறார் சுவாமிகள். தியானம் அன்றாடம் பயிற்சி செய்வதன் மூலமாக ஒரு மணி நேரத்தில் செய்யும் வேலையை அரை மணியில் முடிக்க முடியும்.
வினா : இன்றைய பெண்களின் நிலை பற்றி?
அம்மா: என் கருத்து சற்று மாறுபட்டும் இருக்கலாம். பாரதி சொல்வான், ‘பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை சாய்ந்துவிட்டார்’ என்று. ஆனால் அன்று பெண்களை அப்படி வீட்டில் பொத்தி வைத்திருந்ததாலேயே நம் இந்தியக் கலாச்சாரம் காப்பாற்றப்பட்டிருந்தது என்றே சொல்லலாம். அன்றைய காலகட்டத்தில் அது மிகவும் அவசியமானதாகவே இருந்தது. பல ஆயிரம் வருடங்களாக அந்நியர் பூந்துவிட்ட நாடு இது. நம்நாட்டில் திலகவதியார், மைத்ரேயி, மங்கையர்கரசியார் போன்ற எத்துனை மாதரசிகள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்குரிய சுதந்திரமும் இருக்கத்தான் செய்தது.
இன்றைய நிலையில் ஒரு பெண் அநாவசியமாக, இரவு நேரங்களில், பாதுகாப்பற்ற சாலைகளில் அச்சத்துடன் செல்வதைக் காட்டிலும், வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பதே முழுமையான சுதந்திரம் என்றே கூற முடிகிறது. பெண்கள் என்றுமே தங்களுக்கென ஒரு கட்டுப்பாடு வைத்துக்கொண்டு அதற்குள் வாழ்வது மட்டுமே சிறந்ததொரு வாழ்க்கை. சுதந்திரம் என்ற பெயரில் தேவையற்ற செயல்களைச் செய்து மாட்டிக்கொள்வதில் அல்ல சுதந்திரம். இன்று பெண்கள் கட்டாயமாக பணிக்குச் செல்ல வேண்டிய நிலையில், ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் துணிவு, அதாவது, அச்சமின்றி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியுடைவராகிறார். அதுமட்டுமல்லாமல், பெண்கள் பணிக்குச் செல்வதால், குழந்தை வளர்ப்பு பெரும் சவாலாகிவிடுகிறது. குழந்தைகளிடம் சில மணி நேரங்கள் செலவிடுவது கூட பெற்றோருக்கு இயலாமல் போகிறது. இதனால் இன்று குழந்தைகளின் மன நிலைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சம நிலை என்பதிலெல்லாம் பெரும் அர்த்தம் இல்லை. அவரவர் கடமையை அவரவர் சரிவர செய்வதே சிறந்த சமத்துவம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே இனிமையான வாழ்க்கை. அதை உணர்ந்து வாழவேண்டியதே இன்றைய தேவை.
மெய்ஞ்ஞான உணவை ஊட்டியது போதாது என்று நினைத்த அன்னை எங்களுக்கு அரிசிச் சாதமும், கொத்தமல்லித் துகையலும், தேங்காய் எண்ணெயும் கலந்து, தம் கைகளால் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொடுத்து வயிரையும் நிறையச் செய்தார்கள். மதிய நேரமான அந்த பகல் வேளையிலும், திறந்த வெளித் திண்ணையில், நல்ல நினைவலைகளின் பகிர்வுகளோடு, நிலாச்சோறு உண்ட மன நிறைவையும் ஏற்படுத்திய அன்னையை நெஞ்சில் சுமந்தபடி, அமைதியாக அவர் சிந்தைகளை அசை போட்டபடியும் வந்து சேர்ந்தோம், எங்கள் கடமைகளைத் தொடர....
நன்றி : வல்லமை

2 comments:

  1. //இன்றும் வயதான காலத்தில் பெற்றோர் பிள்ளைகளை விட்டு விலகி இருத்தலே நலம். அதற்காக காவி உடுத்தி காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதல்ல. மனதில் எந்த எதிர்பார்ப்பும், ஆசைகளும் இன்றி தனிமையில் அமைதியான நிலையை மேற்கொள்வதே தவம்.//

    இவை ..... நான் மிகவும் ரஸித்த மற்றும் உண்மையான வரிகள்.

    சிறப்பான பேட்டி. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோ. வை. கோ. அவர்களே.

    அன்புடன்
    பவளா

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...