Thursday, January 29, 2015

சுட்டும் விழிச்சுடர்!



பவள சங்கரி
சுட்டும் விழிச்சுடர்! (1)
http://www.vallamai.com/?p=54082


நம் இந்தியாவைப் பொறுத்த வரையில் பெண் குழந்தைகளை பெரும் சுமையாக நினைப்பதாலேயே பெண் குழந்தை என்று தெரிந்தால் அதை கருவிலேயே அழிக்கும் சூழலும் காணப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், அதாவது 1990 – 2010 இடையே சுமார் ஒரு கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஆண் பெண் குழந்தைகள் விகிதம் கவலை தருவதாக உள்ளதென கருக்கலைப்புக்கு எதிரான அமைப்பு CAMPAIGN AGAINST SEX SELECTIVE ABORTION(CASSA) தெரிவிக்கிறது. தமிழ் நாட்டில் மாநில விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் என்பதாக இருக்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மதுரை, தர்மபுரி,சேலம்,விழுப்புரம், அரியலூர்,பெரம்பலூர்,கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 க்கும் குறைவான பெண் குழந்தைகளே இருப்பதாக தெரிவிக்கிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 900 க்கும் குறைவான பெண் குழந்தைகளே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள்தான் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை நகர்புறங்களில் 946 ஆகவும், கிராமப் புறங்களில் சுமார் 900 ஆகவும் தான் இருக்கிறது. அதே நேரத்தில் படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவில் ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் இருக்கிறார்கள். ஹரியானா மாநிலத்தில் மிகக் குறைவாக 861 பெண்கள்தான் இருக்கிறார்கள்.

கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 6 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பாலின விகிதம் சென்னை மாவட்டத்தில் 21 புள்ளிகள் குறைந்து 950 ஆகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8 புள்ளிகள் குறைந்து 946 ஆகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 புள்ளிகள் குறைந்து 959 ஆகவும் உள்ளது. இந்த பாலின விகிதம் இயற்கையாக 985 ஆக இருக்க வேண்டும். ஆனால், மிகக் குறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
2012ம் ஆண்டு பிறப்பு விகிதம் குறித்து தகவல் ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 18 மாவட்டங்களில் மாநில சராசரி அளவை விட குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக 3 மாவட்டங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 900க்கும் குறைவாகவே உள்ளது. காஞ்சிபுரத்தில் 914, விழுப்புரத்தில் 889, மற்றும் கடலூரில் 896 ஆகவும் உள்ளது.
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறும் முறை, கிராமப்புற பெண்களைக் காட்டிலும், நகர்ப்புற பெண்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகவுள்ளது. இதன் விளைவாக, கடந்த, 50 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் அதிகளவில் குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைதான். பாலியல் வன்முறைகள், வரதட்சணை பிரச்சனைகள் போன்றவைகளே. பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பரவலாக இருந்தும், போராட்டமான வாழ்க்கைச் சூழலே பெண் குழந்தைகளின் பிறப்பையே பெற்றோர் அஞ்சும் அளவிற்குச் சென்று கொண்டிருப்பது வருங்காலத்திற்கு நல்லதல்ல.
ஆனால் எழுத்தறிவில் முன்னிலை வகிக்கும் கேரளா, இதில் முன்னுதாரணமாக விளங்குகிறது. இம்மாநிலத்தில், கடந்த, 50 ஆண்டுகளாகவே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரியானா, இமாச்சல பிரதேசம், மிசோராம் போன்ற பல்வேறு மாநிலங்களிலும், தனிநபர் வருமானம் அதிகமுள்ள, “இந்தியாவின் உணவுக் களஞ்சியம்’ என வர்ணிக்கப்படும் பஞ்சாப் மாநிலத்திலும், பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் அளவில் மிகப் பெரியதும், அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டதுமான உத்தரப் பிரதேச மாநிலத்தில், பெண்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது வேதனைக்குரிய விசயம். அதேபோன்று, நம் நாட்டின் தலைநகராகவும், உயர்வகுப்பினர் அதிகமாக வசிக்கும் பகுதியாகவும் விளங்கும் தில்லி மாநிலத்திலும், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்கிறது கணக்கெடுப்புகள். மேலும் நாட்டிலேயே ஆண் – பெண் விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலமாக அரியானா பட்டியலிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பெண்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள், குறைந்து வரும் ஆண், பெண் குழந்தைகள் விகிதத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவைகளைக் கருத்தில்கொண்டு, நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அரியானா மாநிலம் பானிபட் நகரில், ‘பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கும், கல்விக்கும் மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கான்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஒன்று சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 100 மீ. நீளமுள்ள கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இந்திய அஞ்சல் துறை சார்பில், “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற திட்டம் தொடர்பான சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனைக் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி 24ஆம் தேதி, ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ ( National Girl Child day ) கொண்டாடப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு சட்டப் பூர்வமாக பாதுகாப்பும் உள்ளது
இப்படி ஆக்கப்பூர்வமான பல்வேறு திட்டங்கள் போடப்பட்டிருந்தாலும் நடந்துகொண்டிருக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கையில், இவை யாவும் செயல்படாமல் ஏட்டளவிலேயே இருக்கிறதோ என்ற எண்ணமே தோன்றுகிறது. எங்கோ ஓரிரு நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஒரு முடிவிற்கு வரலாமா என்ற ஐயம் எழலாம். ஆனால் ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதோடு, பிரச்சனைகள் மென்மேலும் அதிகரிக்காமல் இருக்கும் விழிப்புணர்வும் வேண்டியது அவசியம். வெளியில் தெரியாமல் எத்தனையோ குழந்தைகள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பிரச்சனை அதிகமாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வேளைகளில் மட்டுமே அவை வெடித்து வெளியே சிதறுகின்றன. அந்த வகையில் நாட்டில் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமாயின் அவர்களுக்கு அதற்குரிய விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் வேண்டியது அவசியமாகிறது. பெண் குழந்தைகள் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு சட்டப் பூர்வமாக பாதுகாப்பு உள்ளது என்பதை அவர்கள் அறிந்து வைத்துக் கொள்வதோடு அது பற்றிய சரியான புரிதலும் அவசியம்.
அந்த வகையில் நாட்டில் அவ்வப்போது நடந்துகொண்டிருக்கும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்த சிறு அலசலே, ‘சுட்டும் விழிச்சுடர்’ எனும் இப்பகுதி. நாட்டு நலன் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொள்ளும் அனைவரும் இதில் பங்குகொண்டு தங்களுடைய வெளிப்படையான கருத்துகளை முன் வைக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
0133
முளையிலேயே கிள்ளி எறியப்பட்ட இளமொட்டு!
படத்திற்கு நன்றி- தினகரன்
படத்திற்கு நன்றி- தினகரன்
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே, காரைக்குறிச்சி புதூர் பகுதியை சேர்ந்த, கணவனை இழந்த, சாந்தி என்பவரின் மகள் அம்பிகா. பதினைந்து வயதான இச்சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சென்ற வெள்ளிக் கிழமை (ஜனவரி 24, 2015) வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அம்பிகா மதிய உணவு இடைவேளையின் போது, தன் வகுப்பு அறையிலேயே, தனது துப்பட்டாவின் மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து இறந்து விட்டார். காவல் துறை விசாரணையில், கடந்த மாதம் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில், அம்பிகா என்ற அந்தச் சிறுமி, குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் மனவேதனையில் இருந்ததாகவும், மதிப்பெண் குறைந்த விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“மாணவியின் மரணத்துக்குச் சொல்லப்படும் காரணம் சரியானதா என்ற ஐயம் ஏற்படுகிறது. இப்படிச் சாதாரண காரணத்திற்காகத் தற்கொலை செய்துகொள்ளும் அளவிலா நம் பெண்களின் மன முதிர்ச்சி இருக்கிறது?” – இப்படியும் எண்ணம் தோன்றலாம். உண்மையில் நாட்டில் ஆங்காங்கு நடந்துகொண்டிருக்கும் சில நிகழ்வுகள் இதனை உறுதிபடுத்தத்தான் செய்கிறது. பள்ளி, வீடு தவிர வேறு வகையான வெளித்தொடர்போ அல்லது பொழுதுபோக்கோ இருக்க முடியாத, தகப்பனும் இல்லாத, ஏழ்மையின் பிடியில் இருக்கும் ஒரு சிறுமிக்கு இது சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. தம் சக மாணவர்களின் முன்னிலையில் ஏற்பட்ட அவமானம் இப்படி ஒரு முடிவைத்தேடும் அளவிற்கு தூண்டியிருக்கலாம்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: “விரைவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், மாணவ, மாணவியரை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறோம். அந்த வகையில், மாவட்டம் முழுவதும், முதல் திருப்புத் தேர்வு நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியில் நடந்த திருப்புத் தேர்வில், இந்த மாணவி பங்கேற்க, தலைமை ஆசிரியர் அறிவழகன், வகுப்பாசிரியர் ராஜ் ஆகியோர் அனுமதிக்கவில்லை. மற்ற மாணவியர் தேர்வெழுதிய நேரத்தில், இந்த மாணவி மட்டும் வகுப்பறையில் தனிமைப்படுத்தப்பட்டார். முதல் தளத்தில் வகுப்பறை இருந்தாலும், இரண்டாம் தளத்தில் உள்ள அறையில் தான் திருப்புத் தேர்வு நடந்தது. முதல் தள வகுப்பறையில், தனிமையில் இருந்த மாணவி, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக, மாணவியை திருப்புத்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எழுத அனுமதிக்கவில்லை. அந்த மாணவியிடம், ‘பொதுத் தேர்வு எழுதினால், நீ பெயிலாகி விடுவாய்; அதனால் எழுத வேண்டாம்’ என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சில ஆசிரியர்களின் அணுகுமுறை சரியில்லாததால், மொத்த கல்வித்துறைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது”.
பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்று நாம் அனைவரும் உணர்ந்து அதற்கேற்றவாறு பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்ற முயற்சிக்கும் இவ்வேளையில் இது போன்ற பின்னடைவுகள் வேதனைக்குரியவை. பல செய்திகள் இது போன்று வந்த வண்ணமே உள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் தனியார் பள்ளிகளின் வரிசையில் தற்போது அரசு பள்ளியும் இணைந்திருப்பது அதிர்ச்சியான விசயம். ஆசிரியர்களின் அதிகப்படியான கெடுபிடியின் காரணமாக மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ‘சில ஆசிரியர்களின் அணுகுமுறை சரியில்லாதலால் மொத்த கல்வித்துறைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது’ என்று பட்டும்படாமல் பதில் சொல்லி தப்பிக்க முடியாது. மேற்கொண்டு மீண்டும் ஒருமுறை இது போன்ற அவலம் நடவாமல் காக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வளர் இளம் பருவத்தில், இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் மாணவர்களின் மன நிலையை அறிந்தவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு ஆசிரியப் பயிற்சியின்போது மனோதத்துவ முறையிலும் குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் முறையை பயிற்சியளிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பள்ளியிறுதித் தேர்வு சமயங்களில், இதைப்பற்றியெல்லாம் சிந்திப்பார் இருப்பதில்லை. 100 சதவீத தேர்ச்சி மட்டுமே இலக்கு என்ற வகையில், அதற்குத் தடையாக இருக்கும், படிக்க முடியாத குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்தி கற்கச் செய்வதை விடுத்து அவர்களை தேர்வு எழுத விடாமல் செய்வது எந்த விதத்தில் நியாயமாகும். இதனால் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் கடமை தவறியவர்களாகிறார்கள் என்பதே சத்தியம். தகப்பன் இல்லாத ஒரு பெண் குழந்தை, வசதி வாய்ப்பு இல்லாத, அரசு பள்ளியில் படிக்கும் ஒரு பெண் குழந்தையை எந்த அளவிற்கு அழுத்தம் ஏற்படுத்தியிருந்தால் அச்சிறுமி உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்குச் சென்றிருப்பார் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கல்வித் துறையும், அரசும் இனிமேலாவது விழித்துக்கொண்டு இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கி, இது போன்ற எண்ணம் இன்னொரு முறை மற்ற ஆசிரியருக்கு தோன்றாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்.
இது குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன் நண்பர்களே. நன்றி.

1 comment:

  1. கண்டிப்பாக விழிப்புணர்வு மேலும் பரவ வேண்டும்...

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...