Friday, May 29, 2015

அழகு மயில் ஆட ........ !பவள சங்கரி
நேற்று கோவையில் மருதமலை அடிவாரத்தில் அழகு மயில் அற்புதக் காட்சி காணக்கிடைத்த வரம்!
DSC_0091[1]
தண்டலை மயில்கள் ஆட,
தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம்
பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -
மருதம் வீற்றிருக்கும் மாதோ.
DSC_0086[1]
சோலைகளில் மயில்கள் ஆட, தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி நிற்க, மேகங்கள் மத்தளம் போலொலிக்க , குவளைக் கொடிகளின் மலர்கள் அழகிய கண்ணென விழித்துப் பார்க்க, நீர்நிலைகள் தம் அலைகளால் திரைச்சீலையாய் விரித்து காட்ட, தேனொத்த மகர யாழிசை போன்று வண்டுகள் இனிது பாட, மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்ததாம்… கம்பராமாயணத்தின் அற்புத வரிகள். கொண்டல் முழங்கின் மயில் ஆடும்; குவளை மலர்ந்திருக்கும் மாலைப் போதில் தாமரை குவிந்துவிடும், கோசல நாடும்,மருதத்தின் பீடும் என இரண்டையும் கம்பராமாயணத்தில் கம்பனின் கவிந‌யத்தில் கண்டு வியக்க வைக்கும் பாடல்களுள், இது கம்பர் கோசல நாட்டின் மருதநிலத்தின் வளத்தினை வர்ணிப்பதோடு அந்நாட்டின் செழிப்பினைத் திரையிட்டுக் காட்டுகிறது.

திருமுருகக்கடவுள்
DSC_0083[1]
‘மயில் வாகனன்’ என அன்புடன் போற்றப்பெறும் திருமுருகக் கடவுளுக்கும் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த மயிலுக்கும் மிகப் பழங்காலந்தொட்டே நெருங்கிய தொடர்பு இருந்துவந்துள்ளது. பண்டைக்காலத் தமிழகத்தில் குறிஞ்சி எனும் மலையும் மலைசார்ந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த நம் தமிழர்களிடையே தோன்றி வளர்ந்துள்ள வழிபாடாகவும் விளங்குகிறது. திருமுருகக் கடவுளின் அறுபடை வீடுகள், [திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர், திருஆவினன்குடி எனப்படும் பழநி, திருவேரகம் எனப்படும் சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணிகை ] திருமுருகக் கடவுள் விரும்பி அணியும் செங்காந்தள், கடம்பு போன்ற மலர்கள், திருமுருகக் கடவுளின் பேராற்றல் மிக்க வேற்படையாகத் திகழும் முருகவேல், திருமுருகக் கடவுளின் சிறப்பு வாகனமாகத் திகழ்வது மயில். சங்ககால இலக்கியத்தில் மலையும் மலைசார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் செழுமையையும் இயற்கை அழகையும் பிரதிபலிக்கும் பறவையாக விளங்கிய மயில் திருமுருகக் கடவுளின் சிறப்பு வாகனம். மயில் கருடனைப் போல் வானத்தில் அதிக உயரத்தில் பறக்கவல்ல ஆற்றலை உடையது எனவும், கடற்பகுதியுடன் தொடர்புடையது எனவும் கருதப்படுகிறது. நிலம், வானம், கடல் ஆகிய இயற்கையின் முக்கிய அம்சங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மயில் நம் தேசியப் பறவையாய் இருப்பதற்கு தகுதி வாய்ந்ததன்றோ.
DSC_0070[1]
இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டும் காணப்படும் ஒரு வகை பறவை நீல மயில் அல்லது இந்திய மயில். மாவீரன் அலெக்சாந்தரும் இந்தியாவிலிருந்து தம் நாட்டிற்கு மயில்களைக் கொண்டு சென்றதாக வரலாறு கூறுகிறது. பின் அங்கிருந்து உரோம் நாட்டிற்கும், மற்ற நாடுகளுக்கும் மயிலினம் பரவியதாகவும் கூறப்படுகிறது. மயில்களின் அகவல் மிக வித்தியாசமாக சூழலுக்கு ஏற்ப மாறுபடுகிறது என்பர். மயில்கள் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் வகையைச் சார்ந்தவை. குச்சிகளை பொறுக்கி வந்து கூடு கட்டும் குருவிகளைப் போலில்லாமல் மயில்கள் அந்த இடத்தில் உள்ள சருகுகளைச் சேர்த்தும், சிறிய பள்ளம் பறித்தும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கூடு கட்டிக் கொள்ளும். ஒரு தடவையில் 4 முதல் 6 முட்டைகள் வரை இடுமாம். வேறு பறவைகளின் கூட்டில் முட்டையிடுவதும் அரிதாக நடப்பதுண்டு. தாவர உணவு, மாமிச உணவு இரண்டையும் சாப்பிடுவதோடு பழங்களும், விதைகளும் அதன் முக்கிய உணவு. அத்திப்பழங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடும். கிழங்குகள், இலைகள், தேன் ஆகியவற்றையும் உண்ணும். புழு, பூச்சிகள், தவளைகள், கரையான்கள் பாம்புகள் கிடைத்தாலும் மகிழ்ச்சியாக சாப்பிடும். ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் ‘கண்’ வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. குறுந்தொகையில், ‘பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்சை’ என்று குறிப்பிடப்படுகிறது.
மற்ற மிருகங்களை விட மயில்கள் அதிகமாக தோட்டப்பயிர்களை நாசம் செய்யும் என்பதால் விவசாயிகளுக்கு இந்த அழகிய மயில் டைனசோர் போன்று பெரும் எதிரியாகவேத் தெரிகிறது என்பது வருத்தத்திற்குரிய விசயம். சமீபத்தில் ஒரு பெண் தன் தோட்டத்தை சூரையாடிக் கொண்டிருந்ததால் 16 மயில்களை விடம் வைத்துக் கொன்ற செய்தியை செய்தித்தாள்கள் மூலம் அறிந்தபோது வேதனை நெஞ்சையடைக்கிறது. 18-ம் நூற்றாண்டில் அட்லாண்டிக்கில் ஹெலனா தீவில் மயிலை அழகுப் பறவையாக நினைத்து வளர்க்கத் தொடங்கிய, சில ஆண்டுகளில் மயில்கள் நாடு முழுவதும் பெருகி விட்டதோடு, அவற்றிடம் இருந்து பயிர்களைக் காப்பது பெரும் பிரச்சினையாகியிருக்கிறது. அதன்பிறகு மயில்களுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அடியோடு அழிக்கப்பட்டு விட்டன.
இன்றும் நம் தேசியப் பறவையான மயிலினத்தைக் காப்பதற்கு அரசாங்கம் தகுந்த முயற்சி எடுக்கவில்லையென்றால் அடுத்த தலைமுறையினர் இந்த அழகிய பறவையை புகைப்படத்தில் மட்டுமே காணக்கூடும் என்பது வேதனையான செய்தி. வேட்டையாடுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் இவ்வபாயம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி  http://www.vallamai.com/?p=58102

2 comments:

 1. அழகு மயில்களுடன் கூடிய மிக அழகான பகிர்வு. கம்ப ராமாயண பாடலும் அதன் விளக்கங்களும் கொடுத்துள்ளதில் மேலும் மகிழ்ச்சி.

  நமது தேசீயப் பறவையான மயில்களை காப்பாற்ற நம் அரசாங்கம் தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் வழிசெய்யட்டும்.

  மக்களாகிய நாமும் நம்மால் ஆன ஒத்துழைப்புகள் அளித்து, மயில்களைப் பாதுகாத்துப் பார்த்து மகிழ்வோம். வரப்போகும் நம் தலைமுறைகளுக்காகவும் அவற்றைப் பாதுகாத்து பொக்கிஷமாக வைத்திருப்போம்.

  மயில் போன்ற அழகான இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. செய்தித்தாள் தந்த செய்தி மிகவும் வேதனைப்பட வேண்டிய விசயம்...

  ReplyDelete