Wednesday, June 24, 2015

கவிச்செருக்கு கண்ணதாசனின் உடன்பிறப்பு!


பவள சங்கரி
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      – பாரதி.

 images (1)
கன்னித்தமிழுக்குக் காவியமண்டபம் அமைத்து
பண்ணிசையால் பூமாலையும் தொடுத்து
ஆன்மீகம், ஆனந்தம், காதல், தத்துவம், சோகம்,
சுகமென, அனைத்தும் அடித்தளமாய் அமைத்து
கவிச்சொல் வீச்சின் மூலம் இப்புவியனைத்தையும்
ஆளும் பெருங்கவி! ‘படைப்பதால் நானும் இறைவன்’
“நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை” என்ற கவிச்செருக்கு
அவன் உடன்பிறப்பு! கவித்துளிகள் காலக்காற்றில்
கரைந்தொழியும் கற்பூரமாயிராமல், எதிர்க்காற்றில்
ஏறிப்பறக்கும் காற்றாடியாய் காவியமானவன், கண்ணதாசன்!!

தம்மை மறந்து தம்மையே அதனுள் கரைத்து
தன்னூன் கலந்து உயிர் கலந்து பொருளுணர்ந்து
இசையோடு இயைந்து இனிமையும் கலந்து
கருத்துடன் கவியாய்ப் புனைந்து சிந்தையள்ளும்
வன்மையுடாயாய்! கன்னித் தமிழ்நாட்டின்
வளமையான கழனியில் விளைந்த வளமான
செங்கரும்பின் அடிச்சுவையவன்! தனிக்கனியவன்!!
தரணிபோற்றும் தங்கமகன்! மனம்தளராச் சிங்கமவன்!!! …. பவளா


கம்பனின் புகழ் பாடும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்,images (2)
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
வையம் தருமிவ் வளமின்றி
வாழும் சுவர்க்கம் வேறுண்டோ?”
என்பார்.
 இப்படி கம்பன் கவியில் கட்டுண்டுடவர் கவியரசர் கண்ணதாசனும்தான்! ஆம். கம்ப ரசத்தை ஆழ்ந்து சுவைத்து அதன் சாரத்தையெல்லாம் தம் கவி மொழியில் திணித்து, நம்மைச் சுவைக்கடலில் திக்குமுக்காட வைத்திருக்கும் ஓர் அற்புதக் கவிஞன் நம் கண்ணதாசன்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனை, நம் கவியரசர் கண்ணதாசன் வாயாற புகழ்வதைப் பாருங்கள்……
பத்தாயிரம் கவிதை முத்தாக
அள்ளி வைத்த சத்தான
கம்பனுக்கு ஈடு இன்னும்
வித்தாகவில்லை என்று பாடு!
என்று கம்பனின் கீர்த்தியைப் பாடியவன் அப்பெரும் புலவனின் கவிதைகளின் தாக்கமே தம் பெரும்பாலான பாடல்கள் என்றும் பதிந்துச் சென்றிருக்கிறார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்தானே? இதோ அந்த ஒரு சில சோறுகள்…
1949ம் ஆண்டு, ‘கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலி’எனும் திரைப்படத்திற்காக  எழுதியது முதல் பாடல் என்றால் நம்புவது எளிதாகத்தான் இல்லை. மூன்றாம் பிறை என்ற திரைப்படத்தில் மிகவும் பிரபலமான,  `கண்ணே கலைமானே’ என்பதுதான் கவிப்பேரரசரின் கடைசிப் பாடல். உலகத்தோரின் உள்ளம் கொள்ளைகொண்ட அற்புதமும் இதில்தான்!
ஆலயமணி எனும் திரைப்படத்தில்  டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈசுவரி பாடிய இப்பாடல் கவிஞரின் திரைப்பாடல் பயணத்தின் ஒரு மைல்கல் எனலாம்.
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
அடடா.. அடடா…. இந்தத் தமிழ்க்காதலன்,
வார்த்தை விளையாட்டில் மன்னனவன்!!
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
ஆன்மீகமும், இலக்கிய நேசமும், காதல் சுவாசமும் என அனைத்தையும் ஒருங்கே ஓரிரு வரிகளில் உரைப்புடன் அழகாய் வசப்பட்டிருக்கிறது கவிஞருக்கு.
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி

தம் காதலியைக் கம்பன் கண்ட, சீதை மகளாகவும், சகுந்தலை எனும் சேயாகவும் காணும் காதலனின் மொழியை அம்பிகாபதியும், அமராவதியும் பாடுவதையும், அதைச் சுவைத்து மகிழும் பாவலரின் கதியும் நம் கண் முன்னே படமாக விரிவதை மறுக்கவும் இயலுமோ?
கண்மூடி, மனதை ஒரு நிலைப்படுத்தி, உள்ளத்தைச் சற்றே தெளிவாக்கி, அமைதியாக உட்கார்ந்து கொண்டு, அருகில் மெல்லிய ஒலியில், இந்தப் பாடலை ஒலிக்கவிட்டுப் பாருங்களேன். அப்போது தெரியும், இதன் அருமை.. ஆம், தவழ்ந்து வரும் தென்றலுடன், செந்தாழம் பூவின் மணமும் கமழ்ந்து வந்து மேலே மோதுவதை உணர முடியும்!  ஆனந்தத்தில் திளைக்கும் உள்ளமும் உரித்தாகும்..  வார்த்தைகளில் மந்திரத்தைப் புகுத்தி உன்மத்தமாக்கும் கலையில் வல்லவர் இந்த கவியரசர் என்பதே நிதர்சனம்! இதோ பாடலின் சில முத்தாய்ப்பான வரிகள்..
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை
மங்கை மோகக் கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ?

அடடா … இந்தக் காட்சி கண் முன்னே விரியும்போது உடலும் மெலிதாகி உடன் பறந்து மேகத்தினுள் நுழைந்து, பனிக்காற்றின் வருடலில் நெகிழ்ந்து நிற்கும் அனுபவத்தைப் பெறமுடியும்! கம்பன் செய்த வர்ணனை என்ற சத்தியப்பிரமாணமும் கொடுத்து, சாட்சிக்கு அழைத்துக்கொள்ளும் யுக்தி.
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப்
போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்

இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வான்
உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
மகிழ்ச்சியோ, கோபமோ, வேதனையோ அல்லது அன்போ எதுவாகிலும் அதனை அபரிமிதமாகக் காட்டும் வல்லமை பெற்ற கவியரசர்கள் ஆச்சரியத்திற்குரியவர்கள்.  பக்தியும், காதலும், ஊடலும், உன்மத்தமும் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் அழகைக் கூர்ந்து கவனிப்பவர்கள் தவிர்க்க இயலாது! அந்த வகையில் நம் கவியரசரின் சில பாடல்கள் நம் உள்ளத்தை உருக்கிக் கொள்ளை கொண்டுவிடும் என்பதே சத்தியம். இது ஒருநாள் நிகழ்வு அல்ல என்பதே உச்சம். ஆம், ஒவ்வொரு முறை கேட்கும்போதும் முதல் முறை கேட்கும்போது ஏற்பட்ட அதே அதிர்வு ஏற்படத்தான் செய்கிறது. இது எங்கனம் சில கவிஞர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது என்று சிந்திக்கும்போதுதான், சிலர் பிறவி ஞானம் பெற்று வருபவர்கள் என்ற கூத்தை ஒப்புக்கொள்ள வேண்டியவராகிறோம். இந்தப் பாடல் அப்படி ஒன்றுதான் இல்லையா?
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்….

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
மனிதர் வாழ்வில் மரணம் என்ற ஒன்று தவிர்க்கவே முடியாதது என்பதை நாம் அறியாதது அல்ல.  ஆனால் ஒரு அன்பு நண்பன், அருமைத் தோழன் அருகிருந்து கண் துடைத்து, ஆறுதளிப்பது போன்றதொரு நெருக்கம் இந்த எழுத்திற்கு எங்கனம் சாத்தியமானது?
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
எத்துனை யதார்த்தமான வாசகங்கள்! மனிதர் வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஊர்ந்து சென்று உறைந்திருந்து, உருவகப்படுத்தியுள்ள வல்லமையை என்ன சொல்லி பாராட்டுவது!
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

எத்துனை நம்பிக்கையான வார்த்தைகள்! ஒரு சரித்திரத்தையே ஒரு பாடலுக்குள் அடக்க முடியும் என்று ஆதாரம் கொடுத்துள்ள உன்னதம்!
‘அச்சம் என்பது மடமையடா,’ ‘மலர்ந்தும் மலராத.’ ‘போனால் போகட்டும் போடா..,’ ‘கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’  ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா,‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?’, ‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’, ‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே’, போன்ற இன்னும் எத்தனை, எத்தனை காவியங்கள் இக்கவிச்சக்கரவர்த்தியின் புகழ் பாடுபவைகள்!
//எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.//  தி.ஜானகிராமன் எழுதிய,  ‘சிறுகதை எழுதுவது எப்படி’ – என்ற கட்டுரையின் ஒரு பகுதி இது. கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கும் இது முழுமையாகப் பொருந்தும். நாமும் அன்றாடம் எத்தனையோ விதமான படைப்புகளை கடந்து வந்துகொண்டுதான் இருக்கிறோம். என்றாலும் ஒரு சில நேரங்களில், குறிப்பிட்ட ஒரு சில படைப்புகளே, ஒரு சில சூழல்களுக்கு உகந்ததாக, இதமாக அமையும். உதாரணமாக,
பாலும் பழமும் (1961) திரைப்படத்தில்,  எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், டி.எம். சௌந்தரராஜன் பாடிய, ‘போனால் போகட்டும் போடா’ என்ற பாடலை அதற்கான ஒரு துக்ககரமான சூழலில் கேட்டுப்பாருங்கள்.. அந்த துக்கத்தின் வலியை முழுவதுமாக உணர்ந்து ஓவென்று அழுது தீர்த்தபின்பு ஒரு ஆழ்ந்த அமைதியைப் பெற முடியும் என்றால் அதுதான் தெய்வத்தின் சன்னதி என்றே கூற முடியும் அல்லவா.. இதோ அப்படி ஒரு முத்தான, சொத்து!
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

எத்துனை யதார்த்தம்.. எத்துனை சத்தியமான வார்த்தைகள். அப்பப்பா கண்ணதாசனைத் தவிர யாரால் இப்படி எழுத முடியும்?
கவிஞர் கண்ணதாசன், தன்னைத்தானே கொஞ்சமும் தயவு  தாட்சண்யமில்லாமல், ஆய்வு  செய்து  கொண்டு அவர் வெளியிட்ட சில  அறிக்கைகள் பலவுண்டு… அதில் சில…
நானிடறி வீழ்ந்த இடம்  நாலாயிரம் அதிலும்    நான்போட்ட முட்கள் பதியும்
நடைபாதை வணிகனெனெ   நான்கூவி விற்றபொருள்    நல்லபொருள் இல்லை அதிகம்
மனிதர்களின் எல்லையற்ற கவலைகள், நோய்கள்,தேடல்கள், தவிப்புகள் போன்ற அனைத்தையுமே சமநோக்கோடு பார்த்ததன் விளைவாகக்  கவிஞர் கண்ணதாசன் எழுதிய அற்புதமான சொற்களே இவை.
காக்கை குருவியைப்போல் கவலையின்றி நீயிருந்தால்
யாக்கை கொடுத்தவனை யார்நினைப்பார் இவ்வுலகில்

சட்டியிலே வேகின்ற சத்தெல்லாம் சரக்கானால்
மட்டின்றிப் படித்துவந்த மருத்துவர்க்கு வேலையென்ன

கடலருகே வீற்றிருந்தும் கடுந்தாகம் வரும்பொழுதே
கடவுளெனும் ஒருவனது கைசரக்கு நினைவுவரும்
இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்க்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா எப்போதும் உன்வழக்கு

எல்லாம் அவன்செயலே என்பதற்கு என்னபொருள்
உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவே என்றுபொருள்  
கோடைநாளின்  சாலைவழிப் பயணத்தின் களைப்பான வேளையில் வழியில் தென்படும் படர்ந்த குளிர் நிழல்போன்ற இதமான வரிகள் இவை.
உலகில் தான் கண்ட எத்தனையோ விசயங்களின் மூலம்  தனக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றி கவிஞர் சொல்வதைப் பாருங்களேன்…
“ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்
காற்றிலும் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்
ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்
மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்
பார்த்தது கோடி பட்டது கோடி
சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்”
அனுபவங்களின் அமுத சாரமே கண்ணதாசன் கவிதைகள். பலமுறை, திரைப் பாடல்களில் சூசகமாகத் தமது சொந்தக் கருத்துகள், விருப்பங்களைப் பதிவு செய்து அவற்றை சம்பந்தப்பட்டவர் மட்டுமே அறிந்துக் கொள்ளும் வகையில் திறம்பட எழுதக் கூடியவர் கண்ணதாசன். இவர் திமுக கட்சியில் இருந்த போது காமராஜரின் மீது தனிப்பட்ட முறையில் பற்று கொண்டிருந்தாலும், தான் சார்ந்திருந்த கட்சிக்காக  தன் விருப்பத்தையும் மீறி, அவரை எதிர்க்க வேண்டிய சூழல் இருந்தது. இந்நிலையில் பட்டணத்தில் பூதம் என்ற  படத்துக்காக எழுதப்பட்ட ,  “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி” என்று எழுதினார். காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயாயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள் மட்டுமின்றி, தனிக்கவிதைத் தொகுப்புகள், நாவல்கள், இலக்கியத் திறனாய்வுகள், நாடகங்கள், சுயசரிதை என இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களிலும் பகலவனாய் பரிமளித்தவர் கவியரசர். தனது “சேரமான் காதலி” எனும் படைப்பிற்காக சாகித்ய அகாதமியின் விருதும் பெற்றார்.
இவையனைத்திற்கும் மேலாக, இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்ட கவிஞர் இவராகத்தான் இருக்க முடியுமோ என்றுதான் தோன்றுகிறது. எத்துனை துணிவு வேண்டும் இதற்கு.. மனிதர் ஒரு முறை தானே, தன் நெருங்கிய உறவுகள், நட்புகள் என அனைவருக்கும் தான் இறந்துவிட்டதாகச் செய்தி அனுப்பிவிட்டு உட்கார்ந்திருக்கிறாராம்.. அப்படி என்னதான் கற்பனை செய்திருப்பாரோ..?
அவருடைய சுய இரங்கற்பாவின்  இறுதி பத்தி இப்படி முடியும்…
போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்
   என்றவன்வாய் புகன்ற தில்லை;
சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்
   என்றவன்வாய் சாற்ற வில்லை;
கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
   படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்
   அவன்பாட்டை எழுந்து பாடு!

தனக்கே ஒரு கவிஞன் இரங்கற்பா பாடிக்கொண்ட புதுமையைச் செய்தவர் கவியரசு கண்ணதாசன். ஆம் ஒரு மனிதன் தன்னையே ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற தெளிவு ஆயிரமாயிரம் அறநூல்களை வாசிப்பதால் வருகிற தெளிவைக்காட்டிலும் தெளிந்தது.
“அவனது வாழ்க்கை அதிசயமான வேடிக்கை. அவசரத்தில் காரியம் செய்து, சாவகாசத்தில் சங்கடப்படுவது அவனது இயற்கையான சுபாவம். தவறுகளைப் புரிந்து கொண்டே அவற்றை மறந்து நியாயம் கற்பிக்க முயன்றான். அவன் மனம் அழுத பொழுதும் வாய் சிரித்துக் கொண்டிருந்தது. பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான்” – தன்னைப் பற்றிய சுயசரிதையில் எழுதிய வரிகள் தான் இது!

4 comments:

  1. என்னே இனிமையான பாடல்கள்... அனைத்தும் காலத்தால் அழிய முடியாது...

    நீங்கள் சொல்வது போல் தன்னைத் தானே விமர்சிப்பது என்பது பெரிய பெரிய விசயம்....

    ReplyDelete
  2. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (26/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  3. மரியாதைக்குரிய சகோதரி திருமதி. பவள சங்கரி அவர்களுக்கு வணக்கம்!

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (26.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

    நினைவில் நிற்போர் - 26ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/26.html

    ReplyDelete
  4. கவித்துளிகள் காலக்காற்றில்
    கரைந்தொழியும் கற்பூரமாயிராமல், எதிர்க்காற்றில்
    ஏறிப்பறக்கும் காற்றாடியாய் காவியமானவன், கண்ணதாசன்!!”

    மிக அருமையான வரிகள்!
    வல்லமை ஆசிரியராகத் தங்களை நன்கறிவேன். உங்கள் தளம் பற்றி இன்று தான் வை.கோபு சாரின் நினைவில் நிற்போர் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். http://gopu1949.blogspot.in/2015/06/26.html
    உங்கள் நூல்கள் பற்றியும் இன்று அறிந்து கொள்ள முடிந்தது. பாராட்டுக்கள்!
    நன்றியுடன்,
    கலையரசி.ஞா

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...