Monday, August 17, 2015

முச்சல்லடை சோதனை ? நட்பின் இலக்கணமா?

பவள சங்கரி



கிரேக்க நாட்டு பேரறிஞர் சாக்ரடீசு மிகப்பெரும் தத்துவவாதியும் கூட.  ஒரு நாள் ஏற்கனவே பரிச்சயமான ஒருவர் சாக்ரடீசிடம் வந்து, 

“உங்கள் நண்பரைப் பற்றி நான் கேள்விப்பட்ட ஒரு செய்தியை சொல்லவா?” என்றார்.

“ஒரு நிமிடம் பொறுங்கள்”, என்றார் சாக்ரடீசு. “என்னிடம் நீங்கள் எதுவும் சொல்வதற்கு முன்னால் ஒரு சிறு சோதனை உங்களுக்கு. முச்சல்லடை சோதனை என்று பெயர் இதற்கு, சரியா” 

“முச்சல்லடை சோதனையா?”


“ஆம், அதேதான்” என்றவாறு தொடர்ந்தார் சாக்ரடீசு. “என் நண்பரைப்பற்றி என்னிடம் பேசும் முன்னர் ஒரு நொடி சிந்தித்து நீங்கள் சொல்லப்போவதை வடிகட்டி சொன்னால் நலம். அதைத்தான் நான் முச்சல்லடை சோதனை என்றேன். அந்த முதல் வடிகட்டி உண்மை என்பது. அதாவது, நீங்கள் என்னிடம் சொல்லப்போகிற அந்த விசயம் முற்றிலும் உண்மை என்ற உத்திரவாதம் உள்ளதா?”

“இல்லை” என்றார் அவர். “உண்மையில் நான் கேள்விப்பட்டதைத்தான் சொல்ல. . . . .”

“சரி, சரி”. என்றவர், “அப்படியானால், இந்த விசயம் உண்மையா இல்லையா என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியாது. இப்போது அந்த இரண்டாவது வடிகட்டியை சோதிக்கலாமா, அதாவது நன்மை எனும் வடிகட்டி. என் நண்பரைப் பற்றி நீங்கள் சொல்லப் போவது ஏதாவது நல்ல விசயமா?”

“இல்லை, அதற்கு மாறானது”.

“அப்படியானால்” என்று இழுத்தவர், “அவரைப் பற்றிய ஏதோ கெட்ட செய்தியை என்னிடம் சொல்ல விரும்புகிறீர்கள், ஆனால் அது உண்மை என்ற உறுதியும் இல்லை. சரி எப்படியானாலும், இன்னொரு சோதனை இருக்கிறதே. நீங்கள் அதிலாவது வெல்லக்கூடும்; அடுத்தது பயன்படும்தன்மை குறித்த வடிகட்டி. அதாவது, என் நண்பரைப் பற்றி நீங்கள் கூற விரும்பும் செய்தி எனக்கு எந்த வகையிலாவது பயனளிக்கக் கூடியதா?”

“இல்லை. உண்மையில் இல்லை”.

“நல்லது, நீங்கள் என்னிடம் சொல்ல விரும்பும் செய்தி உண்மையும் இல்லை, நன்மையும் இல்லை அல்லது பயனளிக்கப்போவதும் இல்லை எனும்போது என்னிடம் எதற்கு அதை நீங்கள் சொல்ல வேண்டும்?” என்று கேட்டு அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் சாக்ரடீசு!

நன்றி : வல்லமை

1 comment:

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...