Friday, September 18, 2015

குற்றமும் தண்டனையும்! (புறநானூறு)


பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார். 
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி. 
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி.
purananooru
வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!

பொருளுரை:
தம்மை வணங்கி வழிபடுபவர்களை, அவர்தம் முகக்குறிப்பால் மனநிலையை தாமே அறிந்து அவருக்கு உதவுவீராக! பிறர்மீது குற்றம் சொல்பவரின் சொற்களையும் ஆய்ந்தறிந்து தெளிவு கொள்வீராக! உமது மனத்தால் ஆய்ந்தறிந்து அதன் உண்மையுணர்ந்து பின் உறுதியாக அது குற்றம்தான் என்பதைக் கண்டறிந்தால், நீதி நூற்களில் கூறியுள்ளபடி அதற்கான தண்டனையைத் தருவீராக! மனம் திருந்திய அவர் மீண்டும் வந்து உன் பாதத்தில் வீழ உன் முன்னால் நிற்பாரானால் இயல்பாகவே கருணையுள்ளம் கொண்ட நீவிர், அதனினும் அதிகமாக அருள்காட்டி அவருக்களித்த தண்டனையையும் குறைப்பீராக! உம்மை நாடி வரும் விருந்தினர்க்கு அமிழ்தினும் இனிய சுவையுடன் கூடிய, நறுமணமுடைய தாளிப்பு பொருட்களுடன் கூடிய உணவை, குறைவில்லாமல் வழங்கி மற்றவரால் குறை சொல்ல முடியாத வாழ்க்கையையும், உமது மகளிர் உம்மோடு ஊடல் செய்வதன்றி, பகை வேந்தரும் உம்மோடு போர் செய்யத் துணியாத, அதாவது மகளிர்பால் மென்மையும், பகைவர்பால் வன்மையும் காட்டும் இயல்பினையுடைய, இந்திர விற்போன்ற மாலையையுடைய மார்ப! ஒரு தொழிலைச் செய்து பின் பிழைக்கச் செய்தோம் என்று கருதாத செய்கையையும், நெடுங்காலம் புகழுடன் விளங்கும் நெய்தலங்கானலென்னும் ஊரையுடைய நெடியோனே; நின் பல நற்குணங்களையும் புகழவே வந்தோம் யாம்.
ஜென் கதை பார்க்கலாமா…
சீத்சூதர் என்னும் ஒரு மகான் அன்றாடம் மாலை நேரத்தில் தம் சீடர்களுக்கு நன்னெறிகள் உபதேசம் செய்வது வழக்கம். ஒரு நாள் திருடன் ஒருவன் கத்தியுடன் வந்தவன், அத்துறவியிடம், “பணத்தைக் கொடு அல்லது உயிரை எடுத்துவிடுவேன்” என்று மிரட்டினான். ஆனால் அம்மகானோ சற்றும் பதட்டமடையாமல், “என்னை தொந்திரவு செய்யாதே.. பணப்பெட்டி அதோ பார் அங்கே இருக்கிறது. சத்தமில்லாமல் எடுத்துக்கொண்டு போ” என்று சொல்லிவிட்டு பாடத்தைத் தொடர்ந்தார். அந்தத் திருடனும் ஆகா வந்த வேலை இவ்வளவு எளிதாக முடிந்துவிட்டதே என்று மகிழ்ச்சியுடன் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினான். வெளியில் செல்ல காலை எடுத்து வைத்தவனை அத்துறவியின் குரல் நிறுத்தியது. “ஏனப்பா பணத்தையெடுத்துக் கொண்டாயே, அந்தப் பரிசிற்கு ஒரு நன்றி கூட சொல்லத் தெரியாதா உனக்கு” என்று கேட்டார். அவனும், “அது சரி. ஒரு நன்றிதானே.. இந்தாங்க.. வாங்கிக்கோங்க..” என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக ஓடிவிட்டான். அடுத்த முறை எங்கோ திருடப் போனவன் காவலர்களிடம் மாட்டிக்கொண்டான். அதுவரை அவன் திருடிய பணத்திற்கெல்லாம் கணக்கு கொடுக்க வேண்டிவந்தது. அப்போது அவன் நீதிபதியிடம் துறவியிடம் எடுத்த பணத்தையும் கணக்கு சொன்னான். நீதிபதியும் அத்துறவியை வரவழைத்து அப்பணத்திற்கான கணக்கைக் கேட்டார். அப்போது அத்துறவியார் நீதிபதியிடம், “நான் அவருக்கு அப்பணத்தை பரிசாகத்தான் கொடுத்தேன். அதற்காக அவர் நன்றியும் சொல்லிவிட்டார். அதனால் என்னை சேர்க்க வேண்டியதில்லை” என்று சொல்லிச் சென்றுவிட்டார். சில ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பிறகு அத்திருடன் நேராக அத்துறவியாரிடம் வந்து சீடனாகச் சேர்ந்தவன், இறுதி வரை நல்ல மனிதனாக வாழ்ந்தான்..

http://www.vallamai.com/?p=62074

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...