Monday, December 28, 2015

கிருஷ்ண.. கிருஷ்ணா .......

பவள சங்கரி


கிருஷ்ணா உனக்கொரு கரும்பு!

மிகச் சிறந்த கிருஷ்ண பக்தர் அவர். எந்நேரமும் ‘பாண்டுரங்கா - விட்டலா’ என்ற நாமம் மட்டுமே அவருடைய உயிர் மூச்சு. அந்த மகானிடம் ஒரு நாள் ஒரு மனிதர் ஒரு கட்டு கரும்பைக் கொடுத்து தம் அன்பைச் செலுத்தினார். அந்த கிருஷ்ண பக்தரோ தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களையெல்லாம் அழைத்து, ‘கிருஷ்ணா இந்தா உனக்கொரு கரும்பு’ என்று அனைத்துக் குழந்தைகளையும் கிருஷ்ண பரமாத்வாகவேக் கண்டின்புற்று அனைத்து கரும்புகளையும் கொடுத்துவிட்டாராம். இறுதியில் ஒரு கரும்பு மட்டும் மீதமிருக்கிறது. அதை தமது சரிபாதி அங்கமான மனைவியிடம் கொண்டு சென்றுக்கொடுத்தாராம். அந்த அம்மையாரும் அதைப் பிடுங்கி அவர் தலையிலேயே ஓங்கி அடித்தாராம். கரும்பு இரண்டாகப் பிளந்துவிட்டதாம். உடனே அந்த மகான் அதையெடுத்து மீண்டும் தம் மனைவியிடம் ‘கிருஷ்ணா இந்தா உனக்கொரு துண்டு, எனக்கொரு துண்டு’ என்றாராம். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு மனிதர்,

“ஐயா, உங்கள் தலையில் ஓங்கி அடித்த அம்மையாரிடமும் எப்படி உங்களால் இத்தனை அன்பு செலுத்த முடிகிறது? கோபமே வரவில்லையா தங்களுக்கு?” என்று ஆச்சரியமாக வினவினாராம். அதற்கு அந்த மகான்,

“ஐயனே, நான் அவர்மீது கோபப்பட என்ன இருக்கிறது. என்னை பக்குவப்படுத்திய நல்லதொரு ஆன்மா அல்லவா அவர்! நான் நன்றியல்லவா செலுத்தவேண்டும்” என்றாராம்.

இதுவல்லவோ ஆன்மீகம் என்பது. ஆனால் இன்று காண்பதெல்லாம் இதற்கு மாறாகவல்லவா இருக்கிறது. நன்மையும் தீமையும் பிறர்தர வாரா. அவரவர் வினைவழி அவரவர் வாழ்க்கை. ஆன்மீகம், நாட்டுப்பற்று என அனைத்தும் விலை பேசப்படுவதே விதியாக உள்ளது. நேர் வழியில் சேவை செய்ய விரும்புபவர்களும் குறுக்கு வழியிலேயே நுழைய வேண்டிய நிலையே இன்று நாட்டின் தலையெழுத்தை நிர்மாணிக்கிறது என்று எண்ணும்போது நம் எதிர்காலத்தை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை.

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...