Friday, February 12, 2016

மனிதன் சூழ்நிலைக் கைதியா? (சுட்டும் விழிச்சுடர்)பவள சங்கரி
காட்டிலோ, நாட்டிலோ ஒரு கொடிய மிருகத்தின் பிடியில் தனியாக அகப்பட்டுக்கொண்ட மனிதனின் நிலை என்ன? துணிச்சலும், சமயோசிதமும் தப்பிக்கவும், தற்காத்து உயிர் பிழைக்கவும் வழியமைக்குமா?

tiger_attack
பல மாதங்களுக்கு முன் தில்லி உயிரியல் பூங்காவில் +2 படிக்கும் மாணவர் ஒருவரை பூங்காவின் வளர்ப்பு மிருகமான வெள்ளைப் புலி ஒன்று அடித்துக் கொன்றது நினைவிருக்கலாம். இன்றைய நவீன உலகில் எதுவும் சாத்தியம் என்பதற்கிணங்க தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அந்தப் புலி அம்மாணவனின் சதையைக் கிழித்து உயிரைக் குடிக்கும் கொடூரமான காட்சியை ஒருவன் நிதானமாகப் படம் பிடித்துள்ளான். பிரம்மாண்டமாக தம் எதிரில் கோரப் பற்கள் காட்டி நிற்கும் புலியை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், அதை அறியும் வல்லமையும் இன்றி செய்வதறியாது சுவற்றுடன் சுவராக ஒடுங்கி, கையை ஆட்டி நெருங்காதே நெருங்காதே என்று கெஞ்சிக் கேட்கும் ஒரு பரிதாபமான சீவனை, தன் கண் முன்னால் ஒரு அப்பாவி இளைஞன் கடித்துக் குதறப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு காப்பாற்ற முயற்சி எடுக்க எவருக்கும் தோன்றவில்லை என்பதோடு கல் மனதின் உச்சமாக ஒருவர் அதை காணொலிக் காட்சியாகப் பதிவு செய்து உலகம் முழுவதும் பரவவிடுகிறார். மனிதாபிமானம் என்பதன் சுவடே அறியாத ஒரு கொடூர மனம் படைத்தவனாகத்தான் அந்த மனிதனைக் காண முடிகிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும் நவீனத்துவங்களும் மனித நேயத்தை முற்றிலும் அழித்துவிடுமோ என்று அஞ்சவும் தோன்றுகிறது.
images
சென்ற ஆண்டு 2015, ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் ஒரு பூங்காவில் நீண்ட நடைப் பயணம் மேற்கொண்ட கலைஞர் கிரா கோபெஸ்டோன்ஸ்கி என்பவருக்கு நேர்ந்த மற்றொரு அனுபவத்தைப் பார்க்கலாம். பல முறை இது போன்று தனிமையில் நீண்ட பயணம் செல்லும் வழமையுடையவர் என்றாலும் இவர் ஒருபோதும் காட்டு மிருகங்களை நேருக்கு நேர் கண்டவரில்லை. அன்று நடந்து கொண்டிருந்தவரின் பின்புறம் ஏதோ விநோதமான சத்தம் கேட்டதைத் தொடர்ந்து தன்னிச்சையாகத் திரும்பியவர் கண்களில்பட்டது மூன்று, நான்கு மீட்டர் இடைவெளியில் நெடிதுயர்ந்த ஒரு உருவம். அவ்வளவு நெருக்கத்தில் அத்தனை உயரமான ஒரு மலைச் சிங்கத்தை முதன் முதலில் கண்டவரின் கால்கள் பின்னிக்கொண்டதென்னவோ உண்மைதான். என்றாலும் அவர் தம்மை திடப்படுத்திக்கொண்டு சட்டென்று ஓடாமல், மெதுவாக பின்புறம் நகர ஆரம்பித்தார். அந்த சிங்கமும் மெல்ல முன்னேறுகிறது. கிரா நின்றுவிடுகிறார்; அந்தச் சிங்கமோ பதுங்குகிறது… (பாய்வதற்கோ?) உடனே கியாரா தன்னை ஒரு பெரிய வேட்டைக்காரர் போலக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையை வளைத்துப் பிடித்துக்கொண்டு நிற்கிறார். ஆனால் அந்த காட்டு ராசா அதற்கெல்லாம் மசியவில்லை. அடங்காமல் நிற்கிறது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கிராவின் எந்த விதமான அசைவுகளையும் சட்டை செய்யாமல் மெல்ல முன்னேறுகிறார் அரசர். இன்னும் சில அடிகளே இடைவெளி! கிராவிற்கு எப்படியும் அந்த கொடிய மிருகத்தின் தாக்குதலிலிருந்து தப்பிவிட வேண்டும் என்ற மன உறுதி மட்டும் இருந்தது. ஆனால் அதன் கண்களில் இருந்த வெறியும், அதன் பிரம்மாண்ட உருவமும் தப்பிப்பது சாத்தியமா என்ற ஐயத்தையும் கொடுக்காமல் இல்லை. அடுத்து இன்னும் தீவிரமாக முயற்சி எடுக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டார். சுரப்பிகள் எல்லாம் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. அடுத்து அவர் எடுத்த விவேகமான ஒரு முடிவுதான் அவரை காப்பாற்றியதோ?
ஆம், கிராவின் அடுத்த நடவடிக்கை தம் பலம் முழுவதும் திரட்டி உச்சக் குரலில் ஓபராவின் பாடலைப் பாடியதுதான்! இசைக்கேட்டால் புவியே அசைந்தாடுமே! ஆச்சரியம், ஆனால் உண்மை. சிங்க ராசா மெல்ல பின் வாங்கினாராம். தம் காதுகளை தரையோடு வைத்தவர் பார்வையை உயர்த்தி கிராவை உற்று நோக்கியவாறு மெல்ல பின் வாங்கியவர் பின் திரும்பிப் போயேவிட்டார்! முயற்சி திருவினையாக்கிவிட்டது. பின் அவர் தம் தோழர்களை அழைத்து நடந்ததைக் கூறி அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.
அந்த கொடிய காட்டு விலங்கிடமிருந்து தப்பித்தது குறித்து உயிரியலாளர் அமி ரோட்ரிக்ஸ், விலங்குகள் உலகில், ஓடிக்கொண்டிருப்பவையெல்லாம் உணவுகள் என்பது எழுதப்படாத சட்டம். தரையில் அழுத்தமாக நின்றுகொண்டு, பலமாக ஒலியெழுப்பிக்கொண்டிருந்ததால் அந்தச் சிங்கம் அது தனக்கான உணவு இல்லை என்பதை உணர்ந்துகொண்டு திரும்பிச் சென்றுவிட்டது என்றார். ஆக அந்த சிங்கம் கிராவின் பாட்டில் பயந்து ஓடிவிட்டதுபோலும்!
காட்டு விலங்கிடமிருந்து தப்பிக்க ஒரு உபாயம் இருப்பது போன்று நாட்டு விலங்குகளிடமிருந்தும் தப்பிக்க வழியா இல்லை. தேவையானவையெல்லாம் சற்று நிதானமும், தெளிவான சிந்தனையும்தான். தேவையற்ற அச்சமும், படபடப்பும்தான் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கிவிடக்கூடியது. பிரச்சனையை சமயோசிதமாக சமாளித்த சாமர்த்தியமான மங்கையிவள்!
அமெரிக்காவில் காவல்துறை அவசர அழைப்பு எண் 911. ஒரு அமெரிக்க இளம் பெண் ஒரு குடிகார ஆண் நண்பனிடம் தனியாக மாட்டிக்கொண்டவள் மீண்டு வருவதற்கு ஒரு உபாயமும் கண்டுபிடித்தாள். தாம் குடிகாரனிடம் மாட்டிக் கொண்டிருப்பதை காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டிய சூழலில், அவனும் அதே அறையில் இருந்ததால் நேரடியாக புகார் அளிக்க முடியாத நிலை. அவள் காவல் துறை எண்ணான 911 என்பதற்கு அழைப்பு விடுத்து பீசா கடைக்குப் பேசுவது போல பேசுகிறாள். எதிர் முனையில் காவல் துறையினர் இது காவல் நிலைய அவசர உதவி, பீசா கடை அல்ல என்று சொன்னபோதும் அப்பெண் மீண்டும், மீண்டும் பீசா தேவை என்றும், அவசரம் என்றும் குறிப்பால் உணர்த்த, காவல் துறையினரும் சூழ்நிலையை ஒருவாறாக புரிந்துகொண்டவர்கள் அது பற்றிய கேள்விகளைக் கேட்டு புரிந்து கொண்டதோடு விரைவில் வந்து அப்பெண்ணை காப்பாற்றியும்விட்டனர். மனம் இருந்தால் மார்கமுண்டு என்பதை உணர்ந்த அந்தப் பெண் சமயோசிதமாக தன்னைக் காத்துக்கொண்டாள்.
பிரச்சனைகள் எவ்வளவுதான் பூதாகரமாக, உயிர் குடிக்கும் நிலையில் இருந்தால்கூட, தெளிந்த சிந்தனையுடன் அணுகும்போது மீண்டு வரும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை மேற்கண்ட சம்பவங்கள் உணர வைக்கின்றன அல்லவா…
தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு திசம்பர் 16-ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் பாலியல் வன் கொடுமைக்கும், குற்றவாளிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகி சில நாட்களுக்குப் பின் மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயாவை மறக்கவும் முடியுமா.. இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தூக்கிலிட்டுக்கொண்டான். மற்ற நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில், நிர்பயாவை உடல்ரீதியாக அதிகம் துன்புறுத்தி காயப்படுத்தியதில் 17 வயதேயான ஒரு சிறார் குற்றவாளிதான் முக்கிய நபர். குற்றம் நிகழ்ந்தபோது அவருக்கு 17 வயதுதான் ஆனது என்ற காரணத்திற்காக சுமார் 3 ஆண்டுகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது 20 வயது நிரம்பியுள்ள நிலையில், விடுதலையாகி வெளியுலகுக்குச் செல்லும் அந்த சிறார் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. தில்லி மகளிர் ஆணையம் சார்பில் சனிக்கிழமை இரவு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்பதாகக் கூறி விட்டது. நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு இரவு 2 மணிக்கு இந்த மனுவை விசாரித்து, பிறகு ஒத்திவைத்தது. இந் நிலையில் 21.12.2015 அன்று மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. சிறார் தண்டனை சட்டத்தில் கட்டாயம் திருத்தம் கொண்டு வரவேண்டிய நிலையில் அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நிர்பயாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் தில்லியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நிர்பயாவிற்கு ஆதரவு தெரிவித்து கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். நம் நாட்டில் திருத்தப்பட வேண்டிய பழம்பெரும் சட்டங்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாக முடங்கித்தான் போக வேண்டுமோ என்னவோ. காலம்தான் பதில் சொல்லக்கூடும்.
இது தொடர்பான மற்றொரு முக்கியமான விசயம் இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் சிறார் மேம்பாடு துறை மந்திரி மேனகா காந்தி கூறியுள்ள செய்திதான். அதாவது  மைனர் குற்றவாளியின் தண்டனை நீட்டிக்க முடியாத நிலை உள்ளதால், விடுதலைக்குப் பின் அந்த குற்றவாளி வேறொரு குற்றம் செய்யும் வரை ஒன்றும் செய்ய முடியாது. நீதியை சட்டத்துடன் இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது. மைனர் குற்றவாளி சிறார் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று சட்டம் தான் சொன்னது. சட்டப்படி தண்டனை முடிந்து மைனர் குற்றவாளி தற்போது விடுதலை ஆகிறார். விடுதலைக்குப் பின் அவர் வேறொரு குற்றம் செய்யும் வரை ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான்.  மத்திய மந்திரியாக உள்ள மேனகா காந்தி, இந்த வழக்கில் போதிய நீதி வழங்கப்படவில்லை என்று நேரடியாகக் கூறியுள்ளது சட்டத்தின் மீதான விமர்சனமாகத்தான் கருதப்படவேண்டியுள்ளது.

நன்றி : வல்லமை http://www.vallamai.com/?p=66319

No comments:

Post a Comment