Tuesday, March 8, 2016

சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்




சுவாமி விவேகானந்தரின் பார்வையில் பெண்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படத் தொடங்கிய இந்து மத மறுமலர்ச்சியில் உருவான உன்னதமான பல ஞானிகளில் நம் சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மகான். பெண்களை துறவு வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும் மாய சக்தியாகக் காணும் பல துறவிகளுக்கிடையே சுவாமி விவேகானந்தர், மிக வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தார். சீதை மற்றும் சாவித்திரி. போன்ற கதாப்பாத்திரங்களை ,பெண்களைப் பற்றிய தம் நோக்கிற்கு முன்னுதாரணமாகக் கொண்டிருந்தார். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். இந்தியப் பெண்களின் தூய்மை, அன்பு, பக்தி போன்ற மேன்மையான குணநலன்களைப் பாராட்டியுள்ளார். இந்தியப் பெண்களின் பெருமை என்றும் அவர்தம் தாய்மையிலேயே பிரகாசிக்கிறது என்கிறார். பெண்கள் சுதந்திரமும் வளர்ச்சியும் பெறுவதற்கு அடிப்படையான கல்வியைப் பெறுவதன் மூலமாக தங்களுக்குத் தேவைப்படும் சீர்திருத்தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொள்வார்கள். வெறும் புத்தகப் படிப்பை அளிப்பதைக் காட்டிலும், பெண்களுக்கு மதத் தத்துவங்கள், கலை, சுகாதாரம், ஆரோக்கியம், குடும்ப பராமரிப்பு, சமையல், தையல், அறிவியல் போன்ற அனுபவப் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும் என்கிறார். இளம் வயது திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதே இந்திய நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்.

1920-இல் மகாகவி பாரதியார் , ‘மாதர்களைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் அபிப்ராயம் ’ என்ற கட்டுரையை எழுதினார். அதில் அவர், பெண்கள் நிலை, பெண் விடுதலை பற்றிய தமது கருத்துகளை தமக்கே உரிய பாணியில் ஆராய்ந்திருக்கிறார். கடைசியில் அவர் அந்தக் கட்டுரையை கீழ்கண்டவாறு முடித்தது குறிப்பிடத்தக்கது:

” இங்கு ஸ்வாமி செய்திருக்கும் உபதேசத்தையும், இதனைச் செய்யும் படி தூண்டிய பேரன்பையும் கைக்கொள்வோமாயின், பாரத தேசத்து ஸ்திரீகளுக்கு பரிபூர்ணமான விடுதலை கிடைத்துவிடும்! அதனின்றும் பூ மண்டலத்துக்கு நன்மை உண்டாகும்”. என்கிறார்.
சுவாமிஜியின் வேத வாக்குகள்:
மேன்மக்கள் அனைவருமே பெண்மையை மதிப்பவர்கள். பெண்மையை மதிப்பவர்கள் அனைவரும் மேன் மக்களே.
மேன்மக்கள் அன்புகாட்டி பெண்களை அடிமை கொள்ள மாட்டார்கள். மாறாக, பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்து அதன் மூலம் அவர்கள் முன்னேறுவதையே விரும்புவார்கள்.
பெண்மைக்கு ஆதாரமாய் உள்ள தெய்வீக சக்தியைப் புரிந்துகொண்டு அதை வணங்குதலே அதற்குரிய மரியாதை.
Manliness எனப்படும் ஆண்மைப் பண்புகள் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் உரியது ஆண்மை என்பது வீரம் மாத்திரமல்ல; பொறுமை, அன்பு, தியாகம், சேவை, செயல்வேகம், சிந்தனைத்திறன் போன்றவைகளும் அதில் உள்ளடங்கும்.
நல்ல சூழ்நிலையில் பெண்களின் கற்பு மலர் போல் இருந்து நல்லவர்களின் மனங்களை மேம்படுத்துகிறது. அதே சமயத்தில் சூழ்நிலை பாதகமாகும்போது பெண்களின் கற்பு சுட்டெரிக்கும் நெருப்பாகித் தீயவர்களைச் சுட் டெரிக்கிறது.
பெண்களை ஆளும் ஆதிக்கங்கள் அநேகம் உள்ளன. கணவன் - மனைவி உறவில் ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மாமியார்- மருமகள் உறவில் பெண்களைப் பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதேபோல ஆண்களை அடக்கி ஆளும் பெண்ணாதிக்கமும் இருப்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
ஒவ்வொரு பெண்ணும் தன் உடல், உள்ளத்தின் பலவீனங்களுக்குத் தன்னைத் தானே அடிமையாக்கிக் கொள்ளும் ஆதிக்கங்களிலிருந்து பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் விடுபட்டு ஆன்ம சுதந்திரத்தில் திளைக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் ஆன்ம ஆற்றலை உணர்ந்து அதை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வேண்டும். இதில் ஆண் பெண் என்ற பேதமின்றி இருவருக்கும் சம வாய்ப்பும், உரிமையும் உள்ளன.

No comments:

Post a Comment