Thursday, April 21, 2016

வைராக்கியம்பவள சங்கரி
‘இளமையில் கல்’ என்றார்கள். கற்க ஆவல் கொண்ட மாணவர்கள் அனைவரும் தங்கள் விருப்பம்போல கற்க முடிகிறதா என்றால் இல்லை என்பதே வருந்தத்தக்க விசயம். அறிவும், ஆற்றலும் இருப்பவருக்கு பள்ளிக்கட்டணம் கட்டவோ, நோட்டுப் புத்தகம் வாங்கவோ வசதியில்லாமல் ஏழ்மை வாட்டி வதைக்கலாம். எல்லா வசதியும் இருக்கும் இளைஞனுக்கு படிப்பில் நாட்டம் இல்லாமல் போகலாம். பெற்றோரின் கட்டாயத்திற்காக மட்டுமே படித்துக்கொண்டு வருவான். இன்னும் சில குழந்தைகளுக்கோ பிறவிக் குறைபாடு போன்ற பிரச்சனைகளால் கல்விக்கூடம் செல்வது என்பதே பெற்றோரின் பகற் கனவாகிவிடுகிறது. இப்படி ஒரு சிலரின் வாழ்க்கையில் அடிப்படையான கல்வி என்பது ஒரு சரித்திரமாகவே மாறிவிடுகிறது.  ஆனால் எப்படியும் கல்வி கற்றே தீரவேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருப்பவர்களுக்கு, அந்த எண்ணமே அவர்களுக்கு அதை ஏதேனும் ஒரு வழியில் அதை செயல்படுத்திவிடுகிறது.
மரம் ஏறத்துணியும் ஒருவருக்கு பின்னால் தாங்கிப்பிடிக்க கை கொடுக்கலாம். சற்றே மேலெழும்போது நம் கையை இயன்ற அளவிற்கு நீட்டி அவருக்கு உதவலாம். இன்னும் சற்று மேலெழும்பும்போது நம் குதிங்காலை சற்றே உயர்த்தி அவரைத் தூக்கிவிடலாம். இறுதியாக நம் தோளின்மீது தம் பாதம் பதித்து ஏறவும் பொறுக்கலாம். அதைத்தாண்டி அவர்தான் அந்த மரத்தின் உச்சத்தை அடைய முயலவேண்டும் எவருடைய உந்துதலும் இன்றி. அப்படி ஏறும்போது சுற்றி இருக்கும் கிளைகளின் வலிமையறிந்து அதன் உதவியுடன் மெல்ல மெல்ல உச்சியைத் தொடவேண்டும். நிறை, குறைகளைக்கடந்து தமது உச்சத்தை நெருங்கும் வைராக்கியமும், விடாமுயற்சியும் எவரிடம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வாழ்க்கையின் வெற்றிப்படியை நெருங்கவியலும்.
சிரீகாந்த் போலா என்பவர் ஐதராபாத் நகரைச் சார்ந்த  பார்வையற்ற 24 வயது இளைஞர். இந்த வயதில் தொழிற்துறை வட்டத்தில் பெரிய கதாநாயகனாக வலம்வருபவர். ஆனால் அவருடைய கடந்த காலம் பற்றி நாம் அறிய வேண்டும். இவர் பிறந்தபோது இவருடைய பெற்றோர் ஆண்டொன்றிற்கு ரூ.20,000 மட்டுமே சம்பாதிக்கக்கூடியவர்கள். இப்படி குறையுடன் பிறந்த மகன் தேவையா என்ற சுற்றத்தின் அமில வீச்சுகளின் இடையில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்து சிரமத்துடன் வளர்க்கப்பட்டவர். தமது பள்ளிப்பருவத்தில் படிப்பை ஒரு தவமாக மேற்கொண்டவர். பத்தாம் வகுப்பு வரை 90, 100 என்று மதிப்பெண்களை குவித்துக்கொண்டிருந்தவருக்கு, பள்ளியிறுதி வகுப்பில் (+1)  தாம் பார்வையிழந்தவர் என்ற காரணத்தினால் அறிவியல் பாடத்தை விருப்பப்பாடமாக எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இவர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துப் போராடி ஆறு மாதத்திற்குப் பிறகு அதே அறிவியல் படிப்பில் சேர்ந்ததோடு நில்லாமல் 12ம் வகுப்பில் 98 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்துக்காட்டினார். ஆனாலும் அதற்குப் பிறகும் ஓயவில்லை அவருடைய போராட்டம். ஐ.ஐ.டி, என்.ஐ.டி. என எங்கும் போட்டித் தேர்வுகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. நம் நாட்டில் எந்த கல்வித்துறையும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அந்த இளைஞர் ஓயாமல் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளுக்கு தமது நிலையைத் தெரிவித்து விண்ணப்பித்தார். இறைவன் பார்வையும் அவர் முயற்சிக்கு ஒளியூட்டியது. உலகிலேயே தலை சிறைந்த நான்கு கல்லூரிகளான எம்.ஐ.டி., இசுடேன்ஃபோர்டு, பெர்க்கிலி, மற்றும் கார்னீகு மெல்லான் ஆகிய கல்லூரிகளிலிருந்து ஒருசேர அழைப்பு வந்தது. அமெரிக்க நாட்டில்,  எம்.ஐ.டி இன் உதவித்தொகை பெற்ற முதல் சர்வதேச பார்வையிழந்த மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  2012 இல் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தவுடன் அவர் போலாந்து (Bollant) தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் 60% தொழிலாளர்களாக மாற்றுத் திறனாளிகளையே நியமித்தார். 450 பணியாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம் இன்று 50 கோடி மதிப்புள்ளது என்பதோடு ரத்தன் டாட்டா அவர்களே இதில் முதலீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னொருவரையும் இதுபோன்று குறிப்பிட முடியும்.  2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கட்டப்பட்ட பிரபலமான கோவை ஜெம் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் சி. பழனிவேல் என்ற உலகப்புகழ் பெற்ற அறுவைச்சிகிச்சை நிபுணர், ஆய்வாளர், கோவையில் இயங்கும் இரைப்பை குடல் மருத்துவ மருத்துவமனை, ஆராய்ச்சி மையத் தலைவர் பொறுப்பில் இருப்பவர்.  லேப்புராசுக்கோப்பி என்ற மருத்துவச் சிகிச்சை முறையில் பல நவீன தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளவர் இவர். பல ஆண்டுகளாக மருத்துவத் துறையின் ஒரு குறிப்பிட்ட அறுவை சிகிச்சை பயிற்சிக்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்துள்ளவர். லேப்புராசுக்கோப்பியில் நவீன தொழில்நுட்பங்களை மேற்கொண்டதோடு, ஏழை, எளிய மக்களுக்கும் அறுவை சிகிச்சைகளும், வாழ்க்கையை மாற்றியமைக்கும் மருத்துவங்களும் கிடைக்கும்படி செய்தவர்.  ஆம், மருத்துவர் பழனிவேல் அவர்களின்  ஜெம் ( GEM) அறக்கட்டளை தொண்டு நிறுவனம் மூலமாக வறுமைக்கோட்டில் வாழும் மக்களுக்கு  இலவச மருத்துவச் சிகிச்சையை வழங்குகிறது. இந்த  அறக்கட்டளை அமைப்பு இரைப்பை குடலியல் மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவப் பிரிவை பராமரித்து வருகிறது. கோயம்புத்தூர் நகரைச்சுற்றி அடிக்கடி மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகிறது. இவருக்கு வெளிநாடுகளிலிருந்தும் அடிக்கடி பயிற்சி வகுப்புகள் கருத்தரங்கம் என்று அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சிகிச்சை முறை பயன்பாட்டில் உள்ளது. சிசேரியன் அறுவைச் சிகிச்சை தவிர வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் இந்த நவீன முறை அறுவை சிகிச்சை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை முடிந்த ஓரிரு நாட்களில் நோயாளிகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதும், மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்க வேண்டிய தேவையும் இல்லை என்பதை இதன் சிறப்பாகக் கூறமுடியும்.
மருத்துவர்களுக்கு இந்த நவீன அறுவைச் சிகிச்சை குறித்த பயிற்சியை வழங்கும் இவர் அதனை எளிமையாக விளக்கும் விதமே அலாதியானது. முன் காலத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஒரு புறம் நின்று வேடிக்கைப் பார்த்து பந்து வரும் திசையை உன்னிப்பாகக் கணிக்கவேண்டும். ஆனால் இப்போதைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பந்து புறப்பட்ட இடத்திலிருந்து அது சேரும் இடம்வரை அதன் பயணிக்கும் பாதையை மிகத்துல்லியமாக காணமுடிவது போன்றதுதான் லேப்புராசுக்கோப்பி சிகிச்சை முறை என்று எளிமையாக விளக்கம் அளிப்பாராம்..
2003 ஆம் ஆண்டில் டாக்டர் பழனிவேல் எடின்பர்க்   ராயல் கல்லூரியின் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மூலம் பெல்லோசிப்,  2006 இல் டாக்டர் பி சி ராய் தேசிய விருது, அமெரிக்காவில் ‘சர்வதேச ஒலிம்பிக் அறுவை சிகிச்சை ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம்’  வென்றது போன்ற பல பெருமைகளைப் பெற்றவர்.
இதுமட்டுமன்றி,  லேப்புராசுக்கோப்பி  சிகிச்சை முறை சம்பந்தமாக மூன்று புத்தகங்களை எழுதி  வெளியிட்டுள்ளார்: லேப்புராசுகோப்பி அறுவை சிகிச்சை கலை; “Text Book of Surgical Laparoscopy”  “CIGES Atlas of Laparoscopic Surgery.”
இத்துனை சாதனை புரிந்த  இவருடைய ஆரம்பக்கால வாழ்க்கை அந்த அளவிற்கு எளிமையானதாக இல்லை. ஒரு சாதாரண விவசாயக்கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர் இவர். மிகப்பெரும் சவால்களைச் சந்தித்த பிறகே இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார் என்பதே உண்மை. ஆம்,  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் இவர். 1953 ஆம் ஆண்டில் இவர் குடும்பம் மலேசியாவிற்கு குடிபெயர்ந்தது. குடும்பத்தின் ஏழ்மை காரணமாக தமது கல்வியை ஆறாம் வகுப்பிலேயே நிறுத்திவிட்டு ஒரு சாராயக் கடையில் பத்து மலேசிய டாலர்களுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.  18 வயது வரை வேலை பார்த்தவர் அதற்குமேல் கல்வி கற்கவேண்டும் என்ற பேரார்வம் உந்தித்தள்ள, 1967 இல் அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்து சேர்ந்தார்.  நல்லாசிகளின் விளைவாக பள்ளியில் சேரும் வாய்ப்பும் அமைந்து, தம்முடைய 21 ஆம் வயதில்  எஸ்.எஸ்.எல்.சி வகுப்பு படித்து முடித்தார். கற்கள் ஏற்றும்போது ஏற்பட்ட காயம் காரணமாக சிதைக்கப்பட்ட ஒரு விரல் மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக தனலட்சுமி என்ற ஆறு வயது அன்புச் சகோதரி உயிரிழந்தது போன்ற காரணங்களால் அவர் மருத்துவம் பயில விரும்பினார். பல சிரமங்களுக்கிடையில் மருத்துவப் படிப்பும் பயின்றவர்,  இசுடான்லி மருத்துவக் கல்லூரியில் தங்கப் பதக்கத்துடன் வெற்றிவாகையும் சூடி வந்தார்.  தாம் வந்த பாதையை மறக்காதவராக வசதியில்லாத பல நோயாளிகளுக்கு இலவச மருத்துவமும், குறைந்த கட்டண வசூலிப்பும் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது!
மேற்கண்ட இரண்டு சாதனையாளர்களும் தங்கள் வைராக்கியம் மூலமாகவே தடைகளை முறியடித்து வெற்றிவாகை சூடியுள்ளார்கள் என்பதே நிதர்சனம்!

No comments:

Post a Comment