பவள சங்கரி
முன்னொரு காலத்தில், அம்மா, அப்பா, குட்டி என்று மூன்று கரடிகள் இருந்தது. அவை மூன்றும் ஒரு பெரிய காட்டின் நடுவே ஒரு மஞ்சள் வீட்டில் வாழ்ந்து வந்தது.
ஒரு நாள், அம்மா கரடி காலை உணவிற்காக ஒரு பெரிய பானை வழிய மிகச் சுவையானதொரு கஞ்சியைத் தயாரித்து முடித்திருந்தது. அது கொதித்துக் கொண்டிருந்ததால், மூன்று கரடிகளும் அது சூடு ஆறுவதற்கு காத்திருக்கும் நேரத்தில் ஒரு நடைப்பயணம் சென்றுவர முடிவெடுத்தன.
அந்தக் காட்டின் அருகில் கோல்டிலாக்சு என்ற ஒரு சிறுமி வாழ்ந்துவந்தாள். அவள் அப்படி ஒன்றும் நல்ல பெண் இல்லை. அன்று காலை காட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது கூட அணில் பிள்ளைகள் மீது கற்களை விட்டெரிந்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அம்மா கரடி தயாரித்து வைத்திருந்த சுவையான கஞ்சியின் வாசனையைப் பிடித்திருந்தாள் அவள்.
“ஓ, ரொம்பப் பசிக்கிறதே” என்று நினைத்தாள் கோல்டிலாக்சு. “அவர்கள் தங்கள் கஞ்சியை எனக்கும் கொடுத்தால் நன்றாக இருக்குமே” என்றும் நினைத்துக்கொண்டாள்.
அவள் வீட்டின் கதைவைச் சென்று தட்டினாள். சன்னல் வழியாக எட்டியும் பார்த்தால். வீட்டில் ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் கோல்டிலாக்ஸ், அந்த வீட்டினுள் நுழைந்தாள். ( ஓ, சரியான குறும்புக்காரிதான் இந்த சிறுமி!)
முதலில், கோல்டிலாக்சு அப்பா கரடியின் கிண்ணத்தில் இருந்த கஞ்சியை குடித்துப் பார்த்தாள். “ ஆ.. இந்தக் கஞ்சி ரொம்பவும் சூடாக இருக்கிறதே!” என்றாள்.
அடுத்து அவள் அம்மா கரடியின் கின்ணத்திலிருந்த கஞ்சியையும் சுவைத்துப் பார்த்தாள். “சீ... இந்தக் கஞ்சி ரொம்பவும் சில்லென்று இருக்கிறது!” என்றாள்.
இறுதியாக, கோல்டிலாக்சு கரடிக் குட்டியின் கிண்ணத்திலிருந்த கஞ்சியையும் சுவைத்துப் பார்த்தாள். “ம்ம்ம்ம்ம். இந்தக் கஞ்சிதான் சரியாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே கஞ்சி முழுவதையும் குடித்து கிண்ணத்தைக் காலி செய்துவிட்டாள்!
வயிறு முழுவதும் நிரம்பி திருப்தியானதால் உட்காருவதற்கு ஒரு இடம் பார்த்தாள் அவள். தீ இடத்தின் அருகில் மூன்று நாற்காலிகள் இருப்பதைக் கண்டாள். முதலில் அப்பா கரடியின் நாற்காலியில் உட்கார்ந்தாள். “இந்த நாற்காலி ரொம்பவும் கடினமாக இருக்கிறதே!” என்று புகார் சொன்னாள்.
பின் அவள் அம்மா கரடியின் இருக்கையில் உட்கார்ந்தாள். “இந்த நாற்காலி ரொம்பவும் மென்மையாக இருக்கிறதே” என்று புகார் சொன்னாள்.
இறுதியாக, அவள் குட்டிக் கரடியின் நாற்காலியில் உட்கார்ந்தாள். “ஆகா, இந்த நாற்காலிதான் சரியாக உள்ளது” என்று மகிழ்ந்தாள். ஆனால் உடனே அந்த நாற்காலி உடைந்துவிட்டது. “நான் நிறைய கஞ்சி சாப்பிட்டுவிட்டேன் போலுள்ளதே”, என்று நினைத்துக்கொண்டாள்.
அவளுக்கு இன்னும் களைப்பாகத்தான் இருந்ததால் அவள் மாடியில் இருந்த படுக்கை அறைகள் இருந்த இடத்திற்குச் சென்றாள். அங்கு மூன்று படுக்கைகள் இருந்தன. அவள் முதலில் அப்பா கரடியின் படுக்கையில் படுத்துப் பார்த்ததில் பிடிக்காமல் போனது. “இந்தப் படுக்கை ரொம்பவும் கடினமாக இருக்கிறது!” என்றாள்.
அடுத்து அவள் அம்மா கரடியின் படுக்கையில் படுத்துப் பார்த்ததில் அதுவும் அவளுக்குப் பிடிக்காமல் போனது. “இந்தப் படுக்கை ரொம்பவும் மென்மையாக இருக்கிறது!” என்றாள்.
இறுதியாக, அவள் குட்டிக் கரடியின் படுக்கையில் படுத்துப் பார்த்தாள். “ஆகா, இதுதான் சரியான படுக்கை” என்றாள் மகிழ்ச்சியுடன். ரொட்டிகளையும், பூனைக்குட்டிகளையும் கனவு கண்டவாறு ஆழ்ந்து உறங்கிவிட்டாள்.
வெகு விரைவிலேயே கரடிகள் வீடு திரும்பி, காலை உணவை உண்ணத் தயாராயின. ஆனால் அவைகள் தங்கள் கஞ்சிக் கிண்ணத்தில் சிறு கரண்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். “யாரோ என் கஞ்சியை சாபிட்டுவிட்டார்கள்!” என்று ஆச்சரியப்பட்டது அப்பா கரடி.
“என் கஞ்சியையும் யாரோ சாப்பிட்டுவிட்டார்கள்!” என்று அதிர்ச்சியானது அம்மா கரடி.
“யாரோ என் கஞ்சி மொத்தமும் சாப்பிட்டுவிட்டார்கள் ...... எல்லாம் காலியாகிப்போச்சு!” கஞ்சியைச் சாப்பிட மிகவும் ஆசையாக வந்த குட்டிக் கரடி தேம்பி அழுதது.
பின், மூன்று கரடிகளும் தங்கள் நாற்காலிகளும் உடைந்திருப்பதைக் கண்டு வருந்தின. குட்டிக் கரடி தன் உடைந்த நாற்காலியை[ப் பார்த்து “யார் என் நாற்காலியில் உட்கார்ந்தது” என்று அழ ஆரம்பித்துவிட்டது.
மூன்று கரடிகளும் அவசரமாக படுக்கையறைக்குச் சென்று பார்த்தன. “யாரோ என் படுக்கையில் படுத்திருக்கிறார்கள்” என்று உறுமியது அப்பா கரடி.
“என் படுக்கையிலும் யாரோ படுத்திருக்கிறார்கள்” என்று அம்மா கரடியும் உறுமியது.
"யாரோ என் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவள் இன்னும் இங்குதான் இருக்கிறாள்!” என்று சத்தமாக அலறியதில் கோல்டிலாக்சு விழித்துக்கொண்டாள்.
அந்த கோபமான மூன்று கரடிகளையும் பார்த்தவுடன் ரொம்பவும் பயந்து நடுங்கிப்போனாள். சட்டென்று படுக்கையை விட்டு கீழே குதித்து வாசலுக்குத் தாவிச் சென்றாள். தன் வீடு போய் சேரும்வரை நிற்கவேயில்லை அவள்.
வீட்டிற்குள் அவள் தன் சொந்த கிண்ணத்தையும், தன்னுடைய நாற்காலியையும் கண்டாள். அந்த இரவு தன் படுக்கையில் படுக்கச் சென்றபோது, “நான் இனிமேல் எப்போதும் கஞ்சியே சாப்பிடமாட்டேன்” என்று தனக்குள்ளேயே சத்தியம் செய்து கொண்டாள்.
படங்களுக்கு நன்றி ; http://www.thefrenchexperiment.com/stories/goldilocks/
http://www.vallamai.com/chellam/pavala/872
No comments:
Post a Comment