மனம் ஒரு குரங்கு
ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம்.
ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் செய்வதையெல்லாம் திரும்பச்செய்வதுடன், நினைத்த நேரத்தில் நினைத்ததையெல்லாம் செய்வதுதானே குரங்கின் குணம். திடீரென்று மரத்தின் மீது தாவி ஏறிக்கொண்டு அவரை குறுகுறுவென்று பார்த்தது.. புத்தர் பெருமான் புன்னகைத்துவிட்டு,
‘எதற்காக திடீரென்று மரத்தின்மீது ஏறிக்கொண்டாய் ? ’ என்றார். உடனே அந்தக் குரங்கு மரத்தின்மீதிருந்துகொண்டு,
‘என்னையென்ன மற்றவர்களைப்போல சாதாரணக் குரங்கு என்றா நினைத்தீர்கள்? நான் சர்வ வல்லமை படைத்த மதியூகம் நிறைந்த மகான் தெரியுமா?’ என்றது.
அதற்கு புத்தர்பிரான், ‘அப்படியா, மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மகான் என்பதை நானும் அறிவேன். அதனால்தான் தங்களை வானுலகின் மரகதச்சிம்மாசனத்தில் அமரச்செய்ய ஆவலாக இருக்கிறேன். நீங்கள் என் உள்ளங்கையில் வந்து அமர்ந்துகொண்டால் உங்களை அந்த சுவர்கபுரிக்கு அழைத்துச் செல்கிறேன்’ என்றார்.
அந்த குரங்கும் சற்றே யோசித்துவிட்டு, “இவரைப் பார்த்தால் பெரிய ஞானி போல் தெரிகிறதே. சொன்னபடி நம்மை மரகத சிம்மாசனத்தில் அமர வைக்கக்கூடியவராகத்தான் இருக்கிறார்’ என்று நினைத்து மரத்தைவிட்டு இறங்க எத்தனித்த குரங்கு அதற்குள் புத்தி மாறிவிட, ஒரே பாய்ச்சலாக வான் நோக்கி விர்ரென்று தாவியது. புத்தர் தனக்காக, தாம் வசதியாக அமரும் விதமாகத் தம் திருக்கரங்களை தாமரை போன்று விரித்து அகலமாக வைத்துக்கொண்டு காத்திருப்பதைக் கண்ட அந்தக்குரங்கு அங்கிருந்து அதே வேகத்தில் கீழிறங்கியது. புத்தர்பிரான் கையில் வந்து அமர்ந்த அது,
‘புத்தர்பிரானே, நான் இப்போது எங்கு சென்றுவிட்டு வருகிறேன் என்று தெரியுமா?’ என்று தலையை நிமிர்த்திக்கொண்டு கர்வமாகக் கேட்ட அது, ‘நீங்கள் எந்த வானுலகின் மரகதச்சிம்மாசனத்தில் அமர வைக்கிறேன் என்று கூறினீர்களோ அதே வானுலகம்தான் சென்று வருகிறேன். அங்கிருந்த மிக அழகான சில பளிங்குத் தூண்களில், ஒரு பெரிய மகான் இங்கு வந்து சென்றிருக்கிறார் என்றும் எழுதி வைத்துவிட்டு வந்திருக்கிறேன். நீங்கள் வேண்டுமானாலும் போய்ப்பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றது.
‘அப்படியா, மிக்க மகிழ்ச்சி. அப்படியே கொஞ்சம் குனிந்து கீழே பாருங்கள்’ என்றார் புத்தர்.
அவர் கூறியபடியே குனிந்து பார்த்த அந்த குரங்கு புத்தர் பிரானின் சுண்டு விரல் நுனியில் தாம் அந்தத் தூணில் எழுதி வைத்துவிட்டு வந்த அதே வாசகங்கள் பளிச்சென்று தெரிந்தன. இதைப் பார்த்தவுடன் அந்தக் குரங்கிற்கு எல்லாம் புரிந்துவிட்டது. தாம் சென்று வந்த இடம் இதே புத்தபிரானின் உள்ளங்கையினுள் அடங்கியுள்ள இடம்தான் என்பது புரிந்த அந்த நொடியில் அதனுடைய ‘தாம்’ என்ற அகம்பாவம் அழிந்துபோனது. தலைக்கனம் குறைந்தவுடன் தன்னுடைய தவறை உணர்ந்த குரங்கு அவரை வணங்கி மன்னிப்புக்கேட்டு விடைபெற்றது. இந்த தலைக்கனம் வந்துவிட்டால் நல்ல விசயங்கள் எல்லாம் நம் கண்ணைவிட்டு மறைந்தேவிடும்… அதனால் தற்பெருமை ஆகவே ஆகாது..
சில நேரங்களில் பெரும் அறிவாளிகளும், வீரர்களும்கூட தான் என்ற அகந்தையில் வீழ்ந்து விடுவதும் உண்டு.
ஒரு முறை கிருட்டிணரும், அர்ச்சுணனும் யமுனை நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சிறந்த வில்லாளியான அர்ச்சுணனுக்கு கொஞ்சம் தற்பெருமை தலைதூக்கியது. அப்போது அர்ச்சுணன் எதையோ நினைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே வந்தார். அர்ச்சுனன் மனதில் தற்பெருமை தலைதுக்குவதை உணர்ந்துகொண்ட கிருஷ்ணரும் ‘என்ன அர்ச்சுனா ஏதோ நினைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே வருவதுபோல் தெரிகிறதே. நான் செய்த தவறுகள் எதையேனும் கண்டுகொண்டு அதை நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறாயா’ என்று கேட்கிறார்.
முக்காலமும், மனிதர் மனமும் என அனைத்தும் அறிந்த கிருட்டிணருக்கா தெரியாது, இந்த அர்ச்சுனன் மனதில் என்ன இருக்கிறதென்று. ஆனாலும் அவன் வாயிலேயே சொல்ல வைக்கவேண்டும் என்று அவனையேக் கேட்கிறார்.
அர்ச்சுனனும், ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. சிரித்தது உண்மைதான். ஆனால் உங்களை நினைத்து அல்ல. இராமர் இராவணனுடன் போரிட்டு சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்வதற்காக பாலம் கட்டுவதற்கு குரங்குகளின் உதவியை நாடியதை நினைத்து சிரித்தேன். நான் மட்டும் அங்கு இருந்திருந்தால் மிக எளிதாக ஒரு நொடியில் எம் அம்புகளைக்கொண்டே பாலம் கட்டிக்கொடுத்திருப்பேன். அதை நினைத்தேன். சிரிப்பு வந்தது’ என்கிறான்.
உடனே கிருட்டிணரோ, ‘அப்படியா, சரி அர்ச்சுனா இப்போதே இந்த யமுனை நதியில் உன் அம்பினால் ஒரு பாலம் அமைத்துக்காட்டு. இராமர் காலத்து குரங்கு ஒன்று இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதைக்கூப்பிட்டு உன் வலிமையை சோதிக்கச் சொல்லலாம். என்றார்.
அர்ச்சுனனுக்கு தம் வலிமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து உடனே செயலில் இறங்கி தம் அம்பினால் பாலமும் கட்டினான்.
கிருட்டிணரும், ‘அனுமனே வாரும். வந்து இந்தப் பாலத்தின் வலிமையை சோதிக்கவும்’ என்றார்.
அனுமனும் உடனே வந்து அந்த அம்புப் பாலத்தின்மீது ஒரு அடி எடுத்து வைத்ததுதான் தாமதம், மொத்தப் பாலமும் இடிந்து விழுந்துவிட்டது. அந்த நொடியே அர்ச்சுனனின் தலைக்கனம் அழிந்தது. தன் கையில் இருந்த வில்லையும், அம்பையும் தூக்கி எறிந்துவிட்டு கிருட்டிணரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்கிறான்.
அப்போது கிருட்டிணரும், ‘இதற்காக நீ அவமானப்படத் தேவையில்லை அர்ச்சுனா.. மிகவும் வலிமை மிக்க குரங்குகளைத் தாங்கக்கூடிய அளவிற்கு இராமனாலேயே பாலம் கட்ட முடியவில்லை எனும்போது உன்னால் எப்படி அம்பினால் அதைவிட உறுதியான பாலம் கட்ட முடியும். ஆனால் ஒரு வீரனுக்கு மிக மோசமான எதிரி என்றால் அவை தற்பெருமையும், அகந்தையும்தான். இவையிரண்டும் இருந்தால் வெகு எளிதாக வீழ்ச்சியைச் சந்திக்க நேரும். அதனால் என்றுமே அவற்றிற்கு இடம் கொடுக்காதே’ என்று அறிவுரை சொன்னார். அர்ச்சுனனும் தன் தவறை உணர்ந்து அதன்படியே நடந்துகொண்டான்.
No comments:
Post a Comment