Wednesday, August 31, 2016

தமிழ் இந்து நாளிதழில் என்னுடைய ‘கெய்ஷா’




தமிழ் இந்து நாளிதழில் என்னுடைய ‘கெய்ஷா’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு அழகாக விமர்சனம் எழுதியுள்ளார்கள். திரு மானா பாஸ்கரன் அவர்களுக்கும், இந்து நாளிதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஒரு தேசத்தின் கலாச்சாரப் பின்னணியோடு அந்த தேசத்தை நாம் புரிந்துகொள்ள முற்படும்போதுதான் அதன் முழு பரிமாணத்தையும் நன்கு உணர முடியும். பாரம்பரிய இசை, நடனம், கூத்து, ஓவியம் வழியே பின்தொடர்ந்தால் ஒரு தேசத்தின் ஆழ அகலங்களை முற்றும் உணரலாம். உலக அரங்கில் நவீன ஜப்பானின் பொருளாதாரக் கொடி காற்றில் அசைந்து உயரப் பறக்கிறது. அந்த நவீனத்தின் புராதன அடையாளங்களுள் ஒன்றுதான் ‘கெய்ஷா உலகம்’.

கோப்பை முழுதும் கொண்டாட்டங்கள் நிரம்பி வழியும் மரபைச் சார்ந்தது கெய்ஷா உலகம். வெறும் பாலியல் குதூகலங்கள் வளையவரும் தனித் தீவாக கருதி கெய்ஷாக்களை எவரும் குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது.
அழகை ஆராதித்தல், குளிரூட்டும் ராகங்களால் மெல்லுடல் தீண்டல், நறுமணப் புகையாய் விரியும் அன்பின் கதகதப்பு, ஜன்னல் திறந்து முகம் காட்டும் கருணையின் தரிசனம் என கெய்ஷா உலகம் ரகசியத் தித்திப்புகளைக் கொண்டதாக இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். ஒரு புனைவை படிக்கும் சந்தோஷம் இந்தப் புத்தகத்தின் வழிநெடுகப் பரவிக் கிடக்கிறது. ஜப்பானின் மரபு சார் கலைகள், பண்பாட்டு விழுமியங்கள், இலக்கியங்கள் அனைத்திலும் ஆங்காங்கே கெய்ஷாவின் நிழல் சிறிதளவேனும் படிந்திருப்பதை லெஸ்லி டவுனர் சுட்டிக்காட்டும்போது ஜப்பானியர்களின் வாழ்வோடு கெய்ஷா ஒன்றிணைந்திருப்பது புரிகிறது.
கெய்ஷாக்கள் பரவலாகத் தன்னெழுச்சியுடன் வலம்வர ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஜப்பானியப் பெரும் செல்வந்தர்களின் காமக் களியாட்டங்களுக்கு இரை போடுபவர்களாக ஜப்பானிய ‘டாயு’க்கள் இருந்துள்ளனர். செல்வாக்கு மிக்க ‘டாயு’க்களின் இடங்களை பிற்காலத்தில் கெய்ஷாக்கள் நிரப்புவதற்கு கெய்ஷாக்களிடம் இருந்த நளின மிகு கலை அம்சங்களும், கலாச்சாரப் பெருமைகளும்தான் காரணம் என்பதையும் அறிய முடிகிறது.
‘இரவுகளைத் தங்கள் கலைகளால் அலங்கரித்தனர் கெய்ஷாக்கள்’ என்கிற டவுனரின் வரியைப் படிக்கிறபோது ஜப்பானிய கெய்ஷா பெண்கள் பாலியல் தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு நாட்களைக் கடத்துவ தில்லை. அதையும் தாண்டி தங்களைத் தேடி வருபவர்களின் மனவுலகில் சஞ்சரித்துத் தாதிகளாகவும், மென் மருத்துவர் களாகவும் ஜப்பானியர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டெடுக்கும் பணிகளையும் செய்துவந்துள்ளனர்.
இன்னொரு புறம் கெய்ஷாக்களைப் பற்றி வெளியுலகில் கசப்பான விமர்சனங்களும், உரையாடல்களும் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. ‘அதுவொரு மாய உலகம். உள்ளே நுழைந்தால் மீள்வது கடினம்’, ‘மர்மங்கள் பொங்கி வழியும் பிரதேசம்’, ‘அலைக்கழிக்கும் தடிமனான திரைகளைக் கொண் டவை’ என்றெல்லாம் கடும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களாக கெய்ஷாக்கள் காலம்காலமாக இருந்துவந்துள்ளனர். ஆனால், இந்த புத்தகத்தில் லெஸ்லி டவுனர் திறந்த மனதோடு கெய்ஷாக்களின் உள்முக தரிசனமாக உண்மையை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலை எழுதியிருக்கிறார்.
‘ஒரு டான்னாவுடன் (புரவலர்) உறவு வைத்துக்கொள்வது திருமணத்துக்குச் சமமானது. ஜப்பானிய பெற்றோர்கள் தம் மகளுக்கு கணவரைத் தேர்ந்தெடுப்பது போலவே, கெய்ஷா இல்லத்தின் அன்னையும் ஒரு தகுதியான டான்னாவைத் தேர்ந்தெடுப்பாள்’ என்று எழுதுகிறார் லெஸ்லி டவுனர். இதைப் படிப்பவர்களுக்கு, இந்தியாவில் பாலியல் தொழில் புரிவோர் பெரும்திரளாக வாழும் மும்பை சிவப்பு விளக்குப் பகுதியும், கொல்கத்தாவின் சோனாகாச்சி பகுதியும் ஞாபகத்தில் வந்தாலும், ஒப்பீட்டளவில் கெய்ஷாக்களின் உலகம் முற்றிலும் வேறு. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் இந்திய பாலியல் தொழிலாளர்களைப் போல அடிமை வாழ்க்கையில் தங்கள் வாழ்நாள் முழுவதையும் கழிப்பவர்கள் அல்ல கெய்ஷாக்கள். பொருளாதாரக் காரணங்களுக்காகத் தேடிச் சென்று இத்தகைய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தவர்களாக கெய்ஷாக்களை சொல்ல முடியவில்லை. கெய்ஷாக்களின் உலகத்தின் முதல் தகுதியே, இத்தகைய வாழ்க்கை முறையை வேண்டி விரும்பி ஏற்கும் நிலைதான். ‘இந்த அதல பாதாளத்தில் யாரோ என்னைத் தள்ளிவிட்டனர்’ என்கிற புலம்பல் மொழி எந்த ஒரு கெய்ஷாவின் வாயிலிருந்தும் பெரும்பாலும் உதிர்வதில்லை.
எளிமையான நடையில் ‘கெய்ஷா’ புத்தகத்தை மொழியாக்கம் செய்துள்ளார் பவள சங்கரி. படித்து முடித்த பிறகு பல வண்ணப் பூக்கள் வரையப்பட்ட பெரிய ஜப்பானியக் குடை மனசுக்குள் விரிவதை உணர முடிகிறது.
- தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in
Keywords: நூல் அறிமுகம், புத்தக அறிமுகம், கெய்ஷா, லெஸ்லி டவுனர், பவள சங்கரி, மொழிபெயர்ப்பு நூல், சந்தியா பதிப்பகம், மானா பாஸ்கரன்

2 comments:

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...