Tuesday, August 2, 2016

திருஇரும்பூளை என்னும் ஆலங்குடி


அன்பு நண்பர்களே,

இது என்னுடைய 200 வது பதிவு . இதுவரை என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் இனியும் தொடர்ந்து வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் அருள் பெறுவோம் வாருங்கள் நண்பர்களே. வணக்கம்.

அன்புடன்

பவள சங்கரி



அருள்மிகு ஆபத்சகாயேசுவர சுவாமி

குரு பரிகார தலம்

இறைவன் - காசி ஆரண்யேசுவரர், ஆபத்சகாயர்.
இறைவி - ஸ்ரீஉமையம்மை, ஏலவார் குழலியம்மை
விசேட மூர்த்தி - ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி
விசேட தலம் - ஸ்ரீகுரு பரிகாரத்தலம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம் போன்ற 8 தீர்த்தங்கள்.

முன்னுரை : தெய்வ மணம் கமழும் நம் தமிழ்த் திருநாட்டில் ஆலயங்கள் நம் ஆன்மிக ஞானத்தை ஊக்குவிக்கும் ஊற்றுகள் . அத்தகைய கவின்மிகு ஆலயங்களில் தனித்தன்மை வாய்ந்த தலங்களில் திருஇரும்பூளையும் ஒன்று. பாடல் பெற்ற தலம். இத்தல வரலாற்றை தியானிப்பதன் மூலம் ஆலமுண்டானின் அருளைப் பெறுவது திண்ணம்.

அருள்மிகு ஏலவார் குழலி அம்பிகை உடனுறை அருள்மிகு காசியாரண்யேசுரர் எழுந்தருளியுள்ள திருஇரும்பூளை கோவிலின் பழம்பெருமைகள் பெரிதும் போற்றுதலுக்குரியது.


திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்:-
Inline image 2

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

தட்சிணாமூர்த்தி வழிபாடு

மோனநிலை அமர்ந்திட்டே மும்மலத்தின் கட்டவிழ்த்து
முத்திக்கு வித்தாகும் மூலகுரு மூர்த்தியதாய்
தேனமுதப் பொருளாகி தென்முகமாய்த் தானமர்ந்து
தெவிட்டாத சின்மயத்தை தெளிவாக்கும் தெள்ளியனாய்
ஆனந்த நிலையாக ஆலின்கீழ் அமர்ந்தங்கே
அறமதனை நால்வருக்கும் அறிவிக்கும் ஐயனாகித்
தானவனாய் ஆக்கிடுமோர் தற்பரமே தானாகும்
தட்சிணாமூர்த்தியின் தாள்பணிந்து சிரமேற்கொள்வோம்.

திருஇரும்பூளை - திருஞானசம்பந்தர் பதிகம்:

1. சீரார் கழலே தொழுவீரிதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.

2. தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே.

3. அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.

4. நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி
இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.

5. சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே.

6. தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காடார் கடுவே டுவனான கருத்தே.

இப்பதிகத்தின் 7வது செய்யுள் சிதைந்து போயிற்று என்பர்..

8. ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்
பருக்கை மதவேழ முரித்துமை யோடும்
இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே.

9. துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்
கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி
இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.

10. துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.

11. எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்
செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார்
பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.


வற்றாத காவிரிநதி பாயும் , சோழவள நாட்டின் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், நீடாமங்கலம் இரயில் நிலையத்திற்கு வடக்கே 7 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து தெற்கே 17 கி.மீ தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து (நீடாமங்கலம் வழி) பேருந்து தடத்தில் அமைந்துள்ளது. சோழநாட்டில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற 274 தலங்களில், காவிரிக்குத் தென்கரையில் அமைந்துள்ள 127 தலங்களின், 98வது தலமாக விளங்குவது திருஇரும்பூளை என்ற ஆலங்குடி தலமாகும். சிவபெருமான் திரு இரும்பூளை உடைய மகாதேவர் என்னும் திருப்பெயரால் கல்வெட்டில் கூறப் பெறறுள்ளார்.

இவ்வூரின் சிறப்பு, இவ்வூரில் விடத்தால் யாதொரு தீங்கும் ஏற்படுவதில்லையாம். காரணம், பாற்கடல் கடைந்த போது உண்டான ஆலகால விடத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய தேவர்கள், சிவபெருமானிடம் அபயம் புகுந்தனர். அவ்வமயம், பெருமான், தம் தோழராகிய சுந்தரமூர்த்தியாரைக் கொண்டு, அவ்விடத்தைக் கொண்டுவரச் செய்து, அதனைப் பருகித் தம் கண்டத்தில் அடக்கியமையினால், இத்தலத்திற்கு இப்பெயர் பெற்றது. இதனை விளக்கும் காளமேகப் புலவர் அருளிய பாடல் இதோ:

ஆலங் குடியானை ஆலால்ம் உண்டானை
ஆலங் குடியான் என்று ஆர்சொன்னார் - ஆலம்
குடியானே யாகில் குவலயத்தோ ரெல்லாம்
மடியாரோ மண்மீதினில்.

கோவில் ஐந்து நிலை இராஜ கோபுரத்துடனும், ஊரின் மத்தியில், நாற்புறமும் தாமரை பூத்த அகழியாலும் உயரமான மதில்களாலும் சூழப்பெற்று கவின்மிகு தோற்றத்துடன் காட்சியளிப்பது சிறப்பு. தென்புறம் அமைந்த இதன் கோபுரத்தில் மிகப்பழமையான சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. கோபுர வாயிலினுள் நுழைந்ததும், மேலக்குடவறையில், கலங்காமல் காத்த விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. முழுமுதற் பொருளை, மூத்த கணபதியை வணங்கி, முதல் பிரகாரத்தினுள் நுழைந்தால், எதிரே அம்மையாரின் தெற்கு நோக்கிய சன்னதி காணப்படுகிறது. சற்று உள்ளே சென்று, மேற்கு நோக்கித் திரும்பினால், இரண்டாவது வாயிலைக் கடந்தால், உள்ளே தென்புறத்தில் சூரியர் சன்னதி உள்ளது. தென்புறம் உற்சவர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அழகிய திருக்கோலக்காட்சி காணலாம். அடுத்தாற்போல், உட்பிரகாரத்தில், நால்வர் திருவுருவமும், சூரியேசர் சோமேசர், குருமோட்சேசுரர், சோமநாதர், சப்தரிசிநாதர், விஷ்ணு நாதர், பிரம்மேசர் ஆகிய சப்தலிங்கங்களோடு, காசி விசுவநாதர், விசாலாட்சி,அகத்தியரும் எழுந்தருளியுள்ளனர்.

Inline image 3

அடுத்து ஆக்ஞா கணபதி, சோமாசு கந்தர், நின்ற கணபதி, சந்திரசேகரர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வயானை பக்தர், சண்டிகேசுரர், கல்யாண சாத்தா, சப்தமாதா முதலிய உற்சவர்களும், அடுத்து முருகன், வள்ளி, தேவசேனை சன்னதியும், இலக்குமி தேவியும் , வடக்குப் புறம், நவக்கிரகம், சபாபதி, சிவகாமி அம்மை, சம்பந்தர், அப்பர், மணிவாசகர் ஆகியோரின் காட்சிகளும் காணப் பெறலாம். சபாநாதர் சன்னதியில் திருமுறைக்கோவிலும், அடுத்து உற்சவ தட்சிணாமூர்த்தி, சனகாதி நால்வருடன் காட்சியளிக்கிறார். பைரவர், சந்திரன் சன்னதியும், சுவாமி மகா மண்டபத்தில் நந்தி, பலிபீடம் உள்ளது. மகா மண்டப வாயிலில், துவாரபாலகரும், கருவறையில், கிழக்கு நோக்கி ஆபத்சகாயரும், அர்த்த மண்டபத்தில் பள்ளியறை சொக்கரும், போகசக்தி அம்மையாரும் உள்ளனர். இத்தலத்து சிறப்பு மூர்த்தியான குரு தட்சிணாமூர்த்தி இருப்பிடமும், மேலக்கோட்டத்தில் லிங்கோத்பவரும், வடக்கோட்டத்தில், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுரரும் அடுத்து, ஞானகூபம் என்னும் தீர்த்தக் கிணரும் உள்ளன. வெளியே சுக்கிரவார அம்மன் சன்னதியும், பள்ளியறையும் உள்ளன. தெற்கு நோக்கிய அம்மன் சன்னதி த்னிப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. துவார சக்தி, செப்பு நந்தி பலிபீடமும், கீழ்ப்புறம் திருமாலைக்கட்டி மண்டபமும் ,மேற்கு நோக்கி சனீசுவரர் சன்னதியும், வடபுறம் வசந்த மண்டபமும், கீழ் புறம் யாகசாலையும், பாக சாலையும், அன்னதான சமையல் கூடமும், வடக்கு பார்த்து சப்தமாதா ஆலயமும், வடபுறம் திரு நந்தவனமும் உள்ளது. இத்திருத்தலம்,காவிரி நதியின், தென்கரையில் ஒரு காத தொலைவில் உள்ளது. இந்த ஊரில் இதுவரை அரவு தீண்டி ஒருவரும் மரித்ததில்லை என்று சொல்லப்படுகிறது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்தில் வந்து முறைப்படி வணங்கி வழிபட்டு தட்சிணாமூர்த்தியை தரிசித்து ஞானோபதேசம் பெற்றார். இத்தலத்தில் உள்ள குருமூர்த்தியை, குரு வாரத்தில் வணங்கி வழிபடுவோருக்கு, சிவஞானம் எளிதில் கைகூடும் என்பது ஆன்றோர் வாக்கு.

திருவிழாக்கள் :

பஞ்ச பருவ உற்சவம், மாதாந்திர குருவாரந்தோறும், விசேச தரிசனமும்,குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கும் காலங்களில் குருப்பெயர்ச்சி இலட்சார்ச்சனையும் நடைபெறும். பிரதி வருட மாசி மாத குருவாரத்திலும், மகா குருவாரத்திலும், கலச பூசைகளும், மலர் அர்ச்சனைகளும் நடைபெறும். மாசி மாத கடைசி குருவாரத்தன்று, சங்காபிசேகமும்,விசேச அபிசேக அலங்கார, ஆராதனைகளும் நடைபெறும். தைப்பூசத்திலும், பங்குனி உத்திரத்திலும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்திரைப் பௌர்ணமியைக் கொண்டு, பத்துநாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்குத் தேர் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

பூமியிலிருந்து கிடைக்கப்பெற்ற திருவிளக்குகள் பற்றி கல்வெட்டுகள் கூறும் விபரம்:

19-3-2009 அன்று இத்திருக்கோவிலின் உள்பெரிய பிரகாரத்தில் வடக்குப் பகுதியில் பிரகார மண்டபம் கட்டுவதற்காக தோண்டியபோது, புதையுண்டு கிடைக்கப்பெற்ற திருவிளக்குகள் அனைத்தும் கி,பி. 11-12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து குத்துவிளக்குகளாகும். இது குறித்த செய்தியும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது ஆதாரப்பூர்வமான செய்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் கலையம்சமும், வடிவமும் அதனைத் தெளிவாக்குகின்றன, குருபகவான் மட்டுமல்லாமல், சனிபகவானும் இங்கு விசேசமாக வழிபடப்படுகிறார்.


--






7 comments:

  1. ஆலங்குடி பற்றி எழுதியதில் மிக மகிழ்ச்சி. எங்கள் ஊர் நீடாமங்கலம் ஆலங்குடிக்கு மிக அருகில் ( மூணு கிலோ மீட்டர் ) உள்ளது

    ReplyDelete
  2. அன்பின் திரு மோகன் குமார்,

    வணக்கம். மகிழ்ச்சி. அப்ப சரி அடுத்த முறை ஆலங்குடி ஆலயம் வரும்பொழுது உங்கள் ஊருக்கும் வரலாம்... நன்றி.

    அன்புடன்

    பவள சங்கரி.

    ReplyDelete
  3. இருநூறாவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள். தொடருங்கள்.

    ஆலங்குடி பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. இன்னும் நிறைவான பதிவுகள் தர என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு.கடவுள்.பக்தி எதிலும் நம்பிக்கையற்றுப் போச்சு.உண்மையில் பதிவு வாசிக்கவேயில்லை !

    ReplyDelete
    Replies
    1. அன்பின் இனிய தோழி ஹேமா,

      மன அழுத்தத்திலிருந்து வெளிவரும் ஒரு உபாயம் வேண்டுமே ஹேமா, வாழ்ந்துதான் ஆக வேண்டும் இல்லையா. இன்று புதிதாய்ப் பிறப்போம் என்று வெளிப்பூச்சுக்கு சொல்வதாக நினைக்காதீர்கள் தோழி. ஆண்டவன் அருளால் நல்லதே இனியாவது நடக்கட்டும். நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பதாவது நல்லதாக நடக்கட்டுமே. அதற்கு நாம் மனமார பிரார்த்திப்போம். மனம் கலங்காதீர்கள்.

      அன்புடன்

      பவள சங்கரி.

      Delete
    2. அன்புக்கு நன்றி ஐயா !

      Delete
    3. அன்பின் ஹேமா,

      என்ன ஆச்சு.... குழப்பமா.. ஐயா என்கிறீர்களே..... ரிலாக்ஸ்.... ஹேமா...

      Delete