சின்ன வயதில் நோட்டிற்குள் வைத்த மயிலிறகு குட்டிப் போட்டதா என்று கொஞ்ச நேரத்திற்கொரு முறை பார்க்கும் பழக்கம் இத்தனை வயசாகியும் இன்னும் விட்டபாடில்லை..
பெரும்பாலும் என்னோட காலை உணவு பப்பாளிப் பழம் + தேநீர் அல்லது காய்கறி சூப். நேற்று மாலை வாங்கி வந்தபோது செங்காய் பதத்தில் இருந்தது. பார்த்தவுடன் அடடா.. நாளை சாப்பிட ஆகுமா தெரியவில்லையே என்று மெதுவாகத் தொட்டுப்பார்த்தேன். நல்ல கெட்டியாக இருந்தது. சரி பார்த்துக்கலாம்னு போய் வேலையைப் பார்த்தேன். மேசையில் இருந்த பழத்தை பார்வையில் கொஞ்சம் கனிய வைத்தேன் போல.. 1 மணி நேரம் இருக்கும். மீண்டும் ஒரு முறை தொட்டுப்பார்த்தேன். பழுக்கவில்லையென்றால் பழுத்த பழம் வேறு வாங்கலாமா என்ற யோசனையோடு.. இப்படியே யோசித்து, யோசித்து பல வேலைகளுக்கிடையே போக வர போக வர பலமுறை சோதித்துவிட்டேன் போல. காலையில் எழுந்து வந்தும் சில முறைகள் இதேபோல தொடர்ந்தது. இறுதியாக சாப்பிடும் நேரத்தில் ஒரேமுறை பார்க்கலாம் என்றால் என்ன ஆச்சரியம் பழம் பழுத்துவிட்டது! ஆகா பரவாயில்லையே என்று பழத்தை நறுக்கியபோதுதான் தெரிந்தது பழுத்து விட்டதா என்று சோதித்துப்பார்த்தே அந்த ஒரு பக்கம் மட்டும் நன்றாகப் பழுக்க வைத்திருக்கிறேன் என்று. ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி, செந்தில் நகைச்சுவைக் காட்சி இப்படித்தான் வரும்..
பப்பாளியில் எலுமிச்சை சாறு, கொஞ்சம் உப்பு, மிளகு தூள் சேர்த்தோ அல்லது தேன் விட்டோ சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும்.
அதுசரி. பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். பல் வியாதி, சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லைக் கரைக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் இப்படி பல நன்மைகள் உள்ளன. இயற்கையாகவே இந்த பப்பாளியில் விஷக்கிருமிகளைக் கொல்லும் ஒரு சக்தி இருப்பதால் இரத்தத்தில் நோய்க்கிருமிகள் தங்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அடிக்கடி பப்பாளி சாப்பிடலாம். நம் நாட்டில் வருடம் முழுவதும் கிடைக்கும் பழம் இது. வீட்டில் ஒரு மரம் வைத்தால்கூட எளிதாக வளர்க்கலாம். தண்ணீர் கூட அதிகமாக ஊற்ற வேண்டியதில்லை. தானாக வளர்ந்து நல்ல பலன்கள் கொடுக்கும்.
No comments:
Post a Comment