பவள சங்கரி
மனித வாழ்வியலுக்கு அடிப்படைத் தேவைகளாகத் திகழ்வது உணவு, உடை, இருப்பிடம் ஆகியன. மனிதகுல வரலாற்றில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதே பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவை. இவைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள், சிதைவுகள் அனைத்தும் வரலாறாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவைகளே ஒரு நாட்டின் அடையாளமாக ஆகிவிடுகின்றன. ஜப்பான் நாட்டின் அடையாளம் சற்றே வித்தியாசமானதாகவே தென்படுகிறது. சமீபத்தில் நான் லெஸ்லி டவுனர் அவர்களின் ஆங்கில வழி ஜப்பானிய “கெய்ஷா” என்ற விரிவான புதினத்தை தமிழில் மொழிபெயர்த்தபோது இந்த எண்ணம் உறுதியானது. ஒரு நாட்டின் முன்னேற்றம், அதன் வீழ்ச்சி என அனைத்தும் அந்நாட்டின் பெண்களின் நிலையை வைத்தே எளிதாக எடை போட முடியும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
உலக அரங்கில் நவீன ஜப்பான் பொருளாதாரத்தில் பெருமளவு முன்னேறியிருக்கின்றது. ஜப்பானியப் பெண்கள் அதிகாரம் மற்றும் தன்னாட்சியைப் பொறுத்தவரை பாரம்பரியமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு ஆண் வீட்டின் தலைவனாகவும் குடும்பத்தின் வெளி உலக பொது விவகாரங்களைக் கட்டுப்படுத்தக்கூடியவராகவும் இருக்கின்றான். வீட்டில் உள்ள மனைவி குடும்பத்தை நிர்வகிப்பதில் கட்டுப்பாடுடன் செயல்படலாம். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜப்பானில் குடும்ப கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பங்களில் ஆணாதிக்கம் கண்டுவருகின்றது. 1947 அரசியலமைப்பில் பாலியல் சமத்துவக்கொள்கை நிறுவப்பட்டது. பாரம்பரியக் குடும்ப அமைப்பு சட்டக் கட்டமைப்பை கலைத்து வந்தாலும், பெண்கள் நிலையில் சட்ட மாறுதல்களால் நடைமுறைத் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புச் சட்டங்கள், கல்வி சமத்துவம், மற்றும் வேலை, தொழில் முன்னேற்றம் போன்றவைகள் சிறந்துள்ளன.
ஜப்பானில் பாரம்பரியக் கலைகள் என்பது காரியங்களைச் செவ்வனே செய்யும் விதத்தைக் கற்கும் வடிவமேயன்றி ஒருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதற்கானது அல்ல. பூரணத்துவம் என்பதே இதன் கொள்கை; மரபின் பூரண வெளிப்பாடு, சரியான இடம், காலம் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு சரியான கிமோனோ உடையைத் தேர்ந்தெடுத்து அணிவது போன்றவை. ஒரு கெய்ஷா என்பவள், பாரம்பரிய முறையில் அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தம்மை முழுமையாக கலைக்கு அர்ப்பணிக்கும் ஒரு கலைஞர்.
கெய்ஷா என்பவர்கள் யார்?
கெய்ஷாவின் வரலாறுகள் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றாலும், அவை பழைமையான விபச்சாரத்தொழில் என்றே கருதப்பட்டும் வருகிறது. உலகளவில் பலர் ‘கெய்ஷா’ என்பது பாலியல் தொழிலாளி என்பதன் ஜப்பானியச் சொல் என்றே கருதுகிறார்கள். ‘courtesan’ என்கிற ‘அரசவை அணங்குகள்’ என்ற பதம் சற்று நெருக்கமாகத் தோன்றினாலும், அவர்களின் வரலாற்றை கருத்தில்கொண்டால் அது வேறு பாதைக்கு இட்டுச்செல்வதே நிதர்சனம். கெய்ஷா என்ற வார்த்தையின் பொருள், ‘கலைகளின் நபர்’ என்பது. ஆரம்பகால கெய்ஷாக்கள் ஆண்கள்தான். அவர்களுடைய முக்கியமான பணிகளே, நாட்டியம், இசை, கவிதை போன்றவைகளே.
கெய்ஷா வரலாறு:
பெண் பொழுதுபோக்காளர்களான, 7ஆம் நூற்றாண்டின் சபூருகோ, 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான ஷிராப்யோஷி போன்றோர்களை வேராகக்கொண்டிருந்தவர்களே கெய்ஷா என்பவர்கள். பிரபு வம்சத்தினருக்காகச் செயல்படுவதும், சக்கரவர்த்திகளின் காமக்கிழத்திகளாகவும் இருந்தனர். 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஜப்பானில் கேளிக்கை விடுதிகளின் முதல் தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டன. மற்ற பல ஜப்பானியக் கலாச்சார அம்சங்கள் போன்றே அவர்கள் சீன மிங் வம்சத்தினரைப்போன்ற மாதிரிகளாயினர். 1600களின் மத்தியில் மீண்டும் இடம்பெயர்ந்த பின்பு அவர்கள் ‘ஷிமபாரா’ என்றழைக்கப்பட்டனர்.
இதற்குள் ஈடோவில் யோஷி-வாரா எனும் ஒரு சதுப்புநில வாழிடம், தோகுகாவா ஷோகுனேட்டின் ஆதரவுடன் விபச்சார மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் விபச்சாரங்கள் தடை செய்யப்பட்டு, அதற்கான கடுமையான சட்டங்களும் போடப்பட்டன. இதோடு, எந்தவொரு வாடிக்கையாளரும் ஒரு விபச்சார விடுதியில் 24 மணி நேரங்களுக்குமேல் தங்க அனுமதியில்லை; அரசவை அணங்குகள் சாதாரண வண்ணமிட்ட கிமோனோக்கள் மட்டுமே உடுத்த வேண்டும்; சந்தேகப்படும்படியான அல்லது முன்பின் அறிமுகம் இல்லாத புதிதாக வருபவர்கள் குறித்து நகர ஆளுநர் அலுவலகத்தில் புகார் செய்ய வேண்டும் என்ற சட்டங்களும் போடப்பட்டன.
ஜப்பான் வெகு நாட்களாகக் காத்திருந்த, நூற்றாண்டுகளின் உள்நாட்டுப் போர்களைத் தொடர்ந்த அமைதியான காலங்களில், பல சாமுராய்கள் சமுதாயத்திற்கு இவர்களின் சேவைகளின் தேவைகள் இனி இல்லை என்பதைக் கண்டறிந்தனர். பல முன்னாள் பிரபு குடும்பங்களின் வாரிசுகள், யோஷிவாரா, ஷிமபாரா போன்ற இடங்கள் மெருகேற்றிக்கொள்வதற்கும், கலாச்சாரத்திற்கும் உகந்த இடம் என்ற எண்ணத்தில் அரசவை அணங்குகளாகியிருந்தனர். அமைதியானச் சூழல் மகிழ்ச்சியையும், வணிகர்களின் முன்னேற்றத்தையும் உயர்த்தியிருந்தன.
ஹானாமிச்சியினுள் பலவகையான அரசவை அணங்குகள் பிரிவுகள் இருந்தன, பத்தாண்டுகளில் தலைமை குரு மற்றும் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட தரங்கள் பல முறைகள் மாறியிருக்கின்றன என்றாலும் ஒருபோதும் அது நல்ல முறையில் அல்ல. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் அந்தச் சூழ்நிலை சற்றே மாறி, கொயோட்டோ மற்றும் ஒசாகாவில் ஒரு புதிய முறையிலான பொழுதுபோக்காளர்கள் வந்தனர். ஆரம்பகால கெய்க்கோ ஆண்களாக இருந்தனர். பின் வெகு விரைவிலேயேத் தோன்றிய பெண்கள் ‘ஓடோரிகோ’ என்ற நாட்டியக்காரிகளாகவோ அல்லது ஷேமிசென் வாசிப்பவர்களாகவோ இருந்தனர். வெகு விரைவிலேயே பெண் கெய்ஷாக்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டனர். யோஷிவாராவில் இவர்களைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர பதிவிடும் முறையை துவங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு அவர்களை வரி செலுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டது. அவர்களுடைய நடை, உடை, பாவனைகள் என அனைத்தையும் தீவிரமாகக் கட்டுப்படுத்தினர். உண்மையில் இந்த சட்டத்திட்டங்களே கெய்ஷாக்கள் கலைஞர்களாகவும், பொழுதுபோக்காளர்களாகவும் உருவாக வழிவகுத்தது.
அரசவை அணங்குகளைக்காட்டிலும் மிகவும் எளிமையாகவே அவர்கள் உடுத்தியிருந்தபோதும் அவர்கள் நவீன தலைவர்களாகக் கருதப்பட்டனர். 20 ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினராலேயே கெய்ஷா வாழ்க்கைக்கு விற்கப்பட்டதோடு அவர்களுடைய கன்னித்தன்மையும் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு, ‘மிஸூ-ஏஜ் என்ற சடங்கிற்கு உட்படுத்தப்பட்டனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இது போன்ற பழக்கங்கள் நிறுத்தப்பட்டு, கெய்ஷா தொழில் படிப்படியாக சரிவைச் சந்தித்தது.
“கெய்ஷாக்களிடம் வரும் ஆண்கள் பெரும்பாலும் சமூகத்தின் மிக உயர்மட்டத்தில் இருப்பவர்கள். அதனால் அந்த அகம்பாவங்களை சுமந்தவாறே வருவார்கள். கெய்ஷா செய்யும் முதல் காரியம் அவர்களின் அந்த ஆணவத்தை மறக்கச்செய்வதுதானாம். அதாவது அச்சம் சிறிதும் இல்லாமலும், அதேசமயம் அவர்களின் ஆணைகளுக்குப் பணியாமலும், அவர்களை கோபம் கொள்ளச்செய்யாமலும் இருக்கும் திறமைசாலிகளாம். அவர்களை ஒரு சாதாரண மனிதனாக்கிய பின்பு உறவு கொண்டு அதுபோன்றொரு சுதந்திர உணர்வை அவர்கள் வேறெங்கும் அனுபவித்திருக்கவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்திவிடுவார்களாம். அப்படி அங்கு வரும் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் சுயத்தை மீட்டெடுக்கும் கலையைத்தான் “கெய்ஷாக்கலை” என்கிறார்கள்.
தலைநகரங்களில் காணக்கூடிய இருபெரும் பிரபலமான ஹனாமிச்சி (கெய்ஷா விடுதிகள்) டோக்கியோவும், கொயோட்டோவும். டோக்கியோ யோஷிவாரா கேளிக்கை விடுதிகளில் காபூக்கி கலைஞர்களும், நடிகர்களும் வணிகப்பெருமக்களுடன் கலந்துறவாடிக்கொண்டிருப்பர். 1600 – 1868 ஈடோ காலங்களில் ஜப்பான் வெளியுலகத் தொடர்பை பெருமளவில் குறைத்திருந்ததோடு, ஒரு மிகப்பெரும் கலாச்சார முன்னேற்றம் கண்ட காலமாகவும் இருந்தது. நடிகர்கள், ஸூமோ மல்யுத்த வீரர்கள், கெய்ஷாக்கள் போன்றோரே, கேளிக்கை உலகின் வண்ணமிகு யுகியோயி என்கிற மரத்துண்டு ஓவியங்களின் (மிதக்கும் உலகின் படங்கள்) மாதிரிகளாகக் கலக்கிக்கொண்டிருந்தனர். கொயோட்டோவைப் பொறுத்தவரை ஷிமபாரா மாவட்டம் இன்றளவிலும் கெய்கோ எனக்குறிப்பிடப்படும் மெய்க்கோ பாரம்பரியமான தேநீர் இல்லங்களில் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியூட்டுபவர்களாக இருக்கின்றனர்.
ஒரு முதுமொழி பகர்ந்துள்ளதைப்போல, அரசவை அணங்குகளின் பொய் என்பது, ‘நான் உன்னை காதலிக்கிறேன்’, அந்த வாடிக்கையாளரின் பொய், ‘நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்’ என்பதுதான். ஒரு மனிதனின் வரவை தொடரச் செய்வதற்கு, தன் காதலை பிரகடனப்படுத்துவதைக்காட்டிலும் வேறு வழி ஏதும் இருக்கமுடியாது. பதினேழாம் நூற்றாண்டில், அரசவை அணங்குகளுக்கு காதலை பிரித்துவிடும் வழிகளைக் கற்பிக்கும் பாடப்புத்தகங்கள் இருந்தன. உதாரணமாக, ஒருவன் கிளம்பிச் செல்ல தயாராகும்போது, சில துளிகளாவது கண்ணீர் விடவேண்டியது மிக அவசியம். திட்டப்படி தேம்பி அழத்தெரியாத அனுபவசாலியாக இராமல் ஆரம்ப நிலையில் இருப்பவராக இருந்தால், அந்தப் புத்தகம் அவர்களுக்குக் கொடுக்கும் பாடம், தங்கள் கண் இமைகளை இரண்டு முறை இழுத்துவிட்டு, ஏதாவது சிறிய பொருளை ஒரு ஐந்து நிமிடத்திற்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்க்கவேண்டும், அல்லது தங்கள் கிமோனோவின் கழுத்தின் உட்புறம் வரும் தீச்சுவாலைகள் தங்கள் கண்களை உறுத்தும் விதமாக இருத்தல் வேண்டும்.
ஜப்பானில் ஒழுக்கத்திற்கு முரணான கெய்ஷா என்ற பாலியல் அமைப்பும், மொத்த பாலுணர்வுக் கலாச்சாரமும், கடுமையான கன்பியூசயனிச சமூக அமைப்பினின்று எழுந்தது. சர்வாதிகாரத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பாமல் அடிபணிதல் ஒன்றே கன்பியூசனிசத்திற்கு தேவை. இந்த இருண்மையான உலகிலிருந்து இவர்கள் உருவான விதம் பற்றி தாம் அறிந்து கொண்டதை ஆழ்ந்த ஆய்வின் அடிப்படையில் வழங்கியுள்ளார், கெய்ஷா நூலின் எழுத்தாளர், லெஸ்லி டவுனர். ஆழ்ந்த அமைதியினூடே இருந்த அந்த மாயமான வரையறைக்குள்ளிருந்த ஒரு உலகில் வாழும் கெய்ஷாக்களைக் கண்டுபிடித்து சந்திப்பது சாமான்ய காரியமல்ல. விருது பெற்ற எழுத்தாளர், ஜப்பானிய அறிஞர், அருமையான கதை சொல்லியுமான லெஸ்லி டவுனர், பல மாதங்கள் அங்கேயே அவர்களுடனேயே வாழ்ந்து அந்த மாய உலகின் மறைவிலிருந்த குறிப்பிடத்தக்க பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். “பதினேழாம் நூற்றாண்டின் திருப்பத்தில் ஒருவேளை நீங்கள் கொயோட்டோவிற்கு வர நேர்ந்திருந்தால், கவர்ச்சியூட்டும் முன்னணி கேளிக்கை மனைகளாகப் பெருகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்த ஒழுக்கக் கேடான கேளிக்கைக் கும்பல் கிழக்கு மலைகளின் அடிவாரத்தில் உள்ள காமோ ஆற்றின் கரையிலுள்ள யசாகா ஆலயத்தின் அடர்சிவப்பு வாயில்வரை உங்களையும் இழுத்துச் சென்றிருக்கும்”, என்கிறார்.
ஆச்சரியமூட்டும் ஜப்பான் கலாச்சாரம்.. ஜப்பானியப் பெண்களின் பரிதாப நிலை….
’எங்கள் மனைவியர் வீட்டில் சமையல் மற்றும் குழந்தைகள் என்று கட்டுண்டிருந்தனர். அவர்களுடனான எங்களின் உறவுகள் எப்பொழுதும் வீட்டு விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்களாகவே இருக்கின்றன. இதைக்கடந்து, ஆண்களுக்கு மற்ற உலக நடப்புகள் பற்றிப்பேச ஒரு மேம்பட்ட வித்தியாசமான துணையாக, கலை மற்றும் கருத்துகள் பற்றி விவாதிக்கக்கூடிய ஒரு பெண் தேவைப்படுகிறாள். எங்களுக்கு மகிழ்ச்சியூட்டி உற்சாகப்படுத்துகிற, அறிவாளியான நன்கு படித்த பெண்கள் தேவை. ஒரு கெய்ஷா இருக்க வேண்டியதும் இப்படித்தான்”
1930 களின் மத்தியில் ஆன்றோர்கள், கவிஞர்கள், கெய்ஷாவை பணியமர்த்திய விடுதியாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் ஷிம்பாசி கெய்ஷா இல்லங்களின் கூட்டமைப்பின் இயக்குநர்கள் போன்ற அனைவரின் வாதங்களும் The Geisha Reader’ என்ற நூலில் தொடர் கட்டுரைகளாக வெளியிடப்பட்டன. அதில் கவிஞர் சக்குடாரோ ஹாகிவாரா, சமுதாயத்தில் கெய்ஷாவின் பங்கை ஒப்புக்கொள்ளக்கூடிய வாதமாக இப்படி முன்வைத்திருக்கிறார். இதிலிருந்தே ‘கெய்ஷா’ என்பதன் தத்துவம் தெளிவாக விளங்குகிறது.
ஆம், கெய்ஷாக்கள் ஜப்பானின் பழைய அரசாட்சிக் காலத்தில் அப்போதைய பிரபுக்களை மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட பெண்கள். இவர்களை உயர்குடித் தாசிகள் என்றும் சொல்லலாம். கெய்ஷா என்ற சொல்லின் பொருள், கலைபயின்றவள், அளிப்பவள் என்பது. ஆயிரம் ஆண்டுகளாக ஆண்களை மகிழ்விக்கும் கலையைக்கற்றுத் தேர்ந்த அதையே பிழைப்பாகவும் நடத்திக்கொண்டிருந்தவர்கள். காமம் என்பது உடற்சுகம் மட்டும் சம்பந்தப்பட்டதன்று. ஒரு ஆணின் அகங்காரத்தை நிறைவு செய்யும் வகையில் பல்வேறு கலைகளைப்பயின்றவர்கள். கெய்ஷாக்களின் காமக்கலைகளைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிகவும் விரிவான, தெளிவான நூல், லெஸ்லி டவுனரின், ‘கெய்ஷா’.
சுற்றுலாப் பயணிகளுக்கு ஜப்பானியத் தேநீர் பண்பாடு, காகித பொம்மைக்கலை, ஜென் பௌத்தம், ஹைகூ கவிதை, ஷிண்டோ மதம் என்று வழக்கமான அனைத்து சுற்றுலா கவர்ச்சிகளைக்காட்டிலும் மிகக் கவர்ச்சிகரமான ஒரு விசயம் என்றால் அது கெய்ஷாவாகத்தான் இருக்கும். ஜப்பானில் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் சொல் கெய்ஷா. பாலியலைக் கடந்து ஒரு தனிப்பட்ட சமூக அங்கீகாரம் பெற்றவள் கெய்ஷா. இவள் பிரபுக்களைத் தம் காதல் வலையில், மயக்கு மொழியில் சிக்க வைத்த கவர்ச்சி நாயகியோ அன்றி பாலியல் தொழிலாளியோ அல்ல. ஒரு சக்கரவர்த்தியாக இருந்தால்கூட அவளது விருப்பத்திற்கு மாறாக அவளைத் தீண்ட முடியாது. ஒரு கெய்ஷாவின் காதலுக்காக ஏங்கி பித்துப்பிடித்தவர்களும், தற்கொலை செய்து கொண்டவர்களும் பலர் உண்டு. அதேபோல் சாமுராய்களின் உறவிற்கு மிக உண்மையாக இருந்து, அவர்களுக்காகத்தம் உயிரையும் அர்ப்பணித்த கெய்ஷாக்களும் உண்டு.
இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், இந்த விசித்திரமான கெய்ஷா உலகத்தில் வலம் வரும் கணவன்களை ஜப்பானிய மனைவிகள் அங்கீகரிக்கிறார்கள் என்பதுதான். ஜப்பானியக் கலாச்சாரத்தின் முக்கியமான அங்கம் இந்த கெய்ஷா. ஜப்பானின் மறுக்க முடியாத அடையாளமும் கெய்ஷாதான். தனது இருபதாண்டு கால அனுபவத்தின் மூலம், ஜப்பானிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மர்ம முடிச்சுகளை தெளிவாக விளக்கியுள்ளார் லெஸ்லி டவுனர்.
கெய்ஷா தொழில் பழகுபவர்களை மெய்க்கோ என்பார்கள். மெய்க்கோவின் வாழ்க்கை முறைமைக்கும் கெய்ஷாவின் வாழ்க்கை முறைமைக்கும் பெரும் இடைவெளி இருந்தது. இது அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதொரு தொழில் என்பதே உண்மை. சமூகப் பின்னணிக்கு இங்கு இடமில்லை. மெய்க்கோ பயிற்சிகளுக்கு கடின உழைப்பும், நீண்ட நேரமும் ஈடுபட வேண்டியிருந்ததால், அவர்கள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. சமீப காலத்திலும் சரி இன்றும் சரி இந்த இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இதற்கான சரியான காலகட்டம் விபச்சாரம் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்ட 1958 ஆம் ஆண்டு என்று தன்னிடம் பேசிய அனைவரும் கூறியதாகச் சொல்கிறார் லெஸ்லி. கடந்த காலத்தில் காதல் என்பது தடை செய்யப்பட்ட கனியாக, சட்ட விரோதமாக இருந்த காரணத்தினாலேயே அதன்மீது அதீதமான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இன்றும்கூட கெய்ஷாக்கள் மதிப்பிழக்கச் செய்யும் செயல்களிலிருந்து விலகி இருப்பினும், அவர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்கள் கொயோட்டோவின் அடையாளச் சின்னமாக இருந்தனர். மத்திய இரயில் நிலையத்திற்கு வருகிற பயணிகளை “கொயொட்டோவிற்கு வருக!” என்று வரவேற்கிற மெய்க்கோவின் படம் பொறித்த பதாகைகள் வரவேற்றன. கெய்ஷா உலகின் விளிம்பில் இருந்தவர்கள், தாங்கள் அறிந்த கெய்ஷாவை உயர்த்தும் விதமாக, அவர்களின், ஐதீகங்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை வெளிப்படையாக, மகிழ்ச்சியுடன் விவரிப்பார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மகளை ஒரு கெய்ஷாவாக ஆக அனுமதிப்பார்களா என்று கேட்டபோது, அவர்கள் தலையைச் சாய்த்து நோக்கியவாறு, முணுமுணுப்பாக, “ஆம்.. இது சற்று சிரமமான கேள்விதான்” என்பார்களாம்.
கெய்ஷா எண்ணிக்கையில் குறிப்பிட்ட அளவு வீழ்ச்சியும் இருந்தது. வயது முதிர்ந்த கெய்ஷாக்களும், கடைக்காரர்களும் காமோ நதி, ஈஸ்டர்ன் ஹில்ஸ் மத்தியில் இருந்த மொத்த பகுதிகளிலும், வடக்கிலிருந்து, நான்காவது பாலத்திலிருந்து ஐந்தாம் பாலம்வரை ஒரு வித்தியாசமான உலகமாகவே இருந்த நாட்களை நினைவுகூருவார்கள். ஒவ்வொரு வசிப்பிடமும் ஒரு தேநீர் இல்லமாகவோ அல்லது கெய்ஷா இல்லமாகவோ இருந்தது. ஒவ்வொரு கடையும் கெய்ஷா சமூகத்திற்கு பணிபுரிந்தது. உச்சமான 1920 களில், நாடு முழுவதும் 80,000 கெய்ஷாக்கள் இருந்தனர். கியானில் மட்டுமே 2,500 கெய்ஷாக்களும், 106 மெய்க்கோக்களும் இருந்தனர். 1948 களில், போருக்குப் பின்னர் தேநீர் இல்லங்கள் திறக்கப்பட்டபோது, அங்கு 1,200 கெய்ஷா மற்றும் 160 மெய்க்கோ மட்டுமே கொயோட்டோவில் இருந்தனர். அந்நாட்களில், பூக்கள் மற்றும் வில்லோ உலகம் செழித்தோங்கும் தொழிற்சாலைகளாக, நெறிமுறை மற்றும் சடங்குகளால் ஆளப்பட்டு வந்தன. தேநீர் கடைக்குக் கடை, மரக்காலணிகள் தடதடத்தபடி கெய்ஷாக்கள் செல்வர். தினந்தோறும் தேநீர் இல்ல தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தி வருவார்கள். சில நேரங்களில் நாள் முழுவதும், அடுத்த நாள் வரையிலும் கூட கேளிக்கைகளில் ஈடுபட்டவாறு இருந்தனர். ஆனால் 1999 வாக்கில், 195 கெய்ஷாக்களும், 55 மெய்க்கோ மட்டுமே கொயோட்டோவில் இருந்தனர். அதில் 90 கெய்ஷா மற்றும் 22 மெய்க்கோ கியானில் இருந்தனர். ஒரு கட்டத்தில் எவை அவர்களை கெய்ஷா ஆக்கியதோ அது மறைந்த பின்னும் அவர்கள் கெய்ஷா என்று அழைக்கப்படவில்லை. நவீன ஜப்பானில், அவர்கள் அதற்கு மேலும் கேளிக்கை தொழிலின் இதயமாகவும் இருக்கவில்லை, அல்லது அந்தத் தலைமுறையின் மிக விருப்பமான பெண்களாக – கடற்கன்னிகை போலவோ ஆராதிக்கப்படுபவர்களாகவோ இல்லை. காலத்திற்கு ஒவ்வாத ஒன்றாக ஆனபின் அவர்கள் எந்த விதமான பங்களிப்பை அளிக்க இயலும்?
ஆற்றோரத்து மக்களுக்கு இணையாக மதிப்பற்று இருந்த காபூக்கி நடிகர்கள், தலைவர்கள், மதிப்பிற்குரியவர்களாக மாறினர். மாற்றவொண்ணாத ஈடோ காலத்தில் புதையுண்டிருந்த அவர்கள் இப்போது மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நாடக உடைகளை அணிந்துகொள்கிறார்கள். ஆனால் கெய்ஷாவே இந்தப் போக்கை தொடர விரும்பினாலும், அவர்களுக்கு அது வாய்க்கவில்லை. அந்த மலர் மற்றும் வில்லோ உலகின் சாரமே அதன் இரகசியம்தான்.
பணம் படைத்தவர்கள் மத்தியில் கெய்ஷாக்கள் இருந்தாலும் அதனால் பிழைப்பவர்கள் இல்லை அவர்கள் என்பதோடு அதனால் அவர்களுக்கு ஒரு இலாபமும் இருக்கவும் இல்லை.
ஒரு கெய்ஷாவின் குடும்பம் என்பது எப்படியிருக்கும் என்ற ஆர்வம் எழுவது இயற்கை.
ஆரம்பப் பள்ளியில் கெய்ஷாக்களின் மகள்கள் பலர் படித்துக்கொண்டிருந்தனர் . சில நேரங்களில், இன்னாருடைய தந்தைதான், இப்படியான ஒரு கட்டுமான தொழிலகத்தின் உரிமையாளர் இன்னாருடைய தந்தை ஒரு மருத்துவர் அல்லது ஒரு பல் மருத்துவர் அல்லது ஒரு நடிகர் என்றபடி வதந்திகளும் உலவின. ஏனைய ஜப்பான் மக்கள் இதை விநோதமானதாகக்கூட நினைத்திருக்கலாம் என்றாலும் இந்த கெய்ஷா மாவட்டங்களில் ஒரு பெற்றோர் குடும்பங்கள் என்பது சர்வ சாதாரணம்தான். இதனால் குழந்தைகள் குற்ற உணர்வால் சிரமப்பட்டார்களா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதுதான். உண்மையைச் சொல்லப்போனால் எவருக்கும் இரண்டாவது சிந்தனையேகூட இருந்ததில்லை. அவர்கள் கெடுக்கப்பட்டார்கள் என்ற ஒரே தொல்லைதான். அடிக்கடி அவர்கள், ‘இன்று மாமா வருகிறார்கள்!’ என்று சொல்வதைக் கேட்கலாம். அவர்களுடைய தந்தை வரும்போதெல்லாம் அவர்களுக்கு வேண்டுவது அனைத்தும் கிடைக்கும் என்பது அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது. மேலும் “தயாரிப்புக்குக் கட்டணம்” என்பது அவளை உருவாக்கியதற்கும், அதுவரை வளர்த்ததற்கான கட்டணமும் ஆகும்.
அவள் பள்ளிவிட்டு திரும்பியவுடன், சுத்தம் செய்வது, மெய்க்கோவிற்கு உதவுவது மற்றும் கெய்ஷாவிற்கு கிமோனோ அணிவதிலும் மற்றும் ஒப்பனை செய்வதிலும் ஒத்தாசையாக இருக்க வேண்டும். அவள் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருந்ததோடு, அவளுக்கென்று நண்பர்களும் கிடையாது. அவளுக்கு 7 மற்றும் 20ந் தேதி என மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே விடுப்பு கிடைக்கும். இதெல்லாம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அந்நாட்களில், அனைத்து இடங்களிலும் குழந்தைகள் நிரம்பியிருந்தனர். அது சாதாரணமானதாகவே இருந்தது. எவருமே, யார் யாருடைய பெற்றோர் என்று கேட்டதே இல்லை.
ஆக்கிரமிப்புக்கு முன்பாக, அதாவது 1958 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கு முன்பாக, ‘ஸெகென்’ – அழகான இளம் பெண்களைத் தேடி கிராமப்புறத்தின் ஏழ்மை நிறைந்த பகுதிகளுக்குச் சென்று அவர்களைக் கொயோட்டோவிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கு மேலும் பயிற்சி கொடுப்பது வழக்கம். அந்நாட்களில் பணிப்பெண்கள் கொயோட்டோவிற்கு ஆறு அல்லது ஏழு வயதிற்குள் வந்து விட்டாலும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் பயிற்சிக்குப் பிறகு பதினொரு வயதில் மெய்க்கோ ஆகிவிடுவார்கள். அதனாலேயேதான் அவர்கள், தாங்கள் அதிகம் உயரமாக வளராதபோதும், தங்கள் உயரத்தை கூட்டிக் காட்ட நான்கு அங்குலம் உயரத்திற்கு காலணி அணிந்திருந்தார்கள். நவீன கால மெய்க்கோக்கள் தங்கள் வாடிக்கையாளர்களைக்காட்டிலும் அதிக உயரமாகக் காட்டிக்கொள்கிறார்கள். இன்னும் பலவித மாற்றங்கள் இருந்துகொண்டிருந்தன. முந்தைய போர்க்கால நாட்களில் கொயோட்டோவின் பெரும்பாலான மெய்க்கோக்கள் கெய்ஷா குடும்பங்களிலிருந்துதான் வந்தனர்; அவர்கள் தாய்மார்கள், பாட்டிமார்கள் மற்றும் சில நேரங்களில் அவர்கள் கொள்ளுப்பாட்டிகள் கூட கெய்ஷாவாக இருந்திருக்கின்றனர். நாட்டுப்புறத்திலிருந்துவந்த பெண்கள், சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்தனர். ஆனால், நாகரீக காலங்களில், பல கெய்ஷா மகள்கள் வேறு தொழிலை மேற்கொள்ளவோ அல்லது ஒரு சாதாரணமான மனிதனை மணந்து, ‘சாதாரண’ வாழ்க்கை வாழவோதான் விரும்பினார்கள். சில மூத்த முன்னாள் கெய்ஷாக்கள் தங்களுடைய உண்மையான பெயரைச் சொல்லி குறிப்பிடுவதைக்கூட விரும்பவில்லை. காரணம், தன் மகன்கள், மகள்கள், தற்போது பேரக்குழந்தைகள் மற்றும் மதிப்பிற்குரிய ஏனைய குடும்ப உறுப்பினர்கள் உட்பட எவருக்கும் தான் ஒரு கெய்ஷாவாக இருந்தது தெரியாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.
பண்டைய நாட்களில், வறுமை காரணமாக பெற்றோரே தங்கள் குழந்தைகளை விற்கும் நிலை இருந்தது. போருக்கு முன்னால், கெய்ஷாவின் பெண்கள் தங்களுடைய ஆறாவது வயது, ஆறு மாதம், ஆறு நாட்களில் நாட்டிய வகுப்புகள் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அந்நாட்களில், இது ஒரு முக்கியமான தொழிலாகக் கருதப்பட்டதோடு, போல்ஷாய் பாலே மாணவர்கள் போல இளம் வயதிலேயே குழந்தைகள் தமது பயிற்சியைத் துவங்கினர். நவீன கால மெய்க்கோ பதினான்கு அல்லது பதினைந்து வயதுவரை தங்களுக்கான பயிற்சியை ஏதும் மேற்கொள்ளவில்லை. இதற்குள் முறையான கல்வி பயின்றிருந்தனர். இந்தக் கல்வி அவர்களை கேள்வி கேட்கச் செய்திருந்தது. நாட்டிய வகுப்பில் திரும்பத் திரும்ப பயிற்சி செய்ய வேண்டும். சீடனாக கீழ்படிந்து நடக்க வேண்டும். ஒரு கெய்ஷா குடும்பத்தின் நான்காம் தலைமுறை என்ற உயரிய தகுதியுடைய ஒரு எழுபது வயது முதிய பெண்மணி, ‘பழைய காலங்களில் பெண்களிடம் குறைந்தபட்ச அடிப்படை மரியாதைகளையாவது எதிர்பார்க்க முடிந்தது,’ என்று ஆச்சரியத்தில் புருவம் உயர என்னிடம் கூறினார். தற்போது, அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை: ஒரு கிமோனோவை எப்படி அணிவது, எப்படி நடப்பது, எவ்வாறு அழகாக, ஒரு முட்டி மற்றையதைவிட, ஒன்று அல்லது இரண்டு அங்குலம் உயரமாக இருக்கும்படி மண்டியிடவோ அல்லது ஃபியூசுமா என்ற சரிவு, காகிதக் கதவுகளை, கைகள், விரல்கள் மற்றும் கட்டை விரலை நேராக வைத்துக்கொண்டு ஒன்றாக சேர்த்து நளினமாக அழுத்தம் கொடுத்து திறக்கும் முறைமையையோ அறிந்திருக்கவில்லை. சிலர் அதற்கு முன்பு தரை விரிப்பில் (டடாமி) உட்கார்ந்ததே இல்லை. சிலருக்கு சாப்ஸ்டிக்குகளைப் பயன்படுத்தவும்கூடத் தெரியவில்லை. ‘அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்!’ என்று ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் கூறியதையும் குறிப்பிடுகிறார் லெஸ்லி.
சிகையலங்காரம் என்பது அவர்களின் முக்கியமான அடையாளமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் இஷிஹாரா, கியானின் பழம்பெரும், மெய்க்கோ மற்றும் தாயூ சிகையலங்காரங்கள் குறித்து நான்கு நூல்கள் எழுதியுள்ளார். தாயூ அரசவை அணங்குகளின் தனிப்பட்ட சிகையலங்காரத்தை உருவாக்கத் தெரிந்த ஒரே மனிதர் ஜப்பானிலேயே அவர் மட்டும்தான். ‘ஈடோ காலங்களில் ஒருவரைப் பற்றிய அனைத்தும் அவருடைய முடியைக்கொண்டே சொல்ல முடியும்’, என்கிறார் பேராசிரியர் இஷிஹாரா.
ஆம், அந்நாட்களில் ஒவ்வொரு வகுப்பு மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான சிகையலங்காரம் இருந்துள்ளது. அதை வைத்தே அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய தொழில் மற்றும் அவர்கள் எந்த நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து வருகிறார்கள் போன்ற அனைத்தையும் கூற முடியும். அது இன்றும் தொடரும் ஒரே இடம், கெய்ஷா உலகம் மட்டுமே. கெய்ஷா தொழிலின் ஒவ்வொரு பருவத்திற்கும் வித்தியாசமான சிகையலங்காரமும், ஜப்பானின் வெவ்வேறு பகுதி கெய்ஷாக்களுக்கும் வெவ்வேறு விதமான கிமோனோவும் உண்டு.
‘ரிப்பன், நகைகள், பட்டு மலர்கள், பேகல் வடிவில் முடியை உருட்டி உயரமாக உச்சந்தலை கொண்டையுடன், கூடிய ஒரு சிகையலங்காரம்தான் மெய்க்கோவின் முதல் சிகையலங்காரம். இதன் அர்த்தம் அவள் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறாள் என்பதுதான். ‘ஓஃபுகு’ என்ற கீழ் முடிச்சிட்ட, சற்று குறைவான சிகை அலங்காரங்களுடன் இருந்த சிகையலங்காரத்தின் விளக்கம், அவள் மேலும் கன்னியாக இல்லை என்பதால் வாழ்த்தப்படவேண்டியவள் என்பதுதான். மெய்க்கோ தன் பதின்மூன்றாம் வயதிலேயே இது போன்ற சிகையை அணிந்துகொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். கெய்ஷாக்கள், அந்த இளம் பதின்மூன்று வயதில், அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ, கன்னி கழிக்கப்பட்டது வேதனையான விசயம். இதனை ‘மீசுகே சடங்கு’ என்கிறார்கள்.
சில முக்கியமான விசேசங்களுக்கு, ‘யாக்கோ – ஷிமாடா’ என்ற புத்தாண்டு விழாக்களுக்கான அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்தும் உயர் அலங்காரம் உண்டு. ‘காட்சூயாமா’ என்பது பதினேழாம் நூற்றாண்டின், குளியல் இல்ல பணிப்பெண் ஒருத்தியின் பெயர் கொண்ட சிகையலங்காரம் பின்னாட்களில் அவள் பிரபல அரசவை அணங்கு ஆனாள். உண்மையிலேயே பேரழகாக இருந்த மெய்க்கோக்களின் இறுதி சிகையலங்காரம், ‘சேக்கோ’ என்ற உச்சிக்கொண்டை சிகையலங்காரம். அவள் கெய்ஷாவாகப் பட்டம் பெறும் இறுதி மாதத்திற்கு முன்பு செய்து கொள்ளும் அலங்காரம் சாக்கோ. ஒரு முன்னாள் மெய்க்கோவை அடையாளம் காட்டுவது அவளுடைய உச்சந்தலையில் காணப்படும் வட்ட வடிவ வழுக்கைதான். ஐந்தாண்டுகளாக வாரத்திற்கு வாரம், சிகையலங்காரம் செய்பவரால் இழுத்துக் கட்டப்பட்டு, அந்த முடி திரும்ப வளராமலே போனதால் ஏற்பட்ட சொட்டை அது.
லெஸ்லி, பேராசிரியர் இஷிஹாராவின் பணியை அழகாக விளக்குகிறார். “தான் தேர்ந்தெடுத்த அந்தப் பொருளான தலை முடியை வைத்து அழகை உருவாக்கப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கலைஞனைப்போல இருந்தார். ஒரு சிறிய கரி கன்னான் மீது சுருள் இரும்புகளை சூடாக்கிக்கொண்டு முடி நீண்டு பளபளப்பாக ஆகும்வரை கேசத்தை இழுத்துப் பிடித்தான். பின் நறுமண கேச எண்ணெயுடன் வாரிக்கொண்டு, பின்ஸுயூக் எண்ணெய் (ஸுமோ மல்யுத்த வீரர்களின் உச்சிக்கொண்டை அழுத்தமாக இருப்பதற்காக பயன்படுத்தும் எண்ணெய்) யுடன் தலையை வாரி, முடியைப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டார். தலையின் மகுடப்பகுதியில் உள்ள முடியில் ஆரம்பித்து, அதை இறுக்கமாக ஒரு குதிரைவால் கொண்டையாகக் கட்டிக்கொண்டு, கையில் தயாரித்த காகிதச் சுருள்களைக் கட்டி, அடர்த்தியாகத் தெரியும்படியும், உச்சந்தலையில் முடிச்சாக வரும்படி அதைத்தள்ளிக் கட்டினார். அவர், பின்னந்தலை முடியில் சுருள், சுருளாகவும் முடிச்சிட்டு, பின் ஒரு சன்னமான மரக்குச்சியைச் செருகி அது தன் இடத்தில் வாட்டமாகப் பொருந்தும்படிச் செய்தார். அப்படியே முன்னந்தலை முடியும் சுருளாக்கப்பட்டது. பின் அவர் பக்கவாட்டில் இருந்த இரண்டு பகுதிகளைப் பிரித்து அதில் பின்ஸூக்கே எண்ணெயைத் தடவி, சுருட்டிக்கொண்டு, அவைகளை இரண்டு சிறகுகளைப் போன்று அமைத்து மத்தியில் இருந்த கொண்டையுடன், முகத்தின் இரு புறமும் வரும்படி முடிச்சிட்டார். முடிப்பட்டை (ரப்பர் பேண்ட்) போன்ற ஒரு சன்னமான மரப்பட்டை பேண்ட்டை எடுத்து அந்தச் சிறகுகள் போன்ற அமைப்பின் மத்தியில் செருகி, அது இறுக்கமாகப் பொருந்துமாறும், ஒவ்வொன்றின் இடையிலும் பொய் முடியையும் செருகி உள்ளே சரியாகப் பொருந்துமாறும் செய்தார்.
பின் அவர் ஒரு முடிக்கற்றையை எடுத்து, திபெத்திய யாக் மாட்டின் கரிய முடி வாலை எடுத்து அதை மெய்க்கோவின் முடியுடன் சேர்த்துக் குதிரை வால் கொண்டையாகக் கட்டினார். அவர் அனைத்தையும் ஒன்றாகச்சீவி, முன்புறமாக மடித்து, பின்புறமாக முடிச்சிட்டு, அதைத் திறந்து, விரித்து, மடித்து – ஆகா, அங்கு ஒரு பேகல் போன்ற உருவமைப்பில் கொண்டை. இறுதியாக அவர், முன்னந்தலை முடியை வளைத்து, அதை நடுவில் இருந்த கொண்டையுடன் இணைத்தார். மேலும் அவர் அந்த பேகலின் இடையில் ஒரு ஊசியைச் செருகி அழுத்தமாக நிற்கச் செய்து, கடினமான கருப்பு காகிதத்தின் சில துண்டுகளால் அச்சிறகுகளின் வடிவம் குலையாமல் நிற்கவும் மற்றும் ஒரு ஜோடி வழுவழுப்பான சிகப்பு ரிப்பன்களும் கட்டினார். இந்த மொத்த அலங்காரமும் செய்து முடிக்க கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் ஆனாலும், இறுதியில் அது உறுதியாகவும், பளபளப்பாகவும், விளையாட்டு நேரத்திலோ தூங்கும் நேரங்களிலோகூட அவிழாமல் ஒரு வாரம்வரை அழுத்தமாகவே இருந்தது” என்கிறார்.
அந்நாட்களில் கொயோட்டோ முழுவதும் விலையுயர்ந்த பட்டு விற்பனையாளர்கள் மற்றும் கிமோனோ வியாபாரிகள் நிறைந்திருந்தனர். அவர்கள் மெய்க்கோவை கவனித்துக்கொள்ளும் செவிலித் தாய்மார்களுக்காக அந்த டான்னா என்ற புரவலன் அந்தப் பெண்ணிற்கு ஒரு வீடு வாங்கித்தந்து, அவளுக்குரிய கன்னி கழிப்பு சடங்கிற்கான செலவும் ஏற்று அவளுக்கு ஊதியமும் அளித்து வருவான்.
முந்நூரு ஆண்டுகளாக, ஆண்கள் பணமளிப்பது பெண்கள் கொடுக்கும் பாலியல் இன்பத்திற்காக மிகவும் யதார்த்தமாக இருந்திருக்கிறது. தற்போது அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. 1958 முதல் இவைகளனைத்தும் பெரும் மாற்றத்திற்குள்ளானது. தற்போது இன்னும் தீவிரமாக உள்ளது. அனைத்து மெய்க்கோக்களும் தங்கள் நடனத்தில் கவனம் செலுத்துகின்றனர்.
ஷேமிசென்
கெய்ஷாவின் முக்கியமான வாத்தியக்கருவியான ஷேமிசென் 3 சரமுள்ள வீணை. ஓகினாவான் சேன்ஷின் என்பதன் மாற்றாக நம்பப்படுகிறது. ஷேமிசென்னின் நீளம் 1.1 முதல் 1.4 மீட்டர் வரை இருக்கும். முதன் முதலில் ஈடோ காலமான 1600-1868 களில் கேளிக்கை மாவட்டங்களில் பிரபலமாக இருந்ததோடு காபூக்கி, புன்ராகூ நிகழ்ச்சிகளிலும் அழகுக்காக பயன்படுத்தப்பட்டது. காபூக்கி பல்வேறு நடன இசை, நீண்ட இசையின் சொந்தமானதொரு வடிவை உருவாக்கிக்கொண்டது. ஷேமிசென் செஞ்சந்தன மரத்தினால் தயாரிக்கப்பட்டு, பூனை அல்லது நாயின் தோலினால் அதன் தலைப்பகுதி மூடப்பட்டிருக்கும். சரங்களை முறுக்கப்பட்ட பட்டாகவும், ஆப்புகளை பாரம்பரிய முறைப்படி தந்தத்தினால் செய்யப்படுகின்றன. பாரம்பரியமாக ஷேமிசென் வாசிப்பவர்கள் கடினமாகவும், உணர்ச்சியற்றும் இருக்கவேண்டியுள்ளன.
இகெபானா – மலர் அலங்காரம்
ஜப்பானிய இகெபானா என்ற மலர் ஏற்பாடு மிகவும் சிக்கலான ஒன்று. இதைக் கற்றுக்கொடுப்பதற்கு பல பள்ளிகள் உள்ளன. அந்தப்பள்ளிகளால், செடிகள், பூச்சாடிகள் பொறுத்து பலவிதமான அலங்காரங்கள் செய்ய கற்பிக்கப்படுகின்றன. பலவிதமான மாற்றங்களுக்குப்பிறகும் இன்றும் இகெபானா என்ற மலர் ஏற்பாடு மேல்மட்டத்தினருக்கு மட்டுமே உரித்ததாக உள்ளது.
இன்று ஜப்பானில் 3,000 இகெபானா பள்ளிகளும், உலகைச்சுற்றி ஆயிரக்கணக்கான பள்ளிகளும் உள்ளன. உலகளவில் 60,000 ஆசிரியர்கள் உள்ளனர். ஜப்பானில் பெரும்பாலும் 15 மில்லியன் இளம் பெண்கள் இகெபானா பழகியுள்ளார்கள்.
ஜப்பானிய கிமோனோ
ஜப்பானியக் கிமோனோ என்பது உலக மக்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பாரம்பரிய உடையாகும். ‘கிமோனோ’ என்பதன் பொருள் ’ஆடை’ என்பது. 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலங்கள் வரை ஜப்பானியர்கள் அனைவரும் உடுத்திய உடை. மெய்ஜி காலங்களில் மெல்ல மெல்ல இறக்குமதி செய்யப்பட்ட கால் சராய்களுக்கு மாற்றம் கண்டன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும், பருவங்களுக்கும் ஒவ்வொரு விதமான கிமோனோக்கள் உண்டு. அன்றாட பயன்பாட்டில் இருக்கும் சாதாரண கிமோனோ தவிர கலைஞர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய கலைநயம் மிக்க கிமோனோக்கள் தற்காலங்களில் அதிகம் காணப்படாவிட்டாலும் இன்றும் திருமணங்கள், பட்டமளிப்பு விழாக்கள் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில் பரவலாக அணியப்படுகிறது. அதிகமாக காணப்படாததன் காரணம் இதன் அதிக விலைதான். ஒரு நல்ல தரமான கிமோனோ உடையின் விலை ஒரு மில்லியன் யென் ஆகிறதாம். மற்றொரு காரணம் மிக வித்தியாசமான இந்த உடையமைப்பு. ஓபி என்ற அலங்காரப்பட்டை அணிவது இளம் பெண்களுக்கு மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. இதனை அணிவதற்கு அவர்கள் பெரியவர்களிடமோ அல்லது கிமோனோ பள்ளியிலோ பயற்சி எடுக்க வேண்டியுள்ளது.
ஜப்பானியர்களின் கண்களிலும் கெய்ஷா மற்றும் மனைவிகளுக்கு பெருத்த வேறுபாடு உண்டு; ஜப்பானியப் பெண்களின் இரு துருவங்களான கெய்ஷாக்களும் மனைவியரும் கிமோனோ அணிவதில் பெரும் வேறுபாடு உண்டு. கெய்ஷாக்கள் சொல்ல முடியாத அளவிற்கு கவர்ச்சியாக இருந்தனர்; ஆனால் அது குறிப்பையும் தெரிவையும் காட்டும் மிக நுட்பமான கவர்ச்சியாக இருந்தது.
ஒரு கெய்ஷாவிற்கு, ஒரு கிமோனோவை தேர்ந்தெடுப்பதும், அதை அணிவதும் அவளுடைய பாரம்பரிய நடனப் பயிற்சி அல்லது ஷேமிசென் வாசிப்பின் கற்றல் போன்றவற்றிற்கு ஈடானது. கிமோனோ என்பது ஒரு தேநீர் விழா, பூக்கள் அலங்காரம், அல்லது தூரிகை ஓவியம் போல மிக நுட்பமானதும் மற்றும் சிக்கலானதுமானதொரு கலை. மிக சன்னமான, ஆடம்பரமான பட்டு நூலில் நெய்யப்பட்ட கிமோனோக்கள் மிக நேர்த்தியாகவும், பல நேரங்களில் மிகவும் சிக்கலான வடிவமைப்புகளுடன் சாயமேற்றப்பட்டிருந்தது; இடங்களின் வரை படங்கள், பாலங்கள், நீர் நிலைகள், மரங்கள் மற்றும் பறவைகள் போன்றவைகளும் ஒரு கிமோனோவின் ஊடே உருண்டு கிடந்ததோடு நகை போன்ற வண்ணங்களும் தீட்டப்பட்டிருந்தன.
ஒரு கெய்ஷா பருவ காலத்திற்கேற்ற கிமோனோவை இயல்பாகத் தேர்ந்தெடுப்பாள். குளிர் மாதங்களுக்கு, செப்டம்பர் மாதச் சூறாவளியிலிருந்து குளிர்பனி ஊடாக, செர்ரி மலர்கள் உதிரும் ஏப்ரல் மாத இறுதி வரை, அவள் மொத்தமான சில்க் துணியால் ஆன இரண்டு அடுக்கு கிமோனோவில் கிரேப் உள்ளடுக்கு வைத்ததை அணிகிறாள். மே மற்றும் ஜூன் மாதங்களில் அவள் மெலிதான ஒற்றை அடுக்கு கிமோனோவுக்கும், கொளுத்தும் கோடையான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவள் மிகவும் சன்னமான பஞ்சு போன்ற மென்மையான சில்க் உடைக்கும் மாறிவிடுவாள்.
காலணிகள்
பாரம்பரியமான ஜப்பானியக் காலணிகள் குறிப்பிட்ட அந்த ஆடை அணியும்போது மட்டுமே அணியப்படுகிறது. ஸோரி என்பது, கிமோனோவுடன், முக்கியமான நிகழ்ச்சிகளில் அணியப்பட்டும் வைக்கோற்புல் அல்லது சாயம் பூசிய மரத்தினாலான காலணிகள். ’கெட்டா’ என்பது சாதாரண வேளைகளில் யுகாட்டா எனும் உடையுடன் அணியும் உயரமான மரக்காலணிகள். இந்த வகை கெட்டா காலணிகள் தற்காலங்களில் ஸூமோ மல்யுத்த வீரர்களின் பாதங்களில் காணமுடிகிறது. அவர்கள் நடந்து வரும் முன்னே மிக வித்தியாசமான ஓசைகள் வந்து சேரும். முதிய ஜப்பானிய மக்கள் குறிப்பிட்ட இந்த ஓசையை நாகரீக காலங்களில் இழந்துவிட்ட முக்கியமான விசயங்களில் ஒன்றாகக் கருதுகின்றனர்.
ஒரு கெய்ஷாவாக ஒரு பெண் பயிற்சி பெறுவதில் பலவகை சிரமங்கள் உள்ளதால் தற்காலத்தில் கெய்ஷா பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டன.
உசாத்துணை:
கெய்ஷா – ஆங்கிலத்தில் லெஸ்லி டவுனர்/ தமிழில் பவள சங்கரி
http://www.vallamai.com/?p=74373
No comments:
Post a Comment