Wednesday, November 17, 2010

30க்குப் பிறகும் இளமை வேண்டுமா.......?



” எப்படி மேடம் நீங்க எப்பவுமே இவ்வளவு உற்சாகமாக இருக்கீங்க ? உங்களுக்கு டென்சனே வராதா ? பிரச்சனைகளே கிடையாதா ? “

வங்கியில் வேலை பார்க்கும் என் கசினைப் பார்த்து பல வருட காலமாக இப்படி கேட்காதவர்களே இல்லை எனலாம். அவ்வளவு உற்சாகமானவர் அவர். அவருடன் பழகும் நபரும் வெகு எளிதில் அதே மூடுக்கு வந்துவிடுவார்கள். இது அவருக்கு மட்டும் எப்படி சாத்தியம் என்று ஆய்ந்த போதுதான் எனக்கு பல உண்மைகள் புரிந்தது.......

இளமையை விரும்பாதவர்கள் இந்த உலகில் எவரும் இலர். பிரச்சனை இல்லாத மனிதரே இவ்வுலகில் இருக்க முடியாது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கான தீர்வு அந்த பிரச்சனை ஆரம்பித்த இடத்திலேயே உண்டு. அதாவது நம்மிடமேதான் அதற்கான தீர்வு உண்டு. ஆனால் அதை உணர்வதற்கு நோயற்ற தேகமும், அமைதியான மனதும் அவசியமாகிறது. இதைச் சாதிப்பதற்கு இயற்கை தந்த வரப்பிரசாதம்தான் ‘வாக்கிங்’. சுகமான நடை. எந்த விசேடமான முயற்சியும் இதற்காக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

எல்லா வயதினருக்கும் வாக்கிங் செல்வது நல்ல பழக்கமாக இருந்தாலும், 30, 40, 50 - களில் இருப்பவர்களுக்கு மிகவும்விசேடமான பலன்களை அளிக்கவல்லது. எந்த பின்விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. அதுமட்டுமல்லாது 30 வயதிற்குப் பிறகு வரக்கூடிய பெரும்பாலான நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கவல்லது. எப்படி என்கிறீர்களா ? மேலே படியுங்கள்.

பெரும்பாலானவர்கள் முப்பது வயதில் வாழ்க்கையின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகின்றனர். குழந்தைகளும், பொறுப்புகளும் மட்டுமல்லாமல் எடையும் கூடிப்போய் விடுகிறது. பெண்களென்றால், இப்பிரச்சனை இரட்டிப்பாகிறது. அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வின்படி பொதுவாகவே பெண்கள் முப்பது வயதில் சுறுசுறுப்பு குறைந்து காணப்படுவதாக கூறுகின்றனர். எடை கூடுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகிறது. இன்று பெரும்பாலானவர்கள் கணிணித்துறை போன்றவற்றில் பணிபுரிபவர்கள் அதிகப்படியான நேரங்களை உட்கார்ந்தே கழிப்பதனால் உணவின் செரிமானத்தின் வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. உடலில் பல கோளாறுகள் உறுவாக இதுவே முதற்காரணமாகி விடுகிறது.

உடற்பயிற்சி மற்றும் வாக்கிங் இந்த நிலையை மாற்றி, கட்டுக்குலையாத மேனியை அளிப்பதுடன் அத்தோடு குறைந்த கலோரி உணவையும் உண்ணும் போது பலன் இரட்டிப்பாகிறது. அதாவது தினமும் 40 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை வாரத்திற்கு நான்கு நாட்களும், மற்ற மூன்று நாள்கள் மற்ற உடற்பயிற்சி செய்தாலே போதும் என்கிறார் மில்லர் என்ற ஆய்வாளர். இதுவே ஆரோக்கியமான வாழ்விற்கு மூலதனமாகும்.

வாக்கிங் போவதால் கிடைக்கக்கூடிய மற்றொரு பலன் - முழு நேர சக்தி. காலை அல்லது மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும் போது தூய்மையான காற்றை சுவாசிக்க முடிகிறது. இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், சக்தியுடனும் இருக்க முடிகிறது. 40 வயதுகளில் வாழ்க்கையில், பல முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிடுவதால், அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுவதால், அதன்பின் விளைவுகளை சமாளித்தாக வேண்டியுள்ளது. இதற்கும் வாக்கிங் போவதற்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கலாம்.

ஸ்ட்ரெஸ் விடுதலை :- ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது இரத்தக் கொதிப்பும் இதயத் துடிப்பும் அதிகமாகிறது. அழுத்தம் அதிகமாகும் போது நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடுவதால், சாதாரண சளியிலிருந்து, கான்சர் வரை எந்த நோயாக இருந்தாலும் எளிதாக தாக்கிவிட வாய்ப்பு உள்ளது. வாக்கிங் செல்லும் போது நம் மூளைப்பகுதி பீட்டா எண்டார்ப்பின்ஸ் [ Beta Endorphins] அதிகமாக உற்பத்தி செய்கிறது. இதனால் நாள் முழுவதும் கலகலப்பாக இருப்பதற்கு வழி கிடைத்து, மனச்சோர்வு, கவலை முதலியவற்றிற்கு டாடா காட்டலாம்.

நோய் தடுப்பு :- வாக்கிங் அல்லது சாதாரண உடற்பயிற்சி பழக்கம் உள்ள்வர்களால் கான்சர் போன்ற வியாதிகளினால் இறப்பு நேர்வதைக்கூட தள்ளிப்போட முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதுமட்டுமல்லாமல் 50 சதவிகிதம் இதய நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். வாக்கிங் போன்று மிதமான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதால் பக்கவாதத்தைக் கூட [ஸ்ட்ரோக் ] தடுக்க முடியுமாம்.

தோல் சுருக்கம் :- வயது ஏறி, சதை குறைய ஆரம்பிக்கும் போது தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. முறையான உடற்பயிற்சி இதனைக் கனிசமாகக் குறைக்கிறது. தேவையான சதையும் கூடி, தோல் சுருங்குவதையும் கட்டுப்படுத்துகிறது.

50 வயது, மெனோபாஸ் காலம், ஹார்மோன்கள் மிகக் குறைவாக சுரக்கக்கூடிய காலமாதலால், பலவிதமான மாற்றங்களை உடல் எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஒரு சில எளிதான உடற்பயிற்சிகள் இந்த வயதிற்குரிய பல பிரச்சனைகளை எளிதாக தடுத்து நிறுத்தி விடுகிறது. முதுமையை வெல்ல வேண்டுமானல் இன்றிலிருந்து வாக்கிங் செல்ல ஆரம்பியுங்கள்.

இதயத்தைப் பாதுகாக்கக் கூடிய ஈஸ்ட்ரோஜன் இழப்பினால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், HDL என்கிற நன்மை கொழுப்பை அதிகப்படுத்தி, LDL எனப்படும் தீய கொழுப்பை குறைத்து இரத்தக் கொதிப்பையும் தடுக்க வாக்கிங் உதவுகிறது. பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய தூக்கமின்மையை சரிகட்டி, ஆழ்ந்த அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

மூட்டு வலி :- உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனையால், லட்சக்கணக்கானவர்கள், வயது வரம்பின்றி, பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி, தேவையான வாக்கிங், அத்துடன் எளிமையான உடற்பயிற்சி இவை கொண்டே பெரும்பாலும் சரி செய்து கொள்ளலாம். அதிகமான வலி நிவாரணிகள் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்தலாம்.

ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற, ஹார்மோன் குறைபாட்டினால், எலும்பு வலுவிழந்து, முறிவு ஏற்படக்கூடிய அபாயத்திலிருந்து வாக்கிங் காப்பாற்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவையனைத்திற்கும் மேலாக “வாக்கிங்”, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவல்லது. சுயமரியாதை, தன்னம்பிக்கை மற்றும் கம்பீரமான தோற்றம் இவையெல்லாம் வாக்கிங் வழங்கும் போனஸ்!

Sunday, November 14, 2010

தொடரும் நினைவுகள்!




நான் இறக்கப் போகிறேன்
என் கூடு கலைந்து போனது
என் குஞ்சுகள் நசுங்கி போயின
என் இணை இன்னுயிர் ஈந்தது.

அழகான குடையாக விரிந்த பச்சை மரம்
செம்மலர் நிறைந்த பரந்து விரிந்த கிளைகள்
அதில் அன்னிய புட்டங்களின் அஞ்ஞாத வாசம்
இன்பமாய் கொஞ்சிக் குலவிய இனிய நேரம்

வழமையாய் உண்டு, உறங்கி, களைப்பாறி
புதிதாய்ப் பிறந்து எழுந்து வெளியேறி
இணையை குஞ்சுகளுக்கு காவலாக்கி
இறை தேடி இறகு விரித்து மலையேறி

அந்தி மயங்கும் பொன்மாலை வேளை
இறையோடு இருப்பிடம் நாடி
குஞ்சுகளையும், இணையையும் தேடி
ஓடி, ஓடி களைத்து இறக்கப் போகிறேன்!

குடியிருந்த குச்சு வீடும் காணவில்லை
கூடு இருந்த சுவடும் இல்லை
கொஞ்சிக் குலாவ குஞ்சுகளும் இல்லை
அள்ளி அணைக்க இணையும் இல்லை.

அழைப்பு மணியோசை இடியெனத்தாக்க
நெஞ்சுக்கூடு விம்மி தெறிக்க
வியர்வை வெள்ளம் ஆறாய்ப்பெருக
இறக்கப் போகிறேனா நான் ?

ஆயிரத்து ஒன்னாம் முறையாக வந்த சொப்பனம்!
உலுக்கி எடுத்து அழைக்கும் தர்மபத்தினி
மரம்வெட்டியின் நாராசமான அழைப்பு
பகல் சொப்பனம் பலிக்காவிட்டாலும்
இன்னுமொரு பாபக் கணக்கா..........ஐயோ வேண்டாமே!

மரங்கள் வளர்ப்போம்!!
வனத்தைக் காப்போம்!!

Wednesday, November 10, 2010

INDIAN SHAME

* மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறை ஒழிப்பில் மெத்தனம் : அரசுக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம். [நவம்பர் 09/2010 , செய்தி ]

மனிதக் கழிவை மனிதனே அகற்றும் உலர் கழிப்பிட முறையை ஒழிப்பதிலும் அந்த பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி தில்லி உள்ளிட்ட சில மாநில அரசுகளுக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. இது ஒரு அரசியல் சாசன விடயம். இந்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்த நீதிமன்றமே நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கும் என்றும் பெஞ்ச் தெரிவித்தது.



இந்தியாவின் அவலம்

அவமானம், கீழ்தரமான, மனிதாபிமானமற்ற, சங்கடப்படுத்துகிற, அருவருப்பான, மனிதத்தின் அவமதிப்பு - இது தான் “கைகளினால் கழிவை அகற்றும் முறை “. - மனிதக் கழிவை மனிதனே அகற்றும் அவலம். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், மனிதனின் கழிவை, மனிதனே கைகளால் அள்ளி, தலையில் அல்லது இடுப்பிலோ,தோளிலோ கூடையில் வைத்து சுமந்து, ஒரு வேளை நல்ல நேரம் வாய்க்கப் பெற்றவராக இருக்கும் பட்சத்தில், தள்ளு வண்டி கிடைக்கும்.

பல்லாண்டு காலமாக இந்தக் கொடுமையான முறையை முற்றிலுமாக ஒழிக்க, புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. கூட்டமைப்புகளும் கமிஷன்களும் நிறுவப்பட்டுள்ளன. சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான பணமும் செலவிடப்பட்டுள்ளன. ஆனால் சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் இந்த மனிதத்தை அவமதிக்கக்கூடிய செயல் நம்மிடையே நடந்து கொண்டுதானிருக்கிறது.

2002-2003 இல், ச்மூக நீதித்துறை அமைச்சகம், 6.76 லட்சம் கழிவை அள்ளும் தொழிலாளர்கள் இருப்பதாகவும், 92 லட்சம் உலர் கழிவறைகள், 21 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பரவி இருப்பதாகவும், ஒப்புக் கொண்டுள்ளனர். இருப்பினும் கழிவுப் பணியாளர்கள் சங்கம் [SKA] தனிப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் சேர்ந்து, 2003 இல் உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். பல மாநிலங்கள் தங்கள் பகுதிகளில் இந்த முறை ஒழிக்கப்பட்டு விட்டதாகவும்,குறிப்பிட்ட அந்தத் தொழிலைச் செய்பவர்கள் வேறு தொழிலுக்கு மாறிவிட்டதாகவும் தீவிரமாக மறுத்தனர். மாநிலங்களின் உச்சநீதி மன்றங்கள் பதிலளிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆயின. பலரும் உலர் கழிப்பறையே இல்லை என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தனர். அதிலிருந்து விவாதங்கள் தொடர்ந்தன. SKAவின் தேசிய அமைப்பாளரான பெஸ்வாடா வில்சன், இந்தப் பிரச்சனை, அறிவுறுத்துவதற்காகவோ, மாற்று உபாயம் நிர்ணயிப்பதோ குறித்தது அல்ல. இது ஒரு சமுதாயப் பிரச்சனை. அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகள் இல்லாத நிலையில்,கிடைத்த தகவல்களின் கொண்டு, மாதிரிக் கணக்கெடுப்பை செய்த போது 13 லட்சம் பணியாளர்கள் நாட்டில் இருக்கக் கூடும் என்று கூறினார். 1993 இல், வில்சன், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பணி மற்றும் உலர் கழிவறை கட்டுவதை தடை செய்யும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அது மேலும் சில மாநிலங்களில் இதனை கடைப்பிடிப்பதற்கு மேலும் 10 ஆண்டுகள் ஆயின. சில மாநிலங்கள் இச்சட்டத்தை, தங்களிடம் எந்த கழிவுகள் அகற்றும் துப்புரவு தொழிலாளிகளும் இல்லை என்று கூறி நிராகரித்தனர். சில மாநிலங்களோ SKA அமைப்பு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து ஏற்றுக் கொண்டன.

ஒரு பிரச்சனை இருப்பதை ஒப்புக் கொள்லாவிடில் எங்கனம் அதற்கான தீர்வைக் காண இயலும் ?

தன்னுடைய 9 வது வயதிலிருந்து, ஒரு துப்புரவுத் தொழிலாளியாக[இன்று 20] இருக்கும் மீனா, தான் முதன் முதலில் ஒரு கூடையில் கழிவுகளை சுமந்து சென்ற போது, வழுக்கி கீழே விழ, கழிவுகள் தன் மீதே கொட்டிவிட, கூடையும் மிக அருவருப்பான நிலையில் இருந்ததால் ஒருவரும் தன்னைத் தூக்கிவிட முன்வரவில்லை என்பதை நினைவு கூறுகிறார். மற்றொரு துப்புரவு தொழிலாளி வந்து தூக்கிவிடும் வரை அதே இடத்தில் அப்படியே சுருண்டுக் கிடந்ததை எண்ணி இன்றளவும் மாய்ந்து போகும் மீனா, அந்த நாளில், இந்த உலகத்திலேயே மிக துரதிருஷ்டமான குழந்தை தான் மட்டுமே என்று நொந்துப் போனதாகவும் சொல்கிறார். அவருடைய கணக்குப்படி இது போன்ற தொழில்புரிபவர்கள் 100 முதல் 150 குடும்பங்கள் வரை உள்ளதென்கிறார்.

திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கமும் இருந்தது. அதையும் இத்தொழிலாளர்களே சென்று சுத்தம் செய்தனர். மீனா எப்படியோ சிரமப்பட்டு படித்து பள்ளியிறுதியாண்டு வரை முடித்திருக்கிறார். ஆனாலும் இக்கல்வி எந்த பெரிய மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. அவர் மேலும் கூறியதாவது,

“பரம்பரை பரம்பரையாக இதுதான் எங்கள் குடும்பங்களில் நடந்து கொண்டிருக்கிறது. வேறு வேலை எவரும் கொடுக்கத் தயாராகவும் இல்லை. உண்மையில் சொல்லப்போனால், என் தாய் என் தந்தையை திருமணம் செய்து கொண்டதே அவர், அதிகமாக அள்ளக்கூடிய ஜனசந்தடி அதிகம் உள்ள இடத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றதால்தான்.”

மீனாவின் கணவன் முகேஷ் நந்த நகரியில் பொதுக்கழிப்பறையில் பணிபுரிகிறார். முகேஷ் அரசாங்கத்துறை துப்புரவுப் பணியில் சேர விரும்பினாலும், அதற்கு ரூ.50,000 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததால், அதையும் கைவிட்டு, அன்றாடம் ரூ100 வாங்கும் கூலித் தொழிலாளியாக பணியமர்ந்தார். இதிலும் கொடுமை என்னவென்றால், அந்த சொற்ப கூலியிலும் ஒரு பகுதியை காவல்துறையினருக்குக் கொடுக்க வேண்டுமென்பதுதான்.

மீனாவின் தாய் சாரதா, அந்தப்பகுதி குடியிருப்பில் வீட்டிற்கு ரூ10 வாங்கிக் கொண்டு, பத்து உலர் கழிவறைகளை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கிறார். தேவையான தண்ணீர் கூட இல்லாத நிலையில் தானும் தன் கணவனும் சேர்ந்து உடைந்த பிளாஸ்ட்டிக் துண்டுகளைக் கொண்டு, சுரண்டி அள்ளி கூடையில் போட்டுக் கொண்டு செல்வதாகக் கூறுகிறார். இவருடைய கவலையே தன் கூடை பிய்ந்துப் போனதால் புதிய கூடை வாங்க ரூ 70 ஆகுமே என்பதுதான்.

மகாத்மா காந்தியின் குஜராத்தில் கூட தங்கள் கழிவறையை தாங்களே சுத்தம் செய்ய கற்றுக் கொள்ளவில்லை. 55,000 பணியாளர்கள் வரை குஜராத்தில் உள்ளனர். மாநில அரசும், அவர்களுக்குரிய பணப்பட்டுவாடாவை செய்வதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. இந்தத் தொழிலாளர்கள் இதுதான் தங்கள் தலைவிதி என்று நம்ப ஆரம்பித்ததால் இதைப்பற்றி பேசவும் விரும்பவில்லை.

மற்றொரு முக்கியமான தடை ரயில்வேத்துறை. இரயில் தண்டவாளங்கள் கைகளினாலேயே சுத்தப்படுத்த வேண்டிய கட்டாயம், திறந்த வெளி கழிவறைத்திட்டம்.

இதனைத் தடை செய்யும் சட்டம் அமலுக்கு வந்து 13 ஆண்டுகளில் ஒரு வழக்கு கூட வரவில்லை. இந்தச்சட்டம் 1 வருட சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டுமோ கொண்டது. இந்தச்சட்டம் ஒரு திட்டம் போல்தான் செயல்பட்டது.

அரசாங்கம், கடன் வழங்குதல், மானியம் அளித்தல், என்று பல திட்டங்கள் மூலம் முன்னேற்றத்தை ஊக்குவித்தாலும் பெரிய பலன் ஏதுமில்லை.

SKA அளித்த அறிக்கையில் பெரும்பாலான பணியாளர்கள் இரத்த சோகை, வாந்தி, பேதி போன்ற நோய்களுக்குப் பலியாவதாகக் கூறுகிறது. செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பலர் கார்பன் மோனாக்ஸைட் விசவாயுவினால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறது.

அரசியல்வாதிகளும் இப்பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் உள்ளது. தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்று ஓட்டுப் பெறுவதற்கு துருப்புச் சீட்டாக இதை பயன்படுத்த இயலாது என்பதுதான்.

நன்றி - FRONTLINE - Sept - 09/22/2006.


Tuesday, November 9, 2010

தாயிற்சிறந்த கோயில் இல்லை......

நன்றி - தினமலர்.



* பெற்ற தாயை மறந்த பிள்ளைகள்: பிச்சை எடுத்து வாழும் மூதாட்டி.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆதரவற்ற நோயாளிகள் அதிகளவில் தஞ்சம் புகுந்துள்ளனர். நீலாங்கரையைச் சேர்ந்த இந்திரா எஸ்தர் [60] இரண்டு மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய இவர், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிகப்பட்ட இவர், சிகிச்சைக்குப் பிறகும் டிஸ்சார்ஜ் செய்து கூட்டிச் செல்ல உறவினர்கள் வராத நிலையில் இன்று, தற்போது மருத்துவமனையில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மழையிலும், குளிரிலும், தவித்துக் கொண்டிருக்கிறார். பத்மாவதி, சீனிவாசன், கோடிஸ்வரன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தும் தனக்கு இப்படிப்பட்ட நிலை என்று நொந்துப் போய் கூறுகிறார், எஸ்தர். இது போன்ற பிள்ளைகளை முதியோர் பராமரிப்புச் சட்டத்தில் தண்டிப்பதுதான் இந்திரா எஸ்தர் போன்றோரை காப்பாற்ற சிறந்த வழி

Sunday, November 7, 2010

இந்திய திருநாட்டின் மறுமலர்ச்சியில் பெண்கள் - பாகம் -7


அன்னி பெசண்ட் அம்மையார் [1847 - 1933].


நம் இந்திய தேசத்தின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் அன்னி பெசண்ட் அம்மையாரும் ஒருவராவார். இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் இவர்தம் உழைப்பு முழுவதையும் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்தவர். எண்ணற்ற இந்திய மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பெற்றவர்.

அன்னி பெசண்ட் அம்மையார், அயர்லாந்து நாட்டில் பிறந்த ஓர் அன்னியராக இருப்பினும் நம் இந்திய மக்களுக்காகப் போர் கொடி தூக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1893 ஆம் ஆண்டு முதன் முதலில் தூத்துக்குடி வந்து இறங்கினார் அன்னி பெசண்ட். இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்த அந்த நொடியிலிருந்து, சென்னையில் கூவம் நதிக்கரையில் நிரந்தர அமைதி அடைந்த [சமாதி] அந்நொடி வரை ஓயாத உழப்பையேத் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார் அம்மையார். அவர் தம் வாழ்க்கை முழுவதையும் பிரம்மஞான தத்துவத்தின் விளக்கமாக வாழ்வே முயற்சித்தார். இந்திய தேசக்கலாச்சார நோக்கின் அடிப்படையில், அம்மையாரின் தொடர்பணிகள் எண்ணிலடங்காதவை.

பகவத் கீதையின் உயர் தத்துவ ஞானம் அனைவரையும் சென்று அடையும் வகையில் எளிய ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்தார் அன்னி. இந்தியக் கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அதனைக் கற்பிக்கும் வண்ணம், வாரணாசி மற்றும் சென்னையில் 1898 ஆம் ஆண்டு, ‘சென்ட்ரல் இந்து காலேஜ் ‘ என்ற கல்லூரியை நிறுவினார். அங்கு இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயப்பாடமாக வைத்து இந்திய இளைஞர்களை கற்கச் செய்தார். இக்கல்லூரியே, பிற்காலங்களில் மதன் மோகன் மாளவியா, நிறுவிய இந்து பல்கலைக்கழகத்திற்கு அஸ்திவாரமாக அமைந்தது. இன்று பகவத் கீதையை கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் லட்சக்கானோர் அறிந்திருக்கிறார்கள் என்றால் அதன் பெருமை அம்மையாரையேச் சாரும். திலகரின் ‘கீதா ரகசியம்’ என்ற நூலும் பிரசித்தி பெற்றிருந்தது.

அம்மையார் 1847 ஆம் ஆண்டு, அயர்லாந்து நாட்டில் பிறந்தார். இவர் பிறந்த குடும்பம் பாரம்பரியப் பெருமை வாய்ந்த குடும்பமாகும்.தனிப்பள்ளியில் கல்வி பயின்று, இளம் வயதிலேயே ஃராங்க் பெசண்ட் என்பவருக்கு மணம் முடிக்கப்பெற்றார். ஃராங்க், தீவிர மத நம்பிக்கைக் கொண்ட ஒரு பாதிரியாராக இருந்தார். இவருடைய ஆழ்ந்த மத நம்பிக்கை, அன்னியின் குணத்திற்கு பொருந்தாத ஒன்றாக இருந்த காரணத்தினால், இருவரும் இரு துருவங்களாகவே வாழ்ந்ததினால், சட்டரீதியானப் பிரிவு இவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பெண்களுக்கு எதிராக அநீதி இழைக்கும் நாடுகள் பரவலாக இருந்த காலம் அது. பிரிட்டானியப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காலம் அது. வாக்குரிமைக்கான அவர்களின் போராட்டம் தலைப்புச் செய்தியானது. இதற்காக சிறைவாசம், காவலர்களின் அச்சுறுத்தல் என்று பல பிரச்சனைகளுக்கு ஆட்பட்டிருந்தார்கள். அப்பெண்கள் இதற்காக மேற்கொண்ட தியாகங்களும், பொறுமைகளும் ஆச்சரியப்படத்தக்க செய்திகளாகும்.

முதல் உலகப்போரில் இந்தப் போராட்டம் ஓய்ந்தது. வேண்டாதவர்களாக ஒதுக்கப்பட்ட பெண்கள், நாட்டுப்பற்று கொண்ட காரணத்தினால், தங்களின் நேர்மையான, உயர்ந்த சேவைகள் மூலம் தங்களுக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டனர். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பிறகு 1832 ஆம் ஆண்டு, முதல் மறுமலர்ச்சி சட்டம் வெளியான பிறகு, வாக்குரிமையைப் பெற்றார்கள். இந்தப் போராட்டத்தின் பின்னனியில் பல்லாண்டுக்கால உழைப்பும், தியாகமும் இருந்ததென்பதை எவரும் மறுக்க இயலாது. பிரிட்டானிய அரசாங்கத்திற்கும், பொது மக்களுக்கும், பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, எத்தனையோ, சிறைவாசங்களையும், தண்டனைகளையும் பெற்றார்கள் என்பதும் நிதர்சனம். அன்னி பெசண்ட் அம்மையாரும் இந்த பெண்கள் இயக்கத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தவர். இவருடைய முதல் பொதுக்கூட்ட சொற்பொழிவே, பெண்களின் நிலை குறித்ததாகவே இருந்தது.

மனித உரிமைகளுக்கான மசோதா, அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமைகளை உறுதியளித்திருந்தாலும் பெண்களுக்கு அதனை அளிப்பதற்கு அரசாங்கம் இருமுறை யோசித்தது. ஆனால் சமுதாயமோ, நூறு முறை யோசித்தது. ஆக்ஃபோர்ட் பல்கலைக்கழகம்கூட அந்நாளில் மாணவிகளுக்கு பட்டம் கொடுப்பதற்கு மட்டும் மறுத்திருக்கிறது.

அன்னி அச்சூழலில்தான் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் குறித்து எழுத ஆரம்பித்திருந்தார். மணமான பெண்கள் தங்கள் வருமானம், சொத்து அனைத்தையும் கணவனிடம் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்த காலமது. அன்னியின் அது குறித்த முயற்சிகள் மற்றும் எழுத்துக்களில் பின்னடைவு ஏற்பட்டன. ஆயினும் அவர் தடைகளை புறக்கணித்து விட்டு திரும்பவும் எழுத ஆரம்பித்தார். பிற்காலத்தில் பெருமளவில் எழுதவும், பத்திரிக்கைகளுக்குப் பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும் செயல்பட்டார்.

கணவரைச் சட்டப்படி பிர்ந்தாலும், தன் இரு பெண் குழந்தைகளையும் தன் பொறுப்பில் வளர்க்கவே முடிவெடுத்தார். ஒரு கட்டத்தில் தன் மகள் நோய்வாய்ப்பட்ட தருணத்தில், கடவுள் மீது கொண்ட நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார். நாத்திக எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. தன் பேச்சுத் திறமையை வளர்த்துக் கொண்டிருந்தார். 1872 ஆம் ஆண்டு, தன்னுடைய 40 ஆவது வயதில் அன்னிக்கு சமூக சேவையில் முழு நாட்டம் உறுவானது. எதனையும் எதிர் கொள்ளும் போராட்டக் குணமும் கொண்டவராக இருந்தார்.

பிரிட்டிஷ் மியூசியம் என்ற நூல் நிலையத்திலுள்ள புத்தகங்களைப் படித்து தன் அறிவை விரிவடையச் செய்திருந்தார். இச்சமயத்தில்தான், சார்லஸ் பிராட்லா என்ற சீர்திருத்த வாதியைச் சந்திக்க நேர்ந்தது. தொழிலாளர்கள் நலனில் அக்கரை கொண்ட அன்னி, அவர்களுக்காகத் தொண்டாற்றியதோடு, சமுதாயச் சீர்திருத்தங்களுக்காக சொற்பொழிவாற்றுதலும், கட்டுரைகள் எழுதும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். சார்லஸின், அறிவாற்றலாலும், சுதந்திரக் கருத்துக்களாலும், தனிப்பட்ட திறன்களினாலும், பொறுமை மற்றும் தொழிலாளர்கள் நலனில் அக்கரையினாலும், பெரிதும் கவரப்பட்டார் அன்னி. ‘அஜக்ஸ்’ என்ற புனைப்பெயருடன் பிராட்லியின், ‘ நேஷனல் ரெஜிஸ்டர் ‘ எனும் பத்திரிக்கையின் முக்கியமான பங்களிப்பாளராக ஆனார்.இவருடைய முதல் மேடைப்பேச்சு, 1874 ஆம் ஆண்டு, ஒரு கூட்டுறவு நிறுவனத்தில் ஆரம்பித்தது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சார்லஸ்க்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அன்னி. சமூக நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் மூலம், பல எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. எடின்பர்கில், சேரிப்பகுதியில் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தபோது, அம்மக்களின் துன்பங்களைக் கண்டபிறகு சமூகச் சேவை குறித்த அவரின் பார்வையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிற்சங்கத் தலைவர் பதவியேற்றார்.

பல்வேறு விதமான இன்னல்களுக்கிடையேயும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம்,மிக உயர்ந்த மதிப்பெண்களுடன், பெற்றது குறிப்பிடத்தக்கது. ஃபேபியன் கூட்டமைப்பில் சேர்ந்து, ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, மற்றும் மாரிஸ், ஹிண்ட்மன் போன்ற பிரபலமானவர்களின் நட்பும் பெற்றார்.இந்நேரத்தில் இவருக்கு முழுநேரத் தொழிலாளர் முன்னேற்றப் பணியாளராக வேண்டிய நிப்பந்தம் ஏற்பட்டது. லண்டனில் தீக்குச்சித் தொழிற்சாலைப் பெண்களின் மேம்பாட்டிற்காக, தீக்குச்சித் தொழிலாளர் சங்கம் ஒன்றை நிரந்தரமாக ஏற்படுத்தி அதன் மூலம் போராடி வெற்றி பெற்றார்.

அன்னி பெசண்ட் அம்மையார் இஸ்லாம், புத்தமதம், இந்துமதம் ஆகிய சமயக்கொள்கைகளை ஆழ்ந்து படித்ததோடு, கிறித்துவ மதக்கொள்கைகளோடு அதனை ஒப்பு நோக்கியதன் விளைவு ஒரு புது கொள்கை உருவானது பிரம்மஞான சபையை நிறுவிய பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதிய ‘இரகசிய தத்துவம்’, என்ற நூலை ஆழ்ந்து படித்து அழகான விமரிசனம் ஒன்றை பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர் வில்லியம் ஸ்டெட் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்பத்திரிக்கைக்கு அனுப்பினார். பிரம்மஞான சபையை பிளாவட்ஸ்கியும், ஹென்றி ஆல்காட்டும் சேர்ந்து தோற்றுவித்தார்கள்.

ஒன்றே குலம்....ஒருவனே தேவன்,

உண்மையே உயர்ந்த மதம்,

என்பது இச்சங்கத்தின் கொள்கைகளாகும். இவர்களின் சிலைகள் இன்றும் சென்னை அடையாறு பிரம்மஞான சபை மண்டபத்தில் இருக்கின்றன.

1891 இல் பிளாவட்ஸ்கி அம்மையார் காலமானதும் அன்னி அம்மையார் பிரம்மஞான சபையில் இணைந்தார். இதன் கொள்கைகளை தீவிரமாக ஐரோப்பிய நாடுகளிலும் பிரச்சாரம் செய்தார். அச்சமயத்தில் இந்துமத அரிய நூல்களைப் பயின்று அதன் உயர்ந்த கொள்கைகளால் பெரிதும் கவரப்பட்டார். இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் ஏற்பட்டது. பிரம்மஞான சபையை பரப்புவதற்கு இந்தியாவே சிறந்த இடம் எனக்கருதி இந்தியாவிற்கு 1893 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வந்து சேர்ந்தார். சென்னையில் உள்ள அடையாறு இச்சபையின் தலைமை இடமாகச் செயல்பட்டது. பல்லாண்டுக்கால பொதுச்சேவையை விட்டு பிரம்மஞான சபையில் இணைவதற்கு சில காரணங்களும் அவருக்கு இருந்தது.

* சாதிமத பேதமற்ற சமத்துவமான, சகோதரத்துவம் உலகில் மலர வேண்டும்.

* இந்து சமயத் தத்துவங்கள் வெளிவர வேண்டும்.

* மனிதர்களுக்குள் மறைந்து கிடக்கும் இயற்கை சக்திகளையும், விளங்காத இயற்கை நியதிகளின் விழிப்புணர்வும் கொள்ள வேண்டும்.

மேற்கண்டவைகள் அனைத்தும் சாத்தியமாக வேண்டுமெனில் பிரம்மஞான சங்கத்தில் அனைவரும் இணைய வேண்டும் என முழங்கினார். இவரது ஆத்மார்த்தமான சொற்பொழிவைக் கேட்டு மனம் உருகி ஆயிரக்கணக்கானோர் இச்சங்கத்தின் கொள்கைகளை பின்பற்றினர். உலகின் பல நாடுகளில் பிரம்மஞான சபையின் கிளைகள் தோன்றலாயின.

1907 இல் இச்சங்கத்தின் முதல் தலைவர் ஆல்காட் மறைவிற்குப்பின், அன்னி பெசண்ட் அம்மையார் அச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று அதன் வளர்ச்சிக்காக எண்ணற்ற பணிகள் ஆற்றினார். 1912 இல் ‘சேவை செய்யும் சகோதரர்கள்’ [ THE BROTHERS OF SERVICE ] என்ற அமைப்பை தோற்றுவித்தார். அதன் மூலம் இளைஞர்களுக்கு ஆன்மீகமும், அரசியலும் பயிற்றுவித்தார். பிரம்மஞானத் தத்துவத்தை பரப்பும் பணியில் இவருடன் டாக்டர் அருண்டேல், ஜீனராஜதாசர், ருக்மணிதேவி ஆகியோர் இணைந்து கொண்டனர்.

அன்னி பெசண்ட் அம்மையாரின் தோற்றப்பொலிவும், பழகும் வள்ளலும், எவரையும் எளிதில் கவர்ந்து விடும். அவர் இந்தியாவில் வாழ்ந்த மொத்த காலங்களிலும் மெல்லிய தங்கநிற நீண்டக் கோடுகள் இழைத்த வெண்ணிற சேலையையே அணிந்து கொண்டார். அவருடைய வெள்ளி நிற தலை முடிக்கு அது மிகப் பொருத்தமானதாகவே இருந்தது. அவருடைய குரலோ, கேட்பவரை வசீகரிக்கும், ஒரு அழகான ஆன்மாவின் குரலாகவே ஒலித்தது. இக்குரல் வளமே பல்லாயிரக்கணக்கோரை தம்பால் கவர்ந்திழுக்கச் செய்து, பேச்சின் மீது முழுகவனம் செலுத்தவும், ஆழ்ந்த அமைதி காக்கவும் செய்தது.

இந்து மதத்திற்கு அம்மையார் ஆற்றிய தொண்டு அளப்பரியது. இந்து சமய நூல்களையும், கலாச்சாரங்களையும் பரப்பும் பொருட்டு அவர் பகவத் கீதையை எளிமையான ஆங்கிலத்தில், சிறுவர்களும், இளைஞர்களும் பயிலும் வகையில் மொழி மாற்றம் செய்தார். அதுமட்டுமன்றி, இந்து மத தர்மங்களைப் பற்றி பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார். இந்திய இளைஞர்களின் எண்ணத்தில் தம் நாடு, தம் கலாச்சாரம் பண்பாடு போன்ற அனைத்தையும் பதியச் செய்யும் பொருட்டு, 1898 இல் ‘சென்ட்ரல் இந்து காலேஜ்’ என்ற கல்லூரியை நிறுவினார். அங்கு இந்து மதத்தின் அடிப்படையான கொள்கைகளை கட்டாயப் பாடமாக வைத்து இந்து இளைஞர்களை கற்கச் செய்தார். இக்கல்லூரிதான் பிற்காலத்தில் மதன் மோகன் மாளவியா நிறுவிய ‘இந்து பல்கலைக்கழகத்திற்கு’, அஸ்திவாரமாக அமைந்தது. இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோர் என்றொரு பிரிவு , சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக இருந்ததைக் கண்டு, வருந்தியவர், அவர்களுக்கென்று தனிப்பட்ட பள்ளிகளையும் அவர்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல சங்கங்களையும் நிறுவினார்.

1916 ஆம் ஆண்டு இவர் ‘ஹோம் ரூல் இயக்கம்’, என்ற சுய ஆட்சி இயக்கத்தை ஆங்கிலேயர்களின், கடுமையான எதிர்ப்புக்கிடையில், மனம் தளராமல் நடத்தி வந்தார். இந்தியர்களுக்கு உரிமை வழங்கும்படி ஆங்கிலேயர்களுடன் போராடிக் கொண்டிருந்தார். பல தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த இயக்கத்தில் இணைந்தனர். மேலும் அவர் காமன்வெல்த் மசோதாவை நகலாக்கினாலும் அதனை பிரபலப்படுத்தும் முயற்சியை எடுக்கவில்லை.

இந்திய இளைஞர் சங்கத்தை [ Y.M.I.A.] சென்னையில் ஏற்படுத்தி அதில் பார்லிமெண்ட் விவாத சபையும் நிறுவினார். பெரிய நூல்நிலையம் ஒன்றையும் நிறுவினார். இந்தியச் சிறார்களை சாரணர் இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். இந்திய சாரண இயக்கத்தினர் அன்னி அம்மையாரை சாரண இயக்கத்தின் கௌரவ பொறுப்பாணைக்குழு அங்கத்தினராக அறிவித்தது அவருடைய உயர்ந்த சேவைக்குக் கிடைத்த பரிசாகும். சாரண இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவல் பிரபு அம்மையாரை கௌரவிப்பதற்காகவே இங்கிலாந்திலிருந்து வந்தார். சாரண இயக்கத்திற்கு ஒப்பற்ற சேவை செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் வெள்ளி ஓநாய் என்ற பதக்கத்தை மாபெரும் மக்கள் கூட்டத்தில் பேடன் பவல் பிரபு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

1917 ஆம் ஆண்டு கல்கத்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைக்கப்பட்டார். அந்த பிரம்மாண்ட கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, இந்திய மக்களின் மீது அவர் கொண்ட ஆழ்ந்த அக்கரையையும், அன்பையையும் வெளிப்படுத்தியது. இதற்குப் பிறகு இவருடைய செயல்பாடுகள் கலாச்சரம் மற்றும் அரசியல் தொடர்புடையதாகவே இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் அவர் கையெழுத்துப்பிரதிகளுக்கான நூலகக் கட்டிடத்தை அடையாறில் கட்டினார். இந்தியக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான பரத நாட்டியம், கோயில் நடனக் கலைஞர்கள் மற்றும் தேவதாசிகளிடம் அடைபட்டுக் கிடந்ததை ருக்மணி தேவிக்கு உதவித்தொகை அளித்ததன் மூலம் பரதநாட்டியக் கலாச்சாரத்திற்கே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். நாட்டுப்பற்று கொண்ட பல்வேறு இனப் பெண்களையும் ஒன்றிணைத்து சகோதரத்துடன் நாட்டு நலனில் பங்கெடுக்கும்படி செய்தார். மார்கரெட் கசின்ஸ் உடன் இணைந்து அம்மையார் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். மக்கள் அவரைத் தங்கள் எதிர்காலத் தலைவராகவே அடையாளம் கொண்டனர்.

1927 ஆம் ஆண்டு, சுதந்திரமான எண்ணம் கொண்ட மகாராணி சின்னாபாய் கெய்க்வாட் தலைமையிலான அகில இந்திய பெண்கள் மகாநாடு, பூனாவில் நடத்தப்பட்டது. ஆனால்,படித்த, சொற்பமான பெண்கள் மட்டுமே உறுப்பினராக முன்வந்த போது இதன் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையே ஏற்பட்டது. ஆனால் அம்மையாரின் தொலைநோக்குப்பார்வை அதன் நம்பிக்கையை வலுப்படுத்தியது. இம்மகாநாடு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று விரிவடைய ஆரம்பித்ததோடு இந்திய அரசாங்கத்திலேயே பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அன்னி பெசண்ட்டின் வழிகாட்டுதல் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அவர்களின் சேவையாலும் அந்த மகாநாடு வைர விழா கொண்டாடியது.

அன்னி பெசண்ட் அம்மையார் எழுதி வெளியிட்ட நூல்கள் பல. ‘நியூ இந்தியா’, ’காமன்வெல்த்’ ஆகிய செய்தித் தாள்களை நடத்தி வந்தார். ‘தேசிய கல்வி அறக்கட்டளை’, என்ற அமைப்பை உருவாக்கி இந்திய மாணவர்களின் வளர்ச்சிக்காக, பத்திரிக்கைத் துறை கல்வித்திட்டத்தை அடையாறு தேசிய பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். இவருடைய கல்விச் சேவையைப் பாராட்டி பெனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

1933 இல் செப்டம்பர் மாதம் 20ஆம் நாள் தனது 86 ஆவது வயதில் உயிர் நீத்தார். அவருடைய அஸ்தியின் ஒரு பகுதி காசியில் பெரிய ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு டாக்டர் பகவன் தாஸ் அவர்களால் கங்கையில் கரைக்கப்பட்டது. அடையாறில் அம்மையாரின் சமாதி உள்ளது.

“ இவள் உண்மை நெறி சொல்ல முயன்றாள் “, என்று தம் கல்லறையில் பொறிக்க வேண்டும் என்று அம்மையார் விரும்பிய காரணத்தினால் அதனை நிறைவேற்றினர். இவருடைய தன்னலமற்ற சேவையால் இந்திய வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பெற்றார்!

Wednesday, November 3, 2010

தீபாவளி கொண்டாட்டம் !

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு
அதிக கலோரி வகையான இனிப்புகள் மற்றும் ஒரு கிரேவி ஸ்பெஷலாக செய்யலாம்.


* கடலை மாவு பர்ஃபி.

தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 100 கி.
நெய் - 100 கி
சக்கரை - 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 5 கி
பால் - 1/2 கப் [அ] 120 மி.லி.
குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை :- 10 கி.நெய், 1/4 கப் பால், இரண்டையும் கடலை மாவில் கலந்து கொள்ளவும்.மிருதுவாக பிசைந்து, சிறிது நேரம் வைத்து விடவும். மீதமுள்ள நெய்யை சூடு செய்து அதில் கலந்து வைத்திருக்கும் மாவை பூந்தி கரண்டியில் போட்டு தேய்த்து விட்டு,குறைந்த தீயில் சிறிது நேரம் கிளறி கீழே இறக்கி குளிரச் செய்யவும்.
சக்கரை 100 கிராம் எடுத்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு, கெட்டியான பாகாக காய்ச்சிக் கொள்ளவும். மீதமுள்ள பாலையும், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ அனைத்தும் போட்டு, நன்கு கிளறி கீழே இறக்கவும்.

ஆறிய பின்பு, கடலை மாவு கலவையை எடுத்து அந்த பாகில் கலக்கவும். நன்கு கலந்த பின்பு ஒரு தட்டில் கொட்டி, செட்டாகச் செய்யவும். சிறிது நேரம் கழித்து விரும்பும் வடிவத்தில் துண்டுகள் போட்டுக் கொள்ளலாம்.

ஒரு துண்டு 450 கலோரிகள் வரை இருக்கும்.


சீதாப்பழ பாசந்தி :

தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்.
கல்கண்டு - 100 கி.
ஏலக்காய்த்தூள் - 5கி.
பாதாம் பருப்பு - 5கி
பிஸ்தா பருப்பு - 5கி
வெள்ளரி விதை - 5கி
சீதாப்பழம் - 2.

செய்முறை :- பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கிளறிக் கொண்டே காய்ச்சவும். தீயை குறைத்து வைக்கவும். பால் பாதியளவிற்கு சுண்டியவுடன் அதில் கல்கண்டு சேர்த்து கிளறவும். சக்கரை கரைந்தவுடன் கீழே இறக்கி வைத்து ஆற விடவும். பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை அனைத்தையும் சன்னமாக சீவி அதில் சேர்க்கவும். ஏலக்காய் பொடியும் சேர்க்கவும். சீதாப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு பழக்கூழை மட்டும் பாசந்தியுடன் சேர்த்து கலக்கவும்.சில்லென்று பரிமாறவும்.

இதன் கலோரி அளவு 460.


சில்லி பன்னீர் : சைனீஸ் ஸ்டைல்!

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 200 கி
சோள மாவு [ corn flour] - 1/2 கப்.
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்.
உப்பு - 1/2 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1/4 ஸ்பூன் [தேவையென்றால்]
மிளகாய் தூள் - 1 1/2 டீ.ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டே.ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பால் - 4 டே.ஸ்பூன்.

கிரேவிக்குத் தேவையானவை :

எண்ணெய் - 80 மி.லி.
வெங்காயம் பொடியாக நறுக்கியது -25கி
சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1/2 டீ.ஸ்பூன்
பூண்டு விழுது _ 2டீ.ஸ்பூன்
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது -2
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -2 டே.ஸ்பூன்.
1/4 ஸ்பூன் அஜினோமோட்டோ.
தண்ணீர் - 1 கப்.
சோள மாவு - 1 டே.ஸ்பூன்.
வினிகர் - 2 டீ.ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
சக்கரை - 1டீஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது -3.

செய்முறை :- சோள மாவு, மைதா, உப்பு அஜினோமோட்டோ, மிளகாய் தூள், மிளகு தூள், பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான பால் கலந்து கெட்டியான பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

பன்னீர் துண்டுகளை அந்த மாவில் போட்டு 5 நிமிடம் ஊறவிடவும். அதை எண்ணெயில் மொறு மொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

கிரேவி தயாரிக்க :-

சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதனுடன் தக்காளி சாஸ் வினிகர், சோயா சாஸ், உப்பு, சக்கரை மற்றும் மிளகு தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். சிகப்பி மிளகாய் விழுது [ மிளகாயை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும்]இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். அஜினோமோட்டோ சேர்த்து கலக்கவும்.

அடுத்து சோளமாவு கலவையை எடுத்து அதி ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் பொழுது கிரேவியை திரும்ப சூடாக்கி, பன்னீர் பக்கோடாவை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு பாதி அளவிற்கு கெட்டியானவுடன் கீழே இறக்கி வைத்து விடவும். பரிமாறும் கின்னத்தில் போட்டு , பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை தூவி அலங்கரிக்கவும்.

Tuesday, November 2, 2010

கடல் கால் அளவே............



வாழ்க்கை தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருக்கும் போது தம்முள் இருக்கும் திறமை எளிதில் வெளிப்படுவதில்லை. காரணம் அதற்கான தேவையே ஏற்படுவதில்லை. ஆனால் திடீரென சுனாமியாக பிரச்சனை வந்து புரட்டிப் போடும் போதுதான் சம்பந்தப்பட்ட அந்த நபரின் தகுதி தெரிய வரும். அதாவது பிரச்சனையை எதிர்த்து நின்று போராடக்கூடியவரா அல்லது தலைதெறிக்க ஓடுபவரா, இன்னுமொரு படி மேலே போய் கோழைத்தனமாக தன்னையே அழித்துக் கொள்பவரா என்பது.. ஒரு சிலரின் வாழ்க்கையில், பிறப்பு முதல் இறப்பு வரை, சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பெரும் பிரச்சனைகள் வராமல் ஓடிவிடுகிறது. சிலரின் வாழ்க்கை தன்னுடைய நம்பிக்கையையும், திறமையையும் நிரூபித்துக் காட்டும் வகையில் விதி பிரச்சனைகளைக் காட்டி இழுத்துச் செல்லும்.அப்படி ஒரு உண்மைச் சம்பவம்தான் இது.

செல்வி, மத்தியவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ,அமைதியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். கணவர் கனகராஜ், ஈரோட்டில் நூல் விற்பனை முகவர் தொழில் பார்த்துக் கொண்டிருந்தார். ஆண் ஒன்றும்,பெண் என்று என்று இரு குழந்தைகள் சலனமில்லாத அமைதியான வாழ்க்கை. மூத்த பெண் பள்ளியிறுதியாண்டு முடித்து நல்ல மதிப்பெண்களுடன் பொறியியல் கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் ஆவலில் காத்திருக்கிறாள். இளைய மகன் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன். இந்த நிலையில் தான் கணவர் கனகராஜீவிற்கு திடீரென கால்வலி ஏற்பட்டது. அதிகம் நடக்க முடியாமல் சிரமம் கொடுத்த போதுதான் மருத்துவரை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்குள் மகளை பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டிய வேளை நெருங்கியதால் ஈரோட்டில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டு மருத்துவ மனைக்குச் சென்றவர், அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் ஒரு சம்பவமாகிப் போனது..........

‘காயமே இது பொய்யடா.....காற்றடைத்த பையடா.....என்பார்கள், மேல் தோற்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு உடல்நிலையைக் கணிக்க முடியாது என்பதற்கு கனகராஜ் ஒரு உதாரணமாகிப் போனார். கால்வலிதானே ஏதாவது வலி நிவாரணி கொடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மருத்துவரை அணுகிய போது பரிசோதித்த மருத்துவர் சி..டி. ஸ்கேன், எக்ஸ்ரே என்று ஏதேதோ எடுக்கச் சொல்ல அப்பொழுதே ஏதோ பெரிய பிரச்சனைக்கு அறிகுறியாக தெரிந்தாலும், இறுதியில் மருத்துவர், இதயத்திலிருந்து வரும் ரத்தக் குழாயில், காலில், அடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதைக் கேட்டு பேரதிர்ச்சி ஆனது.

மன உளைச்சல் ஒருபுறம் இருந்தாலும், பொருளாதார நிலை அடுத்த பிரச்சனை. செலவுகள் லட்சத்தை தாண்டிக் கொண்டிருக்கின்றன..... கையிருப்பும் கரைந்து கடன் வாங்கும் நிலையும் வந்தது. வீட்டுப் புறாவாக அதுவரை, கணவனையும் குழந்தைகளையும் பராமரிக்கும் கடமையை மட்டுமே சிரமேற்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் செல்விக்கு, திடீரென்று எல்லா பொறுப்பும் ஒரு சேர வந்து அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டது. படித்தது என்னவோ 9 ஆம் வகுப்பு வரைதான். சொந்தபந்தங்களிடம் சென்று உதவிக்காக நிற்பதற்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் இது நிரந்தரத் தீர்வாகவும் இருக்க முடியாதே.

இதற்கிடையில் கணவனின் அறுவை சிகிச்சைக்காக ஈரோட்டிலிருந்து, கோவையில் ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்து பெரிய நோட்டுக்களாகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கணவனின் தொழில் மீது கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவானது.

சாதம் படைக்கவும் செய்திடுவோம் : தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடுவோம்

காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன்

காரியம் யாவினும் கைகொடுத்து

மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்

மாட்சி பெறச் செய்து வாழ்வமடி !






.

என்று பாரதி அன்றே பாடி வைத்துச் சென்றான்.

பெண்களுக்கான சில பொதுவான தொழிகள் உள்ளன. அப்படி ஒன்றாக இருக்கும் பட்சத்தில் ஓரளவிற்கு சமாளிக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் செல்வியின் நிலையோ,தன் கணவனின் தொழிலைப் பின்பற்றுவதைத் தவிர வேறு உபாயம் இல்லை. கணவர் செய்யக்கூடிய நூல் விற்பனை முகவர் தொழில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒரு தொழில். காரணம், பலரை, பல நேரங்களில், சந்திக்க வேண்டும். பணிக்கான குறிப்பிட்ட கால நேரங்கள் கிடையாது. அதிகமான சுற்றுப் பயணம், பெரும் தொகைகளை வசூல் செய்து பட்டுவாடா செய்ய வேண்டும். இது போன்று ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய பணியை, 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, கணவன் தொலைபேசியில் உரையாடும் நிகழ்வுகள் மட்டுமே அனுபவமாகக் கொண்ட நாற்பது வயதைக் கடந்த நிலையில் ஒரு பெண் தனியாக நின்று சமாளிக்க வேண்டிய கட்டாயம், கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று.

அடுத்த வேளை உணவு, குழந்தைகளின் கல்வி, வீட்டு வாடகை , அனைத்திற்கும் மேலாக கணவனின் மருத்துவச் செலவு. இப்படி ஒரு இறுக்கமான சூழலில்தான், கணவரிடம் ஆலோசனை பெற்று, அவர் வியாபாரம் செய்த நூற்பாலை முதலாளிகள் மற்றும் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்போன்றோரின் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார். கனகராஜின் நேர்மையான தொழில் வழமை அவருக்கு நல்ல நட்புக்களை தொழில்ரீதியாக உருவாக்கி வைத்திருந்தது.

கணவனின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்த திருப்தியில், கணவனின் உதவியுடன் தொழிலைக் கவனிக்க ஆரம்பித்த வேளையில், விதி தன் குரூரமான மறுபக்கத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. அறுவை சிகிச்சை முடிந்தும் இரத்தக் குழாயில் இருந்த அடைப்பு நீங்கியும், இரத்தம் வேகமாக பாய்ந்த காரணத்தினால் மூளை நரம்பு வெடித்து, அதி விரைவில் உயிரும் பிரிந்து விட்டது. அதிர்ச்சியில் உறைந்து போன செல்விக்கு உலகமே இருண்டு போனது போல் தோன்றியது. இனி தன் குழந்தைகளின் எதிர்காலம் அவ்வளவுதான் என்று முடிவு செய்த வேளையில்தான், கணவனின் நல்ல நண்பர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட நூற்பாலை முதலாளிகள் சிலர் கொடுத்த நல்லறிவுரைகள் மற்றும் ஊக்கம் கொண்டு, கணவன் மறைந்த எட்டாவது நாளே தொழிலை கவனிக்க வந்துவிட்டார், செல்வி.

கல்வியும் குறைவு, விசேச தகுதிகள் என்று ஏதும் இல்லை. ஆனால் சமாளித்து விடுவோம் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் மட்டும் கைகொடுக்க 45 வயதில், இரு சக்கர வாகனம் ஓட்டிப் பழகினார். சிறு வயதில் சைக்கிள் ஓட்டிய நினைவு மட்டுமே துணை இருந்தது அதற்கு. 20 நாட்களில் மொபெட் ஓட்டி பழகினார். பக்கத்தில் இருக்கும் கிராமங்கள் , சிற்றூர்கள் என்று நேரம் காலம் இல்லாமல் அலைய வேண்டிய அவஸ்தை........ நூற்பாலையிலிருந்து நூல் பைகளை சரக்கு வண்டியில் ஏற்றிக் கொண்டு, இரவு வேளைகளில் கூட சரக்கு வண்டியிலேயே பயணித்து வந்த அனுபவம் இப்படி எத்தனையோ........... ஆனால் அதைப்பற்றியெல்லாம் எண்ணி மாய்ந்து போகாமல், துணிச்சலைத் துணைக் கொண்டு, தன்னை விரட்டிய விதியை திரும்பி நின்று தான் விரட்ட ஆரம்பித்தார். விதியும் பயந்து ஒதுங்க, இன்று மகளை ஒரு ECE பொறியாளராக, ஒரு பிரபல கம்பெனியில் அமர்த்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார். மகனையும் பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று தான் கடந்து வந்த பாதையைப் பற்றிக் கேட்ட போது, பல கசப்பான அனுபவங்கள் ஆரம்பத்தில் பெற்றிருந்தாலும், இன்று தலை நிமிர்ந்து நிற்பதை எண்ணி பூரிப்படைகிறார். பொதுவாக பெண்களின் முன்னேற்றத்திற்கு பெண்களேதான் முதல் எதிரி என்பார்கள். செல்வியின் வாழ்விலும் அது உண்மையாகிப் போனதும் மறுக்க இயலாது. சொந்த, பந்தங்களின் ஏளனப் பேச்சு பல நேரங்களில் வாட்டி எடுத்தாலும், அதனையெல்லாம் துச்சமாகத் தூரத்தள்ளி, நேர்மையும், நம்பிக்கையும், நல்லொழுக்கமும், துணிச்சலும் கொண்டு பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் செல்வி, தன் கணவரின் நினைவுகளைச் சுமந்து கொண்டு..............,


காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...