Monday, August 25, 2014

நட்பு!





இரு நண்பர்கள் பற்றிய ஒரு ஜென் கதை...


ஒரு பாலைவனத்தின்  மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள், இரு நண்பர்களும். நடக்கும் களைப்பு தீர கதை பேசிக்கொண்டே சென்றார்கள். பேச்சுவாக்கில் விவாதம் ஒன்று முளைத்தது. எதிர் வாதத்தினால் வாய்ச் சண்டையாகவும் மாறிவிட்டது. கோபம் தாளாத ஒரு நண்பன், மற்றொருவனின் கன்னத்தில் அறைந்துவிட்டான். 

அறை வாங்கியவனோ சற்றும் கோபிக்காமல், மிக  அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்ததோடு, தன் விரல்களால், “எனதருமை நண்பன், என் உயிரினும் மேலானவன், இன்று என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!” என்று மணலில் எழுதினான்.

Sunday, August 24, 2014

சர்வதேச மகளிர் தொழில் முனைவர் மாநாடு



பவள சங்கரி



எஸ்.எஸ்.எம். குழும கல்லூரிகளின் சார்பில், ஆகஸ்ட் 22 & 23 (2014)  ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடந்தேறியுள்ளது, சர்வதேசப் பெண்கள் தொழில் முனைவோர் மாநாடு. இதில் கலந்து கொண்ட மாணவிகளும், தொழிலதிபர்களும் மிக உற்சாகமாக, மன நிறைவுடன் கருத்தளித்துள்ளது இம்மாநாட்டின் முழுமையான வெற்றியை பறை சாற்றுகிறது.  நேற்று (23, ஆகஸ்ட்) நிறைவுப் பகுதியில் என்னைப் பேச வாய்ப்பளித்த, கல்லூரித் தலைவர் திரு கவாலியர் டாக்டர் எம்.எஸ். மதிவாணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 




இந்த நிகழ்ச்சி இத்துனை வெற்றிகரமாக அமைந்ததற்கு பக்கத் துணையாக இருந்த பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ். பாலமோகன், கலை அறிவியல் கல்லூரி முதல்வர், டாக்டர் கே. ராமசாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், முனைவர் டாக்டர். பி. கிருஷ்ண குமார்,  முனைவர், எம். இந்துமதி, முனைவர் ஜெ.எஸ். சுபாஷிணி, திரு என். நாராயண ராவ், திட்டப்பணித் தலைவர் முனைவர்  ஜெ. மோகன்ராஜ், மற்றும் முனைவர் எஸ்தர், நிகழ்ச்சியை அழகாகத் தொகுத்து வழங்கிய  எம். பி. ஏ. மாணவிகள், பங்கு பெற்ற அனைத்து ஏனைய பேராசிரியர்கள், தொழில் முனைவோர், பேச்சாளர்கள் அனைவரும் பாராட்டிற்குரியவர்கள்.  


இந்த நிகழ்ச்சியின் வரவேற்பைப் பார்த்தவுடன், உண்மையில் பாரதி கண்ட கனவு பலிக்க வெகு தொலைவு பயணிக்க வேண்டிய தேவை இல்லை என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. நன்றி திரு மதிவாணன் சார். 

Sunday, August 17, 2014

ஆறில் ஒரு பங்கு - ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்ட நூல்


பவள சங்கரி



உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!



1911, டிசம்பர் 6ம் தேதி மகாகவி பாரதியின் “ஆறில் ஒரு பங்கு” என்ற ஒரு நூல் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் தடை செய்யும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் எழாமல் இல்லை. இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் 1912 ம் ஆண்டுக்குப் பிறகு பாரதியாரின் படைப்புகள் ஒரு கட்டுக்குள் வந்திருக்கிறது. தம் வாழ்நாளில் எஞ்சிய அந்த ஒன்பது ஆண்டுகள், வறுமையின் கொடுமையில் சிக்கி, சின்னாபின்னமாகிவிட்டது.  இந்த காலகட்டத்தில் மகாகவி எழுதிய பாடல்கள் மிகக்குறைவே என்கிறார் ஞானபாரதி தம் நுழைவாயிலில்.  

மகாகவி பாரதியின் புதல்வி சகுந்தலா தம் தந்தையாரின் அந்நாட்கள் குறித்து நினைவு கூர்கையில், “கவிதை புனைவதும், கற்பனையுலகில் சஞ்சரிப்பதுமாகக் காலம் தள்ளி வந்த என் தந்தையாருக்கு நாளாக நாளாக மிக சங்கடமான நிலையேற்பட்டுவிட்டது. அநேக நாட்கள் மிகுந்த துன்பத்தோடும் - மனத்துடிப்போடும் எது சொல்வதெனத் தெரியாத வேதனையுடன் கழிக்க ஆரம்பித்தார். நடுப்பகல் உச்சி வேளைகளில் மேன்மாடத்தில் நின்று பாடுவார். அவர் மனது அந்த வெயிலில் என்ன பாடுபட்டதோ யாரறிவார்? நண்பர்கள் உள்பட எல்லாவற்றையும் வெறுக்கத் தொடங்கினார். பல நாட்களாக யாதொரு பாட்டும் எழுதாமல் வேதனையுடன் கழிந்தார்” என்கிறார். 

பொன் மொழிகள்


பவள சங்கரி


Friday, August 15, 2014

சுதந்திரம் என்பது....

 
 
 
பவள சங்கரி
 
தலையங்கம்
 
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
 
சுதந்திரம் என்பது அடிமைத் தளைகளிலிருந்து விடுபடுவது என்று பொதுவாகக் கூறுகிறோம். பசித்தவனுக்கு உணவு கிடைத்தால் அது சுதந்திரம் அவனுக்கு. துரத்தி வரும் புலிகளிடமிருந்து தப்பிக்கும்  மான்களுக்கு அதுதான் சுதந்திரம், வயல்வெளிகளிலும், காடுகளிலும்,  கூவித்திரியும் குயில்களுக்கு அந்த கானமே சுதந்திரம். நமக்கு எது சுதந்திரம்?  எந்த நாடாக இருந்தாலும், பொருளாதாரத்தில் விடுதலை பெற்றாலே அது உண்மையான சுதந்திரமாகக் கருதப்படும். 67 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15இல்  கொடியேற்றிவிட்டு சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று, மகிழ்ச்சியுடன்  ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாடியும்விட்டு,  பின் அவரவர்  கடமைகளுக்குச் சென்றுவிடுகிறோம்.  சிந்திக்க வேண்டிய நேரம் இது. நம் இந்திய நாடு பொருளாதாரத்தில் சீர்பட மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  முந்தைய ஆட்சிக்கும்  இன்றைய ஆட்சிக்கும் சீர்திருத்த செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் காணமுடியவில்லை.  ரிசர்வ் வங்கி ஆளுநரின் கருத்துப்படி கடன் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பினும் கடன் பெற்று தொழில்களையும், தொழிற்சாலைகளையும் விரிவுபடுத்தத் தயங்கக்கூடிய நிலையே இன்று உள்ளது. தொழில் வளர்ச்சியும், மேம்படுத்தப்பட்ட பொருளாதாரமுமே தனி மனித சுதந்திரத்தை அளிக்க இயலும். 67 ஆண்டுகளுக்குப் பின்பும், மத்திய தொகுப்பு மற்றும் மாநில தொகுப்பிலிருந்தும் நுகர்வுப் பொருட்களை அதாவது உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்துச் செல்லும் நிலை இருக்கும் போது நாம் எப்படி சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் நிறைவு பெற்றன என்று பெருமைப்பட முடியும்.. உலக வங்கியின் அறிக்கை மற்றும் ஐ. நா. சபையின் அறிக்கையின்படியும், உலக மக்கள் தொகையில் 33 சதவிகிதத்தினர், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்திய மக்கள் தொகையில் 66 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இதனை கவனத்தில்கொண்டு செயல்பட்டாலொழிய நாம் பூரண சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று பெருமைப்பட முடியாது!
 
நன்றி : வல்லமை

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...