Monday, October 26, 2015

ஆப்பிளும் கலீல் கிப்ரானும்!



ஆப்பிள் ஒன்றை  அசைபோடும் உமது பற்கள்  உம்மிதயத்தில்  இதையும் சேர்த்தே அசை போடட்டுமே:

உமது விதைகள் எமது உடற்கூட்டில் உறையட்டுமே,
உமது நாளைய மொட்டுக்கள் எமது இதயக்கூட்டில்  மலரட்டுமே,
ஓ, உமது மணமே எமது சுவாசமாகட்டுமே,
ஆம், நாமிருவரும் ஈருடல் ஓருயிராகக் கொண்டாடி மகிழ்வோமே காலந்தோறும்!

கலீல் கிப்ரான்


“And when you crush an apple with your teeth, say to it in your heart:
Your seeds shall live in my body,
And the buds of your tomorrow shall blossom in my heart,
And your fragrance shall be my breath,
And together we shall rejoice through all the seasons.” 
― Kahlil Gibran

Friday, October 23, 2015

வாழ்க இந்தியா!

பவள சங்கரி


'மூடீஸ்’ (Moodys) என்பது ஒரு அகில உலக பொருளாதார ஆய்வு நிறுவனம்.  இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி  வெளிநாடுகளின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் பாதிப்பு இன்றி இந்தியா தன்னுடைய சுய பொருளாதார முன்னேற்றம் மூலமாக, 2015 - 2016 ம் ஆண்டில்,   ஜி 20 நாடுகளின் முதன்மையாக  7.75 சதவிகித பொருளாதார வளர்சியை அடையும் என்று அறிவித்துள்ளது. இதற்கு இந்தியாவின் சுய பொருளாதார முன்னேற்றமே காரணம் என்கிறது இந்த ஆய்வறிக்கை.  துருக்கி, இந்தோனேசியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைவிட இந்தியா பல வகையில் வளர்ச்சி எல்லையை அடையப் போவதும் உறுதி  என்கிறது இந்த ஆய்வறிக்கை.  மேலும் நம் இந்திய அரசின்  உறுதியான பொருளாதாரக் கொள்கைகளின்  பலனாக பண வீக்கம் முற்றிலும் கட்டுக்குள் வரும் என்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்கிறது இந்த நிறுவனம். அமெரிக்காவின் பொருளாதார நிலையும், சீனாவின் பொருளாதார வீழ்ச்சியும் கூட நம்  இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது என்பதும் மிகவும்  மகிழ்ச்சியான செய்தி.. 

நன்றி : வல்லமை

Friday, October 16, 2015

மனிதரில் மாணிக்கம் - கலாம்




ஒல்லும் வகையான், அறவினை, ஓவாதே,
செல்லும்வாய் எல்லாம் செயல்.

உரை: செய்யக்கூடிய வகையால், எக்காரணம்கொண்டும் தவிர்க்காமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலையே செய்ய வேண்டும். 

Tuesday, October 13, 2015

நாலடியார் - பொறையுடைமை




அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.


அறிய வேண்டிய நன்மை தீமைகளனைத்தும் அறிந்து, தன்னடக்கமுடையவராக, அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அச்சம்கொண்டு, தாம் செய்யும் காரியங்களை உலகம் உவக்குமாறு செய்து, நேர்மையான வழியில் சம்பாதிக்கும் பொருள்கொண்டு இன்பாக வாழும் இயல்புடையவர்கள் எக்காலத்தும் துன்புற்று வாழ வேண்டியிருக்காது.

இன்பம் பயந்தாங் கிழிவு தலவைரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட !
பழியாகா ஆறே தலை.

உயர்ந்தோங்கிய மலையிலிருந்து வீழும் அருவிகளைக் கொண்ட நாட்டை உடையோனே! இழிவே வந்தாலும் வரட்டும் என்று இன்பம் கிடைக்கின்றதே என்பதால், அச்செயலின் பக்கம் இருப்பவனுக்கு இன்பம் தொடர்ந்து கிடைக்கும் என்றாலும், உலகம் பழிக்காமல் இருக்க வழியில்லை என்ற நிலையில் அச்செயலை செய்யாமல் இருப்பதே நன்மை பயக்கும். அதாவது, இடையறாத இன்பம் உண்டாவதாயினும் பழிப்பில்லாத நற்செயல்களே செய்யத்தக்கது.

இணையப் படத்திற்கு நன்றி

புறநானூறு 106



பாடியவர்: கபிலர் 
பாடப்பட்டோன்: வேள் பாரி, 
திணை: பாடாண், துறை: இயன் மொழி


நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்
புல்லிலை யெருக்க மாயினு முடையவை
கடவுள் பேணே மென்னா வாங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே.


உரை : சூடும் மலரில் நல்லது, தீயது என்பதெல்லாம் நம்மைப்போல் இறைவனுக்கு இல்லை. அதாவது எவரும் விரும்பாத, குவிந்த மலர்களும், புல்லிய இலைகளையும் கொண்ட எருக்கம் பூவேயானாலும் அதனை உள்ளன்போடு அணிவித்தால் கடவுள் வேண்டாம் என்று மறுக்காமல் ஏற்பார் ! அதைப்போன்று ஏதுமறியா அறிவிலர், புல்லிய குணமுள்ளவர், வறுமையுற்றார் என எவர் வரினும் பாரி வாரி வழங்குவான்!

Sunday, September 27, 2015

தூரனின் மதிநுட்பம்!





மென்மையாகவும், நுட்பமாகவும் பேசும் திறன் பெ. தூரனுக்கு இளமையிலேயே வாய்த்திருந்தது. மாணவப் பருவத்தில் ‘பித்தன்’ என்ற இதழை நண்பர்களுடன் நடத்தி வந்தார் தூரன். இது திரு.வி.க.வின் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இதழைப் பதிவு செய்ய திரு.வி.க. வும், தூரனும் தலைமை குற்றவியல் நடுவர் அவர்களிடம் சென்றனர். அவர் ஆங்கிலேயர். இந்த இதழோ தேசப்பற்று மிக்க இளைஞர்களால் ‘பித்தன்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. குற்றவியல் நடுவர், 'What do you mean by Pithan?' என்று தூரனைக் கேட்டார். திரு.வி.க. அவர்கள், இந்த இளைஞன் என்னதான் பதில் சொல்லப் போகிறானோ என்று சிந்தனை வயப்பட்டார். ஆனால் தூரனோ சற்றும் அசராமல், துளியும் கலவரமின்றி, 'It is one of the names of God Shiva'என்று பதிலளித்தார். இதழ் பதிவு பெற அனுமதி கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமோ? மாணவர் தூரனின் அறிவார்ந்த பதிலால் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த திரு.வி.க. தூரனின் மதி நுட்பத்தைக் கண்டு உளமார பாராட்டினாராம்!

இசையுலகின் முடிசூடா ராணி கே.பி.எஸ்.

பவள சங்கரி

இசை உலகின் முடி சூடா ராணியாகத் திகழ்ந்த கே.பி.எஸ் அவர்களின் மனதை மயக்கும் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.அழுத்தமான அந்த உச்சரிப்பும் குரலின் நீரோடை போன்ற தெளிவும் இன்னும் நம் மனதை விட்டு அகலவில்லை.இசையில் மட்டுமல்லாமல் தனது தனித்துவமான திறமைகளால் நாடகம் ,அரசியல், ஆன்மிகம் என்று பல்வேறு துறைகளிலும் சிறப்புற்று விளங்கியவர் அவர். சினிமாவில் முதன்முறையாக அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று சாதனை படைத்தவர் அவர். மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்ட அவர்தான் கேபிஎஸ் என்றால் அதற்கு அவருடைய மனிதாபிமானமும் ஒரு முக்கிய காரணம்.. இயற்கையாக அவரிடம் அமைந்திருந்த அந்த குணம். எங்கள் கொங்கு நாட்டு இசையரசி மங்கையர் குல திலகம் என்றால் அது மிகையாகாது... இசை தந்த கொடை கே.பி சுந்தராம்பாள் .
வீடு வாசல் மறந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் தீரர் சத்தியமூர்த்தி. வருமானம் என்பதே இல்லாமல் இருந்த காலம்.. அப்போது தன் அரசியல் குருவான சத்தியமூர்த்தி அவர்களின் குடும்ப நிலையைக் கருத்தில்கொண்டு நம் இசையரசியார் தாம் வாங்கியிருந்த நிலத்தில் நான்கு கிரவுண்ட் நிலத்தை சத்தியமூர்த்தி அவர்களுக்கு இலவசமாக எழுதிக் கொடுத்தாராம். அந்த நிலத்தில் வீடு கட்டிய சத்தியமூர்த்தி சுந்தராம்பாள் அவர்களை தங்கள் சந்ததியாரும் நினைவுகூரும் வகையில் தமது வீட்டில் ‘சுந்தரம்’ என்று கல்வெட்டுப் பதித்தாராம். அந்த வீடு இன்றும் சென்னை தணிகாசலம் தெருவில் (தி.நகர்) உள்ளது. இதெல்லாம் அரசியல் கடந்த மனிதம் அல்லவா...?

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...