Tuesday, March 8, 2011

அன்பே தெய்வம் !



அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. - திருக்குறள்.

ஆக்னஸ் கோங்ஸா பொஜாஹியு, பிறந்தது யுகோஸ்லேவியா நாட்டின், ஸ்கோப்ஜே கிராமத்தில்., 1910ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 ஆம் நாள் அல்பேனிய தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இவர் மிகுந்த மத நம்பிக்கை உடையவர். முதல் உலகப் போரில் தன்னுடைய குடும்பம் அடைந்த வேதனைகளும், சோதனைகளும் அவரை மிகவும் பாதித்தன. இந்த சமயத்தில் தான் இந்தியாவிலுள்ள வங்க மாநிலத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு ஒரு கிறித்துவ சேவைக் குழு தொண்டு புரிந்து கொண்டிருந்ததை அறிந்து, தானும் அவர்களுடன் சேர்ந்து தொண்டு புரியும் எண்ணம் மலர்ந்தது. இதன் விளைவாகவே, தன்னுடைய 18 வது வயதிலேயே துறவறம் பூண்டு, பற்றுக்களியெல்லாம் விட்டு தன் நாடான யுகோஸ்லேவியாவிலேயே பெண் துறவியானார்.

அயர்லாந்தில் டப்ளின் நகரத்தில் ஆங்கில மொழிப் பயிற்சியும், மதப்பயிற்சியும் பெற்ற போது, அவர் எண்ணம் இந்தியாவிலுள்ள வங்காளத்தின் மீது சென்றது. எண்டாலி என்னுமிடத்தில் அமைந்துள்ள புனித மேரி பள்ளியில் புவியியல் ஆசியையாகச் சேர்ந்தார். இதற்கு முன்பு டார்ஜிலிங்கில் உள்ள லோரடோ கன்னிமாடத்தில் கன்னிமார்களுக்குரிய ஜபம், பிரார்த்தனை முறைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டார். தன்னுடைய சந்நியாசப் பெயராக, தெரெஸா மார்ட்டின் என்று மாற்றிக் கொண்டார் .ஆம், மக்கள் தொண்டே நகேசன் தொண்டு என்று தன் வாழ்நாள் முழுவதையுமே மக்கள் தொண்டிற்காகவே அர்ப்பணித்துக் கொண்ட நம் அன்னை தெரெசாதான் அவர்!

புனித மேரி பள்ளியில் 17 ஆண்டுகள் தங்கி ஆசிரியப்பணியும் பின்பு முதல்வர் பணியும் மேற்கொண்டார்.1947 ம் ஆண்டின், வரலாற்று நிகழ்வான பிரிவினையின் காரணமான இடப்பெயர்வு, கொல்கத்தா மக்களை பசி, பட்டினி, குழப்பம் என்றும், கிழக்கு பாகிஸ்தானத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மக்கள் வெள்ளம், நடுத்தெருவில்..............பிரிட்டானிய ஆட்சியின் இரண்டாவது பெரிய நகரத்தின் சரித்திரம் மாறிக்கொண்டிருந்தது. இந்த அவலம் அன்னை தெரெசாவின் மனதில் பெரும் ரணத்தை ஏற்படுத்தியது.1948 இல் புனித தெரெசா பள்ளியில் ஒரு மருத்துவமனையை திறந்தார். இந்த ஆண்டிலேயே இந்தியக் குடியுரிமையும் கிடைத்தது அன்னைக்கு. 1950 இல் கல்கத்தாவில் ஏழைகளின் துயரம் துடைக்கும் சமயம் ஒன்று நிறுவப்பட்டது. தற்போதைய ஆசார்ய ஜகதீஸ் போஸ் தெருவில் அன்பு இல்லம் செயல்ப்ட்டுக் கொண்டிருக்கிறது.

அன்னையுடன் சேர்ந்து தொண்டு செய்து கொண்டிருந்த மற்ற சேவை சகோதரிகள் நாள்தோறும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வகுக்கப்பட்டன.

அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து, முதல் இரண்டு மணி நேரம் தியானத்திலும், பிரார்த்தனையிலும், கூட்டு வழிபாட்டிலும் ஈடுபட்டு, அடுத்து எளிய உணவு உட்கொண்டு, சேவைப்பணி செய்ய இரண்டு அல்லது மூன்று குழுக்களாக பிரிந்து சென்று, நகரத்தின் முக்கிய சாலைகள், குடிசைப்ப்குதிகள் நகரத்தின் சந்துக்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ள அனாதைகளையும், பசியாலும், பிணீயாலும் அல்லலுறுபவர்களையும் இறக்கும் தருவாயில் அனதையாக துன்புறுபவர்களையும் அழைத்து வருவார்கள். குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளைக் கூட தேடி எடுத்து வருவார்கள்.

தொழு நோயால் பாதிக்கப்பட்டு அறுவறுக்கத்தக்க நிலையில் இருப்பவர்களையும், துளியும் அறுவறுப்பு இல்லாமல் எடுத்து வ்ந்து சுத்தம் செய்து மருத்துவ உதவியும் அளித்து இப்படி அவ்ர்கள் செய்யும் சேவை மிக உயர்ந்ததாகும்.

அல்லல்படும் அனாதைகள் கண்னில் படும் போதெல்லாம் அன்னையின் கண்கள் குளமாகும். அவர்கள் இருக்கும் இடம் எவ்வளவு அசுத்தமாக இருந்தாலும் அவர் தயங்காமல் அவரிடம் நெருங்கி, அவர்களுக்குத் தேவையான பணிவிடைகள் செய்து காப்பாற்றத் தயங்க மாட்டார். அன்னையின் அமெரிக்க நண்பர்கள் பரிசாக அளித்த ஆம்புலன்ஸ் உதவி கொண்டு நடமாடும் மருத்துவமனையைத் துவங்கினார்.கல்கத்தா நகருக்கு அருகில் ’பிரேமதானம்’ என்ற பெயரில் தொழுநோயாளிகளுக்கு ஒரு மருத்துவமனை கட்டினார். அன்னை இந்நோயாளிகளுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. இந்தியாவில் மட்டும் 40 இலட்சம் பேர் இந்நோயால் வருந்துகின்றனர். இன்று உலகம் முழுவதும் சராசரியாக 650 நடமாடும் மருத்துவமனைகள் பரவி, 60 இலட்சம் தொழு நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர்.

அன்னை தெரெசாவிடம் இப்பணியில் ஈடுபடும் எண்ணம் எங்கனம் வந்தது, என்றுகேட்டால், ஏசு கிறிஸ்துவின் புனித பைபிளில் இருந்துதான் என்பாராம்.ஆன்மீக பலம்தானே ஆன்ம பலம். அன்னை தெரெசாவின் அறக்கட்டளை உலகெங்கிலும் 450 மையங்களில் செயல்பட்டுவருகின்றன. 1985 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோயாளிகளுக்கென முதல் மருத்துவ சேவை இல்லம் நியூயார்க்கில் ஏற்படுத்தப்பட்டது. குவாட்டிமலாவில் நில நடுக்கம் ஏற்பட்டபோது வீடு இழந்தவர்களுக்கென அன்னை தெரெசாவால் அங்கு ஒரு மையம் உருவாக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட்வர்களுக்கான ப்துகாப்பும் அளிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேலான சேரிப் பள்ளிக்கூடங்களும், அனாதைக் குழந்தைகளுக்கான விடுதிகளும், குடி, போதை ம்ருந்துகளுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்களும், மீட்பு மையங்களும் நிறுவி செயல்படுத்தினார். 2000 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், 750 மருத்துவ ஊர்திகளும் சேவையில் ஈடுபட்டன.

1962 ஆம் ஆண்டு அன்னையின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் பொருட்டு , இந்திய அரசாங்கத்தால்’ பத்மஸ்ரீ’விருதும், தொடர்ந்து, நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதும் 1980 ம் ஆண்டு வழங்கப்பட்டது. 1979 இல் ‘நோபல் பரிசு’ மற்றும் 1984 இல் எலிசபெத் மகாராணியிடம் பாராட்டுப் பத்திரமும் பெற்றார்.

அன்னை தெரெசா, உலக அன்னையாக இருப்பினும், அவர் தன்னை ஒரு இந்திய பிரஜை என்று சொல்லிக் கொள்வதிலேயே பெரும் நாட்டம் கொண்டார். ‘நான் இந்தியன். இந்தியா என் நாடு’, என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப் ப்ட்டார்.

ஏழையின் சிரிப்பிலும், பிஞ்சு நெஞ்சங்களின் கண்ணீரிலும், புன்னகையிலும் ஏசு பிரானையேக் கண்ட அன்னையின் உயிர், 1997 ஆம் ஆண்டு, இரவு 9.30 மணிக்கு, செப்டம்பர் 5 ஆம் தேதி அந்த வெண் புறா ஆண்டவனில் சென்று கலந்தது. உலக மக்களின் ந்ல்னுக்காக தன் வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்த அன்னை என்ற தீபம் அணைந்தபோது, உலகத்தின் ஒவ்வொரு குடிமகனும் தன் தாயை இழந்த சோகத்தை உணர்ந்தனர் என்றால் அது மிகையாகாது. எதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்று இல்லாது, உலக மாந்தர் அத்துனை உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்த அன்னை இன்றும் தன்னலமற்ற சேவை உள்ளம் கொண்ட அத்தனை இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பதும் சத்தியம். தாய்மை என்பதற்கு சாதி மதம் என்ற பேதம் இல்லை என்பதனை உணர்த்திய அன்னை சக்தியின் மறு அவதாரம் அல்லவா?

புனித அன்னை தெரெசா போன்று இன்னொரு அன்னை இந்த பூமியில் அவதரிக்க இன்னும் எத்துனை கோடி ஆண்டுகள் ஆகுமோ? அன்பின் வழியே அறவழி, அதுவே இறைநெறி என்ற அரிய கருத்துக்களின் எளிய உருவம் தான் நம் அன்னை தெரெசா. அவருடைய சேவை இல்லத்தில் காணப்படும் வாசகம் :

மௌனத்தின் பலன் பிரார்த்தனை
பிரார்த்தனையின் பலன் இறை நம்பிக்கை
இறை நம்பிக்கையின் பலன் அன்பு
அந்த அன்பின் பலனே சேவை
இந்த சேவையின் பலன் உலக அமைதி!!

Sunday, March 6, 2011

பாரதிக் கல்வி

பாரதிக் கல்வி - ஆசிரியர் - திரு ஸ்ரீரங்கம் மோகனரங்கன்.

பாட்டுக்கொரு பாரதி, என சிறு குழந்தையும் போற்றிப் புகழ் பாடும் பாரதி மிக எளிதாக மக்களின் மனதில் இடம் பிடித்தவன். எத்துனை ஆயிரம் கவிஞர்கள் தோன்றிடினும், பாரதியின் முதன்மை இடத்தை இன்று வரை பிடித்தவர்கள் எவரும் இலர். 39 ஆண்டுகளே வாழ்ந்த பாரதியின் பன்முக சாதனைகள் ஆச்சரியத்திற்கு மட்டுமன்றி பெரும் ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்படுவதும் இயல்பு.இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள், அவரது சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களையும், புறந்தள்ளிவிடுகிறது. ஸ்ரீ மகாதேவன் போன்று பல்வேறு எழுத்தாளர்கள் பாரதியின் படைப்புக்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டாலும், திரு ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்களின் பாரதியின் படைப்புக்கள் குறித்த பார்வை மிகவும் வித்தியாசமான ஒன்றாகவே உள்ளது என்றால் அது மிகையாகாது.

தன்னுடைய 9 ஆம் வயதில் தந்தை தமக்கு பரிசாக அளித்த ஸ்ரீமகள் கம்பெனி வெளியிட்ட பாரதியார் கவிதைகள் என்ற புத்தகத்தின் மூலமே தனக்கு பாரதியின் படைப்புக்களின் மீது ஆர்வம் ஏற்பட்டு, அந்த நாள் முதல், தற்போது வரை பன்முறை பாரதியோடு மனதளவில் வாதப்போர் நடத்தியிருப்பதாகக் கூறும் ஆசிரியரின் கூற்று, அதனை அறியும் ஆவலில் புத்தகத்தின் ஊடே, அவருடனேயே பயணிக்கச் செய்கிறது.

ஆரம்பத்திலேயே பாரதி ஒரு மேலோட்டமான கவி என்று தன் வாதத்தை துணிச்சலாகத் துவக்குகிறார் ஆசிரியர்.

பாரதி இந்தியாவின் பிரதான சிந்தனையாளர்களில் ஒருவன் என்றும், உலகையும் இந்தியாவையும், உள்ளபடி காட்ட தமிழனுக்குக் காலம் விட்டு வைத்த ஒற்றைக் குருகுலம் என்பது திரு சீனி விசுவநாதன் கொண்டுவந்த பாரதியின் படைப்புக்களுக்குப் பிறகுதான் என்கிறார், ஆசிரியர்.

பாரதியின் பாடல்கள் உரை எழுதி புரிந்துக் கொள்ள வேண்டியன என்றும், பாரதி ஓர் எளிமைக் கவிஞர் என்ற வாதிகளைச் சாடியும் நம்மை சற்றே, குழப்பத்தில் ஆழ்த்துகிறார்.

கவிதை என்றால் அது பாரதிதான், அவன் ஒரு உலகக் கவி, மகாகவி போன்ற தோத்திரக் கூற்றுகளே, விடுதலைக்கு முன்னும் பின்னும், இன்று வரை கூட பாரதியின் அணுகுமுறையைத் தீர்மானித்து வந்திருப்பதாகவும், மாறாக வழிபாட்டாளர்களின் அழிச்சாட்டியத்தைக் கண்டிப்பது பாரதியைப் பற்றிய வெறுப்பாக மாறுவதும், வழிபடும், வெறுப்பும் இரண்டும் உள்நோக்கம் கொண்டவை என்றும், அவரை உள்ளபடி புரிந்து கொள்ளுதலே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மதிப்பு, அவற்றில் மாறுபடுவோமாயின் அது தோற்றரவு. நமது பார்வையின் பிழையே என்று கூறும் போது, வாசகராகிய நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்து விடுகிறார், ஏதோ மாறுபட்ட கோணத்தில் எதையோ சொல்லப் போகிறார் என்ற எண்ணத்தில்!

இளம் பிராய பாலகனாய் தாம் கண்ட பாரதியின் ஞானப்பித்தர் போன்றதொரு தோற்றம், நம் ஒவ்வொருவரின் மனக்கண்ணின் முன்னே விரியும் நிதர்சனமான காட்சிகளே. தன் அழகான வார்த்தைகளின் பயன்பாட்டில் அக்காட்சியைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது அவர்தம் எழுத்தின் வெற்றியே.

இத்துணை அழகான பதிவை ஏற்படுத்தியவர், அடுத்த வரியிலேயே, இதுவே பாரதிக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை என்று, தாம் உணர்ந்து கொண்டது அவர்தம் படைப்பை ஊன்றிக் கற்கத் தொடங்கிய பின்புதான் என்னும் போது, அச்சொல் அம்பு திருப்பி வந்து நம்மையேத் தாக்குகின்றது........

பாரதி என்றாலே ஆவேசமான பேச்சு என்ற சிலப்பதிகாரத்தின் அடியார்க்கு நல்லார் உரையின் மூலமே தாம் உணர்ந்த போதுதான், வசனக் கவிதையிலும் கவிஞனின் பிரசன்னத்தை மனம் தேடத் தொடங்கியதையும், பாஞ்சாலி சபதம் உணர்ச்சியோடு மல்லுக்கட்டும் கவிதை, கண்ணன் பாட்டிலும், குயில் பாட்டிலும்தான் தன்னைச் சுயமாக நாட்டிக் கொள்கிறது என்று ஒவ்வொரு பாட்டையும் அழகாக ஒற்றை வரியில் மதிப்பிட்டிருக்கும், வார்த்தை ஜாலம் !

முதன் முறையாக நூல் வடிவம் கண்ட மாதவ சிவஞான யோகிகளின் சிவஞான மாபாடியம், பாரதியின் மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்குள்ளானதையும், அவர்தம் காசி வாசத்தால், ஆரம்பத்தில் தேவாரம் மற்றும் திருவாசகம் முதலியவற்றில் திளைத்திருந்திருப்பதையும், வைணவ நூல்களின் அறிமுகம் அற்றவராக இருந்ததையும் தெளிவுற விளக்கியுள்ளார்.

1910 க்குப் பிறகு அரவிந்தரோடு வேத ஆய்வில் ஈடுபட்ட பின்னர்தான் பாரதியாருக்கு ஆழ்வார்களின் பாடல்களின் அறிமுகம் கிடைத்திருப்பதையும் நம்மாழ்வார் மீதும், ஆண்டாள் மீதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கட்டுரைகள் காணப்படுவதாகவும் கூறுகிறார். ‘உசாத்துணை’ போன்ற அழகிய, ஆனால் அதிகம் புழக்கத்தில் இல்லாத பல தமிழ் சொற்களும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த இடத்தில் பாரதியின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வார்த்தைக்கு வார்த்தை அதன் பொருளை அலசி ஆய்ந்து, வியந்து, இறுதியில், ”நம்மாழ்வார் பாடலை மொழிபெயர்க்கும் போது பாரதியாரின் அனுமானரீதியிலான சிக்கலைப் பார்க்கும் போது இந்த நாலாவது கண்ணி பாரதியார் எழுதியதன்றோ என்ற ஐயம் வலுப்படுகிறது” என்ற முடிவில் அவர்தம் ஆழ்ந்த சிந்தனையின் மூலம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார்.

சைவமும், சாக்தமும், வைணவமும் அவரது உள்ளீடு பாட்டில் கலந்தே இருந்திருக்கிறது என்பதை ‘திருக்கோவையாரின் உட்கருத்தை கண்ணன் என்ற பாட்டுடைத் தெய்வத்திற்கு ஏற்றிப் பாடப்பட்டவை போலும்’, என்ற கூற்றின் மூலமாகவும் அவர் கண்ணனைக் காதலியாகவும், ஆன்மாவைக் காதலனாகவும் அமைத்துப் பாடியதைச் சிலாகித்திருப்பதன் மூலமாகவும், தன்னுடைய ஆழ்ந்த சைவ மற்றும் வைணவ ஞானத்தையும் தெள்ளத் தெளிவுற விளங்கச் செய்கிறார் இந்த வித்தகர்.

விவேகாநந்தரிடத்திலும் விமர்சன ரீதியான பார்வை உடையவர் பாரதி என்பதையும் ஆய்ந்தளித்திருக்கிறார் ஆசிரியர்.

‘நிற்பதுவே நடப்பதுவே, நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ’ என்ற பாரதியின் இனிமையான பாடலின் மூல நாதத்தின் காரணம் ஆசிரியரின் பார்வையில் வெளிப்படுவது, வாசகரையும் பல்வேறு விதமாக சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது எனலாம்.

பாரதி, ‘விவேகானந்தர் துறவறம் மேற்கொள்ளாது, இல்லறத்தில் இருந்திருப்பாரேயானால் இந்தியாவிற்கு அளப்பரிய நன்மைகள் புரிந்திருப்பார் என்று கூறியிருப்பதைப் போலவே ஆசிரியரும், பாரதியும் பொது வாழ்வில் மிகவும் ஈடுபடாதிருந்தால் நமக்கு ஒரு சிறந்த கவிப்புதையலே கிடைத்திருக்கும் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடும் நிதர்சனமாகிறது.

பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கான களத்துடனும் பின்னிப் பிணைந்து, அதனூடே சென்று முத்து முத்தான வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருப்பது ஆசிரியரின் வெற்றியே.

ஆசிரியர் திரு மோகனரங்கன் அவர்களின் மற்ற பல்வேறு கவிதைகளும், கட்டுரைகளும் எளிய நடையில் எழுதப்படவில்லையே என்ற பலரின் ஆதங்கங்களின் பதிலாக, அவர் கூறும் கருத்து, பாரதியின் பாடலை உதாரணமாகக் காட்டி, இதைப்போல எளிமையாக இல்லையே கவிதை, என்று எவரேனும் கேட்கும் பொருட்டு, கேட்பவருக்குக் கவிதையின் தேவை இன்னும் எழவில்லை என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது, என்ற கூற்றில் வாசகரை மட்டுமன்றி, பாரதியையும் சேர்த்து, துணிந்து சாடியுள்ளார், தொடர்ந்த தம் கருத்துக்களின் மூலமாக.

‘பாரத தேசம்’ என்ற பாடலில் தமிழ் நாட்டைப் பற்றி மறந்த பாரதி, எந்த சம்பந்தமும் இல்லாத சிங்கமராட்டியரையும், கவிதையும் இணைத்து, அனைத்திற்கும் பாடலின் உணர்ச்சியில் கருத்துத் துல்லியம் தவறிப் போதல், ஆனால் உள்நோக்கத்தினால் அன்று, என்று வெகு சாமர்த்தியமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சாடியிருக்கிறார் ஆசிரியர்.

இதே காரணம் கொண்டு பெண் விடுதலைக் குறித்த தெளிவான உரைநடையையும், தம்முடைய பாரதி அறுபத்தாறினில் எழுதிய பாடலின் சாரத்தையும் ஒப்பிட்டு இறுதியில் தம் தீர்ப்பாக, பெண் விடுதலை எனும் தலைப்பில், பெண்ணடிமைத்தனம் மிஞ்சியிருப்பதன் காரணம் பாடலின் உணர்ச்சித் தீவிரம் தன் போக்குக்கு எதையோ கேட்டுக் கொண்டிருக்கிறது என்று பகன்றிருப்பது நம்மையும் அதே கோணத்தில் சிந்திக்கத் தூண்டுவதும் தவிர்க்க இயலாததாகிறது.

குயில் பாட்டில், ‘அந்த மூன்று வரிகள் இல்லாதிருப்பின் குயில் இன்னும் ஒரு மாற்று சிறந்திருக்கும் என்பதில் ஐயமில்லை’, என்ற ஆசிரியரின் கூற்று ஆச்சரியத்தின் ஊற்று!

இதே குயில் பாட்டு குறித்து ஸ்ரீமகாதேவன் அவர்களின் மதிப்புரையும் சற்று காணலாம் கீழே.........

//sri Mahadevan’s opinion of Bharati’s ‘Kuyil Pattu’ as having reached the peak of his poetic art will be shared by many others. Even the statement that “the artistic soul freed from the urgencies and conflicts of mundane existence floats on a sea of unalloyed happiness,” will receive instantaneous agreement from many others. But one would just like to make a gentle observation by way of criticism of that poem that, however delightful it may be, however happily wedded may be its unforgettable melody with deep meaning, still there is a kind of vagueness in the poet’s inability to sustain the continuation to a finale of the story of the Bull and the Monkey, whether you call it sheer allegory or symbology.//


தொடரும்........

Monday, February 28, 2011

கரை சேரும் அலைகள்.



தீபாவளி விடுமுறை முடிந்த சமயம் என்பதால் இரயிலில் கூட்டம் அதிகம். ஆனாலும் முன்பதிவு செய்திருந்ததால் உட்கார இடம் கிடைத்தது, முகுந்தனுக்கு.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஊரைவிட்டு, லண்டன், புறப்பட்ட நாள் நினைவிற்கு வந்தது. அந்த மனநிலை இன்று நினைத்தாலும், இதயத்தில் பந்தை உருட்டிவிட்டது போல ஒரு உறுத்தல்.

காதல் மனைவி, அன்பை மட்டுமே வாரி இறைத்தவள், முதன் முதலில் ஒரு சின்ன உயிர் தன் கருவில் உருவானதை வெட்கமும், மகிழ்ச்சியும் கலந்த புன்னகையுடன், அனிதா சொல்லிய விதம் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. எத்தனை அன்பான முகம் அது. ஒரு முறை கூட அவள் கடிந்து பேசிய நினைவே இல்லை.எத்தனை முறை வேதாளம் ஓதிய தேவாரம் போல அவளுக்கு அறிவுரைகள் மணிக்கணக்காக அள்ளி வழங்கியிருப்பேன், அவள் என் வசம் மட்டுமே இருக்க வேண்டுமே என்ற பேராசையில். அத்தனைக்கும் மெல்லிய புன் சிரிப்பொன்றையே பதிலாக பெற முடியம் அவளிடமிருந்து. அத்துனை முயற்சிகளும் ஒரு நாள் விழலுக்கிறைத்த நீராகப் போகிறது என்று அன்று நினைக்கவில்லையே நான்?

இரயில் புறப்படும் நேரமானதை வழியனுப்ப வந்த உறவினர்களின் பரபரப்பும், வெளியில் ஓரமாக நின்று வேகவேகமாக இறுதி வரை இன்பம் என்று, இழுத்து புகைத்து விட்டு தூக்கி எறிய மனம் வராமலே, வேறு வழியின்றி தூக்கி எறிந்துவிட்டு அவசரமாக பச்சைவிளக்கைக் கண்டவுடன் முண்டியடித்துக்கொண்டு ஏற வருபவர்கள் என்று வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில் தான் இரண்டு குழந்தைகளை இழுத்துக் கொண்டு கையில் பெட்டியையும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஒரு பெண்மணி ஓடி வருவதைக் கண்ட போது தன்னையறியாமல் உதவும் எண்ணம் மேலோங்க, ஓடிச் சென்று பெட்டியை வாங்கிக் கொள்ளவும், அந்தப் பெண் பெரிய பெண் குழந்தை 5 வயது இருக்கும் மேலே கையைப் பிடித்து ஏற்றிவிட்டு, அடுத்த 2 வயது இருக்கும் ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு ஏறினார்.

இருக்கை எண்ணைப் பார்த்து உட்கார்ந்து சற்றே மேல் மூச்சு வாங்க இளைப்பாறினாள்.

அவர்கள் இருக்கை என் இருக்கையின் எதிர் புறம் இருந்தது. குழந்தைகள் இரண்டும் தாயின் இரு புறமும் சாய்ந்து நின்று கொண்டு விகல்பமில்லாமல், என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்தக் குழந்தைகளின் முகத்தைப் பார்த்தவுடன், ஷாம்லியின் முகம் திடீரென்று அதிசயமாக நினைவிற்கு வந்தது. ஷாம்லியை நினைத்தாலே ஏனோ மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. மனசு பாரமாகி எந்த வேலையும் ஓடாது. அதனாலேயே பெரும் பாலும் அவள் நினைவையே தவிர்த்து விட வேண்டியதாகிறது.

ஷாம்லிக்கு இப்போது சரியாக 4 வயது 20 நாட்கள். ஷாம்லி பிறந்த 20 ஆம் நாள்தான் நான் ஊரை விட்டே போகவேண்டும் என்ற திடமான முடிவுடன், அலுவலகத்தில் வாதிட்டு லண்டன் பிரிவில் பணி மாற்றம் வாங்கிச் சென்றேன். இல்லையென்றால் இந்நேரம் என் நிலை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை. காரணாம் நான் அன்று இருந்த சூழல் அப்படிப்பட்டது................

ஷாம்லி எவ்வளவு அழகு. சுருட்டை முடி, குண்டு கன்னம், அதில் அழகான குழிகள், தகதக்கும் நிறம், சொப்பு உதடு, முட்டைக் கண்கள் என்று அப்படியே அவள் அம்மாவைக் கொண்டிருக்கிறாளே?இத்தனைக்கும் அவளை புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன் பிறந்த குழந்தையாக இருந்த போது பார்த்தது.அதுவும் வேண்டா வெறுப்பாக.... எப்படி அவளை நினைவில் கொண்டால் நிம்மதியாக இருக்க முடியும். ஆனால் எத்துனை துரதிருஷ்டமான குழந்தை இவள். பெயர் கூட அவள் அத்தை, அதான் என் ஒரே சகோதரி, அவள் தானே வைத்தாள். பிறந்து கையில் வாங்கிய நேரம் முதல் அவள் தானே அவளுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து கவனித்துக் கொள்கிறாள். நான் போய் முன்னால் நின்றால் என்னை அப்பா என்று கூப்பிடுவாளோ மாட்டாளோ தெரியவில்லை.

எப்படி என்னை அப்பா என்று கூப்பிட முடியும், அவளிடம் ஒரு முறையேனும் போனிலாவது அன்பாக நாலு வார்த்தை பேசியிருந்தால் கூட பரவாயில்லை....அது கூட நான் செய்யவில்லையே, பின் எப்படி என் மீது பாசம் வரும் அவளுக்கு. இந்த நான்கு வருடமாக அவளை புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். நேரில் பார்க்கும் தைரியமே இல்லையே? இப்போது கூட அம்மா உடல் நிலை மோசமாக இருப்பதால் அவர் என்னைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் கட்டாயப் படுத்தியதால் தானே வர வேண்டியதாகி விட்டது.என்ன செய்வது வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று கனவிலேனும் நினைக்க வில்லையே. எல்லாம் காலக் கொடுமை...............

ஷாம்லி உருவான அந்த நேரம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதுவும் என் அன்பு மனைவியின் சாயலிலேயே அவள் குணத்துடனேயே ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்று எத்தனை ஆசைப்பட்டேன். ஆனால் இன்று அப்படி பிறந்தும் அவளை ஏறெடுத்தும் பார்க்க முடியாத நிலை. அதிக கடவுள் பக்தி இல்லாத நான் கூட விரதம் எல்லாம் இருந்ததற்கு அம்மாவும், தங்கையும் எப்படியெல்லாம் கிண்டல் செய்தார்களே! அவ்வளவு அன்பும் ஆசையும் ஒரு நொடியில் மாயமாய் மறைந்து விட்டதே இடி போன்ற அந்த செய்தியால்.

அந்த நாள் .......வாழ்க்கையில் என்றுமே நினைக்கவே கூடாது என்றுதானே நாட்டை விட்டே செல்ல திட்டமிட்டேன். ஆனால் எங்கு போனாலும், நம்மோடு நிழலாக ஒட்டிக் கொண்டு வரும் நினைவுகளை எங்கே சென்று புதைப்பது......நான் தூங்கினால் கூட அது விழித்துக் கொண்டு என்னை விறைத்துப் பார்க்கிறதே........

அம்மா........அக்காவைப் பாரு, என் பொம்மையைப் புடுங்கறா......ம்ம்ம்ம் போடீ...........

குழந்தையின் மழலைக் குரல் கேட்டு பளிச்சென நினைவு விலகியது........

அதற்குள் அம்மா சமாதானம் படுத்தியும் குழந்தைகள் இருவரும், அந்த பொம்மைக்கு போட்டி போடுவதைத் தடுக்க முடியவில்லை தாயினால். 5 வயது பெரிய குழந்தைக்கூட இப்படித்தான் அடம் பிடிக்குமா?அப்போ ஷாம்லி இப்படித்தான் இருப்பாளோ. இல்லை இன்னும் ஒரு படி மேலே போய் தாயில்லாமல், அத்தையிடம் வளர்வதால் இன்னும் மோசமாக வளர்ந்திருப்பாளோ?

குழந்தைகள் இருவரும் அடம் பிடித்து அழிச்சாட்டியம் பண்ண ஆரம்பிக்க, அந்தத் தாய்க்கு தர்மசங்கடம் ஆகிவிட்டது. நான் ஏதாவது செய்யலாமே என்ற எண்ணத்தில், அந்த சின்ன குழந்தையை கூப்பிட்டு, உன் பெயர் என்ன என்றேன். அந்த குழந்தை மௌனமாக என்னை முழித்துப்பார்க்க, மூத்த பெண் குழந்தை, அவன் பேர் விஷால் என்றது.

விஷால் குட்டி, இங்கே வாங்க.......என்றேன் அன்பாக.[ அட எனக்குக் கூட இவ்வளவு அன்பாக குழந்தையை கொஞ்சத் தெரியுமா?]

அந்தக் குழந்தையும் என்னை உற்று பார்த்து விட்டு, என் கையில் இருந்த செல் பேசியைப் பார்த்துவிட்டு, வரலாமா என்று யோசித்தது. நானும் அதையே காட்டி, பாட்டு கேட்கலாம் என்று சொல்லி அருகே அழைத்தேன். குழந்தையும், அந்த போனுக்காக அருகில் வந்து, மடியின் மீது அமர்ந்து கொண்டு, அந்த செல் பேசியை வாங்கிக் கொண்டது.........

குழந்தையின் ஸ்பரிசம் பட்டவுடன், மனம் ஏனோ திரும்பவும், ஷாம்லியை நினைத்துக் கொண்டது. ஒரு புறம் அவள் மீது பாசம் இருப்பதாக தோன்றினாலும், மறு கணமே அவள் தாயின் நினைவு வந்து அதை மழுங்கச் செய்து விடுகிறது. என்ன கொடுமை இது.............

அன்று காலை வழக்கம் போல் அனிதா விடியற் காலையிலேயே எழுந்து விட்டாள். பிரசவ நேரம் நெருங்கி விட்டதே, இப்படி விடியலில் எழுந்து, இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்று கேட்டால், புன்னகை மாறாமல், அப்போதான் குழந்தை ஈசியா பிறக்கும் என்றாள். வார்த்தைகளை அளந்து பேசுவதற்கு அவளிடம் பயிற்சி எடுக்க வேண்டும். அத்தனை கஞ்சம் வார்த்தைகளில். பாதி வினாக்களுக்கு புன்னகை தான் பதிலாகக் கிடைக்கும் அவளிடமிருந்து.

அன்று வெள்ளிக் கிழமை. வாசல் கூட்டி மெழுகி, கோலம் போட்டு, குளித்து, சாமி விளக்கேற்றி வைத்து விட்டு, நீண்ட கூந்தலின் நுனியில் சிறு முடிச்சுப் போட்டு, அழகாக நெற்றியில் பொட்டிட்டு, மேலே ஒரு கோடு திருநீறு மெல்லிதாக இட்டு, கையில் காப்பி டம்ளருடன் சென்று கணவனின் முன் நெற்றியில் லேசாக முத்தமிட்டு எழுப்பினாள். இதுதான் அவளுடைய அன்றாட வழக்கம் திருமணமான அந்த மூன்று ஆண்டுகளாக.

அன்றும் அப்படித்தான் எழுப்பினாள். அவனும்வழக்கம் போல அவளை இழுத்து................அதற்குள் அவள் ஸ்ஸ்ஸ்ஸ்....என்று முனகவும், அவன் சடாரென எழுந்து என்னம்மா, என்னாச்சு, வலிக்கிறதா என்றான் ஆதரவாக.

அவள் வாய் இல்லை என்று முனுமுனுத்தாலும், முகம் காட்டிக் கொடுத்தது, அவளுக்கு ஏதோ சிரமம் இருப்பதை. உடனே, நான் வேகமாக எழுந்து படுக்கையை விட்டு கீழே இறங்கி,

அனிதா, என்னம்மா, என்ன செய்கிறது. அம்மாவைக் கூப்பிடட்டுமா என்றேன். அவள் இன்னும்கொஞ்ச நேரம் பாக்கலாமே, அம்மா பாவம் தூங்குவார்கள், என்றாள்.

” சரி, நான் போய் வேகமாக குளித்து விட்டு வருகிறேன். அதற்குள் அம்மா எழுந்து விடுவார்கள். பார்க்கலாம் ”என்று சொல்லிவிட்டு, அவசரமாக ஓய்வறை நோக்கி ஓடினேன். மனதில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

குளித்து விட்டு வெளியே வந்தால் வீட்டில் ஒரே பரபரப்பு. அம்மா, எழுந்திருந்தார்கள். அனிதாவிற்கு பிரசவ வலி ஆரம்பித்திருந்தது. முன் நெற்றி வேர்த்து, கண்கள் சிவந்து, முகத்தில் ஒரு பயம் தெரிந்தது. அம்மா இருப்பதையும் மறந்து, அவளருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டு, ஒன்றும் பயப்படாதே, சீக்கிரம், நம்ம பாப்பா வெளியே ஓடி வந்திடுவா. உனக்கு சிரமமே கொடுக்க மாட்டா என் செல்லம், என்றேன் ஆதரவாக அவள் தலையைக் கோதியபடி......

அம்மாவும், சண்டி வலி போல்தான் இருக்கிறது. டாக்டர் இன்னும் 15 நாட்கள் இருப்பதாகக் கூறினாலும், முதல் பிரசவம் பற்றி சொல்லவே முடியாது. எதுக்கும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்லலாம் என்றார்கள். எனக்கும் அதுதான் சரியாகப் பட்டது. அம்மாவும் அவசரமாக ஓடிச்சென்று, சீரகக் கஷாயம், பசு வெண்ணை போட்டு காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தார்கள். சண்டி வலி என்றால் இதிலேயே சற்று குணம் தெரியும். ஒரு வேளை சூட்டு வலியாக இருந்தாலும் இதற்கு நல்லகுணம் தெரியும், பார்க்கலாம். என்றார்கள்.

ஆனால், அனிதா அந்த கஷாயம் பாதிக்கூடக் குடிக்கவில்லை....அதற்குள் நல்ல வலி வந்துவிட்டது அவள் முகத்திலேயேத் தெரிந்தது. இனி ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது என்ற வேகத்துடன், போர்டிகோவிலிருந்து, காரை வெளியே எடுத்து வைப்பதற்குள் அம்மா அவளுக்குத் தேவையான துணிமணிகள், பொருட்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு தயாராக அவளையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்தார்கள்.

மருத்துவமனையில் சென்று, அடுத்த இரண்டு மணித்துளிகள் நிமிடங்களாகக் கரைந்து விட்டது. அனிதாவிற்கு வலி அதிகமாகிக் கொண்டிருந்தது..........அம்மா.....அம்மா..

மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை தன் அம்மாவைக் காட்டி கையை நீட்டிக் கொண்டிருந்தது. நினைவுகள் தடைபட, ஒரு பெரு மூச்சு பலமாக வெளியே வந்தது. குழந்தை கீழே இறங்கி தாயிடம் போய் ஒட்டிக் கொண்டது. விட்டுப் போன நினைவுகள் தொடர ஆரம்பித்தது........

அனிதா வலியால் துடிப்பதும், முனகுவதும், வெளியே கேட்டது. மருத்துவர் பிரசவ அறையை விட்டு வெளியே வந்து, தன்னை அழைத்த போதே, அவர் ஏதோ ஏடாகூடமாக சொல்லப் போகிறார் என்பது தெரிந்து விட்டது அவர் முக பாவத்தில். குழந்தை நிலை மாறி இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று கையெழுத்து வாங்கி சென்றவர்கள், சில மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு, மருத்துவர் சேயை மட்டுமே காப்பாற்ற முடிந்தது, தாயைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் அதற்கு மேல் அவர் சொன்ன காரணம் எதுவுமே காதில் விழவில்லை.

ஆயிற்று இன்னும் 2 மணி நேரத்தில் வீட்டிற்குச் சென்றுவிடலாம்.நான்கு வருடத்திற்குப் பிறகு எல்லோரையும் பார்க்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், என்னை இன்முகம்கொண்டு வரவேற்கும் என் அன்பு தெய்வம் இல்லாத வீட்டிற்குள் செல்ல வேண்டுமே என்ற வேதனையும் இருக்கத்தான் செய்தது. ஷாம்லியைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலும் இல்லாமல் இல்லை. என்னதான் வருத்தத்தில் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், பெற்ற பாசம் எவ்வளவு நாள் தான் மறைக்க முடியும். அந்த பாசம் மட்டுமே இப்போது தன்னை இழுத்து வந்திருக்கிறது என்பதனை மறுக்கவும் அவன் தயாராக இல்லை..............

ரயில் நிலையம் வந்து சேர்ந்தவுடன், பேராவலுடன், சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். என் தங்கை வந்திருந்தாள். அவள் கண்களும் என்னைத்தேடி அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவளுடன் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று என் கண்களும் தேட ஆரம்பித்திருந்தன. ஆனால் அவளுடன் வேறு யாருமில்லை.

வண்டியை விட்டு இறங்கும் போதே இனம் புரியாத ஒரு இன்ப நினைவு ஒட்டிக் கொண்டது. நான்கு வருடங்களுக்குப் பிறகு என் குட்டி தேவதை மட்டுமல்லாது, மற்ற என் பந்தங்களையும் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியே. வேகமாக என் கைகள் பரவலாகச் சென்று அன்புத் தங்கையை அணைத்துக் கொண்டது.

’அட, என்ன பிரியங்கா, இவ்வளவு வெயிட் போட்டுட்டே. ரொம்ப டயட் கான்சியஸ்ஸா இருப்பே. என்ன ஆச்சு?’

‘ அட , நீ வேற, இப்ப சிரமப்பட்டு 3 கிலோ குறைச்சிருக்கேன். என்ன பண்ணாலும் டெலிவரியின் போது ஏறின வெயிட் இன்னும் குறைய மாட்டேங்குது.’

‘வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க?’

என் கண்களில் தெரிந்த ஏக்கத்தை உணர்ந்தவளாக, ’ம்ம்..... எல்லோரும் வருவதாகத்தான் பிளான். ஆனால் நீ விரும்பமாட்டாய் என்பதால்தான் நான் ஒருவரையும் அழைத்து வரவில்லை’.

ஷாம்லி பற்றி கேட்க நினைத்து மனதை மாற்றிக் கொண்டேன். ஆனால் அதை உணர்ந்தவளாக,

’ ஷாம்லி பத்தி கேட்க மாட்டாயா?’ என்றாள்.

நானும், ‘ ஷாம்லி இருப்பது உன்னிடம் அல்லவா. அவளுக்குத் தாய்க்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் இருந்து நீங்கள் பார்த்துக் கொள்ளும் போது நான் ஏன் கேட்க வேண்டும்?’ என்றேன்.

‘ என்ன இருந்தாலும், பெற்றவர்கள் போல் ஆகுமா?’

கார் பண்ணை வீட்டிற்குள் நுழைந்தது. அங்கு நிறைய பேர் வந்திருந்தார்கள். நாலைந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.கார் வந்து நிற்பதைப் பார்த்தவுடன் அருகில் ஓடி வந்தனர். பிரியங்காவின் இரு குழந்தைகளும் ஓடி வந்து, மாமா என்று கையைப் பிடித்துக் கொண்டனர். அடுத்த வீட்டு குழந்தைகள் போல, மற்ற இரு குழந்தைகளும் புது முகங்களாக இருந்தன. என் கண்கள் ஷாம்லியைத் தேடின.

அவளோ தூரமாக நின்று கொண்டு யாரோ மூன்றாம் மனிதரைப் பார்ப்பது போல என்னைப் பார்த்தாள். அந்த குறுகுறுக்கும் பார்வையில் ஒரு ஏக்கம் தெரிவது போல் இருந்தது எனக்கு.கையை ஆட்டி அருகே அழைத்தேன், ஆனால் அவளோ, அதை சட்டை செய்ததாகத் தெரியவில்லை. இதை கவனித்த பிரியங்கா,

ஷாம்லிக் குட்டி, இங்கே வாம்மா, பாரு அப்பா கூப்பிடுறாரு, வாம்மா, என்றாள்.

ஷாம்லி என்னைப் பார்த்த பார்வையில் எந்த உணர்வும் பெரிதாக இருந்ததாகத் தெரியவில்லை. சலனமேயில்லாத ஒரு பார்வையை வீசிவிட்டு திரும்பிக் கொண்டாள். மனதை சுரீரெனத் தைத்தது. சமாளிக்க செய்த முயற்சி முகத்தில் வெளிக்காட்டி விட்டது. பிரியங்காவும் இதை கவனிக்காமல் இல்லை.

‘ஷாம்லி, இங்க வாம்மா, அப்பாவிற்கு பாட்டி இருக்கும் அறையைக் காட்டுகிறாயா? பாட்டி அப்பாவிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்களே’, என்றாள்.

ஷாம்லி ‘ நான் விளையாடப் போகிறேன். நான் கூட்டிகிட்டுப் போக மாட்டேன்’, என்றாள்

ப்ரியங்கா தன் மகன் மதனை அழைத்து, மாமாவை பாட்டியிடம் கூட்டிச் செல்லும்படி சொல்லிவிட்டு, ஷாம்லியையும் உடன் செல்லும்படிக் கூறினாள். குழந்தை இப்போது ஒன்றுமே பேசாது மதன் பின்னால் வந்தாள். ஏதாவது ஒரு வார்த்தையாவது தன்னிடம் பேச மாட்டாளா என்று மனம் ஏங்கியது.

‘ குட்டிம்மாவிற்கு ஸ்கூல் லீவா இப்போது’? என்று பொதுவாக கேட்டேன். அவளோ தலையை ஆட்டிவிட்டு திரும்பிக் கொண்டாள்.

மதன் அம்மா இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான். அம்மா ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அம்மா என்று கூப்பிடப் போனேன். அதற்கு மதன்,

‘பாட்டி தூங்கும் போது எழுப்பக் கூடாது. அம்மா திட்டுவாங்க’, என்றான்.

உடனே ஷாம்லி, ‘ இல்ல பெரியவங்க எழுப்பினால்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நாம சத்தம் போட்டு எழுப்பினாத்தான் திட்டுவாங்க’, என்றாள்.

ஷாம்லியின் இந்த பக்குவமான பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது. பிரியங்கா நல்ல ஒழுக்கத்துடன் அவளை வளர்த்திருப்பது மனதிற்கு நிறைவாக இருந்தது. அம்மா என்னைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப் பட்டவராக கண் கலங்கினார். பழைய நினைவுகள், நான் ஊரை விட்டு போக வேண்டிய நிலைக்கு ஆளான அந்த நினைவு வந்து அம்மா கண்ணில் கண்ணீர் தாரையாக ஒழுக, எனக்கும் அது தொற்றிக் கொண்டு விடுமோ என்ற சங்கடத்தில், சமாளிக்க முயன்றேன். ஆனால் அம்மாவோ சமாளிக்க முடியாமல் அழத் தொடங்கியதைக் கண்டு ஷாம்லியின் முகம் வாடியது. ஒருவாறு அம்மாவை சமாதானம் செய்து சிறிது நேரம் உடன் அமர்ந்திருந்து விட்டு, குளித்து விட்டு வருவதாகச் சொல்லி எழுந்தேன்.

மதன், ’ மாமா நான் வந்து உங்க ரூமைக் காட்டட்டுமா’ என்றான்.

ஷாம்லியும் அவன் பின்னாலேயே வந்தவள் ஏனோ என்னிடம் மட்டும் முகம் கொடுத்தே பேசவில்லை.

அடுத்த நாள் பிரியங்கா, என் முக வாட்டத்தைக் கண்டவுடனே புரிந்து கொண்டாள், என் கவலையை.

‘இரண்டு, மூனு நாள் ஆனா, சரியாயிடும், கவலைப்படாதே அண்ணா. இன்றுதானே முதன் முதல் உன்னைப் பார்க்கிறா. நீயும் அவகிட்ட போனில் கூட பேசறதில்ல்ல. பின்ன எப்படி அப்பான்னு பாசம் வரும் அவளுக்கு.

தனக்கும் இது தெரிந்த காரணமாக இருந்தாலும், மனது அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தைப் பெறவில்லை. அந்த பிஞ்சு மனசிற்குள் தன் மீது பாசமே இல்லையோ என்று மனது ஏங்கும் ஏக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சரி, இதுவும் நல்லதற்குத்தான், இன்னும் 15 நாட்களில் ஊருக்குக் கிளம்பப் போகிறோம். அதற்குள் இவள் அதிக பாசம் காட்டினால் ஒரு வேளை கிளம்பும் நேரம் சங்கடமாக இருக்குமே என்று சமாதானம் செய்து கொள்ள முயன்றேன்.

என்ன அண்ணா ஆழ்ந்த யோசனை ? ஷாம்லி குழந்தைதானே கொஞ்சம் சமாதானம் செய்து அவள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து தாஜா பண்ணத் தெரியாதா உனக்கு. அவளும் அப்படி ஒன்றும் அடம் பிடிக்கும் குழந்தை இல்லை. சமத்துக் குட்டி. அவளுக்கு டெட்டி பேர் [ கரடிக் குட்டி பொம்மை] என்றால் ரொம்ப விருப்பம். நிறைய நான் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும் புதிதாக வாங்கிக் கொடுத்தால் மிக ஆசையாக கையிலேயே வைத்துக் கொண்டிருப்பாள். நீ வாங்கி வந்திருக்கும் இத்தனை பொம்மைகளைவிட, ரிமோட் கார்களைவிட அவளுக்கு அந்த டெட்டி பேர் தான் அவ்வளவு பிடிக்கும்.

சே, என் குழந்தையைப் பற்றி இதுவரை இது கூட தெரிந்து கொள்ளாமல் போனேனே என்று என் மீதே எனக்கு கோபமாக வந்தது. அது சரி, காலம் என் மனக் காயங்களை ஆற்றுவதற்கு எடுத்துக் கொண்ட அளவு சற்று அதிகம் தான்.........அது என்னா சாதாரண ரணமா விரைவில் ஆறுவதற்கு......இதயத்தையே குத்திக் கிழித்த ரணமாயிற்றே. அந்த வடுவே இன்று இத்தனை வேதனைப் படுத்துகிறதே.....

அடுத்த நாளே என் வேலைகளைத் துவங்க ஆரம்பித்து விட்டேன், ஷாம்லியை வழிக்குக் கொண்டுவருவதற்கு. அவளை அருகில் அழைத்து, கொஞ்ச மனம் துடித்தது. ஆனால் அவள் அதை சற்றும் உணராதவளாக சட்டை செய்யாமல் அவள் பாட்டிற்கு விளையாடிக் கொண்டிருக்கிறாள். மாமா மோட்டர் பைக் எடுத்தால், தன்னையும் ஒரு ரவுண்டு அடிக்க வேண்டும் என ஆசையாக ஓடிவருபவள், நான் எத்தனை முறை கெஞ்சிக் கேட்டாலும், என்னுடன் கடைக்குக் கூட வர மறுக்கிறாள்.

நாட்களோ வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஷாம்லியோ அதை துளியும் உணருவதாக இல்லை. ஒரு நாள் ஷாம்லியிடம் எப்படியாவது பேசி தன் பாசத்தைப் புரிய வைக்க வேண்டும் என்ற உறுதியான நினைவுடன் அவளைத் தேடிக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றேன். அங்குதான் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அங்கு சென்ற போது ஷாம்லி தனியாக ஒரு கல்லின் மீது அமர்ந்து கொண்டு, கையில் ஏதோ ஒரு சிறிய பொம்மையை வைத்துக் கொண்டு அதை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள். சற்று நேரம் தொலைவில் நின்று அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் அனிதா ஒரு வேளை சிறு வயதில் இப்படித்தான் இருந்திருப்பாளோ. அவளுடைய சிறு வயது போட்டோ கூட பார்த்ததில்லையே............

நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருப்பது உணர்ந்தவளைப் போல அப்படியே திரும்பி என்னைப் பார்த்தவுடன், பார்வையை தாழ்த்திக் கொண்டாள் எந்த மாற்றமுமில்லாமல். ஆனால் நான் ஒரு முடிவாக அவளருகில் சென்று,

‘ ஷாம்லிக் குட்டிக்கு அப்பாவைப் பார்த்தா பயமா, ஏன் கிட்டேயே வர மாட்டேங்கறீங்க?’ என்றேன்.

அதெல்லாம் ஒன்னுமில்ல. உங்களுக்குத்தான் என்னைப் பிடிக்காதே. அதான்.....

இல்லையே, யார் சொன்னது... எனக்கு ஷாம்லிக்குட்டின்னா ரொம்ப பிடிக்குமே. அதனால் தான் நிறைய பொம்மை சட்டையெல்லாம் வாங்கி வந்தேன்.

உங்களுக்குப் பிடிச்சிருந்தா அப்ப ஏன் ஒரு வாட்டி கூட நீங்க என் கூட போனில் கூட பேசலை... நீங்க சும்மா சொல்றீங்க. உங்களுக்கு என்னைப் பிடிக்காது.....

இருதயத்தை கவ்வி இழுத்தது எனக்கு ஷாம்லியின் பதில்.....என்ன செய்வதென்றே புரியவில்லை.

ஷாம்லிக் குட்டி அப்பா ஊருக்குப் போகப் பொறேன் தெரியுமா?

தெரியுமே. நீங்க வந்த போதே தெரியும். நீங்க கொஞ்ச நாள் இருந்துட்டு சீக்கிரம் திரும்ப போயிடுவீஙகன்னு.....

உனக்கு அப்பா ஊருக்குப் போறேன்னு வருத்தமா இல்லையா.........என்றேன்.

இல்லையே, எனக்குத்தான் இங்கே அத்தை, மாமா, பாட்டி, மதன், சீனு எல்லாம் இருக்காங்களே. நான் நல்லா ஜாலியாத்தானே இருக்கேன் அவங்கக் கூட...

இதற்கு மேல் அவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை.அதற்குள் மதனும், சீனுவும் அருகில் வந்து என்ன மாமா ஷாம்லி உங்க கூட பேச மாட்டேங்கிறாளா என்றனர்.

அதெல்லாம் ஒன்னுமில்ல கண்ணா. சரி வாங்க எல்லோரும் கடைக்குப் போகலாம் என்றேன்.

அவர்கள் இருவரும் அம்மாவிடம் கேட்க வேண்டும் என்று ஓடினால், ஷாம்லி அவ்ர்களுக்கு முன்பாக வேகமாகச் சென்று, அவள் அத்தையிடம், பெற்ற தந்தையுடன் வருவதற்கு அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறாள். மனதிற்கு அது பெரும் வேதனையைக் கொடுத்தாலும், அவள் எவ்வளவு அழகாக வளர்க்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்து மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. குழந்தைகள் எல்லோரையும் கடைக்கு அழைத்துச் சென்று அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து கூட்டி வந்தேன். ஷாம்லியுடன் சேர்ந்து இருப்பதற்கு இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, தினமும் அவர்களை பார்க், கடை என்று முடிந்த வரை வெள்யே கூட்டிச் சென்றேன்.இருந்தாலும் நான் எதிர்பார்த்த மாற்றம் ஷாம்லியிடம் வரவேயில்லை.

அன்று இரவு படுக்கையில் புரண்டு கொண்டே அனிதாவையும், ஷாம்லியையும் நினைத்துக் கொண்டு வெகு நேரம் கண் விழித்துக் கொண்டிருந்தேன். காரணம் அடுத்த நாள் நான் ஊருக்குக் கிளம்ப வேண்டும். 20 நாட்கள் போனதே தெரியவில்லை. எல்லோரையும் விட்டு விட்டு குறிப்பாக என் செல்ல மகள் ஷாம்லிக் குட்டியை விட்டுப் போகவே மனம் இல்லை. என்ன செய்வது அவள் தான் என்னை புரிந்து கொள்ளவே இல்லையே............நான் செய்த பாவம்.........

அடுத்த நாள் என் முகம் இரவு முழுதும் உறக்கம் இல்லாததைக் காட்டிக் கொடுத்து விட்டது. ப்ரியங்காவும் அம்மாவும் மிகவும் மனம் நொந்துப் போனார்கள். இனிமேல் எங்கேயும் போக வேண்டாம் இங்கேயே இருந்து விடலாமே என்று கட்டாயப் படுத்திக் கொண்டிருந்தார்கள். இதைத்தானே வந்ததிலிருந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என் மனமோ அதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூடத் தயாராக இல்லை. ஒரு வழியாக பேக்கிங் எல்லாம் முடிந்தது. ப்ரியங்கா செய்து கொடுத்த பலகாரங்கள், எல்லாம் பேக் செய்தாகி விட்டது. அம்மாவை சமாதானம் செய்து 6 மாதத்தில் திரும்ப வருவதாகக் கூறிவிட்டு கிளம்பியாகி விட்டது.

கார் வந்து தயாராக நிற்கிறது. டிரைவர் பெட்டியெல்லாம் எடுத்து டிக்கியில் வைத்துவிட்டார். ப்ரியங்கா, அவள் கணவர் குழந்தைகள் மதன் சீனு எல்லோரும் அருகில் வந்து நின்று கொண்டார்கள். நடக்கவே சிரமம் பட்ட அம்மாவும் மெதுவாக நர்சின் கையைப் பிடித்துக் கொண்டு என்னை வழியனுப்ப வெளியே வந்தார்கள். இவ்வளவு பேர் சுற்றி இருந்தும், கண்கள் என்னவோ ஷாம்லியைத் தான் தேடியது. அவள் அருகிலேயே வரவில்லை. கேட்டிற்குப் பின்னால் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.........இப்பொழுது கூட அருகில் வர மனசில்லாமல் இருக்கிறாளே, என்ன பெண் இவள் என்று லேசாகக் கோபம் கூட எட்டிப் பார்த்தது. இருந்தாலும் கிளம்பும் நேரத்தில் இது சரியல்ல என்றும் மனது சொல்ல, அவள் அருகில் அழைத்தால் மட்டும்வரவாப் போகிறாள் என்று எண்ணிக் கொண்டு, கையை ஆட்டினேன் அருகில் வரும்படி.

ஆனால் அதிசயமாக, அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள் போல அடுத்த நொடி ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள் நான் எதிர்பார்க்காமலே.............

கண்களில் கண்ணீர் என்னையறியாமலே வழிந்து கொண்டிருக்க ஷம்லியின் முகத்தைத் திருப்பிப் பார்த்தால் அவள் கண்களிலும் கண்ணீர் வழிய, அப்பா........என்றாள்.

முதல் முறையாக இத்தனை அன்பை, கனிவை, பாசத்தை அந்த அழைப்பில் கேட்க முடிந்தது.....

இருதயமே வெடித்து விடுமோ என்று ஒரு கணம் தோன்றியது......அவ்வளவு படபடப்பு.......

கன்னம்மா..........என்னடா.........ஏம்மா அழறே.......என்றேன் தொண்டை கம்ம.....அதற்குமேல் வார்த்தை வரவில்லை.

அவளோ, அப்பா...நீங்க ஊருக்குப் போக வேணாம்ப்பா.......எனக்கு நீங்க வேணும். நாம் இங்கியே இருக்கலாம்ப்பா........

இதைக் கேட்டவுடன் மனம் ஒரு கனம் ஆகாயத்தில் எம்பிக் குதிக்க ஆரம்பித்து விட்டது...............அனைவரின் முகத்திலும் நிம்மதியும்,மகிழ்ச்சியும் காண முடிந்தது......


--

Friday, February 18, 2011

காவிரிக் கரையிலிருந்து கங்கை வரை. - பகுதி - 5.


காவிரிக் கரையிலிருந்து கங்கை வரை. - பகுதி - 5.

நாம் அனைவரும் பெரும்பாலும் மாற்றத்தை நேசிக்கக் கூடியவர்களாகவே இருக்கிறோம். நம் உலகம் மிக அமைதியானதாகவும் அன்பு நிறைந்ததாகவும், பொறுமை, பெருந்தன்மை மற்றும் மன்னீக்கும் பக்குவம் இவையனைத்தும் கொண்டதாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம் கண்ணில் படுகிற சிறிய தவறுகளைக்கூட பூதக் கண்ணடி கொண்டு பார்த்து, வெறுப்பை உமிழ்கிறோம். நியாயமே இல்லாமல், அவ்ர்கள் மாற வேண்டும் என்று முடிவு செய்கிறோம்.நம்மிடம் இல்லாத பொறுமை, சுய விருப்பு, அல்லது பெருந்தன்மை இன்மை ஆகியவைகளை உணராமலேயே, வருத்தம் என்கிற மன நிலையில் நாமே சென்று விழுகின்றோம். மற்றவர்களை ஆள் காட்டி விரல் நீட்டிகுறை சொல்லும் போது, மற்ற மூன்று விரல்கள் நம் இதயத்தை நோக்கி குறி பார்ப்பதைக் காணத் தவறி விடுகிறோம்.

“ Be the change we want to see", என்ற மகாத்மா காந்தியின் சத்திய நெறியை கடைப்பிடிப்பவராக இருந்தால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் நடக்கும் சாத்தியம் தென்படும். மிக அமைதியான உலகம் நமக்கு வேண்டுமானால், முதலில் நாம் அமைதியாக இருக்கப் பழக வேண்டும். நியாயமான உலகம் நமக்கு வேண்டுமானால், நாமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இது போன்று அடிப்படை தர்மங்கள் கடைப்பிடித்தோமானால், நம் பயணம், அது வாழ்க்கைப் பயணமாக இருந்தாலும் சரி திருக்கூட்டப் பயணமாக இருந்தாலும் சரி மன நிறைவைத் தரக் கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த நிகழ்ச்சிகள் பற்றிய உரையில், திருப்பெருந்துறை என்பெருமான் ஆத்மநாதரின் திவ்ய தரிசனத்தின் மகிமையை போற்றிவிட்டு, அடுத்து நாங்கள் செல்லப் போகும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் பற்றி ஒரு சில விளக்கங்களும், அங்கு நாங்கள் சென்றடையப் போகும் பின் இரவு நேரத்தையும், அங்கு தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சத்திரம் குறித்தும், அடுத்த நாள் நிகழ்வுகள் குறித்த முன்னுரையும் இப்படி அனைத்தையும் சொல்லிவிட்டு, இறுதியாக, இன்னும் 30 நிமிட பயணத்தில் வரக்கூடிய ஒரு திருமண மண்டபத்தில் அடியார்களுக்கு, அமுது படைக்க ஓர் அன்பர் காத்திருக்கிறார். அங்கு மகேஸ்வர பூசை நடைபெறும் என்று இறுதியாக அறிவித்தார். அப்பாடி, ஒரு வழியாக நான் எப்படிக் கேட்பது என்று தயங்கிக் கொண்டேயிருந்த விசயத்திற்கு பதில் கிடைத்தது.

மகேஸ்வர பூசை என்பது , அடியவர்களுக்கு அமுது படைப்பது. அழகாக இலையில் உணவுகளைப் பறிமாரி, ஒவ்வொரு இலையின் முன்பும் ஒரு சிறு கற்பூரம் வைத்து அடியவர்களை அந்த இலையின் முன்பு அமரச் செய்து, மகேஸ்வர பூசை செய்யும் குடும்பத்தினர் நடுவில் நின்று, கற்பூர தீபாரதையுடன், வணங்கி அமுது படைப்பார்கள். கண் கொள்ளாக் காட்சியாக இது இருக்கும். குழந்தைகள் கூட வழிபாடு முடியும் வரை இலையின் முன்பு பொறுமையாக அமர்ந்து காத்திருப்பார்கள். திவ்யமாக அறுசுவை உணவு முடிந்து 4 மணியளவில் கிளம்பினோம். பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் உண்ட களைப்பு தீர அருமையான உறக்கம். பிறகு அந்தி மயங்கும் வேளை...........சத் சங்கம்..........அவரவர் ஐயங்களைத் தெளிவு பட விவாத்தித்தோம்.........பல தகவல்கள்,கோவில்களின் வரலாறு, சிறு தெய்வவழிபாடு குறித்தசுவையான தகவல்கள், இப்படி எத்தையோ விசயங்கள் செவிக்குணவானது. திரும்ப இரவு நெருங்க ஆரம்பிக்க, பல மணி நேர பேருந்துப் பயணம் உடல் அலுப்பைத்தர, கட்டையை சாய்க்க அனைவரும் ஏங்குவது புரிந்தது............

ஒரு வழியாக ராமேஸ்வரம் எல்லையை வந்து சேர்ந்து விட்டோம். பேருந்தை, ஊரின் எல்லையிலேயே நிறுத்தி விட்டார்கள். ஊருக்குள் பெரிய தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. காரணம், நடமாடும் மக்கள் கூட்டத்தில் இது போன்ற பெரிய வாகனங்கள் சிரமமேற்படுத்தும் என்பதால்தான். அங்கிருந்து அரசாங்க பேருந்து மட்டும் அனுமதிக்கப் படுகிறது. என்ன கொஞ்சம் புளி மூட்டையாக அடைத்துக் கூட்டி வந்தார்கள்.......அதுவும் ஒரு அனுபவம் தான்.......

ஸ்ரீராமநாதசுவாமி கோவில், தீவின் கிழக்குப் புறம், கடல் எல்லைக்கு மிக சமீபத்தில் சங்கு வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த்த் தீவு ஒரு அழகிய ரயில் பாலம் மூலம் மண்டபத்தின் பிரதான பகுதியை இணைக்கிறது. ஆதிகாலத்தில் இக்க் கோவில், கூரை வேய்ந்த ஒரு குடிலாகவே இருந்துள்ளது. ராமநாதபுரப் பகுதியை பல தரப்பட்ட மன்னர்கள், பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி புரிந்து உள்ளனர். 15 ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய மனனர்களும், பிற்காலங்களில் 17 ஆம் நூற்றாண்டுகளில், விஜய நகர சாம்ராஜ்ய நாயக்கர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.அதற்குப் பிறகு சேதுபதிகள் ஆட்சிக்கு வந்திருக்கின்றனர். இவர்கள் தான் வரைகலை மற்றும் கட்டிடக்கலைகளுக்கு தாராளமாக செலவு செய்து ராமேஸ்வரத்தை பளபளக்கச் செய்துள்ளனர்.அதில் குறிப்பிடத்தக்கவர்கள், உதயன் சேதுபதி,திருமலை சேதுபதி, ரகுநாத சேதுபதி முத்துராமலிங்க சேதுபதி போன்றவர்கள். இவர்களின் சிலை வடிவங்கள்
கோவிலிக்குள் நிறுவப்பட்டுள்ளன.

நாங்கள் கோவிலுக்கு மிக அருகில் உள்ள சத்திரத்தில் தங்குவதாக ஏற்பாடு. இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தோம். நல்ல பசி நேரம் அனைவருக்கும். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எளிமையாக வெண் பொங்கலும், இட்லியும் சட்னி, சாம்பாரும் அனைத்தும் சுடச்சுட தயாராக இருந்தது. மொத்தம் நாங்கள் 80 பேர் இருந்தோம், உணவு பறிமாரும் நபரோ ஒரே ஒருவர்தான். எல்லோரும், உடல் அசதியின் உச்சத்தில். அவரவர்களும் சாப்பிட தயாரானோமேத் தவிர பறிமார ஒருவரும் முன்வராத சூழலில், ஒரு பள்ளி ஆசிரியை சூழலை உணர்ந்தவராக தான் முதலில் வந்து பறிமார ஆரம்பிக்கவும், அதற்குப் பிறகு மற்றுமிரண்டு இளைஞர்கள் உணவு விநியோகம் செய்ய முன்வந்தனர். ஒரு
வழியாக உண்டு முடித்தாகி விட்டது.

உணவு உண்பதற்கு முன்பே படுக்கை போட அனைவரும் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டனர். ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு புறமும் படுக்க ஏற்பாடு. பல முறை ஏற்கனவே திருக்கூட்டத்துடன் பயணம் செய்தவர்கள், சூழலை நன்கு உணர்ந்தவராக இருந்தகாரணத்தினால், சாமர்த்தியமாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் இடம் பிடிக்கும் வேட்டையில் இறங்கி விட்டனர். பக்கத்திலேயே இரண்டு தங்கும் விடுதிகள் இருந்தன. சரி போய் தங்கிக் கொள்ளலாம் என்றால், அதற்கு அனுமதி கிடையாது என்றார்கள். ஆம் இது போன்று திருக் கூட்ட பயணத்தின் நோக்கமே அதுதானே. மனப்பக்குவம் அடையும் மார்கமும் இதுதானே?

ஆம், இந்த திருக்கூட்ட பயணத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள், பங்களா வாசிகள், குளிர்சாதன வசதியுடன், வேலைக்காரர்கள் வேலை செய்ய, ஆனந்தமாக வாழ்பவர்கள். ஆனாலும், யாத்திரை வருபவர்கள் தனிப்பட்ட முறையில் தங்குவதற்கு அனுமதியில்லை. இருக்கும் இடத்தில், அதாவது ஒருவர் கிடக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க என்ற ஆழ்வார்களின் நிலை போன்று இராது, அதைவிட சற்றே தேவலாம் போல அனைவரும் கிடக்க இடம் உண்டு. ஆண்களுக்கு ஒரு குளியல் அறை, பெண்களுக்கு ஒரு குளியல் அறை. காலை 4 மணிக்குத் தயாராகிவிட வேண்டும் என்று அறிவித்து விட்டு தலைவர் ஒரு மூலையாக படுத்து விட்டார்.

மணி இரவு 11.30. காலை 4 மணிக்குள் சுமாராக, 45 பெண்கள் அந்த ஒரே குளியல் அறையில் குளித்து விட்டு வர வேண்டும். இதை நினைத்த்வுடன், தூங்கும் எண்ணமே போய்விட்டது. கடலில் சென்று குளிப்பவர்கள் செல்லலாம். ஆனால் எப்படியிருந்தாலும், 4 மணிக்கு அனைவரும் தயாராகி விட வேண்டும். கடலுக்குச் சென்று குளிப்பது என்று முடிவு செய்த தாய்மார்கள், கவலையே இல்லாது, ஆனந்தமாக அடித்துப் பிடித்து இடம்பிடித்து, சயனம் கொண்டு விட்டார்கள். என்னவரும் தன் அண்ணன் அருகில் போய் ஒரு ஓரமாக பள்ளி கொண்டுவிட்டார். அனைவரும் எப்படியோ படுத்து விட்டனர். நானும் இன்னும் இருவரும், திருதிருவென விழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தோம். சரி இனி படுத்தால் நேரம் போவது தெரியாமல் தூங்கி விடுவோம் என முடிவு செய்து, குளியல் அறை காலியாக இருக்கும் போதே குளித்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து ஒருவாறு சென்று குளித்து விட்டு வந்து, பிறகு சிறுது நேரம்
ஓய்வெடுத்தோம்.

கடலுக்குக் குளிக்கப் போகலாம் என்று முடிவெடுத்தவர்கள் 3 மணியளவில் எழுந்து அவசர அவசரமாக கடல் நோக்கிச் சென்றவர்கள், சென்ற வேகத்திலேயே பாதி பேர் திரும்பி வந்துவிட்டனர். எப்போதும் மிக சாந்தமாக ஓடிக் கொண்டிருக்கின்ற கடல் அன்னை அன்று ஆக்ரோஷமாக ஆர்பரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து பயத்தில் குளிக்காமல் திரும்பி வந்துவிட்டனர். இங்கு வந்தால் கோவிலுக்கு செல்ல நேரம் ஆகிவிட்ட படியால், குளியல் அறைக்கு முட்டி மோதி குளிக்க வேண்டிய கட்டாயம். நல்ல வேளை நாங்கள் முன்பே குளித்து விட்டது கவலையைப் போக்கியது. இதற்குள் அவரவர்கள், தனக்கு வேண்டியவர்களையும் காப்பாற்றிக் கொண்டிருந்தது பார்க்கவேவேடிக்கையாக இருந்தது.............அந்த ஒரு நாள் ஒரு சிறு வசதிக் குறைவைக் கூட தாங்கிக் கொள்ள இயலவில்லையே நம்மால், காலம் முழுவதும் தங்க இடம் இல்லாமல் தெரு ஓரத்திலும், பிளாட்பாரத்திலும் தங்கிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்களே அவர்களும் நம்மைப் போல ரத்தமும், சதையும் உள்ள மனிதர்கள் தானே!. ஆண்டவன் எவ்வளவு கருணை உள்ளவன் நம்மை இவ்வளவு சொகுசாக நிழலில் வாழ வைத்தானே, எத்துனை நன்றி சொல்ல வேண்டும் அந்த பரமாத்வாவிற்கு. வெயிலில் இருந்தால் தானே நிழலின் சுகம் தெரிகிறது?

காலையில் சொன்ன படி அனைவரும் 4.30 மணிக்கெல்லாம் கோவிலில் ஆஜராகிவிட்டோம். சிறப்பு தரிசன சீட்டு பெற்றுக் கொண்டு அதற்கே வரிசையில் 1.30 மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது. ஸ்படிக லிங்க பூசை திவ்யமாக பார்க்க முடிந்தது. மணி தரிசனம் என்று அழைக்கப்படுகிற இந்த பூசை அன்றாடம் காலை வேளைகளில் மட்டும் நடக்கும். பூசை முடிந்து கோவில் பிரகாரம் சுற்றி வந்தோம். பணிரண்டு சோதிலிங்கங்களில் ஒன்று இங்கிருக்கின்றது.

தென் இந்தியாவின் மிகச் சிறந்த கட்டிடக் கலையின் வடிவமான , இந்தியாவிலேயே மிகப் பெரிய கோவில் பிரகாரம் கொண்ட கோவில் இது. 22 வித்தியாசமான சுவையுடன் கூடிய நீரை உடையக் கிணறு இங்கு பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோவிலின் பிரதான அம்சமே, 1219 மீட்டர் தூண்கள் கொண்ட பிரகாரம், அழகாக செதுக்கப்பட்ட 3.6 மீட்டர் உயரமுள்ள கிரானைட் தூண்கள் ஆகும்.
புராண சாத்திரங்களின்படி, ஸ்ரீராமர், சீதா தேவி மற்றும் இலக்குவணுடன், முனிவரின் உபதேசப்படி, தங்களுடைய பிரம்மஹத்தி தோசம் தீர்வதற்காக சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம்.

சேதுக்கரை என்பது ராமேஸ்வரத்திற்கு 22 கி.மீ. முன்பாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு அங்கு செல்லும் வாய்ப்பு அமையவில்லை. ராமேஸ்வரத்தில் தரிசனம் முடித்து 7 மணியளவில் கிளம்பினோம். அடுத்து உத்திரகோச மங்கை. அங்கு திருவாசக முற்றோதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுத்த தொடரில் அந்த சுவையான நிகழ்வைப் பற்றிக் கூறுகிறேன்.

தொடரும்.



Monday, February 14, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -4


மனிதவாழ்வில் மறுக்க முடியாத ஒரு உண்மை ,நாம் சந்திக்கும் நபர் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை விட, தான் மிகவும் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டவராகவே இருக்கின்றனர். நாம் அவருடைய இதயத்தை நெருங்க வேண்டுமாயின், நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவரைப் பற்றிய கடந்த கால நினைவுகளை ஓரளவேனும் நினைவில் கொள்வதோடு, அவர்களுடைய முக்கியத்துவத்தைமட்டும் அல்லாது ,அவருடைய தனித்தன்மையையும் கட்டாயம் நினைவில் கொண்டிருத்தல் வேண்டும். அதில் உண்மையாகவும் இருக்க வேண்டும இதுவே மனித மனங்களை நெருங்கும் டெக்னிக்.

எமர்சன் அழகாகச் சொல்லுவார்,
” Every man I meet is my superior in some way. In that, I learn of him".

அதாவது, நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், ஏதோ சில வகையிலேனும், என்னைவிட மேம்பட்டவராக,உயர்வான நிலையிலேயே இருக்கிறார்.அதில் நான் அவரைப் பற்றி அறிந்து கொள்கிறேன்.

நாம் பல எண்ண அலைகளும், குணநலன்களும் உடைய பல்வேறு விதமான மனிதர்களுடன் பயணம் செய்யும் போதுதான், நமக்கும் நம்மைப் பற்றியும் பல புதிய தகவல்கள் அறியும் வாய்ப்பு கிட்டும். ஆம் நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் சில மிருகங்கள் கூட முழித்துக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். அது நாள் வரை இப்படி ஒரு மிருகம் தம்முள் உறங்கிக் கொண்டிருப்பதே தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.

நாங்கள் அடியார் குழுவுடன், பயணம் மேற்கொண்டது பல விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. ஆம் நாம் சுகமாக உல்லாச வாகனத்திலோ, தனிப்பட்ட முறையிலோ செல்லும் போது எந்த விட்டுக் கொடுத்தலோ அல்லது அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயமோ ஏற்படுவதில்லை. ஆனால் பொதுவாக இது போன்று திருப் பயணம் செல்லும் வேளைகளில், நம்முடைய ஆணவத்தை முதலில் மூட்டை கட்டி தூக்கிப் போட்டுவிட வேண்டும். அடுத்து கிடைத்ததை வைத்து தன்னிறைவு கொள்ளும் தன்மை வேண்டும். பசி, தாகம், ஓய்வு, போன்ற சாதாரண விசயங்களைக் கூட கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படும்.அதற்கு தகுந்தாற் போல நம் பழக்க வழக்கங்களை மாற்றியமைக்க வேண்டியும் வரும். இவ்வளவு பீடிகைக்கும் காரணம் இல்லாமல் இல்லை.


திருப்பெருந்துறை ஆன்மநாதர் அநாதி மூர்த்தராக இங்கே எழுந்தருளி ஐந்தொழில் நடத்தலால் இது அநாதி மூர்த்தித் தலமாகும். உருத்திர மூர்த்தி எழுந்தருளியுள்ள கையிலைமலை துவாத சாந்தத் தலம். ஆன்மநாதர் எழுந்தருளியுள்ள திருப்பெருந்துறை சோடாசாந்தத் தலம். இத்தலம் கையிலையைக் காட்டிலும் மேலானதாம். இத்தலத்திற்கு ஆதியும், அந்தமும் இல்லை என்கின்றனர். இத்தலத்தை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பு இல்லையாம். புராணங்கள் இத்தலத்திற்கு பல பெயர்கள் கூறினாலும், தற்போது ஆவுடையார் கோவில் என்ற பெயர் வழங்கி வருகிறது.


அப்பர் தேவாரம் - மூவரால் முழுப்பதிகம் பெற்றதான பாடல் பெற்ற தலப்பெயர்களின் வரிசையில் திருப்பெருந்துறை இடம் பெறவில்லை. ஆயினும் அப்பர் தேவாரத்தில் இத்தலம் வைப்புத்தலமாக இடம்பெற்று இருக்கிறது.


திருவாசகம் - மணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய தித்திக்கும் தேனான திருவாசகம் 51 பகுதிகள் கொண்டதாகும். இவற்றுள் 20 பகுதிகள் திருப்பெருந்துறையில் இருந்து அருளிச் செய்யப்பட்டனவாகும்.அவை, சிவபுராணம், திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செந்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தனைப்பத்து, குழைத்தப்பத்து, உயிருண்ணிப்பத்து, திருப்பாண்டிப்பதிகம், திருவேசறவு, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாயநான்மறை இவை மட்டுமன்றி, திருவாசகத்தில் இத்தலமும், குருந்தமரமும் ஆங்காங்கே மிகப் பாராட்டப் பெற்றுள்ளன.
அருணகிரிநாதர் திருப்பெருந்துறைக்கு வந்து முருகனை வழிபட்டு மூன்று திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளதும் இத்தலத்தின் சிறப்பு.

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் - அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து. - திருவெண்பா 4.11.


ஆவுடையார் கோவில் சிற்பங்கள் புகழ் வாய்ந்தவை. அதிலும் இங்குள்ள கொடுங்கை வேலைப்பாடுகள் உலகப் பிரசித்தமானவை.
தியாகராச மண்டபத்தில் மாணிக்கவாசகரின் மந்திரிக் கோலச் சிற்பமும் துறவுக் கோலச் சிற்பமும் உள்ளன. இந்த மண்டபத்தின் கொடுங்கையின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது கருங்கல்லைத் தகடாக்கி அதிலே பல வளைவுகளை உருவாக்கிக் கூரை போட்டது போல் அமைந்திருக்கும் திறம் பெரும் வியப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். மரவேலையில் செய்யக் கூடிய நுண்கலை நுட்பங்களெல்லாம் இங்கே கருங்கல்லில் செய்யப்பட்டிருப்பதைக் காண கண் கோடி வேண்டும். மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தாற்போன்ற தோற்றங்களை கல்லிலும் காட்டி, தம் கைத்திறத்தைக் காட்டிய சிற்பியை புகழும் வார்த்தைகளும் அறியவில்லை. எனவேதான் திருப்பெருந்துறையின் கொடுங்கை உலகப் பிரசித்தமாக இருக்கிறது.

குதிரைச்சாமி - அசுவநாதர்:
பஞ்சாட்சர மண்டபத்திற்கு குதிரைச்சாமி மண்டபம் எனவும் மற்றொரு பெயருண்டு. இந்த மண்டபத்தூணில் குதிரைச்சாமி காட்சி தருகிறார். குதிரை பின்னிரண்டு கால்களை ஊன்றி முன்னிரண்டு கால்களை தூக்கி மேலே பாய்வது போல இருக்கிறது. வாதவூரருக்காக பெருந்துறை பெருமான் வேதப்புரவி ஏறிக் குதிரைச் சேவகராக போன தோற்றந்தான் இது. அதனால் இக்காட்சியை குதிரைச்சாமி அசுவநாதர் என்று அழைக்கின்றனர்.


மாணிக்கவாசகப் பெருமானின் பக்தி நெறியும் அவர்தம் ஒளி யாக்கை குறித்த தகவல்களும் ஐயா தங்கவிசுவநாதன் அவர்கள் ஆற்றிய உரையை ஆனந்தமாகக் கேட்டு மகிழ்ந்தோம். அவ்வுரையின் சாரத்தை மணிவாசகப் பெருமானின் பிறப்புத்தலத்திலேயே காண்பது மேலும் சிறப்பாகுமல்லவா.
திருப்பெருந்துறை தரிசனம் முடிந்து மதியம் 1.40 மணியளவில் ராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டோம். மதிய உணவு வேளை ஆகியும் சாப்பாடு பற்றி ஏதும் சொல்லாமல் கிளம்பச் சொல்கிறார்கள். அதற்கு ஏதும் பதிலே பேசாமல் அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு நல்ல பசி. காலை உப்புமாவே அதிக காரமாக இருந்ததால் எனக்கு இறங்கவில்லை. தண்ணீர் மட்டுமே குடித்து வயிரை நிரப்பகிக் கொண்டிருந்தேன். ‘உண்டி சுருங்குவது தானே பெண்டிர்க்கு அழகு’. ஆனால் அதற்கு மேல் பசி தாங்கும் வழியே தெரியவில்லை. அனைவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. ஒருவரும் வாயைத் திறந்து கேட்பதாக இல்லை.இளஞ்சிறார்கள் நால்வர் இருந்தனர். சரி எப்படியும் அவர்களாவது பசி என்று கேட்பார்களே, என்ற ஆவலில் அவர்கள் முகத்தைப் பார்த்தால் அவர்களும் ஒன்றுமே கேட்காமல், தங்கள் பையில் இருந்து ஏதோ நொறுக்குத் தீனியும், வாழைப்பழமும் எடுத்து உண்ண ஆரம்பித்து விட்டனர்.

சரி இது வேலைக்காகாது, நாமே மெதுவாக கேட்டுவிடுவது என்ற எண்ணத்தில், எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த என் ஓரகத்தியிடம், அக்கா.....என்று ஆரம்பிக்க வாயைத் திறக்கவும், பேருந்து கிளம்பவும்,

“வேயுறு தோளிபங்கன்,விடமுண்டகண்டன் மிகநல்லவீணை தடவி.மாசறு திங்கள்கங்கை முடிமேலணிந்தென்உளமே புகுந்தவதனால்...................”

என்று கோளறு திருப்பதிகம் [ ஒவ்வொரு முறை, பேருந்து நிறுத்தி இறங்கி ஏறும் போதும் கோளறு திருப்பதிகம் முழுமையாகப்பாடப்படும். தேவார ஓதுவாருடன், சேர்ந்து, பயணிகளும் பாடுவர்.]. என் குரல் அப்பதிகத்தினுள்ளே கரைந்தே போனது. ஆனால் உடன் பாட ஆரம்பித்தவுடன், பசி சற்று மறந்தாற்போலத்தான் இருந்தது. கோளறு திருப்பதிகம் முழுமையாக பாடி முடித்தவுடன், ஒரு சிறு சலசலப்பு,. அதற்குப் பின் தலைவர் எழுந்து, அன்பர்களே, என்று ஆரம்பித்து,
அடுத்து வரக்கூடிய நிகழ்வுகள் குறித்து பேச ஆரம்பித்தார்............................

தொடரும்.

Thursday, February 10, 2011

அடைப்புக்குறிக்குள் ஒரு உள்ளம்.

அடைப்புக்குறியினுள் ஒரு உள்ளம்

வரைவிலக்கணம் வகுப்பதில் வல்லவர் அந்த விஞ்ஞானி. உலகில் உள்ள எந்தப் பொருளாயினும் அதற்கு அழகான வரைவிலக்கணம் கொடுத்து விடுவார்.

ஒரு முறை ஒரு பெருங்கூட்டத்தில் உரையாற்ற அவரை அழைத்திருந்தனர்.

அங்கு ஒவ்வொருவரும் ஒரு பொருளைக் காட்டி அதன் வரைவிலக்கணம் கேட்டுக் கொண்டிருந்தனர். அவரும் தயங்காமல் எல்லோருக்கும் விடை பகர்ந்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒருவர் எழுந்து,’ஐயா அன்பு என்பதன் வரைவிலக்கணம் யாது ?’ என்று வினவினார்.

சற்று நிதானித்த விஞ்ஞானி, ‘கொடுக்கல், வாங்கல்’, என்றார்.

உடனே அவர், அப்பொழுது கொடுத்தல் இல்லையென்றால் வாங்குதல் இல்லையா? அப்படியானால், அன்பு வியாபாரப் பொருளா, என்றார்.

உடனே அந்த விஞ்ஞானி, ‘இல்லையில்லை, அன்பு நிலையான ஒரு குணம்’, என்றார்.

அதற்கு அவர், நிலையில்லாவிட்டால் அது அன்பு இல்லையா? என்று வினவினார்.

உடனே அந்த விஞ்ஞானி இல்லையில்லை, அன்பு என்பது அடிமைப்படுத்துவது என்றார்.

அப்பொழுது, அன்பில்லாவிட்டால் சுதந்திரப் பறவைகளா, மனிதர் என்றார்.

விஞ்ஞானியோ, உடனே, ‘இல்லையில்லை, வாழ்க்கை எனும் குருச்சேத்திரத்தில் சங்காகவும், புல்லாங்குழலாகவும் இருப்பது அன்பு என்றார்.

உடனே அவர், அப்போது அன்பு என்றாலே, போராட்டம் மட்டும்தானா என்று கேட்டார்.

இல்லையில்லை, ஆத்ம நாதத்தின் வெளிப்பாடே அன்பு என்றார்.

அப்பொழுது ஆத்ம சக்தியில்லாத உயிர்களிடத்தில் அன்பு இருக்காதா, என்றான்.

அடைப்புக்குறிக்குள் தாங்கிப்பிடிப்பது அன்பு என்று கூடக் கொள்ளலாம், என்றார்.

ஓ, அப்படியானால் ஊன்றுகோலாக இருப்பதுதான் அன்பு என்பதா?

இல்லையில்லை, அது ஒரு தங்கக்கூண்டு என்றார் அந்த ஞானி.

ஓ, அப்பொழுது அன்பென்பது சொந்தச் சிறையா?

அந்தச் சிறையின் எப்படிப்பட்ட கைதியாய் நீ இருக்கப் போகிறாய்?

ஒரு நத்தை கூட்டிற்குள் சுருண்டு கிடப்பதைப் போலவா?

சிறகுவிரித்து சுதந்திரமாய் இருக்கப் போகிறாயா?

தங்கக் கூண்டின் திறவுகோலை உன் வசம் கொண்டவனாய் இரு.

உன் சுவாசக் காற்றிற்கு அணை போடாத சிறையாக இருக்க வேண்டுமா?

கூண்டின் எல்லையை விரிவாக்கிக் கொள்.

சுதந்திரக் காற்றை இன்பமாக, பாதுகாப்பாக சுவாசிக்கும் கலையை கற்றுக் கொள்!

வெற்றி உனதே!


Tuesday, February 8, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -3


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி - 3.

சில நேரங்களில் சில விசயங்கள் நம் சக்திக்கு மீறி நடக்கும். காரணம் புரிபடாது. வேண்டும் என்றால் விலகி ஓடும், வேண்டாம் என்று விலக நினைத்தால் விரும்பி நெருங்கி வரும். வாழ்க்கையில் பல சம்பவங்கள் இப்படி இது போல நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

எப்படியாவது, திருக்கூட்ட யாத்திரையை தவற விடாமல் சென்று சேரவேண்டும் என்ற உறுதிப்பாட்டில்தான், இரயிலில் நின்று கொண்டே கூட பயணம் செய்தால் பரவாயில்லை என்று துணிந்து முடிவெடுத்து வந்து விட்டோம்.. ஆனால் வந்து சேர்ந்ததோ, மிகக் கடினமான நேர இடைவெளியில். மகிமாலீஸ்வரரின் கடைக்கண் பார்வை பட்டால் போதுமே, பட்ட பாடு அத்துணையும் வரமாகக்கூடும் என்ற நம்பிக்கை மட்டும் நிறையவே இருந்தது.

சரியாக 5.15 மணிக்கு பேருந்து புறப்படக்கூடிய இடமான மகிமாலீஸ்வரர் ஆலயம் முன்புற வாயிலுக்குச் செல்வதற்கான வழிப்பாதையில் இருக்கிறோம். பேருந்து ஒருவேளை புறப்பட்டிருக்குமோ என்று அச்சத்துடனே தான் சென்று கொண்டிருக்கிறோம். கோவில் வாசலை சென்றடைந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த இரு பேருந்துகளையும் பார்த்தவுடன் தான் அப்பாடி என்று படபடப்பு ஓய்ந்தது......வெளியில் இருந்தபடியே மகிமாலீஸ்வரரின் அருலைப் பெற்றுக் கொண்டு, பேருந்தில் சென்று ஏறிக்கொண்டோம். அங்கு காலியாக வெவ்வேறு இடத்தில் இருந்த இருக்கையில் இருவரும் சென்று அமர்ந்து கொண்டோம். அமர்ந்த சில நிமிடங்களில், கூடுதல் ஓட்டுநர் ஒருவர் வந்து ஏறினார். எங்களுக்காகவே இது நடந்திருக்குமோ என்று எண்ணி ஆண்டவனிடம்
மனதார நன்றி பாராட்டிவிட்டு, ஒருவழியாக செட்டில் ஆனோம். பேருந்து புறப்படவும், நிம்மதி பெருமூச்சு விட்டதுதான் தெரியும். இரவு முழுவதும் உறக்கம் இல்லாதலாலும், அயற்சி காரணமாகவும் ஏற்பட்ட அலுப்பினால் கண்ணை சுழற்றிய தூக்கத்தை தவிர்க்க முடியவில்லை.

வண்டியில் சலசலப்பு ஏற்பட்டு அதில் முழிப்பு தட்டியது. காலை பொழுது நன்கு புலர்ந்திருந்தது. புதுக்கோட்டை வந்து சேர்ந்திருந்தோம். அங்கு ஒரு சிறிய முருகர் கோவில் முன்பு நிறுத்தியிருந்தார்கள். காலை உணவிற்காக.பொதுவாக வெளியூர் பயணம் என்றாலே நாம் முதலில் கடைபிடிக்க வேண்டியது, குறைவான லக்கேஜீம், அளவான உணவும் தான். இது இரண்டையும் கடைப்பிடிக்க வில்லையென்றால், பயணம் இனிதாக இருப்பது சிரமம். எங்களுக்கு, காய்கறி கலந்த உப்புமாவும், தக்காளி கொத்சும் கொடுத்தார்கள்.பாக்கு மட்டை தட்டுகள், அவரவர் ஆளுக்கொரு தட்டு எடுத்து வந்து வாங்கிக் கொள்ள வேண்டும். நின்று கொண்டே வேகமாக சாப்பிட்டுவிட்டு,
கிளம்பினோம். சாப்பிட்ட இடத்தை அவரவரே சுத்தம் செய்து விட்டும் வர வேண்டும். பிறகு அங்கிருந்து கிளம்பி, மதியம் திருப்பெருந்துறை வந்து சேர்ந்தோம்.

முன்னை வினை இரண்டும் வேர
றுத்து முன்நின்றான்
பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன் - தென்னன்,
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்,
வரும் துயரம் தீர்க்கும் மருந்து.

திருவாசகம்.

இத்திருக்கோவில், சமயத் தத்துவங்களைக் குறிக்கோளாகக் கொண்டு எழுந்தவை. தத்துவ உண்மைகளை அறிந்து இன்புறச் செய்வன. கலைகளின் வளர்ச்சிக்குத் தாயகமாகவும், கலைக் களஞ்சியமாகவும், கற்பக பூந்தருக்களாகவும் காட்சி நல்குவன.


திருப்பெருந்துறை என்றும் ஆவுடையார் கோவில் என்றும் வழங்கப் பெரும் இத்திருத்தலம், எண்ணற்ற அருஞ்சிறப்புகள் பல அணி செய்யும் அருங்கலைக் கூடமாகவும், கலைப்பெட்டகமாகவும், காட்சியளித்து, திருவருள் நிறைந்து ஆராத இன்பம் அருளும் அருட்தலமாக[ போற்றி துதுக்கப்படுகிறது.


உருவமில்லாத அருவமாக அருட்காட்சி வழங்கும் ஆதமநாதப் பெருமான், அவ்வண்ணமே திருவருள் புரியும் அம்மை யோகாம்பிகை, அறிவாற் சிவமேயாகித் திருவுருவம் கொண்டு சிவமாக விளங்கும், மாணிக்கவாசகர், இவையாவும் வேறெங்கும் காணமுடியாத ஒன்றாகும்.ஆத்மநாதர் குருமூர்த்தியாக எழுந்தருளி வாதவூர்க்குச் சிவஞானோபதேசம் செய்தருளும் காட்சி வழங்கும் குருந்த மரக் கற்சிற்பம் கொண்ட பீடம் பெரும் சிறப்பு வாய்ந்ததாகும்.


“மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் தனியூர்”
“தனியூர் திருப்பெருந் துறையான பவித்ர மாணிக்கச் சதுர்வேத மங்கலம்” எனக் கல்வெட்டால் அறியப்படுவதாகிய இத்தலம் தென்கயிலாயம் என்று வழிபட்டு ஏத்தும் சிறப்பிற்குரியது.


திருப்பெருந்துறை ஒரு திவ்யத் திருத்தலம். இத்தலம் ஆவுடையார் கோவில் என்ற பெயரில் மயிலாடுதுறை - காரைக்குடி புகைவண்டிப்பாதையில் அறந்தாங்கிக்குத் தென் கிழக்கில் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்டதாக அம்மாவட்டத்தின் தென் எல்லையில் இருக்கிறது. திருவாசகம், இத்தலத்தை சிவபுரம் என்று குறிக்கிறது.

திருப்பெருந்துறை ஆத்மநாதர் திருக்கோவில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே மூன்று பிரகாரங்கள் உள்ளன. இக்கோவிலில் கொடிமரமும் பலி பீடமும் நந்தியும் இல்லை.சண்டேசர் ஆலயமும் இல்லை.

இராஜ கோபுரம்:
இக்கோபுரம் ஏழு நிலைக் கோபுரமாக எழிலுடன் திகழ்கிறது. இக் கோபுர வாயிலின் நிலைக் கற்களிலும் சுவரிலும், கல்வெட்டுகள் உள்ளன.

தல விருட்சம் :
தியாகராஜ மண்டபத்திற்கு அப்பால் வடமேற்கு மூலையில் வெளி மதிலை ஒட்டினாற்போல அமைந்த திருமாளிகைப் பத்தியில் தல விருட்சமான குருந்த மரங்கள் இரண்டு உள்ளன. இப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மடைப்பள்ளி இருக்கிறது.



தொடரும்.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...