Friday, February 16, 2018

தமிழ் இயக்கம் அமைப்பு உருவாக்க கலந்துரையாடல் கூட்டம் - புத்தக வெளியீடு








தமிழ் இயக்கம் அமைப்பு உருவாக்க கலந்துரையாடல் கூட்டம் 14-02-2018 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ.முனைவர்.கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. தலைமை உரை ஆற்றிய வேந்தர் அவர்கள் நமது தமிழ் மொழியை சீரும் சிறப்புமாக எடுத்துச் செல்லும் வகையில் பல கருத்துகளைக் கூறினார். இது போன்ற இயக்கங்களில் இளைய தலைமுறையினரும், குறிப்பாகப் பெண்களும் பங்கேற்கும் வகையில் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில், இந்தக் காலத்தில் பெண்கள் சோதிடம் பார்த்து பெயர் வைப்பதாகக்கூறி பெரும்பாலும் வாயில் நுழையாத வடமொழி எழுத்துகளைக்கொண்ட பெயர்களையேச் சூட்டுகிறார்கள். நம் தமிழ் மொழியின் தொன்மையையும், பெருமையையும்  அவர்கள் உணரும் வண்ணம் இந்தத் தமிழ் இயக்கம் முன்னெடுக்கப்படும். இது குறித்த தங்கள் ஆக்கப்பூர்வமானக் கருத்துகளையும் அனைவரும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. புலவர் பதுமனார், கவிஞர் அப்துல்காதர், திரு.சுகுமாரன் திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், திரு ஸ்டாலின் குணசேகரன், திரு.முத்துக்குமாரசாமி, ஈரோடு தங்க. விசுவநாதன் மற்றும் திரு செ.ரா. சுப்பிரமணியம் ஆகியோரும் கலந்துகொண்டு சிறந்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.











தொடர்ந்து நடைபெற்ற எழுத்தாளர் பவள சங்கரி அவர்களின் “கந்திற்பாவை” என்ற கவிதை நூலும், “கொரிய வளமும் தமிழ் உறவும்” என்ற ஆய்வு நூலையும்” வெளியிட்டுப் பேசிய வேந்தர் அவர்கள் கந்திற்பாவை கவிதை நூலிற்கு தாம் அணிந்துரை வழங்கியிருப்பதைக் குறிப்பிட்டார். ஆய்வு நூலைப்பற்றிக் கூறும்போது கொங்கு நாட்டிலிருந்து ஒரு பெண் சென்று கொரிய நாட்டையே உருவாக்கியிருப்பதை நூல் தெளிவாக விளக்குவதாகக் கூறினார். தொடர்ந்து ஆசிரியர் கொரிய நாட்டிற்குச் சென்று அங்கு தங்கி மேற்கொண்டு ஆய்வினை முழுமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இவரைத் தொடர்ந்து ஆய்வு நூலை திறனாய்வு செய்து பேசிய எழுத்துச்சிற்பி சிதம்பரபாரதி அவர்கள் கொரிய மொழியில் ஆயிரக்கணக்கான தமிழ் வார்த்தைகள் இருப்பதையும், கொரிய மக்களும் தங்கள் பெற்றோரை அம்மா, அப்பா என்றே அழைப்பதையும்  ஆசிரியர் கூறுவதையும் எடுத்துரைத்து, வடகொரியா, தென்கொரியா என இரு நாடுகளும் இணைந்து ஒரே நாடாக ஆவதற்கு இந்த நூலை சமர்ப்பிப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டதை சிறப்பாக எடுத்துரைத்தார்.

Thursday, February 8, 2018

நூல்கள் வெளியீட்டு அழைப்பிதழ்!



இறையருளால் என் அடுத்த இரண்டு நூல்கள் கல்விக்கோ.முனைவர். கோ.விசுவநாதன், விஐடி பல்கலைகழக வேந்தர் தலைமையில், தமிழறிஞர்கள் வாழ்த்துகளுடன் வெளிவருவதில் பேருவகை கொள்கிறேன் நண்பர்களே. வாய்ப்பிருக்கும் அன்புள்ளங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


தமிழ் இயக்கம்




இனிய வணக்கம் நண்பர்களே!


கொங்கு மண்டல தமிழ் இயக்க அமைப்புக் கூட்டம், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ. முனைவர்.கோ.விசுவநாதன் அவர்கள் தலைமையில், கவிஞர் பதுமனார், கவிஞர்.அப்துல் காதர், திரு சுகுமாரன் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெற உள்ள நிகழ்வில் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள தமிழ் ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.




இடம் - செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு. 
நாள் : பிப்ரவரி 14, 2018
நேரம் : காலை 10 மணி முதல்

என்னடா வாழ்க்கை இது!



என்னடா வாழ்க்கை இது, ரொம்பத்தான் சிலிர்த்துக்கறோம்
செம்மறியாடு, பசுக்கள் போல 
மரக்கிளைகளின் அடியில் மணிக்கணக்காய் நின்று வெறித்துக்கொண்டிருக்கவும் வாய்க்காத வாழ்க்கை!
Leisure - Poem by William Henry Davies பாதிப்பில் ....

Friday, January 26, 2018

யோகக்கலையின் இராணி ஞானம்மாள்!


பவள சங்கரி
download
பல நேரங்களில் பெறுபவர்களின் தன்மையின் அடிப்படையில் விருதுகள் பெருமைப்படுவதுண்டு. அந்த வகையில் இந்த முறை பத்மஸ்ரீ விருதும் பெருமை அடைந்துள்ளது!
2018 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள ஞானம்மாள் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் பிறந்தவர். 98 வயதான, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் யோகக் கலையில் கைதேர்ந்தவர். தற்போது கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வருகிறார். தமது தாத்தா மன்னார்சாமி என்பவடமிருந்து ஞானம்மாள் யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டுள்ளார். ஞானம்மாளின் மாணவர்கள், லண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, சீனா, ஆஸ்திரேலியா, போன்ற பல்வேறு நாடுகளின் யோகா போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றுள்ளனர்.
unnamed
1920 இல் பிறந்தவர் 98 வயதைக் கடந்தும் தம் முறையாகக் கற்ற யோகக்கலையை இன்றும் தொடர்வதோடு, பல ஆயிரம் பேர்களுக்கு முறையாகப் பயிற்சியும் அளித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்றவர்களில் 600க்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதிலும் யோகா பயிற்சி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் தன் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கு யோகா பயிற்சியை அளித்துவருகிறார்.  ஒரு சித்த வைத்தியருக்கு வாழ்க்கைப்பட்ட இவருக்கு 2 மகனகள், 3 மகள், 11 பேரன் பேத்திகள் உள்ளனர். இவருடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே யோகா பயிற்றுநர்கள் என்பதோடு இவர்தம் மகன்கள், மகள்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள் என அனைவருமே யோகா ஆசிரியர்கள். தாங்கள் வசிக்கும் இடங்களில் யோகா பயிற்சி மையங்கள் வைத்து நடத்திவருபவர்கள். இவர்களும் பல பரிசுகளையும் வென்றவர்கள்.
தனக்குப் படிப்பு எதுவும் இல்லை என்றும் ஒன்றாம் வகுப்பு மட்டும் போனதுகூட நினைவில் இல்லை என்கிறார். யோகா மட்டுமில்லாமல் கிராமத்து வைத்தியத்திலும் தங்கள் குடும்பம்தான் ஊருக்குள்ளே அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்ததாகச் சொல்லும் ஞானம்மாள் பாட்டியின் வீட்டில் ஒருவரும் ஊசி, மருந்து ஆகியவற்றை எடுத்துக்கொண்டது இல்லையாம். தன் குடும்பத்தில் அனைவருக்கும் சுகப் பிரசவம் ஆனதற்கும் யோகாதான் காரணம் என்கிறார் ஞானம்மாள். இன்றுவரை இவருக்கு மூக்குக் கண்ணாடியின் தேவை ஏற்படவே இல்லை. ஊசியில் நூல் கோத்து, துணி தைக்கிற அளவு பார்வைத் திறன் இருக்கிறது என்பதோடு செவித்திறனும் நன்றாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மூட்டு வலி, கைகால் வலி என எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்.
தன் அம்மா 50 முக்கியமான ஆசனங்களைச் செய்வதோடு, பெண்களில் இந்த வயதில் இவ்வளவு ஆசனங்கள் செய்கிறவர் இந்திய அளவில் இவர் மட்டுமாகத்தான் இருக்கும் என்ற பெருமையும் பெற்றவர் என்கிறார் இவருடைய மூன்றாவது மகன் பாலகிருஷ்ணன். மேலும் தன் அம்மாவின் யு-டியூப் காணொளியை இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள் என்றும் இவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
திருப்பூரில் சர்வதேச இளைஞர் யோகா கூட்டமைப்பு சார்பாக 2012-இல் நடந்த போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று அதன் மூலம் அந்தமான் சென்றிருக்கிறார். பிறகு 2013 பிப்ரவரியில் அந்தமானில் 60 பேர் கலந்துகொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ஏற்கனவே குடியரசுத்தலைவரிடம் பெண் சக்தி விருதைப் பெற்றுள்ள ஞானம்மாள் தற்போது மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
http://www.vallamai.com/?p=83023

குடியரசு தின நல்வாழ்த்துகள்!



1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மக்களாட்சியை அறிவித்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1950, சனவரி 26, காலை 10.18 மணி முதல் இந்திய குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள், அம்பேத்கர், கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கைதான் ஆகியோர் ஆவர்.
1976ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42வது சட்டத் திருத்தத்தின்படி, “சமதர்மம்’,”மதச்சார்பின்மை’, “ஒருமைப்பாடு’ என்ற மூன்று வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டன.
indexகுடியரசுத்தலைவர் என்பவர் நம் நாட்டின் முப்படைகளுக்கும் தளபதியும், முதல் குடிமகனும் ஆவார். ஆனால் நம் நாட்டில் இது பெயரளவிலேயே மதிப்புமிக்க பதவியாக இருந்து வருகிறது. நம் இந்தியக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத், மிக எளிமையான ஒரு தலைவராக இருந்தவர். 1946ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இவர் 1950 முதல் 1962 வரை இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பெற்றார்.
இவருடைய பதவிக் காலத்தில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது தடைகளையும் மீறி களம் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். விடுதலைப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்ட இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். மிகப் புகழ் பெற்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர், ஆசிரமத்தில் கழிவறையைச் சுத்தம் செய்வது,பாத்திரம் துலக்குவது போன்ற சாதாரணப் பணிகளைச் செய்து வந்தார். உண்மையான சேவை மனப்பான்மையுடன் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் இவர். அதிக முறை, குடியரசு தின விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர். இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு தலைமை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகிய நம் இந்தியாவின் தற்போதைய, 14 வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றிருப்பவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஆவார்.
உலகளவில் ஆன்மீக நாடாகப் பார்க்கப்படும் நம் இந்தியாவில் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் நாட்டின் நல்ல பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நிகழ்ந்துள்ளதும் வருந்தத்தக்கது. நம் நாடு வல்லரசாக ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் இன்று நல்லரசாக அமைந்து மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை சிரமமின்றி நடத்துவதற்கேனும் வழிவகை அமைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. இந்த நிலை விரைவில் மாற்றம் பெற்று நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதோடு அமைதியும் நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
http://www.vallamai.com/?p=82990

Sunday, January 14, 2018

பொங்கல் நல்வாழ்த்துகள்!




ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் முதல் நாளன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா ‘பொங்கல் திருவிழா’ – உழவர் திருநாள். சங்ககாலம்தொட்டு அறுவடைக் காலங்களில், மழையுடன் நாடு செழித்து, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும்பொருட்டும், பயிர்களின் விளைச்சல் அளித்த அன்னை பூமி, கதிரோன், ஏர் உழுத மாடு போன்றனைத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக இனிமையான சர்க்கரைப் பொங்கல் வைத்து சிறப்பாக வழிபடுவது வழக்கம். தொடர்ந்து பல காலங்களாக வழிவழியாக இந்த நிகழ்வு திருவிழாவாகவே கொண்டாடப்பட்டுவருகின்றது. இவ்விழா, சமயங்கள் கடந்து அனைத்து தமிழர்களால், தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. உழவர் பெருமக்கள் மாரியின் தயவால், ஆடிப்பட்டம் தேடி விதைத்து, அன்று முதல் சோர்வின்றி உழைத்துச் சேர்த்த நெல் மணிகளை மார்கழியில் அறுவடை செய்து களம் சேர்த்து, தங்கள் உழைப்பின் பயனை மகிழ்ச்சியுடன் நுகரத் தொடங்கி அதைக் கொண்டாடும் திருநாளே தைப்பொங்கல். ஏர் உழும் ஆவினத்தின் உழைப்பையும் போற்றி நன்றி நவிலும் திருநாள் இது.
புத்தாடை உடுத்தி, முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு அதன் நடுவில் புதுப் பானை வைத்து புத்தரிசியிட்டு, பாலும், வெல்லமும், நெய்யும் சேர்த்து பொங்கல் வைப்பார்கள். பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவித்து, புதிய கரும்பையும், பசுமையான காய்கறிகளையும் வைத்துப் படையலிடுவர். தலை வாழையிலையில் வைத்து, விளக்கேற்றி கதிரவனை வணங்கி “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி, குலவையிட்டு மகிழ்ந்துக் கொண்டாடுவர்.
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் குறித்த சில பாடல்களைக் காணமுடிகின்றது:
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” – நற்றிணை
“தைஇத் திங்கள் தண்கயம் போல்” – புறநானூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” – கலித்தொகை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” – குறுந்தொகை
“தைஇத் திங்கள் தண்கயம் போல” – ஐங்குறுநூறு
இந்த உழவர் திருநாள் தொன்று தொட்டு நம் தமிழ் நாட்டைப் போன்றே பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஜப்பான் நாட்டில், டோரி நோ ஈச்சி (Tori no Ichi) என்ற இத்திருவிழா ஈடோ காலம் (1603-1868) முதற்கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. நல்ல மகசூல் பெற்று அறுவடை செய்து, அவைகளை வளமாக விற்பனையும் செய்யும் பொருட்டு பிரார்த்தனை செய்வதே இதன் நோக்கமாகும்.டோக்கியோ நகரிலுள்ள ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெறும் இவ்விழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் 200 கடைகள் அமைக்கப்படுகின்றன. இவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈடோ காலத்திற்குப் பின்னர் இன்றும் தொடர்ந்து, இரவு முழுவதும் நீடிக்கும் இந்த திருவிழாக்கள் நவம்பர் மாதம் ரூஸ்டர் நாளில் நடைபெறுகின்றன.
கருணைக்கிழங்குத் திருவிழா (Yam festival), ஆப்பிரிக்காவில் அறுவடைக்காலங்களில் விவசாயிகள், கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மூன்று நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடும் திருவிழாவாகும்.
இசுரேலில், எபிரேய மாதத்தின் 15 வது நாளில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுக்கோத் எனும் திருவிழா நடத்தப்படுகின்றது. அறுவடை நேரத்தில், “அறுவடைத் திருவிழா” எனவும் யூத நன்றி விழா எனவும் பெருவிருந்துடன் கொண்டாடப்படுகின்றது.
சூசுக் (Chu Suk) என்பது கொரிய நாட்டின் நன்றித் திருவிழா ஆகும், கொரியர்கள் அறுவடைத் திருவிழாவை செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி, அதாவது 8 வது சந்திர மாதத்தின் 15 வது நாளில் கொண்டாடுகின்றனர். அன்று அதிகாலையில், அவர்கள் தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டி தங்கள் மூதாதையர்களுக்கு, அறுவடை செய்த புதிய பயிர்களால் தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் மூலம் மூதாதையர் வழிபாட்டு சடங்கு செய்கின்றனர்.
இதுபோன்று வியட்நாம், இலங்கை, (உழவர் திருநாள்) அமெரிக்கா (நன்றி நவிலல் நாள்), சீனா (ஆகஸ்ட் – சந்திரன் திருவிழா) பல நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் இத்திருவிழா கொண்டாடப்பட்டாலும் இதன் அடிப்படை நோக்கம், அறுவடைத் திருநாள் என்பதுதான்!
பொங்கல் நல்வாழ்த்துகள்!
http://www.vallamai.com/?p=82789

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...