Monday, November 22, 2010

நட்பு சுகமா.......சுமையா....?

வாழ்க்கையில் நாம் அன்றாடம் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். ஒரு சிலரை பார்த்தவுடன் வெகு நாட்கள் அவர்களுடன் பழகியது போல ஒரு நெருக்கம் உண்டாகும். நம்மையறியாமல் ஒரு நேசமும், பாசமும் உருவாகிவிடும். சில நேரங்களில் இந்த பாசம் நேரில் பார்க்காமல் கூட ஒரு கற்பனை உருவத்துடனே வளர்ந்து வருவதற்கு, நம் பதிவுலக நட்புக்களே ஆதாரம். இந்த பாசமும், நேசமும், முன் ஜென்ம தொடர்போ என்று கூட பல நேரங்களில் நினைக்கத் தோன்றும். நம்மையறியாமல் நம் மனது அவர்களிடம் அதிக உரிமையைக் கூட எடுத்துக் கொள்ளும்.

என் தோழி அஞ்சுவை {அஞ்சனா] என்ற பேரை நான் அஞ்சு என்றுதான் கூப்பிடுவேன் ] நான் சந்தித்தது ஒரு சுவாரசியமான சூழலில்..............

நாங்கள் புதிதாக வீடு வாங்கி குடி வந்திருந்த காலம். அக்கம் பக்கத்தில், 200 அடிக்கு எந்த வீடும் இல்லை. என் இரண்டு குழந்தைகளும் பள்ளி செல்லும் வயது. கணவர் பணி நிமித்தமாக வெளியில் சென்று திரும்ப நேரமானால் கூட அச்சமாகத்தான் இருக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருந்துவிட்டு முதன் முதலில் தனியே வெளியே வரும் அத்தனை பெண்களுக்கும் ஏற்படக்கூடிய சங்கடம்தான் இது. ஏதோ கண்ணைக் கட்டி ஒரு அத்துவானக் காட்டில் விட்டது போல சோகம்..... வலிய போய் பக்கத்தில் இருப்பவர்களிடம் பழகவும் தயக்கம். கல்லூரிக் காலங்களில் இருக்கும் சகஜ நிலை ஏனோ திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தவுடன், அப்படியே மாறிவிடுகிறது.

உற்றார், உறவினர் என்ற சூழலிலேயே சுழன்று விட ஆரம்பித்துவிடுகிறது. பழைய நட்புக்களைப் பற்றி நினைக்கவும் நேரமின்றிப் போய்விடுகிறது. புதிய சூழல், புதிய மனிதர்கள் என்று ஒரு புறம், கணவரும் பணி நிமித்தமாக அதிக,நேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயம். வழமையாக நான் தான் மகிழுந்தில் குழந்தைகளை பள்ளியில் சென்று விட்டு விட்டு வருவேன் அன்றும் அப்படி விட்டுவிட்டு, வங்கியில் ஒரு வேலை இருந்ததால் அதையும் முடித்துவிட்டு, வீடு திரும்ப எண்ணி காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். கிளம்பிய 5 நிமிடத்தில் ..........

ஈரோட்டில் மேட்டூர் சாலை பிரதான சாலை. மிகப் பரபரப்பான சாலை, பஸ் நிலையமஅருகில் உள்ளதால், எந்நேரமும் சாரி, சாரியாக வண்டிகள் போய்க்கொண்டே இருக்கும். இடது புறம் இருந்த வங்கியிலிருந்து, சாலையின் மேற்குப் புறம் செல்வதற்காக, தெருவை கடக்க வேண்டி, என்னுடைய நான்கு சக்கர வாகனத்தை வேகமாக முடுக்கிவிட, அந்த வேளையில் சரியாக, நேர் எதிரில், ஒரு ஸ்கூட்டர், கண்,மண் தெரியாமல் படுவேகமாக வர, நேராக வந்து வண்டியின், பம்ப்பரில், மோதி, குட்டிக் கரணம் அடித்து சுருண்டு விழுந்ததை முதன் முதலில் கண்ணுக்கு நேராக, அதுவும், என் வண்டியிலேயே....... கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து விட்டது, அடுத்த நொடி, போக்குவரத்து காவல் அதிகாரி, இதையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவர், நேராக வந்து, தவறு அந்த பெருங்குடி மகனார் மீதுதான், என்றும், தவறான பாதையில் அவர் வந்ததையும் சுட்டிக் காட்டி, என்னை அந்த இடத்தை விட்டு நகரச் சொன்னார். தெய்வாதீனமாக, விழுந்த அந்த மனிதரும் போதை தெளிய, மெதுவாக எழ முயற்சித்தார். ஆனாலும்,எனக்கு, கை, கால்கள் உதறல் எடுத்து, ஒரு அடி கூட நகர மறுக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில்தான், ஒரு பெண்மணி,ஆதரவாக என் தோளில் கை போட்டு, வாருங்கள் போகலாம், என்றார். அந்த நேரத்தில் அவரை யார் என்று கேட்கக் கூட எனக்குத் தோன்றவில்லை. தன் கணவருடன் வந்திருந்தவர், அவரை எங்கள் பின்னாலேயே வரச் சொல்லிவிட்டு, என்னை வண்டியை எடுக்கச் சொல்லி, அருகில் அமர்ந்து கொண்டார். எனக்கு அந்த நேரத்தில் தெய்வமே வானத்திலிருந்து இறங்கி வந்தது போல ஒரு உணர்வு. செல்லும் வழியில்தான் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்கள் வீட்டின் அருகில் தான் அவர் வீடு என்றும், என்னை அவர் பார்த்திருப்பதாகவும், கூறினார். அவர் தன் பெயரை, அஞ்சனா என்றும், தன் கணவர் வங்கியில் பணிபுரிவதாகவும், ஒரே மகன் பத்தாம் வகுப்பு படிப்பதாகவும், தான் ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பதாகவும் கூறினார்.

அன்று முதல் அஞ்சனா எனக்கு அஞ்சுவானார். எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது. அஞ்சுவின் கணவர் மிக கலகலப்பாக பழகக் கூடிய மனிதர். வலிய சென்று அடுத்தவர்களுக்கு உதவுவதில் அஞ்சுவிற்கு எள்ளளவும் குறைந்தவரில்லை அவர். அவரும் என்னை உடன் பிறவா சகோதரியாகவே நடத்தினார். இருவரும் “மேட் ஃபார் ஈச் அதர்” என்பார்களே, அப்படித்தான் இருப்பார்கள்.மிக அன்னியோன்யமான தம்பதியர் இருவரும். மிகத் தெளிந்த நீரோடையாக இருந்தது இவர்கள் வாழ்க்கை.

ஆனால் விதிக்கு அது பொறுக்கவில்லை போலும். மிக ஆரோக்கியமான உடல் நிலையுடன், அன்றாடம் வாக்கிங், யோகாசனம், தியானம் என்று அழகாக திட்டமிட்ட வாழ்க்கை அவருடையது. அன்றும் வாக்கிங் சென்று விட்டு, வீடு திரும்பியவர், வழியில் பார்த்தவர்களுக்கெல்லாம் காலை வணக்கம் சொல்லிவிட்டு, வீட்டிற்குள் சென்றவர், சற்று நேரத்திலேயே அவர்கள் வீட்டில் ஒரே பரபரப்பு. காரில் அவரை தூக்கி வைத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. தீடீரென்று அதிகமாக வியர்க்க ஆரம்பித்ததாகவும், உடல் மிகவும் அசதியில் மயக்கமாக இருப்பதாகவும் கூறியதாக பேசிக் கொண்டனர். எந்த வலியோ வேதனையோ எதுவும் இல்லை. மருத்துவமனைக்குச் சென்றவர், இரண்டு மணி நேரத்திற்குள் அதே புன்னகை மாறா முகத்துடன் வெறும் உடலாக வந்து சேர்ந்தார். “திடீர் மாரடைப்பு” [ Massive attack ] என்றார்கள்.

கூடியிருந்த அனைவரும் கதறியழ, அஞ்சு மட்டும், அப்படியே அசையாமல், அதிர்ச்சி நீங்காதவராக அமர்ந்திருந்தார். வெளியூரில் படித்துக் கொண்டிருந்த மகன் வந்து கதறிய போது கூட எந்த சலனமும் இல்லை அவரிடம். எல்லாம் முடிந்து வீட்டை சுத்தம் செய்து முக்கியமான உறவினர் மட்டும் இருந்து கொண்டிருந்தனர். இன்னும் நம் குடும்பங்களில் கணவனை இழந்த பெண்களுக்கு செய்யும் சடங்குகள் என்னும் கொடுமையிலிருந்து பெரிதாக விடிவு வந்தது போல் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் பொட்டு வைக்க அனுமதிக்கிறார்கள். ஆனால் தாலி வாங்குவது, என்று ஒரு சடங்கு இருக்கிறதே. அது போன்ற கொடுமை ஏதுமில்லை எனலாம்.

விடியற்காலை ஊர் உறங்கும் வேளையில், ஏற்கனவே கைம்பெண்களாக உள்ள சில பெண்கள் வருவார்கள். நெருங்கிய உறவினர், பெண்கள் மட்டும் இருப்பார்கள். அந்தப் பெண்ணை, நிறைய மஞ்சள் பூசி குளிக்க வைப்பார்கள். தலை நிறைய பூ வைத்து, பொட்டு பெரிதாக வைப்பார்கள். நல்ல புடவையும் உடுத்துவார்கள். பின்பு இந்த அலங்காரத்தைக் கண்ணாடியில் காட்டுவார்கள். கட்டிப்பிடித்து, ஒப்பாரி பாட்டு சொல்லி, [அந்த பாட்டைக் கேட்டால் கல் நெஞ்சும் கரையும்] பின்பு, தலையில் உள்ள பூவை பிய்த்துப் போட்டு, பொட்டை அழித்து, தாலியை கழட்டி ஒரு கிண்ணத்தில் பாலை வைத்து அதில் போட்டு விடுவார்கள். கையில் கண்ணாடி வளையல் இருந்தால் அதை உடைப்பார்கள். மற்ற சுமங்கலிப் பெண்கள் இந்த நேரத்தில் அவரைப் பார்க்காவிட்டால் மீண்டும் மூன்று மாதத்திற்கு திரும்பவும் அவரைப் பார்க்கக் கூடாதாம்.........

இந்த சடங்கு நடப்பதற்காக எல்லோரும் கூடியிருந்தனர். அந்த நேரத்தில் தான் அஞ்சுவின் மகன், எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, தன் அம்மாவிற்கு இப்படி ஒரு காரியம் செய்யவே கூடாது என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான். எல்லோரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள், அவன் கேட்பதாக இல்லை. எந்த சடங்கும் செய்ய அனுமதிக்க மாட்டேன். விருப்பப்பட்டவர்கள் மட்டும் இங்கே இருக்கலாம், என்று தெளிவாகக் கூறிவிட்டான். பெரியவர்கள் அவனை பலவாறாக சமாதானம் செய்யவும், தாலியை மட்டும் கழட்டிக் கொள்ள சம்மதித்தான். ஆனால் அதற்காக அஞ்சுவிடம் அந்த பெண்கள் நெருங்கிய போதுதான், அவர் சுய நினைவு பெற்றவராக, ஓ வென கத்த ஆரம்பித்தது தெருவில் இருந்த அனைவரையும் கதி கலங்கச் செய்தது. எனக்கும் ஏதும் புரியவில்லை, அந்த நிமிடம் வரை சொட்டு கண்ணீர் விடாதவர், தாலியை தொட்டவுடன் அவர் கத்தியது, இன்று நினைத்தாலும் கதி கலங்குகிறது.

ஒருவரையும் அருகில் நெருங்கவே விடாமல், என் மடியில் படுத்துக் கொண்டு கதறியழுதது தாங்க முடியாத வேதனை. அன்று ஆரம்பித்த அழுகை முப்பது நாட்கள் இருக்கும் ஓயாத அவர் அழுகை சற்றே ஓய்வதற்கு. திடீரென, இரவு பத்து மணிக்குக்கூட அவர் அம்மா வந்து என்னை அழைப்பார்கள். அஞ்சுவின் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையென. நானும் எந்த நேரம் கூப்பிட்டாலும், வீட்டில் போட்டது போட்டபடி உடனே ஒடி விடுவேன். அவரிடம், பல விடயங்களைப் புரிய வைத்து அவர் அழுகையை கட்டுப்படுத்த முயற்சிப்பேன். கொஞ்சம், கொஞ்சமாக தேற ஆரம்பித்தார். மகனுக்காக தன்னைத் தேற்றிக் கொள்ள முயன்றார்.

இதற்குப் பிறகுதான், என்னுடன் பழகுவதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார். கணவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகியிருக்கும் அந்த நேரத்தில். என்னைக் கண்டவுடன், ஏனோ அவருக்கு அழுகை பொங்கி வர ஆரம்பித்தது. நானும் அதை உணர்ந்து, சற்றே அவர் சந்திப்பைக் குறைத்துக் கொண்டேன். ஆனாலும் அவர் என்னை பார்ப்பதையே தவிர்க்க ஆரம்பித்ததுதான் ஏன் என்றே எனக்குப் புரியவில்லை....... நானும் எத்தனையோ முறை முயன்று பார்த்தும் பழையபடி அவரால் என்னிடம் பழக முடியவில்லை. அதுதான் ஏன் என்று எனக்கு இன்றும் புரியாத புதிராகவே, மனதை நெருடிக் கொண்டிருக்கிறது. இன்று அஞ்சுவின் மகன் படித்து முடித்து, துபாயில் வேலை கிடைத்து செட்டில் ஆகி விட்டான். இவரும் விருப்பு ஓய்வு பெற்று, மகனுடன் துபாய் சென்றுவிட்டார். நாட்டையே விட்டுச் செல்லும் போதுகூட என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை.......... அதுதான் ஏன் என்ற காரணம் புரியாமல் என் மனம் குழம்பித் தவிக்கிறது............ மனித மனம் என்றுமே ஒரு புரியாத புதிராகத்தான் உள்ளது அல்லவா?

33 comments:

  1. சிலசமயம் சுமையாகவும் இருக்குதுன்றது உண்மை. அதுவும் நம்மை உதாசீனப்படுத்தறாங்கன்னு தெரியும்போது மனசில் ஒரு வலி.

    ReplyDelete
  2. வாருங்கள் துளசி கோபால். அது உதாசீனம் அல்ல. சிலரைப் பார்க்கும் போது சில தனிப்பட்ட விடயங்கள் நினைவிற்கு வரும் அல்லவா. அப்படித்தான்,மிக மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் எங்கள் நட்பு இருந்தது. ஆனால் இப்படி ஒரு சூழலில் என்னைக் காணும் போது மனதின் வலி அதிகமாகலாம். அதனால் அவர் தவிர்க்க நினைத்திருக்கலாம்........

    ReplyDelete
  3. ||ஆனால் தாலி வாங்குவது, என்று ஒரு சடங்கு இருக்கிறதே. அது போன்ற கொடுமை||

    மகா கொடுமை...
    __________

    ||புரியாத புதிராகவே,||

    ம்ம்.. என்ன சொல்றதுன்னு தெரியல... :(..

    ReplyDelete
  4. //ஆனால் இப்படி ஒரு சூழலில் என்னைக் காணும் போது மனதின் வலி அதிகமாகலாம். அதனால் அவர் தவிர்க்க நினைத்திருக்கலாம்......//
    அதேதாங்க!

    ReplyDelete
  5. ஒரு சில நட்புகள் விலகும்பொழுது காரணம் சொல்லுவதில்லை. இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
  6. ஆம் ப்ரியா, அந்த கொடுமை இன்னும் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதை வேறு வேடிக்கைப் பார்க்கும் கட்டாயம் வேறு.....

    ReplyDelete
  7. நன்றிங்க தெய்வசுகந்தி.

    ReplyDelete
  8. நன்றி எல்.கே. காரணம் நம்மால் தான் புரிந்து கொள்ள முடிவதில்லை.....

    ReplyDelete
  9. வாங்க வானம்பாடி சார்.

    ReplyDelete
  10. ஒரு ம்ம்...கூடவா..இல்லை..கதிர்..?

    ReplyDelete
  11. ஒரு ம்ம்...கூடவா..இல்லை..கதிர்..?

    ம்ம்ம்ம்.........(டெம்ப்ளட் கமன்ட் )
    ------------------------------------------


    விடியற்காலை ஊர் உறங்கும் வேளையில், ஏற்கனவே கைம்பெண்களாக உள்ள சில பெண்கள் வருவார்கள். நெருங்கிய உறவினர், பெண்கள் மட்டும் இருப்பார்கள். அந்தப் பெண்ணை, நிறைய மஞ்சள் பூசி குளிக்க வைப்பார்கள். தலை நிறைய பூ வைத்து, பொட்டு பெரிதாக வைப்பார்கள்.
    ------------------------------------

    படிக்கும்போது நிறைய கள் இருக்கு

    ReplyDelete
  12. \\\மிக மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் எங்கள் நட்பு இருந்தது. ஆனால் இப்படி ஒரு சூழலில் என்னைக் காணும் போது மனதின் வலி அதிகமாகலாம். அதனால் அவர் தவிர்க்க நினைத்திருக்கலாம்..//

    உண்மை தான் நித்திலம். :(

    ReplyDelete
  13. கணவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகியிருக்கும் அந்த நேரத்தில். என்னைக் கண்டவுடன், ஏனோ அவருக்கு அழுகை பொங்கி வர ஆரம்பித்தது. நானும் அதை உணர்ந்து, சற்றே அவர் சந்திப்பைக் குறைத்துக் கொண்டேன். ஆனாலும் அவர் என்னை பார்ப்பதையே தவிர்க்க ஆரம்பித்ததுதான் ஏன் என்றே எனக்குப் புரியவில்லை.......

    ....Maybe, Whenever she sees you, She remembers the loss. Human mind is hard to explain. :-(

    ReplyDelete
  14. நன்றி முத்துலெட்சுமி.

    ReplyDelete
  15. வித்யா நன்றிம்மா......

    ReplyDelete
  16. யாரும் தப்பா நெனக்காதீங்க.யாருமே மற்ற கோணங்களில் யோகிக்கவேயில்லையே ஏன்?

    ReplyDelete
  17. யாரும் தப்பா நெனக்காதீங்க.யாருமே மற்ற கோணங்களில் யோகிக்கவேயில்லையே ஏன்?

    ReplyDelete
  18. புரியாத புதிராக இருந்தாலும் நட்பாக இருந்த காலத்தையே நினைவில் போற்றி, சொல்லாமல் சென்றதை மறக்கப் பாருங்கள்.

    ReplyDelete
  19. சிவா வருக வணக்கம்.....மற்ற கோணங்கள்.......?

    ReplyDelete
  20. நன்றிங்க ராமலஷ்மி.

    ReplyDelete
  21. வாங்க பஞ்சவர்ணசோலை. வணாக்கம்.

    ReplyDelete
  22. தங்கள் இடுகையின் தலைப்பேதான்... என் கேள்வியும்..!

    நட்பு... "சுகமா..? சுமையா..?" என.. ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்...!
    அது...
    விடை தெரியாத வினாக்களாய் இன்றும் ஏன் மனதில்...!

    என் இருபது... இருபத்தைந்து வருட நட்பெல்லாம் சுயநலத்தால்... தன் சுயரூபத்தை இழந்து..
    சுயம்பாய்... அதாவது அருவுருவாய் நிற்கிறது...

    வருத்தம் எனை வாட்டியபோது...
    "இவ்வுலகில் இது யதார்த்தம்" என என்னை நானே தேற்றிக்கொண்டேன்....!

    நட்பு என்றுமே "சுகமான சுமைகள்"யாய் இருந்து "சோகமான சுமையாய்" மாறுவது யதார்த்தமானதுதான்...!


    தங்கள்... ////செல்லும் போதுகூட என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை..........அதுதான் ஏன் என்ற காரணம் புரியாமல் என் மனம் குழம்பித் தவிக்கிறது//// என்ற இக்கேள்விக்கு என் பதில்...!

    சுகத்தில் மட்டுமே பங்கேற்காமல்...
    சோகத்தில் பங்கேற்று.... அவரின் சோகத்தை குறைத்த.... தாங்கள்தான் நட்பின் நட்பு, நட்பின் அடையாளம்"...!
    தங்களிடம் சொல்லாமல் போனதால்... அவருக்குதான் நஷ்டமே தவிர... உங்களுக்கு அல்ல... இதனை தங்கள் நண்பி உணரும் காலம் வரும்... அப்படி உணர்ந்து வந்தால்... ஏற்றுக்கொள்ளாத்தீர்.... இப்போது தங்கள் மனம் வலிப்பதைப்போல நண்பியின் மனமும் வலிக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.... சிலபேர் காரணகாரியங்களை ஆராய்வர்... சொல்வர்.. அதனை ஏற்காதீர்...


    இந்த அவசரஅவசர யுகத்தில்... வெள்ளேந்தியாய் இருப்பது தவறு...

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    ReplyDelete
  23. காஞ்சி முரளி, வாருங்கள். வணக்கம். சில மோசமான அனுபவங்களின் பாதிப்பு வார்த்தைகளாக வெளிப்படுவது தெரிகிறது, நண்பரே.
    அப்படி உணர்ந்து வந்தால்... ஏற்றுக்கொள்ளாத்தீர்.... இப்போது தங்கள் மனம் வலிப்பதைப்போல நண்பியின் மனமும் வலிக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.... சிலபேர் காரணகாரியங்களை ஆராய்வர்... சொல்வர்.. அதனை ஏற்காதீர்...இந்த எண்ணம் முற்றிலும் தவறு....

    ReplyDelete
  24. sorry...! Friend...!

    நான் "இறைவனாகிய ஏசுபிரான்" அல்ல...!
    ஒரு கன்னத்தில் அறைந்தால்... மறு கன்னத்தை காட்ட....!

    நான் "மனிதருள் மகாத்மாவாகிய காந்தி"யுமல்ல...!
    தன்னைக் கொன்றவனை மன்னித்ததுபோல்..... மன்னிக்க...!

    நான் சாதாரண மனிதன்...! யதார்த்தமானவன்...!

    ReplyDelete
  25. நட்பின் சுகமும் அதை பிரிந்த சோகமும் நன்றாக புரிகிறது.காலம் ஒரு வேளை மீண்டும் பதில் சொல்லலாம் ...

    ReplyDelete
  26. வாங்க காளிதாஸ். நன்றி.

    ReplyDelete
  27. சிலசமயங்கள் நெருங்கிப் பழகியவர்களைக் காணும்போது நினைவுகள் கிளறிக் கொதிக்கும்.அதனாலும் இருக்கலாமே நித்திலம் !

    ReplyDelete
    Replies
    1. சரிதான் ஹேமா... எங்கிருக்கிறீர்கள் ஹேமா? வருவதேயில்லையே?

      Delete