Wednesday, April 18, 2012

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(33)

மாறனின் அம்மா, மங்களம் சாமி கும்பிட்டுவிட்டு கோவிலிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார். ஒத்தையடிப் பாதை வழியாக நடந்து வந்தே ஆக வேண்டும். திடீரென்று சாலையோர தோட்டத்திலிருந்து கருநாகம் ஒன்று சீறிப்பாய்ந்து மளமளவென்று வெளியே வந்துவிட்டது. மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் காதில் புஸ்…… புஸ் என்று ஒரு சத்தம் வித்தியாசமாக வர இருவரும் சட்டென்று திரும்பிப் பார்க்க, அங்கு கருநாகம் ஒன்று மூன்று சுற்று போட்டு தலையை உயர்த்திக் கொண்டு படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. பகீர் என்றது இருவருக்கும். அந்த நாகத்தின் பார்வை முழுவதும் மங்களத்தின் மீதே இருந்தது. சட்டென்று இருவரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆட்டத்தை நிறுத்திவிட்டு சரசரவென ஓடத்துவங்கிய அந்த விசநாகம், மங்களம் இருந்த திசை நோக்கி ஓடிவர, செய்வதறியாது திகைத்த மங்களம் ஓட எத்தனிக்க அதுவும் பின்னாலேயே துரத்திக் கொண்டு ஓட, ராமச்சந்திரனோ, ஒன்றுமே புரியாமல் தானும், மங்களா, மங்களா.. என்று கத்திக் கொண்டே பின்னால் ஓட, தலைசுற்றி, கண்கள் கட்டி மயங்கும் நிலையில், மங்களம் உடுத்தியிருந்த பச்சை வண்ண பட்டுப் புடவை மட்டும் லேசாக தெரிய…

”மங்களா.. மங்களா.. பாத்து… பாத்துப்போடீ…….. மங்களா.. ஐயோ மங்களா…. “

ராமச்சந்திரன் போட்ட சத்தத்தில் அசந்து உறங்கிக் கொண்டிருந்த மங்களம் எழுந்து, வியர்த்துக் கொட்டி உடகார்ந்திருந்த கணவனைக் கண்டவுடன், என்னமோ ஏதோவென்று நடுங்கிப்போனாள். தண்ணீர் எடுத்துக் கொடுத்து சற்று ஆசுவாசப்படுத்தி காரணம் கேட்டபோதுதான் தெரிந்தது, ஏதோ கெட்ட கனவு கண்டு பயந்து போயிருப்பது. மணி நான்காகிவிட்டது, இன்னும் ஒரு மணி நேரத்தில் பால்காரரே வந்துவிடுவார். கணவரிடம், உடனே அவசரமாக எழுந்திருக்க வேண்டாம், கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு மெதுவாக எழுந்தால் போதும் என்று சொல்லிவிட்டு எழுந்து போய் பல் துலக்கி, முகம் கழுவி வந்தவள், உட்கார்ந்து கொண்டே இருந்த கணவரைக் கண்டு,

“என்னன்னா… என்ன ஆச்சு? இன்னும் உட்கார்ந்துண்டே இருக்கேள்.. சித்தநாழி ரெஸ்ட் எடுங்கோண்ணா”

“மங்களா, நேக்கு என்னமோ மனசே சரியில்லடி.. இது ஏதோ துர்சகுனமா தெரியறது. மனசுக்கு சங்கடமா இருக்கு”

:”அதெல்லாம் ஒன்னும் ஆகாதுண்ணா.. பயப்படாதேள். மாறனோட கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா எல்லாம் சரியாயிடும். அந்த குழப்பம்தான் உங்களை பாடாய்ப் படுத்தறது. நம்ம குலதெய்வம் கோவில்ல நல்லபடியாத்தானே வாக்கானது நேத்து போனபோது ”

“ம்ம்ம்.. முதன்முதல்ல நாம மாறனோட கல்யாண விசயமா கோவிலுக்குப் போனபோது, தேங்காய் அழுகி போயிடுத்தே.. மறந்துட்டியா.. இப்ப இப்படி ஒரு கனவு வேற..”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாதுண்ணா.. மனதை குழப்பிக்காதேள். முதலடி எடுத்து வச்சாச்சு. இனி எல்லாம் தானா நடக்கும்”

வாசலில் பால்காரர் மணி அடிக்க மங்களம் எழுந்து போய்விட்டாலும், ராமச்சந்திரன் தனக்குள்ளேயே ஏதோ பேசிக் கொண்டார்.. அத்துனை குழப்பம் அவர் மனதில் இருந்தது.. நேற்றுதான் அவந்திகாவின் வீட்டில் சென்று பேசிவிட்டு, ஜோசியரிடம் சென்று நிச்சயதார்த்தம் மற்றும் மற்ற விசயங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிட்டு வந்தார்கள். இன்றுதான் மாறனைக் கூப்பிட்டு விசயத்தைச் சொல்லி லீவிற்கு அப்ளை பண்ணச் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தால் இப்படி ஒரு கனவு.. என்னமோ ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுக்கையைவிட்டு எழுந்தார்.

மாறனின் போன் வரும்போது எதையும் வெளிக்காட்டக்கூடாது என்று முடிவெடுத்ததால், உற்சாகத்தை சிரமப்பட்டு வரவழைத்துக் கொண்டார். இன்னும் 40 நாட்கள்தான் இருந்தது திருமணத்திற்கு. நிச்சயதார்த்தம் முடிந்து ஒரே வாரத்தில் திருமண தேதியும் குறித்தாகிவிட்டது. அப்பொழுதுதான் இரண்டு பேரும் வந்து திருமணம் முடித்துவிட்டு கிளம்ப முடியும். இனி தேவையில்லாமல் எதையும் யோசித்து குழப்பிக் கொள்ளக் கூடாது என்ற முடிவுடன் முகத்திலும் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, மகனின் அழைப்பிற்காகக் காத்திருந்தார். மனைவி மணக்க மணக்க பில்டர் காபியுடன் வந்தவள் கணவனின் மாற்றம் கண்டு மனநிம்மதியும் கொண்டாள். சில விசயங்களை மனதில் தேவையில்லாமல் சுமந்து கொண்டிருப்பதுதான் வேதனையே… நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனால் வேலையும் ஒழுங்காக நடக்கும், மனப்பாரமும் குறையும். வாழ்க்கை கொடுத்த அனுபவப்பாடம் அருமையாக வேலை செய்தது.

அடுத்தடுத்து காரியங்கள் மளமளவென்று நடக்கத்துவங்கின. சிலபேர்களின் ராசி ஒரு காரியத்தைத் துவங்கி வைத்தால் அது மளமளவென எல்லையைத் தொட்டுவிடும். அப்படி ஒரு ராசி ரம்யாவிற்கும்! தந்தை இந்த நல்ல விசயத்தை தன்னிடம் சொன்னவுடன், மாறன் செய்த முதல் வேலை ரம்யாவிற்கு போன் செய்து ஆனந்தக் கண்ணீருடன் இந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டதுதான். ரம்யாவிற்கும் மிகுந்த மனமகிழ்ச்சி. நல்ல நட்பின் உன்னதம் அங்கு பளிச்சிட்டது.

அவந்திகாவும், மாறனும் அன்று இரவு முழுவதும் ஆரம்பத்திலிருந்து அனைத்து கதைகளையும் அலசிக் கொண்டு பொழுது விடிந்தது கூட தெரியாமல்,அலாரம் அடித்த சத்தத்தில் சுய நினைவிற்கு வந்து, அதற்குப் பிறகு அவசர அவசரமாக காலைக்கடன்களை முடித்து பணிக்குத் தயாரானார்கள்..எவ்வளவு பெரிய போராட்டத்திற்குப் பிறகு இந்தக் கிளிகள் உல்லாசமாகப் பறக்கப்போகிறது அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஓர் இரவு போதாதே. இருப்பினும் கடமை அழைக்க தம் வழியில் இருவரும் செல்ல வேண்டியதாகி விட்டது. வழியெல்லாம் மாறனின் மனஓட்டத்திற்கு ஏற்றவாறு நீ பாதி… நான் பாதி கண்ணே என்ற பாடல் ஒலித்து மகிழ்ச்சியைக் கூட்டியது.. அடுத்து இருவரும் அலுவலகத்தில் விடுமுறைக்கு விண்ணப்பிக்கவும், ஊருக்குச்செல்லத் தயாராகவும் நாட்கள் நிமிடமாகக் கரைந்து கொண்டிருந்தது.

திருமண ஏற்பாடுகள் வெகு விரைவாக நடந்து கொண்டிருந்தது. அவந்திகாவின் வீட்டிலும் மிக்க மகிழ்ச்சியுடன் மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ராமச்சந்திரன் மட்டும் மனதின் ஓரத்தில் ஒரு சிறு உறுத்தலுடனேயே வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். ஆயிற்று மகன் வரப்போகும் நாளும் நெருங்கிவிட்டது. உற்சாகத்தில் மனம் துள்ளினாலும் கடவுள் நம்பிக்கை முன் எப்போதும்விட மிக அதிகமாகவே இருந்தது.

அனுவின் திருமணத்திற்கான முயற்சியும் நல்லபடியாக முடிந்தது மிகுந்த மன நிறைவை ஏற்படுத்த , தன் சகோதரியின் மகிழ்ச்சியிலும் பங்கு கொள்ள முடிந்தது. மாறனின் திருமணத்திற்கு ஒரு மாதம் தள்ளிதான் அனுவின் திருமணம் என்பதால் அவர்களும், மூத்த மகனின் குடும்பத்தாரும் வந்து, வீடே கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

மாறனும், அவந்திகாவும் ஒன்றாகவே கிளம்புவதற்கான பயண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். மகிழ்ச்சியின் எல்லையில் மிதந்து கொண்டிருந்தனர் என்றுதான் கூற வேண்டும். ரம்யாவிடம் அதிகமாக பேசும் வாய்ப்புகூட குறைந்து போனது மாறனுக்கு. அன்று எப்படியும் கொஞ்ச நேரமாவது அவளிடம் பேச வேண்டும் என்று அதற்கான சந்தர்ப்பம் பார்த்திருந்தான். அவளே மாறனைத் தேடிக்கொண்டு ஓடிவந்தாள்..

“மாறன்.. ரிஷி மெயில் செய்திருக்கான்.. ஒரு ஹேப்பி நியூஸ்ப்பா… “

“ ஹேய்.. உன்னைத்தான் தேடிக்கிட்டிருந்தேன். எங்க போன… “?

“இல்லப்பா.. காலையில வர அவசரத்தில ஒன்னும் சாப்பிடாம வந்துட்டேன். ஒரே பசி, அதான் காண்டீன் பக்கம் போயிட்டு வந்தேன்”

“சரி. ’சொல்லு என்ன அவ்வளவு அவ்சரமா வந்த.”

“ம்ம்.. ஆமாம் மாறன். வந்தனாவிற்கு, இப்ப புதிதா கொடுத்த ட்ரீட்மெண்ட் நல்லா ஒத்துக்கிச்சாம். இனி அவ உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையாம். நான் கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை. வந்தனா கட்டாயம் பிழைக்க வேண்டும். நல்லவர்கள் வாழ வேண்டும்.”

அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை.. கண்கள் கலங்கி தொண்டை கம்மி, மௌன்மானாள். ரம்யாவிற்கு எவ்வளவு நல்ல மனது என்று ஆச்சரியமாக இருந்தது மாறனுக்கு. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே என்ற கவலையும் உடன் வந்து வாட்டியது. தன் திருமணம் முடிந்தவுடன் முதல் வேலையாக ரம்யாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ரம்யாவின் பெற்றோரும் பலமுறை தன்னிடம் கூடச் சொல்லி புலம்பிவிட்டார்கள். அவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அத்ற்கேற்றார்போல் முழுமூச்சுடன் இறங்கி செயல்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

நிச்சயதார்த்தத்திற்கு நாள் நெருங்கிவிட்டதால் மாறனும்,அவந்திகாவும் ரொம்பவே மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். இருவரும் சேர்ந்து ஊருக்குக் கிளம்பியாகிவிட்டது. ஒன்றாகப் பயணம் செய்யப்போகிற ஆனந்தம் வேறு, பலவிதமான கற்பனைகளுடன் மணித்துளிகள் நகர்ந்து கொண்டிருந்தன.

அடுத்த இதழில் முடியும்


நன்றி : வல்லமை

6 comments:

  1. நம்ம குலதெய்வம் கோவில்ல நல்லபடியாத்தானே வாக்கானது நேத்து போனபோது ”

    சுபமாகவே நடக்கட்டும் !

    ReplyDelete
  2. ஒரு கொக்கி போட்டு நிறுத்தியிருக்கீங்க..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்.... என்னதான் அறிவியலும், கண்டுபிடிப்புகளும் முன்னேறினாலும், செவ்வாய் கிரகமும், நிலவும் நெருங்கி வரக்கூடியதானாலும்... நம்பிக்கைகளும் அதற்குரிய சில நிகழ்வுகளும் நம்மை சிந்திக்க வைக்கிறது. இருப்பதை இல்லாததாகவும், இருப்பது போன்ற தோற்றம் உள்ளதை மறைக்கவும் முடியாத குழப்பமே மிஞ்சுகிறது. இதில் மாறனும், அவந்திகாவும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பாத்திரங்கள். மற்றவைகள் புனைவு.... நடந்ததை நேரில் கண்டபோது எழுந்த உத்வேகம்தான் இந்தகதை.. ஆரம்பம் முதல் உடன் பயணித்து வரும் தாங்கள் கட்டாயம் இதை உணரமுடியும் என்று நினைக்கிறேன்.நன்றி சார்.

      Delete
  3. கோர்வையான அழகான எழுத்து நடை.
    தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் புவனேஸ்வரி ராமநாதன். தங்கள் வரவு நல்வரவாகுக. நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      அன்புடன்

      பவள சங்கரி.

      Delete
  4. அன்பின் ராஜராஜேஸ்வரி,

    மகிழ்ச்சி. தங்கள் அன்பான வேண்டுதலையும், வாழ்த்துகளையும் கட்டாயம் அந்த இளம் ஜோடிக்கு தெரிவிக்கிறேன். நன்றி.

    ReplyDelete