Tuesday, June 19, 2012

கொங்கு குல மகளிர்

















கொங்கு குல மகளிர்

ஆசிரியர் - புலவர், முனைவர் செ. இராசு

மரபு சார்ந்த அடையாளங்களை த்னிப்பட்ட அக்கரையுடன் அணுகும் போக்கு இன்று நவீனத்துவவாதிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.. மரபின் வளமான கூறுகளை உள்வாங்கிக்கொண்டு அதனைத் தம் படைப்புகளில் புகுத்தி தரம் உயர்த்துவதில் இன்று பல படைப்பாளிகள் வெற்றி கண்டுள்ளனர். அந்த வகையில் கல்வெட்டறிஞர் என்று தமிழ்ச் சான்றோர்களால் பெரிதும் போற்றப்படுபவரான புலவர், முனைவர் திரு. செ. ராசு அவர்களின் “கொங்கு குல மகளிர்” என்னும் அரிய நூல், பல்வேறு கல்வெட்டுச் சான்றுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மற்றும் வழித் தோன்றல்களை ஊர் ஊராக நேரடியாகச் சென்று அவர்களின் வாயிலாகக் கேட்டும் தொகுத்து வழங்கப்பட்டுள்ள அருமையானதொரு வரலாற்று ஆவணம். இவருடைய மற்றைய கொங்கு நாடு, கொங்கு நாட்டுச் செப்பேடுகள், கொங்கு கல்வெட்டுகள், கொங்கு குல வரலாறு, கொங்கு நாட்டில் ஊராட்சி முறை, Kongu in Sangam Time, போன்ற நூல்கள் நம் கொங்கு நாட்டின், பூகோள அமைப்பு, வேளாண்மை மற்றும் பிற தொழில்கள், கொங்கு மக்களின் பண்பாடு,நாகரிகம், பழக்க வழக்கம், நிர்வாகத் திறமை, விருந்தோம்பல் ஆகியவற்றை தெளிவாக எடுத்தியம்புவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ‘கொங்கு குல மகளிர்’ என்ற இந்த நூலும் கொங்கு குலமகளிரின் தனிப்பட்ட சிறப்பியல்புகளை எடுத்தியம்பும் சிறந்ததொரு ஆவணமாக அமைந்துள்ளதும் பெரும் பாராட்டுதலுக்குரியது.

தன்னுடைய 13 வயதில் முதன்முதலாகத் தன் பெற்றோருடன் தமிழ்நாடு வந்தவர் கனடாவில் பிறந்த வெள்ளை இன பெண்மணியான முனைவர் பிராண்டா, மீண்டும் தன்னுடைய 22வது வயதில் 1965ம் ஆண்டு கொங்கு நாட்டில் கோவையில் வந்து தங்கி தம் முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டார். அழகாக தமிழ் பேச கற்றுக் கொண்டவர், கொங்கு மக்களையும், அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காதலிப்பதாகக் கூறும் இவர், கொங்கு தமிழ் பாதுகாக்கப்பட வேண்டியது என்கிறார். 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழோடும், தமிழகத்தோடும் நெருங்கிய தொடர்புடையவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


புலவர் ராசு அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டுள்ளது போன்று, ஒரு நாட்டின் வரலாறு முழுமையடைய வேண்டுமாயின், அந்நாட்டின் சமுதாய வரலாறு, மற்றும் சமுதாயத்தின் அங்கங்களான தனி மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளையும் ஆய்ந்தறியப்பட்டதாக இருக்க வேண்டும். அந்த வகையில், பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராகவும், சில துறைகளில் ஆண்களுக்கு மேலாகவும் கொங்கு நாட்டுப் பெண்கள் சிறந்து விளங்கியமை குறித்த வரலாற்றுச் செய்திகளை ஆவணமாக்கியுள்ளார்.

“கற்றறிந்த சான்றோர்களாக, கவிபாடும் புலவர்களாக, புலவர்களை ஆதரித்த புரவலர்களாக, புலவர்களால் போற்றிப் புகழ்ந்து பாடப்பட்டவர்களாக, வட மொழியிலும் வல்லவர்களாக, நல்லறம் கூறும் நடுவர்களாக, நாட்டு நிர்வாகம் செய்யும் உயர் அலுவலர்களாக, பக்தியில் சிறந்தவர்களாக, ஆலயத் திருப்பணி செய்து, பல்வேறு கொடைகளைக் கோயிலுக்குக் கொடுத்தவர்களாக, ஆடவர்களை நெறிப்படுத்தும் குடும்பத் தலைவியர்களாக, அளப்பரிய ஆற்றல் படைத்தவர்களாக, மருத்துவக் கலையில் வல்லவர்களாக, தன்மான உணர்ச்சி உடையவர்களாகப் பலர் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது” என்று தகுந்த அழியா ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

பெரும்பான்மை கொங்கு வேளாளர் சமூகப் பெண்களும், கொங்கு நாட்டு வேட்டுவர், செங்குந்தர், குயவர், நாவிதர், புலவர் சமுதாயப் பெண்கள் போன்றவர்கள் பற்றிய இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, ஓலைப்பட்டயச் செய்திகள் பல இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

“குடத்திலிட்ட விளக்காக இருந்த நம் குல மகளிரின் மாண்புதனை, புகழினை குன்றிலிட்ட விளக்காகப் பிரகாசிக்கச் செய்த ஓய்வறியா உழைப்பாளி புலவர் செ.ராசு அவர்களுக்கு கொங்கு குல மகளிரின் சார்பாகப் பாராட்டுகளையும், நன்றியினையும் உரித்தாக்குகிறேன்” என்று தம் அணிந்துரையில் கூறியுள்ள முன்னாள் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் மேலும்,

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பெருநோக்கோடு வாழ்ந்து வந்த நிலையில் ஆரியம் புகுந்தது. வருணத்தின் பெயரால் நான்கு சாதிகள் உருவாக்கப்பட்டன. அதில் நாம் தீண்டத்தகாத சூத்திரர்கள் ஆக்கப்பட்டோம். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே. இது ஆண்டவன் கட்டளையென்று நம்மைப் படு குழியில் தள்ளினார்கள். மொழியும்,இனமும் தங்கள் தொன்மை வரலாற்றை இழந்து புதிய ஆரிய கலாச்சாரத்தை மேற்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டனர் . ஆண்களுக்கே கல்வி மறுக்கப்பட்ட நிலையில் பெண் கல்வியைப் பற்றி கவலைப்பட யாருமில்லை.. கல்வி இல்லை, கருத்துச் சுதந்திரம் இல்லை, பொருளாதார சுதந்திரமும் இல்லாத நிலையில் பெண்கள் அடிமைகளைப் போல வாழ்ந்திருந்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளதும் கூர்ந்து நோக்கத்தக்கது.

கொங்கு குல மகளிர் எனும் தலைப்பில் கொங்கு வானில் மின்னும் 27 நட்சத்திரங்களின் மூலமாக இவர்தம் பெருமைகளை தெளிவுற விளக்கியுள்ளார்.

1. நடுவராக விளங்கிய நங்கை

காலிங்கராயன் வழிவந்த நிலக்கிழாரான காசிலிங்கக் கவுண்டர் கனகபுரத்தில் வாழ்ந்த சாத்தந்தைகுலப் பெரியவருடைய பேரன் பழனிவேலப்ப கவுண்டர் மகள் தெய்வானை என்பவர். புலவன்பாளையம் குந்தாணி சாமிநாதக் கவிஞரிடம் தமிழ், கணக்கு, இலக்கணம், இலக்கியம், நீதிநூல், புராணங்கள் ஆகியவற்றைக் கற்றுத்தேர்ந்த இவரது கூரிய அறிவுத் திறமை அனைவரையும் வியக்கச் செய்த்ததற்கான சான்று : பாசூர் குருக்கள் அகிலாண்ட தீட்சிதருடன், வெள்ளோடு இராசாக்கோவிலில் முகாமிட்டிருந்த போது தெய்வானை இவருடன் விவாதித்த பாங்கு மற்றும் எழுப்பிய ஐயங்கள்!

பணியாளர்களிடமும், குடிபடைகளிடமும், எளியவர்களிடமும் அன்பு செலுத்தி பலப்பல உதவிகளும் செய்து, அவ்ர்களுக்கு அறங்கூறும் அவ்வையாக இருந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நற்பெயர் பெற்று வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக செப்பேடு இன்றும் ஈங்கூர் புலவன் புதூர் பழனிச்சாமி கவுண்டரிடம் உள்ளது என்கிறார் புலவர்,முனைவர் திரு செ. ராசு.

2. புலமை பெற்ற புகழுடையோர்

“பெண்ணுரிமை பற்றிப் பெரிதாகப் பேசப்பட்டும், பெண் முன்னேற்றத்திற்குப் பல திட்டங்கள் வகுக்கப்பட்டும் உள்ள இக்காலத்தில் பிற துறைகளைப் போல கவிதை இயற்றும் நல்ல புலமையுடைய பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்” என்கிறார் ஆசிரியர்.

சங்க இலக்கியத்தில் முப்பதுக்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் குறிக்கப் பெற்றிருந்தாலும், இடைக்காலத்தில் மிக அரிதாகவே ஓரிரு பெண்பாற் புலவர்களே இருந்துள்ளனராம்.. ஆனால் கொங்கு நாட்டில் கொங்கு வேளாண் சமுதாயத்தில் இக்காலகட்டத்தில் புலமையுடைய பெண்கள் பலர் வாழ்ந்துள்ளனர் என்கிறார்.

ஐவேலி அசதி அவ்வையார் எனும் கொங்கு வேளாண் குலப்பெண், பெரும் புலவராக விளங்கிய இவரை வரவேற்று பொன் இலையில் உணவளித்துப் பாராட்டியவர் மீது “சேனைத் தலைவனை செங்கோல் அசதியை” என்று புகழ்ந்து பாடியுள்ளார். அசதியைப் பாடிய அவ்வையாருக்கு, கோயில் கட்டி வழிபாடு நடத்தியுள்ளனர்.

16ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த, திருச்செங்கோட்டுக் கலம்பகம் பாடியவருள் ஒருவரான பூங்கோதை சிறந்த புலமையும், கணக்கறிவும் பெற்று கணக்கு அலுவலராக இருந்ததை செப்பேடு கூறுகிறது என்கிறார்.

“கண்ணொளி கதிரொளி” என்ற சமய இலக்கியம் பாடியவருள் ஒருவரான சின்னமமையார், பவானிக் கோவில் திருப்பணி செய்தவர் போன்ற விவரங்கள், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது என்கிறார்.

சிவன்மலையாண்டவர் மீது பல பாடல் தொகுதிகளையும், தம் கணவரின் குதிரைச் சவாரித் திறமை குறித்தும் பாடல் பாடியுள்ள வள்ளியாத்தாள் தமிழ்க்கவி பாடும் ஆற்றல் கொண்ட திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசுவரர் கோவிலில் பணிபுரிந்த அழகு நாச்சி, பேரூர்ப் பட்டீச்சுரர் கோயில் பற்றிய சிறு பிரபந்தங்கள் மற்றும் பழனி, பச்சைத்தாய் பதிகம், பட்டிநாதர் பதிகம், அமிர்தச்ரக்கும்மி, பேரூர் வெண்பாமாலை, மரகதவல்லி பதிகம் போன்ற பாடல்கள் பாடிய துளசியம்மாள், போன்றவர்கள் பற்றிய சுவையான தகவல்களும், அவர்கள் இயற்றிய சில பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

3. பாடல் பெற்ற பழையகோட்டை மகளிர்

தமிழ்நாட்டில் மூவேந்தருக்கும், வேறு எந்த குறுநில மன்னர்கட்கும் இல்லாத தனிப்பெருமையாக பழையகோட்டை பட்டக்காரர் மரபினரை ஐம்பதிற்கும் மேற்பட்ட புலவர்கள் பாடியுள்ளனர். அதில் பல மகளிரும் அடங்குவர் என்கிறார்.

பட்டாபிஷேகத்தில் பங்கு, சிவகாமியின் சிவபக்தி, பத்தினி முத்தாத்தாள் பரிவு,
1895ம் ஆண்டில், மாவட்ட ஆட்சியரிடம் நேரில் விவாதித்து, பழைய கோட்டையைப் பாதுகாத்த வான்புகழ் கொண்ட வள்ளியாத்தாள், பெருங்கொடை அளித்த பெரியாத்தாள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஜான்சி ராணி போல, வீரமங்கை வேலுநாச்சியார் போல குதிரையில் பயணம் செய்து பண்ணைய வேலைகளைக் கவனித்த வஞ்சியாத்தாளின் வாழ்வு நெறி போன்ற பல சுவாரசியமான தகவல்களும், சில பாடல்களும் கொடுத்து சுவைபட விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எத்த்னைநாள் இருந்தாலும் எள்ள்ளவும்
மனம்குன்றாது இனிமையாக
சுத்தமுள கம்பமுதும் பசுந்தயிரும்
காய்கறிகள் ருசியாய்த்தந்து
உத்தமக்கா மிண்டரெனும் கந்தன்
சக்கரையார்க்கு உவந்துவந்த
பத்தினிமுத் தாத்தாளின் பக்தியைநான்
என்னென்று பகருவேனே.

என்று கந்தன் சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியார் மனைவி முத்தாத்தாள் மனையில் விருந்துண்ட ஒரு மருத்துவர் புலமை பெற்ற புலவர் பாடியுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

4. புலவர்களைக் காத்துப் புகழ்கொண்டோர் என்னும் தலைப்பில் “கொடை கொடுத்த கொடை” என்று சொல்லக்கூடிய இன்றும் நிலைத்து வாழுகின்ற தமிழ் இலக்கியச் செல்வங்களை பழந்தமிழ் மன்னர்களும், மக்களும் பொருள் உதவி செய்து காத்து வந்த புலவர்களின் மூலமே கிடைக்கப் பெற்றோம் என்றும், இத்தகு சீரிய செயல்களில் கொங்கு வேளாளர் குலத்துப் பெண்களும் தங்கள் பெயரை நிலைநாட்டி இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளனர் அவர்களிடம் கொடையைப் பெற்ற புலவர்கள் தம் பாடலில் அவர்களின் கொடைச்சிறப்புக்களைப் பாடியுள்ளனர் என்று ஆசிரியர் கூறுகிறார்.

தாய்போன்ற பூந்துறைத் தெய்வானை, பார்புகழ் கொண்ட பழனியம்மாள், ஈஞ்சம்பள்ளி பச்சையம்மாள் ஈகைத்திறம், சீர்மிகக் கொண்ட சின்னம்மாள், யாரும் அளிக்காத அருங்கொடையாக தாம் அணிந்திருந்த தாலியைக் கழற்றி வழங்கிய சம்பந்தச் சக்கரையார் மனைவி,போன்று பல மகளிரை புலவர்கள் போற்றிப்பாடிய பாடல்களுடன் குறிப்பிட்டிருப்பது சுவையான தகவல்கள்...

வடமொழியிலும் வல்லமை பெற்ற பெண்கள் பற்றிய வரலாறு சுவாரசியமான தகவல்கள் கொண்டதாக அமைந்துள்ளது சிறப்பு..

தொடரும்.
--

3 comments:

  1. கொங்கு என்றால் தேன் அல்லவா? கொங்கு பற்றியப் புத்தகம் இனிமையாகவே இருக்கும். அறிமுகத்துக்கு நன்றி. அட்டைப்படம் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  2. உங்கள் பதிவு ஆர்வத்தைக் கிளறிவிட்டது. பழையகோட்டை மகளிர் பற்றி வேறே ஏதாவது எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா? நெட்டில் தேடினேன், மேலோட்டமான விவரங்களே கிடைக்கின்றன.

    ReplyDelete
  3. அன்பின் திரு அப்பாதுரை சார்,

    மன்னிக்க வேண்டும், இறுதியில் நான்கு வரிகள் விட்டுப் போயிருந்திருக்கிறது. கவனிக்காமல் விட்டு விட்டேன். விரைவில் அடுத்த பகுதியை போட்டு விடுகிறேன்.

    பழையகோட்டை மகளிர் பற்றி நான் குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் சின்ன சின்ன நிகழ்வுகள் அந்தத் தலைப்பையொட்டி கொடுத்திருக்கிறார். தங்களுக்கு அவசியம் என்றால் முழுவதையும் தட்டச்சி உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன்...நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி.

    ReplyDelete