Monday, July 2, 2012

இன்&அவுட் சென்னை பத்திரிக்கையில் என் சிறுகதை- இரட்டை முகம்




THANKS TO

& OUT CHENNAI MAGAZINE
















இரட்டை முகம்!

பனிக்காலம் முடிந்து கோடை தொடங்கி விட்டது. மழை விட்டும் தூவானம் விடவில்லை.கோடை மழை,வெப்பத்தைச் சற்று குறைத்ததனால் அசந்து தூங்கி விட்டாள் செல்வி. மேற்கூரையின் வேய்ந்த ஓடுகள், இரவு அடித்த பேய் மழையும், காற்றும் சேர்ந்து லேசான இடைவெளி விட்டிருந்தது. அதனூடே மெல்ல எட்டிப் பார்த்த கதிரோனின் வீச்சில் ஒரு வரி முன்னெற்றியிலும், இடது கண்ணிலும், ஒடுங்கிய கன்னத்திலும் பட்டு, ஆழ்ந்த நித்திரையிலிருந்தவளை முகச் சுளிப்போடு விழிக்கச் செய்தது.

அடடா, வெய்யில் வந்துவிட்டதா....நேரம் போனதே தெரியவில்லையே! வேலைக்குப் போகனுமே என்று வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள் செல்வி. வீடே நிசப்தமாக இருந்தது ஏன் என்று தெரியவிலை. அம்மாவும், அண்ணனும் வேலைக்குச் சென்றிருப்பார்களோ....

அண்ணன் பெயிண்டர் வேலைக்கும், அம்மா சித்தாள் வேலைக்கும் போவதனால், காலை 8 மணிக்குள் கிளம்பாவிட்டால் மேஸ்திரியிடம் சென்று வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். இரண்டு பேருந்து மாறி செல்ல வேண்டும். ஆகவே நேரத்தோடு இருவரும் இளம்பி விட்டார்கள் போல

பணிக்குச் செல்ல நேரம் கடந்து விட்டது, விரைவில் கிளம்ப வேண்டும் என மனம் பணித்தாலும், உடல் அசைந்து கொடுக்கவில்லை..........
--
’என்னது... இது உடம்பு இவ்வளவு கனமாக இருக்கிறது. ஒரு இரவிற்குள் அப்படி என்னதான் ஆகியிருக்கும். அடித்துப் போட்டது போல அசதி வேறு...தலைப்பாரம். தன் மீதிருந்து தனக்கே அனல் வீசுவது போல..பிரம்மையோ?’

அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது, இரவு ப்டுக்கப் போகுமுன் அம்மா சொன்னது.

‘செல்விம்மா, உடம்பு அனலா கொதிக்குதும்மா. காய்ச்சல் நிறைய இருக்கும் போல, இந்த கஞ்சியை குடிச்சிப்பிட்டு மாத்திரையை போட்டுக்கிட்டு படுத்துக்க சாமி.. நாளைக்கு முடிஞ்சா வேலைக்குப் போ, இல்லாட்டி வயித்துக்கு கஞ்சியை குடிச்சிப்பிட்டு நல்லா தூங்கு. டாக்ட்ர் ஊட்டு அம்மாகிட்ட நான் சொல்லிப்புடறேன்...நீ வேலைக்குப் போகத் தேவல..’

‘இல்லம்மா. டாக்டர் வீட்டிற்கு ஒறம்பற [விருந்தாளிகள்] வந்திருக்காங்க...இன்னைக்கு லீவு எடுத்தா அந்தம்மா கண்டபடி கத்தும். நாளைக்கு மின்னைக்கு அந்தப் பக்கமே போவ முடியாது’

கஸ்தூரிக்கு பதில் பேச முடியவில்லை. அவளுக்கும் தான் அந்த டாக்டர் ஊட்டு அம்மாவைப் பத்தி தெரியுமே. ஒரு நாள் வேலைக்குப் போகாட்டாலும் ஆளு வந்துவிடும். வாட்ச்மேன் ஐயன் வந்திடுவாரே கையோடு கூட்டிச் செல்வதற்கு. அந்த டாக்டர் வீட்டு அம்மா பேசுகிற பேச்சு தெருவையே கலக்கும். அந்த அம்மாவின் கடுஞ் சொல்லிற்கு அஞ்சியே அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வர பலரும் அஞ்சுவர். இத்தனைக்கும், சம்பளம் என்று பார்த்தால், மற்ற வீடுகளில் கொடுப்பதை விட ஒரு பங்கு அதிகமாகவே கிடைக்கும். ஆனால் அதற்குத் தகுந்த வேலையும் இருக்கும். அந்த அம்மாவிற்கு வீடு பளபளவென கண்ணாடி போல இருக்க வேண்டும். வீட்டைக் கூட்டி மெழுகி முடித்தவுடன், காலிலிருக்கும், காலணியை (வீட்டில் பயன் படுத்தும் பிரத்யேக காலணி) கழட்டி வைத்து விட்டு, தேய்த்து, தேய்த்து நடந்து பார்ப்பார்கள். ஒரு சிறு மண் துகள்களோ, குப்பையோ காலில் பட்டால் அவ்வளவுதான்.....வசவு ஆரம்பித்து விடும். ’என்னத்த வீடு கூட்டுற.....’ என்று பெரும் பாட்டாக வரும்.

அழகான அந்த கரும் பசசை வண்ண பளபளக்கும் கிரானைட் கல் எங்கேனும் ஒரு துளி அழுக்கு இருந்தாலும் போதும் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்து விடும். இனி தாமதிக்க முடியாது என்ற ஞானோதயம் வர, சட்டென ஒரே மூச்சில் தம் கட்டி எழுந்திருக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றாள். மெதுவாக அப்படியே பொடக்களைப் பக்கம் சென்றவள் தட்டியின் கயிற்றுத் தாழ்ப்பாளை மெதுவே உறுவி, ஒடுங்கிப் போன ஹைதர் அலி காலத்திய அலுமினிய குவளையை எடுத்து தண்ணீர் மோந்து, கோபால் பல்பொடி போட்டு பல் துலக்கி, காலைக் கடன்களை முடித்து விட்டு தள்ளாடியவாறு வேளியே வந்தாள்.(வழக்க்ம் போல இன்றும் சம்பளம் வந்தவுடன் முதல் வேலையாக இந்த ஓட்டை குவளையை மாற்றி பிளாஸ்டிக் மக் வாங்க வேண்டும்) என்ற உறுதி மொழியோடு கழிவறையை விட்டு வெளியே வந்தாள்.

அம்மா கலையத்தில் வைத்துச் சென்ற கஞ்சி அவளைப் பார்த்து சிரித்தது......

‘நல்ல நாளிலேயே உனக்கு என்னைக் கண்டால் ஆகாது. இன்று காய்சல் அடித்த வாய் வேறு...கசப்பு கொடுக்கத்தானே செய்யும். என்னைச் சீந்தவா போகிறாய்’ என்பது போலப் பார்த்தது....

செல்வியோ, வெறும் வயிற்றில் மாத்திரை போட முடியாதே என்று பல்லைக் கடித்துக் கொண்டு நான்கு வாய் கஞ்சியைக் குடித்துவிட்டு மாத்திரையைப் போட்டுக் கொண்டாள். டாக்டர் வீட்டில் வேலை செய்வதில் இன்னொரு புண்ணியம், சகல வித வலிகளுக்கும் நிவாரணிகள் இலவசமாகக் கிடைக்கும்......எப்ப்டியோ டாக்டர் வீட்டிற்குப் போனால் சாப்பிட ஏதாவது மிஞ்சிப் போன காலைப் பலகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

மாத்திரை போடவும், காய்ச்சல் கொஞ்சம் குறைந்து வேர்த்து விட்டது. வேலைக்குக் கிளம்பத் தயரானாள். அப்போதுதான் அவர்கள் வீட்டின் விருந்தாளியாக வந்திருந்த அந்தப் பையனின் கழுகுப் பார்வை அவளுக்கு நினைவிற்கு வந்து சங்கடப்படுத்தியது..... பாழாய்ப்போன பதின்ம வயதின் பளபளப்பு....பன்னிக்குட்டிக் கூட அழகாய்த் தெரியும் பருவம்...

பதின்மம்.. ஒட்டிய கன்னமும், மாநிற்முமாக இருந்தாலும், பூசியவாறு சதையும், லேசான பளபளப்பும், உடல் முழுவதும் பெரும் மாற்றத்தின் துள்ளலும் பார்க்கின்ற வக்கிரமான கண்களுக்கு தீனிப் போடத்தான் செய்கிறது....எங்கு சென்று எதை மறைப்பது...எப்படி மறைப்பது. அந்தப் பார்வையின் வீச்சு தாங்காமல், ஆடையே நழுவி வீழ்ந்ததுபோல் கூனிக் குறுகி, இந்த வேதனை பாழாய்ப்போன அந்த கழுகுக் கண்களுக்குத் தெரியவா போகிறது.... குனிந்து வீடு பெருக்கக் கூட சங்கோஜம்....எங்கிருந்தோ இரண்டு புண்கள் [கண்கள்] தன்னையே நோட்டம் விடுவது போல ....சே,என்ன கொடுமை இது. இன்னும் எத்தனை நாள் இந்தக் கழுகு அங்கே இருக்கும் என்று தெரியவில்லையே,சென்று ஒழிந்தால் தேவலாம் போல இருந்தது அவளுக்கு..ஏழ்மையின் ரணத்தைவிட இந்தக் கொடுமை சற்று அதிகம்தான். அம்மாவிடம் சொன்னால் பாவம் ரொம்பவும் வருத்தப்படுவார்கள்.

அம்மாவிற்கு என்னமோ தன் செல்ல மகள் ஆபீஸ் உத்தியோகம் பார்ப்பது போல ஒரு நினைப்பு.. தன்னைப் போல வெய்யிலிலும், மழையிலும், கல் மண் சுமந்து சிரமப் படக்கூடாது என்றுதானே தன்னோடு வேலைக்கு வரக்கூடாது என்று பிடிவாதமாக டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டார்கள்.

அங்கேயும் இப்படி ஒரு பிரச்சனை என்று சொன்னால், அம்மா பாவம் என்ன செய்ய முடியும்? வேலையை தூக்கி எறிந்துவிட்டு வா என்று சொன்னாலும்,இது போன்ற கழுகுகள் இல்லாத இடம்தான் ஏது? எவ்வளவு நாள் ஓடி ஒளிய முடியும். சரி இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்பது புரிய,பரபரவென புறப்பட ஆயத்தமானவள், அன்று ஏனோ முதல் முறையாக துப்பட்டாவைத் தேட ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போகிற அவசரத்தில் பெரும்பாலும் துப்பட்டாவை மறந்து விடுபவள், புதிதாக இருந்த துப்பட்டாவை எடுத்து அழகாக போட்டு,மறக்காமல் பின் குத்தி வைத்தாள். வீட்டை பூட்ட மறந்தவள், நாலு எட்டு எடுத்து வைத்தவுடன் நினைவுவர, திரும்ப ஓடி வந்து சாவியை எடுத்து பூட்டிவிட்டு அதை எறவானத்தில் சொறுகி விட்டு, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே, இந்த பொக்கிச அறைக்கு ஒரு பூட்டு, அதற்கு ஒரு சாவி வேறு என்று நினைத்துக் கொண்டே, பரபரவென நடக்க ஆரம்பித்தாள். நாலு எட்டு வைத்தவுடன், வாட்சுமேனை பார்த்து விட்டாள்.

‘ என்னாச்சு, இவ்வளவு நேரமா, வேலைக்கு வர, அம்மா கோபமா இருக்காங்க...’

‘அண்ணே, நேத்தெல்லாம் ஒரே காய்ச்சல். இப்போதான் மாத்திரை போட்டுக்கிட்டு வரேன்’

‘சரி சரி, ஆனா விருந்தாளிக வந்திருக்கிற நேரத்தில இப்படி லேட்டா வந்தா திட்டுவாகல்ல’

‘ஆமாண்ணே, அதான் பயம்மா இருக்கு’

‘சத்தமில்லாம போய் வேலையைப் பாரு, விருந்தாளிங்க முன்னாடி ரொம்ப வைய மாட்டாக’

‘ சரிண்ணே......’

வீட்டிற்குள் காலடிவைக்கும் போதே கொல்லென்ற சத்தம். அனைவரும் பட்டாசாலையில் உட்கார்ந்து சினிமா படம் பார்த்துக் கொண்டு சத்தம் பண்ணிக் கொண்டிருந்தனர். நல்ல வேளை இந்த சத்தத்தில் அம்மா திட்டினால் கூட இவர்களுக்கு காது கேக்காது......சத்தம் நல்லதுதான் என்று எண்ணிக் கொண்டே மெதுவாக சமயலறைப் பக்கம் சென்றாள். எப்படியும் திட்டு விழும் என்ற பயத்துடனேயே மெதுவாக அடி மேல் அடி வைத்து சென்றாள். எந்த சாமி புண்ணியமோ, அம்மா திட்டுகின்ற மூடில் இல்லை. திரும்பி, ஒரு முறை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு, முறைத்து விட்டு, திருப்பிக் கொண்டார்கள். என்ன நினைத்தார்களோ,

‘ ஏய் இங்க வா, என்ன குளிக்கலையா....நேத்து உடுத்தின துணியோட வந்திருக்க...அதுவும் புதுசா துப்பட்டாவெல்லாம் போட்டுகிட்டு., ஒரு மார்கமாத்தான் இருக்க.....பெரிய அழகு ராணியா நீங்க..... உங்க அழகை பாத்து இங்கே எல்லாம் கண்ணு வைக்க க்யூவுல நிக்கிறாங்களாக்கும்’இதுல ஒன்னியும் குறைச்சல் இல்ல. இந்த புத்தியெல்லாம் வந்தா நீ எங்கெ ஒழுங்கா வேலை செய்யப் போற... போ..போ...போய் பாத்திரத்தை சட்டுனு கழுவி எடுத்துட்டு வா..’

கொல்லைப்புறம் மலையாகக் குவிந்து கிடந்தது பாத்திரங்கள். மலைப்பாக இருந்தது....எப்பத்தான் கழுவி எடுக்கப் போறோமோ, கடவுளே.....வெய்யில் வேற.தலை வலிக்க ஆரம்பித்திருந்தது. இருந்தாலும்,அந்தக் கழுகுப் பார்வைக் கரடிக்கு இந்த சூரிய பகவானின் உஷ்ணமே தேவலாம் போல இருந்தது. மெதுவாக பாத்திரங்களைத் துலக்க ஆரம்பித்தாள்.

‘செல்வி....என்ன பண்றெ அங்கே.. சட்டுனு கழுவி எடுத்துட்டு வா பாத்திரத்த...வீடு கூட கூட்டாம கிடக்கு..’

அடக் கடவுளே, வீடு பெருக்கி துடைக்க வேண்டுமா.. அந்த நாய் போய் தொலைச்சப்புறம் கூட்டலாம் என்றால் இந்த அம்மா வேற.. இதுகிட்டசொன்னா புரிஞ்சிக்கவா போகுது.... என்னையே திட்டும் திருப்பி..

விதியை நொந்து கொண்டு சாமான்களை கழுவி திட்டுமேல் தண்ணீர் போக கவிழ்த்து வைத்து விட்டு அந்த இடத்தை சுத்தமாக அலம்பிவிட்டு, பாத்திரங்களை துடைத்து உள்ளே எடுத்துச் சென்றாள். நன்கு பளபளப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் அந்த அம்மா திருப்பி, திருப்பி எங்காவது அழுக்கு கண்டுபிடிக்க ஆலாய்ப் பறக்கும்.......

’செல்வி.....வந்துட்டியா, சரி எல்லாத்தையும் இங்கே வைத்துவிட்டுப் போய் சட்டுனு வீட்டை சுத்தம் பண்ணு’

‘சரிங்கம்மா...’

’ என்ன...ஏன் இழுத்துக்கிட்டு நிக்கற போய் வேலையைப் பாக்கலாமில்ல’

‘ இல்லம்மா...கொஞ்சம் தலை வலியா இருக்கு, கொஞ்சம் டீ தறீங்களா..’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

‘ வந்ததே லேட்டு, இது வேறயா..வரும் போது குடிச்சிடு வரலாமில்ல,..சரி இரு தறேன்..’

சூடான, டீ தலை வலியை சற்று போக்கியது. அதெல்லாம் அம்மா நல்ல டீதான் தருவாங்க....ஒவ்வொரு வீட்டில வீட்டுக்காரங்களுக்கு தனியா,நல்ல டீயும், வேலைக்காரங்களுக்குத் தனியா தண்ணி டீயும் போடுவாங்க. ஆனா அம்மா அந்த விதத்துல ரொம்ப நல்லவங்க. அவிங்க என்ன சாப்பிட்றாங்களோ அதைத்தான் எனக்கும் தருவாங்க..

கடவுளே அந்த பையன் எங்காவது போய் தொலைஞ்சிருக்கனுமே...வீடு பெருக்கி, மொழுகுற வரைக்குமாவது இல்லாம இருந்தா தேவலையே....

அப்பாடி...ஆளைக்காணோம். சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு போக வேணும். சரியா செய்யாட்டாக் கூட பரவாயில்ல...இன்னைக்கு அம்மாகிட்ட திட்டு வாங்கினாலும் பரவாயில்ல...எப்படியோ வேலை முடிஞ்சா சரி.

அப்பாடி, இத்தனை பெரிய ஹால், கூட்டி மெழுகறதுக்குள்ள இடுப்பே க்ழண்டு போகுது சாமி......ஆச்சு இன்னும் இரண்டு அறைதானே, பெரிய வேலை முடிஞ்சிடும்..

அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.சாதாரணமா போற போக்கில செய்யற வேலையெல்லாம் இன்னைக்கு இவ்வளவு சிரம்மா இருக்கு.. எல்லாம் இந்த காச்சல் படுத்துற பாடு..ம்ம்.....

குச்சியில் துடைத்தால் அழுக்கு போகாதாம், அதனால் துணியை வைத்து நன்றாக குனிந்து, அழுத்தி துடைக்கனும் அப்பத்தான் நல்லா அழுக்கு போகுமாம்...

படுக்கை அறை திறந்துதான் இருந்தது. போய் கூட்டி மொழுகிடலாம் என உள்ளே சென்றாள். அலங்கோலமாகக் கிடந்தது அறை. குளியல் அறையில் தண்ணீர் சத்தம். யாரோ குளிப்பார்கள் போல.....சீக்கிரம் அவுக வரதுக்குள்ள வேலையை முடிச்சிபிடலாம் என அவசர அவசரமாக கூட்டி முடித்தாள். மொழுகுவதற்காக துணி எடுத்து அலசிப் பிழிந்து குனிந்து மொழுக ஆர்ம்பித்த போது......

முதுகில் ஏதோ குறுகுறுப்பாக உணர முடிந்தது.சோப்பு வாடை வேறு கும்மென வந்தது.....ஏதோ புரிந்தது போல திரும்ப யத்தனிப்பதற்குள்.. அந்த முரட்டு உருவம் அவள் மீது பாய, தன்னால் முடிந்த மட்டும் பலமாக தள்ளி விட்டவள், ஒரு கணமும் தயங்காமல், துணியை அங்கேயே வீசி விட்டு ஓடினாள். இதற்கு மேல் பேசாமல் இருந்தால் தப்பாகிவிடும் என்று அம்மாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஓடினாள்.

அம்மா சமயலறையில் அவசரமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். சென்ற வேகத்தில் அம்மா.....என்று மிகவும் பரபரப்பாக அதே படபடப்புடன் கூப்பிடவும், என்னவோ ஏதோவென்று படாரென திரும்பியவர் கையில் இருந்த வெண்ணெய் போல, அதை அப்படியே ச்மயலரை சிங்க்கில் கொட்டிவிட்டார்கள். செல்விக்கு கை காலெல்லாம் நடுங்கி விட்டது....

அந்த அம்மாவோ அவள் சொல்ல வந்ததைக் கேட்காமல் வெண்ணெய் கொட்டி விட்டதே என்ற கோபத்தில், ‘அடி நாயே, அறிவில்லை. எதுக்கு அப்பிடி கத்துற’ என்று சொல்லிக் கொண்டே,

அடடா இத்தனை வெண்ணெய்யும் கொட்டி விட்டதே. சிங்க் வேற கழுவவே இல்ல...சொல்லிக் கொண்டே அந்த வெண்ணெயை அப்படியே அள்ளி பாத்திரத்தில் போட்டு கழுவ ஆரம்பித்தார்கள். இதனைக் கண்ட செல்விக்கு பேரரதிர்ச்சியாக இருந்தது...சுத்தம், சுத்தம் என்று வாய் கிழிய பேசுபவர்கள் இப்படி தொட்டிக்குள் விழுந்த வெண்ணெயை எடுத்து வைத்துக் கொள்கிறார்களே.......

தான் சொல்ல வந்ததை இனிமேல் இவர்களிடம் சொல்லி ஆகப் போவது ஒன்றுமில்லை என்று முடிவு செய்தவள், வாய் பொத்தி மௌனமானாள்..














2 comments:

  1. கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அன்பின் திரு அமரபாரதி,

    மிக்க நன்றி. வணக்கம்.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...