Monday, September 24, 2012

வினை தீர்க்கும் விநாயகர்


பவள சங்கரி

 இந்த முறை விநாயகர் சதுர்த்தி வழக்கம் போலவே மிகச்சிறப்பாக கொண்டாடினோம். விநாயகரை வணங்கும்போது நம் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். 


இளம் வயது முதல் அன்றாட வழிபாட்டில் பொருள் அறியாமலே பாடிவந்த விநாயகர் அகவல். ஒரு குறிப்பிட்ட வயதில் பொருள் உணர்ந்து பாடும் போது ஒவ்வொரு வரியும் பிரம்மிப்பைக் கொடுத்தது உண்மை. சித்தாந்தக் கருத்துகளின் சாரமாக விளங்குவது விநாயகர் அகவல் என்று ஆன்றோர் சொன்னதன் பொருளும் விளங்க ஆரம்பித்தது. இளமை முதல் அசை போட்டதின் விளைவு  விநாயகர் அகவலின் ஞான வாசல்கள் மெல்ல மெல்லத் திறக்க ஆரம்பித்தபோது பெற்ற அந்த பரவசநிலை சொல்லில் அடங்காது. தத்துவ வாழ்வின் வாசல்களுக்கு வழியமைத்துக்கொடுக்க வல்லது விநாயகர் அகவல் என்பதை உணரச் செய்தது. நம்பியாண்டார் நம்பிகள் வாழ்ந்த 516ம் நூற்றாண்டு காலங்களிலேயே பொல்லாப் பிள்ளையார் தமக்கு அருளிய வரலாறு மூலமாக, விநாயகப் பெருமானை ஆதி காலந்தொட்டே வழிபட்டு வந்திருப்பது அறிய முடிகிறது. எந்த சிற்பமோ அன்றி படமோ, எதுவும் இல்லாமலே கூட மிக எளிமையாக அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் மஞ்சள் தூள் கொண்டே பிள்ளையார் பிடித்து வைத்து அவரை எழுந்தருளச் செய்து மன நிறைவுடன் வணங்க முடியும். அதனாலேயே விநாயகர் நம்மோடு ஒன்றிய தெய்வமாகிவிடுகிறார்.


பாலும் தெளிதேனும் பாகும்பருப்பும்
இவைநான்கும் கலந்துனக்கு
நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக்கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா!


என்று உரிமையுடன் கேட்கக்கூடிய கடவுள் அவர்தான்.



விநாயகருக்கு மிகவும் பிடித்த பாடல் அகவல். விநாயகரே ஔவைப்பிராட்டியார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும்படி பணித்து, இரசித்துக் கேட்ட பாடல் இது என்பர்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் உற்ற நண்பர், சேரமான் பெருமான் நாயனார். ஒரு சமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறத்தில் நாட்டம் இன்றி, வெறுப்புற்று கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்கும் பேராவல் கொண்டு, தீவிர வழிபாடு செய்து வந்தார். சிவ பெருமான் அவர்தம் வழிபாட்டில் மனமகிழ்ந்து, அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்லும் பொருட்டு ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் யானை மீது அமர்ந்து கைலாயம் நோக்கிக் கிளம்பி விட்டார்.

அப்போது வெளியில் சென்று திரும்பிக்கொண்டிருந்த சேரமான் பெருமான் நாயனார் வானத்தில் ஐராவதத்தின் மீது அமர்ந்து பறந்து செல்லும் அதிசயத்தைக் கண்டார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லாதலால் தானும் தன் குதிரையில் ஏறி, அதன் காதில் "சிவாயநம' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை மொழிந்த மாத்திரத்தில் அம்மந்திரத்தின் மகிமையால் அக்குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது..

 சுந்தரரும், சேரமான் பெருமான் நாயனாரும் பறந்து சென்று கொண்டிருப்பதை, விநாயகர் பூஜையில் இருந்த ஔவையார் பார்த்துவிட்டு,  தன்னால் அப்பனை தரிசிக்க செல்ல முடியவில்லையே என வருந்தினார். அப்போது, விநாயகப் பெருமான் தோன்றி, “கவலை வேண்டாம், தமிழ் மூதாட்டியே. உம்முடைய அன்றாட வழிபாட்டை முடித்துவிட்டு வா. அவர்களுக்கு முன் நீ கைலாயம் சென்று சேர்வதற்கு நான் வழி செய்கிறேன்.” என்று சொன்னதைக் கேட்ட அவ்வையார், பெரிதும் மனம் மகிழ்ந்து, .
"சீதக்களப' எனத் தொடங்கும் அகவலைப் பாடினார். அதனைக் கேட்டு மகிழ்ந்த  விநாயகப் பெருமான் அவ்வையாரைத் தம் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் சென்று சேர்வதற்கு முன்பாகவே கைலாயம் கொண்டு சேர்த்து விட்டார். முழு முதற்கடவுளான விநாயகரை வணங்குவோர் அனைத்திலும் முதன்மை பெற்று இருப்பார்கள் என்கிறார் அவ்வையார். அத்தகைய பெருமைக்குரிய தெள்ளுத்தமிழ், விநாயகர் அகவல் இதோ:.

சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் .   
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்னும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும் .   
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிரே!
முப்பழம் நுகரும் மூசிக வாகன

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் .   
தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
.   
 குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் .   
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே .
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரி எட்டு நிலையும் தெரிசனப் படுத்தி   
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து     
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் செவியில்

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி.
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே! .


நன்றி : வல்லமை வெளியீடு

No comments:

Post a Comment