Monday, October 1, 2012

காந்தி கண்ட ராமராச்சியம்பவள சங்கரி

1869ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 2,) அண்ணல், மகாத்மா, தேசப்பிதா, என்று அன்புடன் அழைக்கப்படுகிற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நம் இந்திய அன்னையின் செல்ல மகனாக அவதரித்தார். நம் நாடு மட்டுமன்றி, உலக நாடுகள் பலவும் அண்ணலை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டதன் முக்கிய காரணம் அவருடைய சத்தியாகிரகம் என்ற அறவழிப் போராட்டம்தான். குஜராத் மாநிலத்தில் கரம்சந்த காந்தி மற்றும் புத்லிபாய் என்ற பெற்றோருக்கு மகனாகப் பிறந்த இவருக்கு தம் 13ம் வயதிலேயே அன்னை கஸ்தூரிபாயுடன் திருமணம் நடந்தது. இங்கிலாந்தில் தம் வழக்குரைஞர் (பாரிஸ்டர்) படிப்பை முடித்து, மும்பையில் சில காலம் பணியாற்றினார். பிறகு ராஜ்காட்டில் சிலகாலம் ப்ணிபுரிந்து, அங்கிருந்து 1893 ஏப்ரல் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் பணிபுரியச் சென்றார். தென்னாப்பிரிக்காவின் நிகழ்வுகளே இவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஆங்கிலேயர் ஆட்சியினால், இனப்பாகுபாடும், மதவெறியும் மக்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டு மனம் நொந்தவர், போராட்டத்தில் ஈடுபடத்துவங்கினார்.


ஒருமுறை பிரிட்டோரியா நகருக்குச் செல்லும் பொருட்டு, தொடருந்தில், முதல் வகுப்பில் தகுந்த பயணச்சீட்டுடன் பயணித்தாலும், தான் ஒரு வெள்ளையராக இல்லாத காரணத்தினால் , அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்ச்சி அவர் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை எதிர்த்து, அதன்மூலம் மக்களுக்கு தங்கள் உரிமையைப் பெறவேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1906ம் ஆண்டு, ஜோகானாஸ்பர்க் நகரில் முதன் முறையாக ஒத்துழையாமை, சத்தியாகிரகம் என்ற அறவழியில் போராடியதன் மூலமாக தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் சமூக வாழ்வை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். இதற்காக காந்தியுடன் சேர்ந்து பலரும், பலமுறை சிறைவாசமும் செய்ய வேண்டியிருந்தது. இறுதியில் வெற்றியும் பெற்று இந்தியா திரும்பினார். 1920ம் ஆண்டு, ஒத்துழையாமை இயக்கம் மூலம், அன்னிய பொருட்களை புறக்கணித்தல், மதுபானக்கடைகள் முன் மறியல் செய்தல் போன்றவற்றில் பெண்களும் பங்கெடுத்தனர். இராட்டை வைத்து நூல் நூற்று கதர் துணி நெய்தலிலும் ஈடுபட்டனர். இதனால் இந்திய மக்கள் பொருளாதார முன்னேற்றம் பெறவும் வழிவகுத்தார். ஆங்கிலேய அரசிற்கு நட்டமேற்படவும் வழிவகுத்தது.

இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து 1921ம் ஆண்டு அதன் தலைமைப் பதவியையும் ஏற்றார். ரவீந்திரநாத் தாகூர், கோகலே போன்றோரின் நட்பும் கிடைத்தது. சுதேசி கொள்கை மற்றும் சத்தியாகிரக கொள்கைகள் மூலமாக் இந்திய தேசிய காங்கிரசில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். அது மாபெரும் விடுதலை இயக்கமாக உருப்பெற்றது. இந்தியர்களால், இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்பிற்கு இங்கிலாந்து அரசு உரிமை கொண்டாடி, அதை வேறு யாரும் விற்கக்கூடாது என்று தடை உத்திரவு போட்டது. இதை எதிர்த்து 1930ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி, அண்ணல் காந்தியடிகள் 78 சத்தியாகிரகப் போராளிகளுடன், அகமதாபாத்திலிருந்து 240 மைல் 23 நாட்கள் நடைப்பயணமாக தண்டி கடற்கரை நோக்கி வந்தனர். அங்கு அவர்களுடன் சேர்ந்து உப்பு காய்ச்சி அதை பொது மக்களுக்கு விநியோகம் செய்ததோடு, தொடர்ந்து அது போலவே தயாரிக்கவும் மக்களை ஊக்குவித்தார். இந்தியாவில் பல இடங்களில் இதற்காக பலர் சிறையிலடைக்கப்படனர். நம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இது ஒரு மைல்கல் எனலாம். இறுதியில் ஆங்கில அரசு உப்பின் மீது போட்ட வரியை விலக்கிக் கொண்டது.

1932ம் ஆண்டில் வைசிராய் வெலிங்டன் மூலமாக அண்ணல் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொதித்தெழுந்தது. கடையடைப்பு, வேலை நிறுத்தம் என்று மக்கள் ஈடுபட்டதால் அடக்கு முறை செய்யப்பட்டது. பல முகியமான பெருந்தலைவர்களும் கைது செய்யப்பட்டதோடு காங்கிரசு குழுவும் கலைக்கப்பட்டது.

 அதற்குப் பிறகு இடைவிடாமல் பல போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திலும் அண்ணலின் பங்கு பெருமளவில் இருந்தது. இதன் முக்கிய அம்சம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் நள்ளிரவில் நம் இந்திய நாடு முழு சுதந்திரம் பெற்றபோதும், இந்திய - பாகிஸ்தான் பிரிவினை அண்ணலை துக்கம் கொள்ளச் செய்தது. பகவத் கீதை மற்றும் சமண சமயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்களால் கவரப்பட்டிருந்தார்.

1902ம் ஆண்டிற்குப் பிறகு பிரம்மச்சரிய விரதம், வாரத்தில் ஒரு நாள் மௌன விரதம், உணவுக் கட்டுப்பாடு, அசைவ உணவை முழுதும் தவிர்த்தல், சத்தியம், அகிம்சை போன்ற பல கொள்கைகளை தம் வாழ்நாள் இறுதிவரை கடைபிடித்தார். 1948, ஜனவரி 30ம் நாள், புது தில்லியில் நாதுராம் கோட்சே என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்ணல் காந்தியடிகள் ’சத்திய சோதனை’ என்ற தம் சுயசரிதையை தமது தாய் மொழியான குஜராத்தி மொழியில் எழுதியுள்ளார். பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில், ரா.வேங்கடராஜூலு என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தம்முடைய சத்திய சோதனைகள் தேடித்தந்திருக்கும் ‘மகாத்மா’ என்ற பட்டத்தை தான் மதிக்கவில்லை என்றும் அப்பட்டம் தனக்கு மன வேதனையைத்தான் அளித்துள்ளது என்பதையும் தம் சுயசரிதையின் முதல் அத்தியாயத்திலேயே கூறுகிறார். கடவுளை நேரில் காண வேண்டும் என்றும், மோட்சம் அடைய வேண்டும் என்பதையே முக்கியமான இலட்சியமாகக் கொண்டிருந்தார். கடவுளைக் காண வேண்டும் என்ற தீவிர வேட்கையில் தம் உயிரையும் தியாகம் செய்ய சித்தமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். சத்தியத்தை நாடிச் செல்பவர்கள் தம்மை தூசியைவிட கீழாக எண்ண வேண்டும் என்கிறார். அந்த அளவிற்கு பணிவுள்ளவராக தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்.

”இளைஞர்கள் அனைவரும் அழகிய கையெழுத்து அவசியம் வேண்டும் என்பதை உணர வேண்டும். குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி அளிக்கும் முன் ஓவியப் பயிற்சி  அளிக்கப்பட வேண்டும். ஓவியம் வரைய பயிற்சி இருந்தால் கையெழுத்தும் அழகாக வரும்.”

“வாய்மையாக இருக்க நினைப்பவன் கவனமானவனாகவும் இருக்க வேண்டும் ”

” ஏழை எளியோரும் இது நம் நாடு என்று எண்ணக்கூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினருக்கும் சமமான வாழ்வு இருக்கும். தீண்டாமை சாபமும். மதுப்பழக்கமும் ஒழிந்திருக்கும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர். மற்ற உலகத்தினரோடு நாமும் அமைதியான வாழ்க்கையைப் பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.”


நன்றி : வல்லமை வெளியீடு

No comments:

Post a Comment