Monday, January 7, 2013

எரிதழல் கொண்டு வா!



பவள சங்கரி

மூடியிருந்த அறைக் கதவின் வழியாக உயிரை உருக்கும் மரண ஓலம். தீயால கருகி எரிந்து துடிக்கும் இறுதி நேரத்து போராட்டம். தெருவில் கூட்டம் கூடிவிட்டது. யாரோ ஆம்புலன்சுக்கும், போலீசுக்கும் போன் செய்தும் விட்டார்கள். படித்தவர்கள் குடியிருக்கும் அரசாங்க, டெலிபோன் குவார்டர்ஸ் பல மாடிக் கட்டிட்க் குடியிருப்பின் அருகில் உள்ள தனி வீடு. காலை ஷிப்ட் முடித்து வீட்டிற்கு  வந்தவர்கள் பக்கத்து வீட்டில் வந்த மரண ஓலமும், எரியும் வாசமும் கண்டு அரண்டு போய் மளமளவென காரியங்கள் செய்து கொண்டிருக்க, அந்த வீட்டின் உரிமையாளர், ஆசிரியை சரசுவதி ஒன்றுமே அசைவில்லாமல் மந்திரித்து விட்டதுபோன்று சுய நினைவின்றி  உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஏதும் புரியாமல் அருகில் சென்று எவ்வளவோ உலுக்கியும், பலனில்லை. ஆம்புலன்சு அருகில் இருந்ததால் அடுத்த சில நிமிடங்களிலேயே வருவதற்குள், தானியங்கி பூட்டு பூட்டிக் கொண்ட அறையை வெளியிலிருந்து திறந்துகொண்டு பொறியாளர் சந்தானமும், லைன்மேன் கார்த்தியும் முந்திக்கொண்டு முதலுதவி செய்ய, அதற்குள் பாதி வெந்த நிலையில் அங்கு துவண்டு கிடப்பது டீச்சரம்மாவின் ஒரே செல்ல மகன் ரகு என்கிற ரகுவரன். இத்தனை கூச்சல், குழப்பத்திலும் எந்த உணர்வுமே இல்லாத சடமாய் உட்கார்ந்திருக்கும் தாயைப் பார்த்து ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. சில மணித் துளிகளில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.  ரகு மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்க, சுயநினைவு அற்ற நிலையில் நடந்தது பற்றி ஏதும் அறிந்து கொள்ள முடியாமல் காவல் துறையினரும், குழப்பத்துடன் சரசுவிற்கும் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தனர்.


கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தன் ஒரே மகன் ரகுவுடன் அதே வீட்டில் குடியிருப்பவர் சரசுவதி. வீடு கட்டிய ஒரே வருடத்தில் கணவன் ஒரு விபத்தினால் இறந்து போக, தன் மூன்று வயது மகனுடன், தானுண்டு தன் ஆசிரியத் தொழிலுண்டு என குனிந்த தலை நிமிராமல், மகனை வளர்ப்பது மட்டுமே தலையாய கடமையாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். காதல் மணம் புரிந்து கொண்டதால் உறவுகள் அனைத்தும் விலக்கி வைத்திருந்தாலும், துணிச்சலோடு வாழ்க்கையை எதிர்கொண்டு மகனையும் நல்ல முறையில் வளர்த்து, நல்லதொரு பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்துக் கொண்டிருப்பவள்.

கூடா நட்பினால் மகனுக்குச் சில கெட்ட்ப் பழக்கங்கள் தொற்றிக்கொண்டுள்ளது என்பதை அக்கம் பக்கத்தாரும், நண்பர்களும் சொன்னபோது பாசம் அதை நம்ப மறுத்துவிட்டது. மகனுக்கு படிப்பில் நாட்டம் குறைந்து வருவது அவன் தேர்வில் வைத்திருந்த நிலுவைகளிலேயே புரிந்தாலும், ஏற்றுக்கொள்வது சிரமமாகத்தான் இருந்தது. கணவனை இழந்து வாழ்க்கையில் அனுபவித்த பலவிதமான துன்பங்களுக்கு வடிகாலாக இருப்பவன் ஒரே செல்ல மகன். அதிலும் ஏதும் பிரச்சனை என்றால் தான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற நிலை அந்தத் தாய்க்கு.

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில், மார்கழி மாதத்துக் குளிர். வாசல் கூட்டித் தெளித்து கோலம் போட்டுவிட்டு நிமிர்ந்தவள் ‘ஐயோ, ஷாலினி.... போயிட்டியே’ என்ற அலறல் கேட்டு நடுக்கத்தில் கோலப்பொடி இருந்த கிண்ணத்தை அப்படியே கீழே போட, போட்ட கோலம் முழுதும் அந்த மாவு பரவி,  அலங்கோலமாகிவிட்டது. என்ன, ஏது என்று புரியாமலே எதிர் திசையில் உள்ள ஷாலினியின் வீடு நோக்கி ஓடினாள். உள்ளே கண்ட காட்சி, இதயத் துடிப்பே ஒரு கணம் நின்று போய்விட்டது. ஆம், அந்தப் பெண் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள். பெற்றோர் அருகில்  செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். அந்த மென்மையான அழகிய முகம், முழி பிதுங்கி, நாக்கு தொங்கி அவ்வளவு விகாரமாக காணவே சகிக்கவில்லை. அடுத்து ஆக வேண்டிய காரியங்கள் மளமளவென நடக்க ஆரம்பித்துவிட்டது. போலீசு வழ்க்காகிவிட்ட நிலையில், துக்கமும், சேர்ந்து கொள்ள ஒருவரையும் பார்க்கப் பிடிக்காமல் அவர்கள் தங்கள் தோட்ட வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள். மெல்ல மெல்ல மக்கள் அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

“ரகு எப்பப் பார்த்தாலும் ரூமில கதவைச் சாத்திக்கிட்டு என்ன பண்றே”

“படிச்சுட்டுதான் இருக்கேன்.. பிராஜெக்ட் ஒர்க் இருக்கும்மா.. சத்தமில்லாம அமைதியா செய்யணும். அதான்......”

“என்னமோப்பா, ஏதோ உனக்கு சகவாசம் சரியில்லாத மாதிரி தெரியுது. அப்பா இல்லாத பையன், தாயோட வளர்ப்பு சரியில்லைன்னு பேரு வாங்கிக் கொடுத்துடாதே... வேற  என்ன நான் சொல்லட்டும்”

“அப்படீல்லாம் ஒன்னும் இல்லைம்மா.. நீங்க வருத்தப்படும் அளவுக்கு இப்ப என்ன ஆச்சு... ஏன் திடீர்னு இப்படி பேசறீங்க....?

“மூன்றாவது வருசம் வந்துட்ட.. ஏற்கனவே நாலு பேப்பர்ல அரியர்ஸ் வச்சிருக்க.. அடுத்த வருசத்திற்குள்ள அதையும் முடிக்கணும். புதுசா அரியர் சேராம இருக்கணும். நீ என்னடான்னா கவலையில்லாம இருக்க... எப்படி கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆவுறது ... சொல்லு?”

“அம்மா, அதெல்லாம் பாத்துக்கலாம். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. என் பிரண்ட் மகேந்திரன் மினிஸ்டரோட நெருங்கிய உறவு. தெரியுமில்லம்மா.. அவன் பார்த்துக்குவான்... “

“என்னப்பா சொல்ற? அதுதான் எனக்கு  பயமா இருக்கு. ஒழுங்கா நீ படிக்காம, அவன் எப்படி பாத்துக்க முடியும்?”

“அதெல்லாம் உங்களுக்குப் புரியாதும்மா.. விடுங்க. நான் பாஸ் பண்ணி, வேலையும் வாங்கிடுவேன். கவலைப்படாதீங்க”

ரகுவின் போக்கும், பேச்சும் புரிபடாமல் இருந்தாலும், அதற்குமேல் அவனிடத்தில் தன் பேச்சு எடுபடாது என்று தெரிந்ததால், கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என்று அமைதி காத்தாள். பேஸ்புக், டிவீட்டர் என்று எப்பொழுது பார்த்தாலும் கதைத்துக் கொண்டிருப்பதும், நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஊர் சுற்றுவதும் என்று ரகுவின் போக்கு நாளுக்கு நாள் வேதனையளிப்பதாகவே இருந்தது. அடிக்கடி போனில் ஏதோ சீரியசாக பேசுவதும், தான் வந்தால் பேச்சை மாற்றுவதும் என்று சந்தேகம் அதிகமாகிக் கொண்டிருந்தது. கணவனின் இழப்பு, முன் எப்போதையும் விட இப்போது மிக அதிகமாக வருத்தத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. ஏதேனும் கேட்டால் எரிந்து விழும் மகனைக் கண்டு வேதனைப் படுவதைவிட தலைக்குமேல் வளர்ந்து நிற்பவனிடம் எப்படி கண்டிப்பது என்பதும் புரியவில்லை. வீட்டில் பேச்சும் கூட வரவர குறைந்து போனது. வெளியில் சுற்றிவிட்டு நேரம் கழித்து வருவது, வீட்டில் இருந்தாலும், ரூமில் கதவை அடைத்துக் கொள்வது என்று பொழுது போய்க்கொண்டிருப்பது சரசுவிற்கு வேதனையை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.

அன்று வகுப்பில் பாரதியின் பாஞ்சாலி  சபதம் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள்.

 துச்சாதனன் ஊரார் வேடிக்கைப் பார்க்க, திரௌபதியின் நீண்ட கருங்குழலைப் பிடித்திழுத்துக் கொண்டு அரச சபைக்கு வருகிறான். மனம் நொந்து சபையிலே அவள்  அழுது துடிக்கிறாள். அதனைத் துளியும் சட்டை செய்யாமல் மீண்டும் அவள் மைகுழல் பற்றி இழுக்கிறான் அந்தக் கிராதகன். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பீமன் தருமனை நோக்கி கடும் சினம் கொள்கிறான்.

சிறுமை கொண்டு பொங்கிய கவிஞன் பாரதி. அடிமைத் தளையில் சிக்குண்டு கிடந்த தமிழ் சமூகத்தை எழுச்சிமிகு தம் பாடல் திறத்தால் வீறு கொண்டு எழச் செய்தவர் பெண்ணடிமை தீர்ந்தால் மட்டுமே நாடு சுபிட்சம் பெறும் என்ற கருத்தினை வலியுறுத்தவே பாஞ்சாலி சபதம் எனும் காவியம் படைத்தான் பாரதி. பாண்டவர்களின் மூத்தோன், தருமன் சூதாட்டத்தில் தம் உடைமைகளனைத்தையும் இழந்ததோடு, இளவல்கள், மனைவி என அனைவரையும் பகடையாக்கி ஆடித் தோற்றான்  பாஞ்சாலி கெளரவர் சபையில் அவமதிக்கப்பட்டதைக் கண்ணுற்ற பீமன்,  அண்ணனை, மூத்தவன் என்றும் பாராமல்  கடும் சொற்களால் சாடுகிறான்.

இது பொறுப்பதில்லை தம்பி!
எரிதழல் கொண்டு வா
கதிரை வைத்திழந்தான்-அண்ணன்
கையை எரித்திடுவோம்!

என்று உணர்ச்சிவசப்பட்டு வகுப்பு எடுத்துவிட்டு வந்தாள். ஏனோ திடீரென்று அண்மையில் இறந்து போன ஷாலினியின் நினைவு வந்து அலைக்கழித்தது. அந்தப் பெண்ணிற்கும் ஏதோ பாலியல் கொடுமை நடந்திருப்பதாகவும், பெரிய இடம் என்பதால் வெளியில் வராமல் மறைக்கப்பட்டிருப்பதாகவும், அரசல் புரசலாக காதில் விழுந்து கொண்டிருந்ததுதான் காரணம். ஏனோ அதே நினைவாக இருந்தது. பெண்கள் நன்கு படித்து முன்னேறிக் கொண்டிருந்தாலும், தற்காப்புக் கலைகளில் அதிக கவனம் செலுத்தாமல் இருப்பதே, இது போன்ற நேரங்களில் எதிர்த்துப் போராடும் வல்லமையின்றி உயிரையே துறக்க நேரிடுகிறதே என்று அதே நினைவாக இருந்தது. அரசாங்கம் பள்ளி மாணவிகளுக்கு ஏதோ ஒரு பாதுகாப்புக் கலையை கட்டாயமாக்குவதுடன், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வழி முறைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அந்தப் பெண்ணின் பால் வடியும் முகமே வந்து போய்க்கொண்டிருந்தது.  சளி பிடித்துக் கொண்டிருந்ததால் ஒரே தலை பாரம், அதற்குமேல் வகுப்பு எடுக்க முடியவில்லை என்பதால், தலைமை ஆசிரியரிடம் அரை நாள் விடுமுறை சொல்லிவிட்டு வீட்டில் சென்று ஓய்வெடுக்கலாம் என்று கிளம்பிவிட்டாள்.

வீடு பூட்டாமல் சாத்தியிருந்தது அதிர்ச்சியாக இருந்தது. காலையில் மகன் பூட்ட மறந்துவிட்டு சென்றிருப்பானோ என்று நினைத்து கதவைத் திறக்கப்போனவள், உள்ளே பேச்சுக் குரல்கள் வரவும் கதவைச் சத்தமின்றி லேசாகத் திறந்து கேட்க ஆரம்பித்தாள். மகனும், அவனுடைய நண்பர்களும் ஏதோ சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மூன்று பேர் இருப்பதாகத் தெரிந்தது. முதலில் தலையும் புரியவில்லை, வாலும் தெரியவில்லை. ஆனால் சற்று நேரம் உற்று கவனித்த பின்பு அவர்கள் பேசியதைக் கேட்டு தரையில் கால் பாவாமல், கண்கள் தட்டாமாலை சுற்ற ஆரம்பித்து விட்டது.

“ரகு, மகேந்திரனைப்பத்தி கவலையில்லை. அவன் அவங்க மாமா வீட்டிற்கு டெல்லிக்குப் போயிட்டான். ஷாலினி மேட்டர் கொஞ்சம் சீரியசாப் போகும் போல இருக்காம். போலீசை சரிகட்டினாலும், பெண்கள் அமைப்பெல்லாம் தலையிட ஆரம்பித்திருக்கிறார்களாம். அதனால் பிரச்சனை பெரிதானால் அவள் வீட்டின் பக்கத்தில் குடியிருக்கும் நாம்தான் முதலில் மாட்டுவோமாம். அதனால் கொஞ்ச நாளைக்கு நம்மளையும் எங்கயாவது வெளியூர்ல போய் இருக்கச் சொல்லி போன் பண்ணினான்”

“ஐயோ.. அப்படியா? நான் எங்க அம்மாவை விட்டுட்டு எங்கடா போக முடியும். ?”

“அதெல்லாம் இப்ப பேசற நேரமில்லைடா. நான் எங்க அக்கா வீட்டிற்கு பாம்பே போகப் போறேன். எங்க அம்மாகிட்ட பிராஜக்ட் வேலைன்னு சொல்லப் போறேன். எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அதுக்கு மேல புரியாது அதனால பிரச்சனை இல்லை. இதோ பாலுவும் கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்குப் போக திட்டமிட்டிருக்கிறான்”

“டேய்.. என்னடா மச்சி இது, இப்படி என்னய மட்டும் கழட்டி உட்றீங்க. எங்க அம்மாகிட்ட என்ன சொல்லி தப்பிக்க முடியும்னு தெரியலையே..”

“இப்ப பேசி என்ன ஆகப் போகுதுடா. மகேந்திரன் கூட சேர்ந்துகிட்டு அந்தப் பொண்ணு ஷாலினியை கெடுக்கும்போது புத்தி இருந்திருக்கணும். அவன் தன்னை  உண்மையாலுமே லவ் பண்றதா நம்பி அந்தப் பொண்ணு பாவம் மகாபலிபுரம் அவன்கூட வர நாமும் அவன்கூட சேர்ந்து செய்யக் கூடாத பாவத்தை செய்துப்புட்டோமே.. அந்தப் பொன்ணு பாவம் பயத்துல தற்கொலை பண்ணிக்கிச்சு. இப்ப வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது. நம்ம வீட்டுல தெரியறதுக்கு முன்னாடி ஏதாவது செய்யணும்”

“அடப்பாவிகளா... என்ன சொல்றீங்க? அந்தப் பொண்ணு ஷாலினி சாவுக்கு நீங்கதான் காரணமா? அய்யோ கடவுளே, ரகு கடைசீல நீ இந்த நிலைக்குப் போயிட்டியா? நான் என்ன பண்ணுவேன்,.”

அதிர்ச்சியில் பலமாகக் கூச்சல் போடும் நிலைக்கு வந்துவிட்ட அம்மாவையும், சூழ்நிலையின் ஆபத்தையும் உணர்ந்து கொண்ட ரகு வேகமாக அம்மாவை உள்ளே இழுத்து வந்து சமாதானப்படுத்த முயற்சி செய்தான். அதிர்ச்சியில் அரண்டு போய் நின்றிருந்த தாயைப் பார்க்க அச்சமாக இருந்தது. இந்த இடைவெளியில் ரகுவின் நண்பர்கள் இருவரும்  சத்தமில்லாமல் கதவைச் சாத்திவிட்டு வெளியேறிவிட்டனர்.


பதினைந்து நாட்களாக ரகு மருத்துவமனையில் சுயநினைவின்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். அதிர்ச்சியிலிருந்து மீளாத அவன் தாயும் மூளை அப்படியே அதே இடத்தில் நிலைத்து நிற்க, வாய்ப்பேச்சும் நின்று போய், அரசு பாதுகாப்பில் மனநல மருத்துவமனையில் இருந்தாள்.

ரகுவிற்கு லேசாக அன்று நினைவு திரும்ப, வாக்குமூலம் வாங்குவதற்காக காவல்துறையினர் புடைசூழ நின்றிருக்க, சரசுவையும் அங்கு அழைத்து வந்திருந்தார்கள். ரகு மிகத்தெளிவாகப் பேச ஆரம்பித்தான்.

“அப்பா திடீரென்று விபத்தில் இறந்து போனவுடன், உறவுகளும் ஒதுங்கிவிட, அப்பாவுக்கு அப்பாவா, அம்மாவுக்கு அம்மாவா இருந்து என்னை வளர்த்தாங்க என் அம்மா. சக்திக்கு மீறி செலவு செய்து நான் சந்தோசமா இருக்கணும்னு, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து, நல்லா  பாத்துக்கிட்டாங்க. நானும் பள்ளிக்கூடத்தில் படிச்ச வரை ஒழுங்காத்தான் இருந்தேன். காலேஜீக்கு வந்தவுடன் அந்த சுதந்திரமான சூழலும், கலர் கனவுகளும் என்னை தன்னிலை மறக்க வச்சதும் உண்மைதான். சிகரெட் குடிக்கிறது, காலேஜ் கட் அடிச்சுட்டு ஊர் சுத்தறதுன்னு ஆரம்பிச்ச தப்பு கடைசீல ஒரு பெண் தற்கொலைக்கு காரணமாகிற அளவிற்கு பெரிசானதே இப்பத்தான் புரியுது. அன்னைக்கு அம்மா அதிர்ச்சியில பலமா சத்தம் போட்டப்ப அக்கம் பக்கத்துல தெரிஞ்சிடப்போகுதுன்னு அம்மா கால்ல உழுந்து சத்தம் போடாதேன்னு கெஞ்சினேன். அம்மா கோபத்துல என்னைக் கண்டபடி அடிச்சதோட, போலீசுக்குப் போன் செய்யப் போறதா வேறச் சொன்னாங்க. அதனால வேற வழி தெரியாம நான் மண்ணெண்ணையை எடுத்து மேலே கொட்டிக்கிட்டு, நீங்க போலீசுக்குப் போன் செய்தால் நான் என்னையே பத்த வச்சிக்குவேன்னு மிரட்டினேன்.. அம்மா பயந்துபோய் அப்படியே உறைந்து நின்னுட்டாங்க. ஆனா அதுக்குள்ள அங்க இருந்த சாமி விளக்கு, அம்மா காலைல பூஜை முடித்து, அணைக்க மறந்து போயிட்டாங்க போல, அது லேசாக எரிந்து கொண்டிருந்தது.அம்மாவை முதன் முறையாக அப்படிப் பார்த்த டென்சன்ல ஓடிப்போய் புடிக்கப் போகும்போது தெரியாம விளக்கு மேல விழுந்துட்டேன், குப்புனு தீ பிடிச்சிடிச்சி..  என்னால ஒன்னுமே செய்ய முடியல. அதுக்கபுறம் என்ன நடந்துச்சின்னு தெரியல. அம்மா.. அம்மா என்னை மன்னிச்சுடும்மா. நான் அப்படி செய்திருக்கக் கூடாது.“

கேட்டுக் கொண்டிருந்த சரசு “ரகு.. “ என்று ஓவென்று அலற ஆரம்பித்தாள். ரகு எப்போது இப்படி மாறினான் என்று பலவிதமான குழப்பங்கள் நெஞ்சை அழுத்த மயங்கிச் சரிந்தாள்.

நன்றி : திண்ணை

No comments:

Post a Comment