Tuesday, September 17, 2013

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!




உடைத்தெறியுங்கள் அமைதிக் கலாச்சாரத்தை என்று முழக்கமிடுகிறார் சமூக சேவகி சுனிதா கிருஷ்ணன். யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ?

விஜயவாடா நகரம். வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தில் மாலினி என்ற 15 வயது பெண். வேலை பார்த்து குடும்பத்தைக் காக்க வேண்டிய கட்டாயம். இந்த சமயத்தில் குடும்ப உறவினர் ஒருவர் அப் பெண் என்று சொல்வதை விட குழந்தை என்றே சொல்ல வேண்டும். அப்பெண் குழந்தையை கூட்டிச் சென்று, ரூ.1.5 லட்சத்திற்கு , ஒரு விபசார விடுதியில் விற்று விட்டார்கள். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் அந்த பிஞ்சு உடல்! கேட்கவே மனம் பதறும் இந்த கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டு, சிறைக் கைதியைப் போன்று அடைத்து வைக்கப்பட்ட அந்த குழந்தை வெளியே தப்பித்து வர மூன்று முறை முயன்றும், தோற்றுப் போன மாலினி இறுதியாக சுனிதா கிருஷ்ணனின் திறமையான செயல்பாடுகளால் காப்பாற்றப்பட்டு, ஐதராபாத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாள். இது போன்று பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக கொண்டு தள்ளப்படும் பரிதாபமான சீவன்களை காப்பதே தன் தலையாக் கடமையாகக் கொண்டு செயல்படும் ஒரு நல்ல உள்ளம்தான் இந்த சுனிதா கிருஷ்ணன்.

பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே அறிவார்ந்த செயல் என்பார்கள். அதற்கொப்ப, பாலியல் தொழிலில் உழண்டு கிடந்த பெண்களை காப்பாற்றுவதோடு அவர்தம் குழந்தைகளையும் அதிலிருந்து மீட்டு, மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவர்களுக்கு 18 கல்விக் கூடங்களும், தங்கும் விடுதிகளும் பிரஜ்வாலா நடத்துகிறது. அது மட்டுமில்லாமல் ஹெச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்டோருக்கும் இவருடைய உதவிக்கரம் நீண்டுள்ளது. பெங்களூருவில் பிறந்து, சமூக சேவையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இவருடைய சமூக சேவையை தம்முடைய 8 வது வயதிலேயே, மன வளம் குன்றிய குழந்தைகளுக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பதன் மூலம் தொடங்கியுள்ளார். தன் 12ம் வயதிலேயே சேரி வாழ் குழந்தைகளுக்கு பள்ளிக் கூடங்கள் அமைத்துள்ளார். மன வளம் குன்றிய ஒரு 13 வயதுப் பெண் குழந்தையை பாலின அடிமையாக்கி வைத்திருந்த ஒரு கூட்டத்திடமிருந்து, மற்ற மூன்று பாலின தொழிலாளிகள் உதவியுடன் மீட்டதுதான் இவருடைய முதல் சேவை. இந்த முயற்சியில் பல முறை, அடி, உதை என்று வாங்கி இருப்பதோடு ஒரு முறை செவிப்பறை கிழியும் அளவிற்கு வதை பட்டிருக்கிறார். அதற்குப் பிறகே தன்னால் தனித்து நின்று இப் பணியைச் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, இன்று காவல் துறை, சட்ட வல்லுநர்கள் என்று ஆக்கப்பூரவமான அணுகு முறையுடன் இன்று சரியான திட்டம் தீட்டி, செயல்பட்டு வருகிறார். பல பரிசுகளும், பட்டங்களும் வென்றிருக்கும் சுனிதா, இந்திய அரசாங்கத்தால் ’ஸ்த்ரீ சக்தி புரஸ்கார்’ என்ற பெண்கள் தின சிறப்புப் பரிசும் வென்றுள்ளார்.

தன் 16 வது வயதில் ஒரு ரௌடிக் கும்பலால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்குப் பிறகு நான்கு சுவற்றின் மத்தியில் அடைப்பட்டு, சுய பச்சாதாபத்தால் ஒடுங்கிப் போகாமல், அதிலிருந்து மீண்டு வந்ததோடு, அதையே சவாலாக எடுத்துக் கொண்டு இன்று பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு உறு துணையாக நேரடியாக களத்தில் இறங்கி சேவைகள் பல புரிந்து கொண்டிருக்கிறார். இவருடைய சேவைத் திட்டங்கள் இந்தியாவுடன் நின்று போகாமல் இன்று கம்போடியா, அமெரிக்கா என்று பரவிக் கொண்டிருப்பதே இவரின் வெற்றியின் அடையாளம் எனலாம். “பாலியல் வன் முறை ” என்பதன் வலியை நேரடியாக உணர்ந்தவள் என்ற முறையில் என் நோக்கம் அது போன்று வேதனையில் துடிக்கும் பாலியல் அடிமைகளை மீட்டுக் கொண்டு வருவதிலேயே செயல்பட ஆரம்பித்து விட்டது” என்று கூறும் இவர் பெண்கள் தங்களுக்கு கொடுமை இழைக்கும் கயவர்களின் வன் முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ” தங்கள் மௌனக் கலாச்சாரத்தைப் பிளந்து கொண்டு வெளியே வர வேண்டும் என்றும், பெண்களை பாலியல் அடிமைகளாக்கும் போக்கு அறவே ஒழிக்கப்பட வேண்டும். அது போன்று முழுமையாக பெண்கள் மௌனச் சிறையிலிருந்து வெளியே வந்து, இது போன்ற அநீதிகளுக்கு முடிவு வரும் நாளே நம் சமூகத்தின் உண்மையான மாற்றங்களைக் காணப் போகும் நாள்” என்று முழங்குகிறார், 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பல்லோரை காப்பாற்றியிருக்கும் இந்த நாயகி!வாழ்க நவீன புரட்சி நாயகி, இன்னுமொரு அன்னை தெரெசா!

Stree Shakti Puraskar – Government of India Women’s Day awards announced – The Hindu

இன்னொரு மனிதரின் தகுதியை ஒரு போதும் குறைத்து மதிப்பிடாதே ! உனக்கும்  அதே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. – லே ஸ்டெயின்பெர்க்.

படத்திற்கு நன்றி.

தகவல் உதவி – இந்து நாளிதழ், நன்றி.
-- 
​பெண்ணியம் இதழுக்கு நன்றி

அன்புடன்
பவள சங்கரி​


                                                               

2 comments:


  1. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

    என்ற தலைப்பு அருமை.

    பகிர்ந்துள்ள செய்திகள் யாவும் உண்மையிலேயே மிகவும் பயங்கரமானவை / கொடுமையானவை.

    அது போன்று வேதனையில் துடிக்கும் பாலியல் அடிமைகளை மீட்டுக் கொண்டு வந்து புனர்வாழ்வு தருவது என்பதை எத்தகைய புனிதமானதொரு செயல்.

    திருமதி சுனிதா கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பகிர்வு நன்றிகள்.

    ReplyDelete
  2. சமூக சேவகி சுனிதா கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete