பவள சங்கரி
“எதற்காக
என்னைத் தேர்ந்தெடுத்தாய் நீ? உனக்கு
என்ன பிரச்சனை? என்னால் உனக்கு என்ன
காரியம் ஆக வேண்டும்? எப்படி
உதவ முடியும் உனக்கு நான்? ஏன்
என்னை இப்படி சுற்றிச் சுற்றி
வருகிறாய்? என்னைப்
பற்றி உனக்கு என்ன தெரியும்
மச்சி....?”
“ஓ,
இதுதான் உன்னோட பிரச்சனை மீத்து..
எதுக்கு இப்படி கேள்வி மேல
கேள்வி கேட்கறே. அதுவும் மச்சினெல்லாம் சொல்றே
ஃபிரண்ட்ஸ்குள்ளதான் இப்படியெல்லாம் பேசுவாங்க. இல்லேனா அக்கா ஹஸ்பண்டை
மச்சான்னு சொல்லுவாங்க. நீ மும்பையிலருந்து வந்ததால
உனக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்ல. அதான்
இப்படி யாரை வேணுமின்னாலும் மச்சான்னு
கூப்பிடுற.. இனிமே
ஜாக்கிரதையா இரு, சந்தேகம்னா எங்க
யார்கிட்டயாவது கேட்டுட்டு பிறகு இப்படியெல்லாம் பேசலாம், சரியா..
”
“ஏய்
இவன பாருப்பா, டெய்லி இதே நேரத்துக்கு
கரெக்டா வந்து நிக்கிறான்.
கரெக்டா ஆபீஸ் விட்டு வெளியே
வர நேரத்துக்கு
வந்துடறான். எவ்வளவு திட்டினாலும் கோபமே
வரமாட்டேங்குது.. என்ன மனுசன் இவன்..
சே.. முகத்தை வேற இப்படி
பாவமா வச்சிக்கறான்.. எந்த கேள்வி கேட்டாலும் தலையை
குனிஞ்சிகிட்டு ஐ ல யூ
ன்னு சொல்றான். நான்
சரின்னு சொன்னா எங்க வீட்டில
வந்து பொண்ணு கேப்பானாம்.
எவ்ளோ தைரியம் பாறேன்.. முன்ன,
பின்ன ஒன்னும் தெரியாத ஒரு
ஆளைப்போய் நானே எங்க வீட்டுல என்னை
கட்டிக்குடுக்கச்சொல்லி ரெக்கமண்ட் பண்ணனுமாம். இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல...”
“இதை
நீ முன்னாடியே சொல்லியிருக்கணும். 30 நாளா ஒரு மனுசனை
உன் பின்னால அலையவிட்டு இப்ப
சொல்றயே . உனக்கும் குறும்புதானே.. ”
தோழிகள்
மீத்துவும் மதுவும், சொல்வதுபோல வருணன் மீத்து பின்னால்
கிட்டத்தட்ட ஒரு மாதமாக அலைந்து
கொண்டிருக்கிறான். இதில்
ஒரு வேடிக்கை, தனக்கு ஏற்கனவே திருமணம்
ஆகி, ஆறே மாதத்தில் மனைவி
ஒரு விமான விபத்தில் இறந்து
போய்விட, அந்த துக்கத்தை ஒன்னரை
மாதத்திலேயே மூட்டை கட்டி வைத்துவிட்டு
புது மாப்பிள்ளையாகி வந்து நிற்கிறான். எப்படியும்
மீத்துவை மடக்கிப் போட்டுவிட்டால், நல்ல வேலை, நல்ல
சம்பளம், அழகிற்கும் குறைச்சல் இல்லை.. வேறு என்ன
வேண்டும். இது போல நல்ல
பெண்களை நேரடியாகப்போய் பெண் கேட்டால் சாமான்யத்தில்
கொடுப்பார்களா? சம்பளம் எவ்வளவு, கிம்பளம்
உண்டா, சொந்த வீடு வாசல்
உண்டா, நிரந்தரமான
வேலையா, மாமியாரா
வரப்போகிறவள் நல்லவளா, அப்பன் ஒழுங்கா சம்பாதிப்பவனா
இல்லை மகனை நம்பி இருப்பவனா
என்று இப்படி ஆயிரம் கேள்வியில்ல
கேப்பாங்க. மெல்ல தானா போய்
செண்டிமெண்டலா லாக்கப் செய்து, சாம,
பேத, தண்டம் என எதையாவது
செய்து சாதிக்க முடிந்தால், அப்புறம்
வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடலாமே.. இத்தனைக்கும் அவனுக்கும் மத்திய அரசாங்க வேலை
என்பதால் ஏகப்பட்ட சலுகைகளும் உண்டு. எப்படியாவது தன்னோட
முன்னாள் மனைவி காவ்யாவை தன்
வழிக்குக்கொண்டு வந்ததுபோல மீத்துவையும் சமாளித்தால் போதும். அதற்காக புரோக்கர்
மூலம் தம் வகுப்பிலேயே இருக்கும்
(அப்பொழுதுதான் அம்மாவை சமாளிக்க முடியும்)
பெண்களில் திருமணத்திற்குத் தயாராக இருக்கும் பெண்ணைத்தான்
தேடி கண்டுபிடித்து அவளுடைய முகவரியை தெரிந்துகொண்டு
பிறகு தம் வேட்டையை ஆரம்பித்தவன்,
மெல்ல ஒருவழியாக, தம் வழிக்குக் கொண்டுவந்தான்
முன்னாள் மனைவி காவ்யாவை. ஆனால்
அவள் இந்த அளவிற்கு இழுக்கடிக்கவில்லை
பாவம்.. என்ன கொஞ்சம் எளிதில்
உணர்ச்சிவசப்படக்கூடியவள் காவ்யா....
கடைசியாக
ஒன்றும் இல்லாத ஒரு சப்பை
மேட்டருக்காக கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்குப் போகிறேன்
என்று பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பியவள், திரும்பி
வரவேயில்லை. சென்னையிலிருந்து தில்லி செல்லும் விமானம்
விபத்து நடந்து முற்றிலும் எரிந்து
போன நிலையில் ஒருவரும் பிழைக்கவில்லை என்ற செய்தியில்தான் தன்
மனைவியின் அடையாள அட்டையை வைத்து
அவளைக் கண்டுபிடித்திருப்பதாக செய்தி வந்தது. அப்போதுதான்
அவள் விமானத்தில் போன செய்தியே அவனுக்குத்
தெரிந்தது. காலையில் ஆபீஸ் கிளம்பும்போது சண்டை
போட்டவள் அவனிடம் சொல்லாமல்கூட
விமானத்தில் ஏறி தாய் வீட்டிற்குச்
சென்றுவிட்டாள் போல் உள்ளது என்று
நினைத்துவிட்டான். உடனே அழுது ஆர்ப்பாட்டம்
செய்து ஊரைக்கூட்டி செய்தி சொல்லி, தன்
மாமனார், மாமியார் உள்பட எல்லோரும் வந்திருந்து அவனுக்கு ஆறுதல் சொல்லி ஒரு
வாரம் தங்கியிருந்து எல்லாக் காரியங்களும் முடித்துவிட்டு
சென்றிருந்தார்கள். அவனும் 30 நாட்கள் துக்கத்தில் கரைந்துபோய்க்
கிடந்தவன், மெல்ல மெல்ல வெளியில்
வந்து அடுத்த ஆறுதல் தேடி
அலைய ஆரம்பித்திருந்தான்
பாவம்...
அன்று
ஊரெல்லாம் தீபாவளி கொண்டாட்டம். வருணன்
மட்டும் சோகத்தோடு தனிமையில் வாடிக்கொண்டிருந்தான். காலங்காலையில்
பரிதாபமாக மீத்துவின் வீட்டின் முன்னால் சென்று அவள் கண்ணில்படும்படியாக
ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தான். இந்த நல்ல
நாளிலாவது அந்த தேவதை தன்
மீது கருணை மழை பொழிய
மாட்டாளோ என்று முகத்தை தொங்கப்
போட்டுக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.
மீத்து
விடியலிலேயே குளித்து புத்தாடை உடுத்தி தீபாவளியை மகிழ்ச்சியாகக்
கொண்டாடலாம் என்று பட்டாசு வைக்க
வெளியில் வந்தால் அங்கு ஒரு
ஓரமாக மரத்தடியில், அவள் கண்ணில் படும்படியாக
பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு தலையைத்
தொங்கப்போட்டுக்கொண்டு வருணன் நின்றுகொண்டிருந்தான். தீபாவளி நாளதுவும்,
அந்த காலை நேரத்தில் அவனை
அப்படி ஒரு கோலத்தில் கண்டவுடன்
கொஞ்சம் பரிதாபமாக இருந்தாலும் அடுத்த நொடி அங்கு
உண்மையான பட்டாசு வெடிக்கப்போவது நினைவிற்கு
வந்தவுடன் தன்னையறியாமல் அவளுக்கும் வெடிச்சிரிப்பு வந்துவிட்டது!
என்னடா
இது அநியாயமாக இருக்கிறது. தீபாவளி நாளதுவும் ஊரே
கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது இந்த மனுசன் பாவம்
தனக்காக வந்து இப்படி பரிதாபமாக
நின்று கொண்டிருக்கிறானே என்று தன்னைப் பார்த்து
பரிதாபப்பட்டு மனம் மாறிவிடுவாள் என்று
பார்த்தால் படுபாவி இப்படிச் சிரிப்பாய்ச்
சிரிக்கிறாளே என்று உள்ளம் நொந்து
போனான் பாவம்... ஆனாலும்
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத
விக்கிரமாதித்தன் போன்று அவன் அடுத்த
சீன் போட, தயாராக இருந்த
சமயம்தான் அந்த அதிசயம் நடந்தது.
இதற்குள்
உண்மையாக அங்கு என்ன நடந்தது
என்று உங்களுக்கு மட்டும் சொல்லிவிடுகிறேன். அந்த
பரிதாபப்பட்ட ஆத்மா, உதை வாங்கப்போவது
உறுதி. அதை நம்மால் தடுக்க
முடியாது. எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.
ஆனால் ஏன் அவன் உதை
வாங்குகிறான் என்று தெரிந்தால்தானே சுவாரசியமாக
இருக்கும் அதான். உங்களுக்கு மட்டும்
இந்த ரகசியம் சொல்கிறேன்.
காவ்யா
அன்று காலை வழக்கம்போல கணவனிடம்
சின்ன சண்டை போட்டுக்கொண்டு ஊடலுடன்
‘நான் என் அம்மா வீட்டிற்கேப்
போகிறேன் போ’ என்று கொஞ்சினாள்.
வழக்கம்போல அவன் வந்து கெஞ்சி
தன்னைச் சமாதானம் செய்வான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு அவன் கோபமாக
‘அப்படியா போய்த்தொலை.. போறவள் ஒரேயடியாய் போய்த்தொலை.
திரும்பி வராதே. உன்னோட இதே
ரோதனையாப் போச்சி..’ என்று ஏற்கனவே ஆபீஸ்
போகிற டென்சனில் இருந்தவன் (அன்று ஆடிட்டிங் வேறு...
மண்டை காயுமே என்று சலித்துக்கொண்டே
கிளம்பிக்கொண்டிருந்தான்) சத்தம்
போட்டுவிட்டு சாப்பிடாமல்கூட கிளம்பிவிட்டான். கணவன் தன் கோபத்தை
கொஞ்சம்கூட சட்டை செய்யாமல் இப்படி
திட்டிவிட்டுவேறு போகிறானே என்று ஆத்திரமும் அழுகையும்
பொங்க.. சே இந்த மனுசனை
கொஞ்சம் அலையவிட்டால்தான் சரிவரும் என்று நினைத்துக்கொண்டு பெட்டியை
தூக்கிக்கொண்டு உண்மையாகவே அம்மா வீட்டிற்குச் செல்லத்
துணிந்தாள். உச்சி வெய்யில் நேரம்.
சாலை வெறிச்சோடிக்கிடந்தது. ரயில் நிலையம் சென்று
தன் அம்மா வீடு இருக்கும்
தில்லி மாநகருக்குச் செல்ல அடுத்த இரயில்
மதியம் 1.15 மணிக்கு இருந்தது. அதற்குள்
ஸ்டேஷனுக்குப் போகவேண்டும் என்று ஆட்டோவிற்காக காத்துக்கொண்டிருந்தாள்.
கோபத்தில் ஏதும் சாப்பிடாமலே வந்துவிட்டாள்.
சண்டை போட்டதால் இரவும் சாப்பிடாமலே படுத்துவிட்டது
அப்போதுதான் நினைவிற்கு வந்தது. வயிற்றை சுருட்டிப்
பிடித்ததால் எதிரில் இருந்த கடையில்
இரண்டு பாக்கெட் பிஸ்கெட்டு வாங்கிக்கொண்டு கிளம்பினாள். நல்ல வேளையாக ஒரு
ஆட்டோவும் வந்துசேர கையைக்காட்டி நிறுத்தி ஏறிக்கொண்டாள்.
ரயில்
வரும் நேரம் ஆகிவிட்டிருந்தது. பேசாமல்
திரும்பிப்போய்விடலாமா என்று கூட தோன்றியது.
இந்த மனுசனுக்கு ஒரு முறையாவது புத்தி
புகட்ட வேண்டும். அப்பா காலில் விழுந்து
மன்னிப்புக்கேட்டால்தான் திரும்பி வருவேன் என்று சொல்லிவிட
வேண்டும் என்று உறுதியாக நினைத்துக்கொண்டாள்.
இரண்டு வாழைப்பழம் வாங்கிக் கொண்டு உட்கார்ந்தவள், அசதியில்
அப்படியே தூங்கிவிட்டாள். டீ.. சாய்... டீ...
சாய்.. என்ற குரலும், மீன்
மார்க்கெட் போன்ற சலசலப்பும் தூக்கத்தைக்
கெடுத்தது. ஆந்திர மாநிலம், வாராங்கல்
தாண்டிவிட்டோமா என்று எட்டிப்பார்த்தாள். அதுதான்
வாராங்கல் ஜங்ஷன். அட
இவ்வளவு நேரம் தூங்கிவிட்டோமே என்று
நினைத்துக்கொண்டு, ஒரு டீ வாங்கிக்
குடிக்க எண்ணி, டீயை வரவழைத்தாள்.
பிரட், பட்டர், ஜாம் வந்தது.
அதையும் வாங்கி வேகவேகமாக சாப்பிட
ஆரம்பித்தாள். வயிறு
நிறைந்தவுடன் மீண்டும் தூங்கலாமா என்று நன்கு சாய்ந்து
சுகமாக செட்டானபோது, ஏதேதோ நினைவுகள் வந்து
தடை போட்டது. ‘ஆசை அறுபது நாள்,
மோகம் முப்பது நாள்’ என்பது
போல இந்த மனிதர் ஏன்
இப்படி நடந்துகொள்கிறார். எப்படி ஆசை, ஆசையாக
எனக்கு வேண்டுவதெல்லாம் செய்தார். உலகத்தில் யாருக்குமே கிடைக்காத வாழ்க்கை எனக்குக் கிடைத்துவிட்டதாகவல்லவா பெருமைப்பட்டுக் கிடந்தேன். .. அதுசரி, அதுக்கு இப்ப
என்ன வந்ததாம் என்று மனசாட்சி கொஞ்சம்
இடிக்கத்தான் செய்தது. மனிதராய்ப் பிறந்தவர்களிடம் நல்லதும், கெட்டதும் சேர்ந்துதானே இருக்கிறது. எனக்கு மட்டும் அளவிற்கு
அதிகமாக கோபம் வராமலா இருக்கிறது?
நான் விட்டுக்கொடுத்துப் போயிருக்கலாமே என்ற ஞானம் அப்போதுதான்
வந்தது காவ்யாவிற்கு. திடீரென்று வண்டி ஏனோ சர்ரென்று
பாலத்தில் அழுந்த தேய்த்தபடி நின்று
போனது.
ஏதோ
ஒரு பெட்டியில் தீப்பொறி பரவியதால் யாரோ சங்கிலியைப் பிடித்து
இழுத்துவிட்டார்களாம். கொஞ்சம் கரும்புகையும் வெளிவர
ஆரம்பிக்க, உடனே
மக்கள் திபு திபுவென வெளியில்
குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இரவு வேளை. கும்மிருட்டுப்
பகுதி. எல்லோரும் அங்கங்கு கூட்டமாக நிற்கிறார்கள். அந்த நேரம் பார்த்துதானா
அந்த பாதையில் அடுத்த தண்டவாளத்தில் இன்னொரு
ரயில் வரவேண்டும்.. அய்யோ
கடவுளே.. கண் மூடித் திறப்பதற்குள்
எல்லாம் நடந்து முடிந்துவிட்டதே.. திரும்பிய
புறமெல்லாம் மரண ஓலம். எத்தனை
உயிர் பலியானதோ தெரியவில்லை. தானும் எங்கேயோ தூக்கி
எறியப்பட்டுள்ளோம் என்பது லேசாக தெரிய
ஆரம்பிக்கும் முன்னரே காலை அசைக்க
முடியவில்லை. தலையில் லேசாக இரத்தம்
கசிந்து கொண்டிருந்தது. வேறு
எந்த நினைவும் இல்லை.. கிட்டத்தட்ட கோமா
ஸ்டேஜ்.. கையில் இருந்த மொபைல்
போன்கூட எங்கே போய் விழுந்தது
என்று தெரியவில்லை. அவளை அடையாளம் காண
முடியாமல் போனதால் அரசாங்க மருத்துவமனையில்
கிட்டத்தட்ட 10 நாட்கள் சுய நினைவின்றி
கிடந்திருக்கிறாள்.
மீண்டும்
தாய் வீட்டிற்கு அடி எடுத்து வைத்த
நாளை நினைத்தால் இன்றும் ஒரு மாதிரித்தான்
இருக்கிறது. இரவு 8 மணி போல
வீட்டின் அழைப்பு மணியை அடித்தபோது,
வீடே நிசப்தமாக ஒரு சலனமும் இல்லாமல்
இருந்தது ஆச்சரியமாக இருந்தது. கதவு திறக்கும் ஓசை
கேட்டு ஆவலுடன் காத்திருந்தபோது, வேலைக்காரப்பெண்
மஞ்சு, காவ்யாவைப் பார்த்தவுடன் ‘வீல்’ என்று அலறியவாறு பே...
பே..... அம்...அம்... என்று ஏதோ உளறியவளை
ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டே வீட்டினுள் செல்ல அடி எடுத்து
வைத்தபோது மஞ்சுவின் அலறல் கேட்டு அப்பா,
அம்மா, அண்ணன் என அனைவரும்
ஓடி வந்தனர். என்னைப் பார்த்தவுடன் அவர்களுக்கும்
அதே அதிர்ச்சி. ஒரு அடி பின்னால்
செல்ல முயன்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அம்மாதான் ஓடிவந்து காவ்யா என்று கட்டிக்கொண்டார்.
எல்லோரும் ஒரு பதட்டமாகவே இருந்தார்கள்.
பின்புதான் மெல்ல மெல்ல விசயம்
தெரிந்தது, வெகு சமீபத்தில்தான் அவளுக்கு
இறுதி சடங்கெல்லாம் முடித்துவிட்டு துக்கத்தில் வீடே களையிழந்து கிடந்திருக்கிறது
என்று. அவள் மீண்டும் மறுபிறவி
எடுத்து வந்தது அனைவருக்கும் நம்ப
முடியாத அளவிற்கு ஆனந்தம்.
விமான
விபத்து நடந்த இடத்தில் காவ்யாவின்
அடையாள அட்டை கிடைத்ததுதான் இவ்வளவு
குழப்பத்திற்கும் காரணம். காவ்யா தன்னுடைய
அடையாள அட்டையை தாய் வீட்டிலேயே
வைத்துவிட்டு வந்திருந்தாள். அது அவளுக்கு வேண்டியிருந்ததால்
அடிக்கடி வியாபார விசயமாக தில்லிக்கும், சென்னைக்குமாகப் பறந்து கொண்டிருக்கும் தங்கள்
குடும்ப நண்பர் பாபு மூலமாகக்
கொடுத்தனுப்பியிருக்கிறார்கள்.
அவர் கையில் கொண்டு வந்திருந்த
காவ்யாவின் அடையாள அட்டையை சென்னையில்
அவளிடம் கொடுக்க மறந்துவிட்டு மீண்டும்
தில்லிக்கே எடுத்துச் சென்ற போது ஏற்பட்ட
விமான விபத்தில் பாபுவின் கைப்பையிலிருந்து சிதறிக்கிடந்த பொருட்களில் இவளுடைய அடையாள அட்டையும்
கிடைத்ததால் வந்த வினைதான் இது.
இறந்து போனவர்கள் பட்டியலில் காவ்யாவின் பெயரும் சேர்ந்துள்ள கதை
இதுதான்.
காவ்யாவிற்கு
திடீரென்று ஒரு ஆசை வந்தது.
தான் இறந்துபோனது தெரிந்து தன் கணவனின் நிலை
எப்படியிருக்கும் என்று அறிந்துகொள்ளும் ஆசைதான்
அது! வீட்டில் உள்ளவர்களிடம் நடந்தது எதுவும் சொல்ல
வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு, சென்னையில்
தனக்கு மிகவும் வேண்டிய ஒரு
தோழி மூலமாக கணவனைப் பற்றி
விசாரித்துக்கொண்டிருந்தாள்.
பெற்றோரும் இன்னும் சற்று உடல்
நலம் தேறியவுடன் ஊருக்குத் திரும்பலாம் என்று சொன்னதால், அவளும்
கணவனைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்...
அப்போதுதான் மெல்ல, மெல்ல கணவன்
தான் இறந்து போய்விட்ட துக்கத்திலிருந்து
மீண்டு வர முயற்சி செய்து
கொண்டிருப்பது தெரிந்தது. அத்தோடு நின்றிருந்தால் காவ்யாவும்
அவனை மேலும் துக்கம் கொள்ளச்
செய்யக்கூடாது என்று ஓடோடி வந்திருப்பாள்..
ஆனால் அவன் அதற்குள் அடுத்த
மணமகளுக்கு ஏற்பாடு செய்ததுதான் அவளுடைய
கோபத்தை அதிகமாக்கியது. அதுவும் தன்னுடைய தூரத்து
உறவினரான மீத்துவையே முயற்சி செய்ததுதான் அவளால்
ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. மீத்துவைக் கூப்பிட்டு நடந்த விசயங்களையெல்லாம் ஒன்று
விடாமல் கூறிவிட்டு தீபாவளியன்று
பட்டாசு வெடித்து கொண்டாடலாம் என்று திட்டமிட்டிருந்தனர் இருவரும்!
பிறகென்ன.. மீத்துவின்
வீட்டின் எதிரில் மரத்தடியில் பரிதாபமாக
முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்த வருணன் அதே மரத்தின்
பின்னாலிலிருந்து ஒரு கணம் பளிச்சென்று
காவ்யாவின் முகம் தெரிந்து மறைய,
முதலில் மனப்பிரம்மை என்று எண்ணி அமைதியாக
இருந்தவன், இரண்டாவது முறை சற்று தெளிவாகத்
தெரிந்தபோது கொஞ்சம் அதிர்ச்சியில் அலற
முயன்றான்.. அதற்குள் மீத்துவும், காவ்யாவும் இருவருமாகச் சேர்ந்து அவன் முன்னால் வந்து
நின்றபோது என்ன ஆகியிருக்கும் என்று
சொல்லவும் வேண்டுமோ? எது எப்படியோ வருணனுக்கு
காவ்யா திரும்பி கிடைத்ததில்
மகிழ்ச்சி அதிகமோ அல்லது மீத்து
கிடைக்காமல் போனதில் வருத்தம் அதிகமோ
என்று போகப்போகத்தானே புரியும்!
நன்றி : திண்ணை வெளியீடு
சுபமான மகிழ்ச்சியான முடிவு...
ReplyDeleteமிகவும் சுவாரஸ்யமான கதை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteதிண்ணை வெளியீடுக்கு இனிய நல்வாழ்த்துகள்.