Friday, November 15, 2013

பாட்டி சொன்ன கதைகள் 18




ஹாய் குட்டீஸ் நலமா?


‘தானத்திலே சிறந்தது கண் தானம்’. 


கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடாதவர்கள் இருக்க முடியாது. கொஞ்ச நேரம் கண்கள் கட்டப்படிருந்தால் நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம். இந்த உலகமே இருண்டதுபோல் எல்லாம் கருமையாக... அப்பப்பா..  இப்படியே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்றால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை இல்லையா? இப்படித்தான் நம் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 70 இலட்சம் பேர் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். கருவிழி நோயால் பாதிக்கப்பட்டு கண் பார்வை இழந்ததினால் அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்போர் மட்டும் 10 இலட்சம் பேர். ஒரு ஆண்டிற்கு ஒரு இலட்சம் வரை கருவிழிகள் தேவைப்படுகிறது என்கிறது கணக்கெடுப்பு. ஆனால் நம் இந்தியாவில் கண் தானம் மூலம் கிடைப்பதென்னவோ 22,000 கருவிழிகள் மட்டுமே. இதற்கு நாம் என்ன செய்யலாம்? முதல்ல நம்ம கண்ணை பொன்னைவிட பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். நமக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் கண் தானம் பற்றி எடுத்துச் சொல்லலாம். நம் குடும்பத்தில் இருப்பவர் அனைவரையும் கண் தானம் செய்யும்படி கேட்டுக்கொள்ளலாம்.  கண் தெரியாத நம் சக தோழர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்யலாம். 

சரி, யார் யார் கண் தானம் செய்ய முடியும் தெரியுமா?

ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், என எந்த பேதமுமின்றி, ஆண், பெண் இரு பாலரும், அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம். கண் கண்ணாடி அணிந்தவர்களும் கூட கண் தானம் செய்யலாம். கண் தானம் செய்ய,ஒருவர் மரணமடைந்த ஆறு மணி நேரத்திற்க்குள் அவரது கண்களை அகற்றியாக வேண்டும்.அப்போதுதான் அந்தக் கண்களை அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும். எனவே எவ்வளவு விரைவாக கண்களை அகற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக அதற்குரிய விசயங்களைச் செய்து தானமாக அளிப்பது நல்லது.

ஆனால், கொடிய தொற்று நோய்களான எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, விசக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் மற்றும் வெறிநாய்க்கடி போன்ற கொடிய தொற்று நோய்களால்  இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்யக் கூடாது.

கண் தானம் செய்ய ஒப்புக்கொண்டவரின் உறவினர்கள் முக்கியமாக, உடனடியாக செய்ய வேண்டியது, தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கண் வங்கிக்கு தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று, கண் வங்கியை தொடர்பு கொண்டு மரணமடைந்தவரின் பெயர், வயது, ஆண்/பெண், மரணத்தின் காரணம், மரணமடைந்த நேரம், தற்போது உடல் இருக்கும் இடத்தின் முகவரி மற்றும் லேண்ட்மார்க் (அருகில் உள்ள இடத்தின் அடையாளம் உ.ம். கோயில், திரைஅரங்கு, கடைகள், போன்ற விவரங்கள்) ஆகியவற்றுடன், தகவல் அளிப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களை அளித்தால் உரிய நேரத்திற்குள் கண் வங்கி மருத்துவர் குழு வர வசதியாக இருக்கும்.  கண் தானம் செய்தவரின் கண்களின் இமைகளை இறந்தவுடன் மூடி வைக்க வேண்டும்.  இரண்டு கண்களின் மீதும் ஈரமான பஞ்சினை வைப்பது நல்லது. முடியுமேயானால் ஏதேனும் ஆன்டிபயாட்டிக் கண் சொட்டு மருந்தினை (Ciplox அல்லது Norflox) போடலாம். இது ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்கும். தலையை சற்று உயர்த்தி தலையணையில் வைக்க வேண்டும். மின் சாதனப் பெட்டி இணைப்பில் இருக்கலாம். ஆனால் மின் விசிறியை நிறுத்திவிட வேண்டும். இறந்தவரின் நெருங்கிய உறவினரின் ஒப்புதல் அளிக்க வேண்டும்.  முழுக் கண்ணையும் அப்படியே வேறொருவருக்கு மாற்றி ஆபரேஷன் செய்வது கிடையாது. தானமாகப் பெறப்பட்ட கண்களில் கார்னியா எனப்படும் விழி வெண் படலம் மட்டுமே கார்னியா மாற்று ஆபரேஷன் எனப்படும் கார்னியல் டிரான்ஸ்ப்ளாண்டேஷன் ஆபரேஷனுக்கும், ஸ்க்ளீரா எனப்படும் விழி வெளிப்படலம் க்ளகோமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மால்ட்டினோ இம்ப்ளாண்ட் எனப்படும் ஆபரேஷனுக்கும் கண்களில் செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரிகளுக்கும், மற்ற பகுதிகள் கண் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும். 

 கண்களை மிகவும் நாகரீகமான முறையில் அதிகபட்சம் 20 முதல் 30 நிமிடத்தில் அகற்றி விடுவார்கள். கண்களை எடுத்த பிறகு கண்களை எடுத்த அடையாளமே தெரியாது என்பதே உண்மை. அதனால் அச்சம்  கொள்ளத் தேவையில்லை. 

சென்னையில் கண் தானம் வழங்குவதற்கான தொலைபேசி எண்கள் : 044 28281919 மற்றும்  044 28271616.
இ-மெயில் முகவரி : eyebank@snmail.org
முகவரி:
சி யு ஷா கண் வங்கி, சங்கர நேத்ராலயா, 18 கல்லூரி சாலை, சென்னை 600 006. 


சரி கதைக்கு வருவோமா?  கடவுளுக்கே கண் தானம் செய்த கண்ணப்ப நாயனார் கதை தெரியுமா?



பொத்தப்பி என்று ஒரு நாட்டில், உடுப்பூர் எனும் ஒரு ஊரில் நாகன் என்ற ஒரு வேடர் குலத் தலைவன் இருந்தான். அவனும் அவன் மனைவியும் மிகச் சிறந்த முருக பக்தர்கள். குழந்தை இல்லாத அவர்களுக்கு முருகன் அருளால் மிக வலிமையான, அழகான ஆண் குழந்தை பிறந்தது. திண்ணன் என்று பெயர் வைத்து, அவனுக்கு தங்கள் குல மரபிற்கேற்ப வில், அம்பு, ஈட்டி, வாள் முதலான போர்ப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார்கள். தந்தைக்கு வயதானவுடன் நாடாளும் தலைமைப் பதவி அவனுக்கு வந்தது. ஒரு நாள் திண்ணனார், தன் நண்பர்களான காடன், நாணன் ஆகியவர்களுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அங்கு அவருடைய வலையை அறுத்துக்கொண்டு ஒரு பன்றி தப்பி ஓடியது. அதைத் துரத்திச் சென்று அதைத் தன் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார் திண்ணனார். வெகு தூரம் வந்துவிட்ட அவர்கள் அங்கு வானளாவ உயர்ந்து நிற்கும் திருக்காளத்தி மலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நிற்கிறார்கள். அருகில் அழகான பொன்முகலி ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. திண்ணனார் அந்த அழகில் மெய்மறந்து நிற்பதைக் கண்ட நாணன், அம்மலையின் மீது இருக்கும் குடுமித்தேவர் பற்றி கூறுகிறான். ஏனோ அந்தப் பெயரைக் கேட்டவுடன் திண்ணனாருக்கு ஒரு பேரின்ப உணர்வு ஏற்பட்டது. மலையேறிய அவர் அங்கு குடுமித் தேவரின் திருவுருவ மேனியைக் கண்டவுடன், அன்பினால் அப்படியே கட்டித்தழுவி, தன்னை மறந்து ஆடிப் பாடினார். ஆண்டவனுக்கு ஏதாவது படையல் வைக்க வேண்டும் என்று உள்ளம் துடித்தது. தான் வேட்டையாடிய பன்றியை, காடன் தீமூட்டி பக்குவமாக சுட்டு வைத்திருந்தான். ஓடிச் சென்று அதை ஒரு கையிலும், மறு கையில் வில் இருந்ததால், பூக்களைப் பறித்து அதைத் தன் தலையில் செருகிக்கொண்டும், தண்ணீர் வேண்டுமே அதனை தன் வாய் நிறைய நிறைத்துக்கொண்டும் ஓடி வந்தார் திண்ணனார். ஆண்டவன் மீது இருந்த அதீத அன்பினால், தம் வாய் நீரை அபிசேகமாகவும், தலையில் செருகி இருந்த மலரை அலங்காரமாகவும், பன்றி இறைச்சியை படையலாகவும் வைத்து வழிபட்டு,  இரவு முழுவதும் வில்லுடன் காவலும் புரிந்தார். மீண்டும் அடுத்த நாள் குடுமித் தேவருக்காக உணவு தேடப் புறப்பட்டார். இப்படியே சில நாட்கள் தொடர்ந்தது.


ஆண்டவருக்கு அனுதினமும், ஆகம முறைப்படி பூசைகள் செய்துவந்த சிவ கோசரியார் அவர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. இறைவன் மீதிருந்த இறைச்சியையெல்லாம் நீக்கி சுத்தம் செய்து பூசை செய்துவிட்டு, மனம் நொந்து புலம்பலானார். ஆண்டவன் அன்று இரவு சிவ கோசரியார் கனவில் தோன்றி திண்ணனாரின் அன்பு வெளிப்பாட்டை அடுத்த நாள் காலை மரத்தின் பின்னால் மறைவாக நின்று கவனிக்கும்படி கூறி மறைந்தார். 

அன்று ஆறாவது நாள். திண்ணனாரின் அன்பு மிகுதியை சிவ கோசரியாருக்கும், உலகிற்கும் காட்ட முடிவெடுத்து, தம் வலக் கண்ணிலிருந்து இரத்தம் கொட்டும்படி செய்தார். உடனே பதறிப்போன திண்ணன், அதைத்துடைத்து தனக்குத் தெரிந்த பச்சிலைகளைப் பறித்து வந்து களிம்பிட்டும் பார்த்தார். ஆனால் அப்பொழுதும் இரத்தம் நிற்கவில்லை. அப்போது அவருக்கு தெய்வ சங்கல்பமாக, ‘ஊனுக்கு ஊன்’ என்ற பழமொழி நினைவிற்கு வர, உடனே சற்றும் தயங்காது, தம் வலக்கண்ணை, அம்பினால் அகழ்ந்து எடுத்து அதை அப்படியே ஆண்டவனின் கண்ணில் அப்பினார். இரத்தம் வருவது நின்றுவிட்டது. மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் திண்ணனார். அத்தோடு விட்டானா அந்த ஆண்டவன். இல்லையே. தம் இடக்கண்ணிலும் இரத்தம் பொங்கச் செய்தார்.  தம் இடக்கண்ணையும் எடுத்து அங்கு பொருத்த வேண்டும் அப்பொழுதான் அந்தக் கண்ணில் வரும் இரத்தமும் நிற்கும் என்று புரிந்து கொண்டவர், உடனே சற்றும் தயங்காமல், அடுத்த கண்ணை தோண்டி எடுப்பதற்கு தயாரானார். தன்னுடைய இன்னொரு கண்ணையும் எடுத்துவிட்டால் ஆண்டவனின் இடக்கண் இருக்கும் இடத்தைச் சரியாகக் காண முடியாதே என்பதால், அடையாளத்திற்காக தம் காலின் பெருவிரலை குருதி பொங்கும் ஆண்டவனின் கண் மீது ஊன்றிக் கொண்டு அம்பினால் தன் கண்ணைப் பெயர்க்க ஆயத்தமானார். அப்போது, திருக்காளத்தியப்பர், ‘நில்லு கண்ணப்பா’ என்று மூன்று முறை கூறி அவரை தடுத்தாட்கொண்டார்.  இதனைக் கண்ட சிவ கோசரியார் திண்ணப்பனாரின் பக்தியில் மெய்மறந்து போனார். அன்று முதல் திண்ணப்பர் , கண்ணப்ப நாயனார் ஆனார் என்பது வரலாறு. இன்றும் ஆந்திர மாநிலத்தில், கடப்பை மாவட்டத்தில், புல்லம் பேட்டை வட்டத்தில் பொத்தப்பி என்ற சிற்றூர் உள்ளது.  குண்டக்கல் - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டையின் அருகில், உடுக்கூர் என்று பெயர் மாறி இருக்கிறது உடுப்பூர் என்ற சிற்றூர். 

கண்ணப்ப நாயனார் புராணம்

மாணிக்கவாசகர், 
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் 
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருள 
கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார். 


நிலத்திற் றிகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மே
னலத்திற் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுண்ணடுங்கி
வலத்திற் கடுங்கணை யாற்றன் மலர்க்கண் ணிடந்தப்பினான்
குலத்திற் கிராதனங் கண்ணப்ப னாமென்று கூறுவரே


படங்களுக்கு நன்றி: கூகிளார்

நன்றி : வல்லமை - செல்லம்

3 comments:

  1. ஆகா... கதையும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது.

    வித்தியாசமான குழந்தைகள் கதைகளை எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  3. கண் தானம் பற்றிய விழிப்புணர்வுப்பகிர்வும், அதையொட்டிய சிறுகதையும் மிக அழகாகக் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete