Saturday, January 11, 2014

சிதையா நெஞ்சு கொள்!


பவள சங்கரி
சென்ற புதன் கிழமை 08.01.2014 அன்று மாலை ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28 ஆம் ஆண்டு விழாவும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கென மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சித்தார்த்தா பள்ளி தன் 28 ஆண்டு கால கல்வி அனுபவத்தை இப்பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ.ஜெயபாரதி அவர்கள் மூலமாக மிக அழகாகத் தொகுத்து மூன்று நூல்களாக வழங்கியுள்ளது.
bharathy 1


பெற்றோர்களின் தூரக் கனவை நனவாக்க உதவும் நூல் – பாதை
மாணாக்கர்களின் தடைகளைத் தாண்டி வர வழிகாட்டும் நூல் – பயணம்
ஆசிரியர்கள் வெற்றியில் தேங்கிவிடாமல் செயலாற்ற ஊக்குவிக்கும் நூல் – சுவடு
பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ. ஜெயபாரதி விழாவிற்கு தலைமையேற்க, பள்ளி முதல்வர் திருமதி ஞானம் ஆண்டறிக்கை சமர்பிக்க, துணை முதல்வர் கண்ணகி வரவேற்புரை ஆற்றினார்.
bharathy3
சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர், கவிஞர் அ. வெண்ணிலா அவர்களும், தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. கிருஷ்ண. வரதராஜன் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நாட்டு நலப் பணித் திட்டங்களுக்குப் பெருமளவில் ஈடுபாடு காட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் இப்பள்ளியின் தனிப்பட்ட சிறப்பம்சமாக, சிறப்புக் குழந்தைகள் என்று சொல்லப்படும் மனவளர்ச்சிக் குறைபாடு, கற்றல் குறைபாடு, கவனம் சிதறல், நினைவாற்றல் குறைபாடு, ஹைபர் ஆக்டிவ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிலரை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பயிலும் வகையில், அவர்களுக்குத் தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நிலையில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கும் இக்குழந்தைகளின் முன்னேற்றம் குறிப்பிடும்படி இருப்பது சிந்திக்க வைக்கக் கூடியதாக இருந்தது. மற்ற பள்ளிகளும் இது போன்ற பரிட்சார்த்த முறையை தொடர்வதால் கேள்விக்குறியாக இருக்கும் இப்படிப்பட்ட குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்துவதாக அமையலாம்.
bharathy4
குழந்தைகள் தங்களுடைய அருமையான நிகழ்ச்சிகள் மூலம் அழகாக அலங்கரித்த மேடையில் தாம் அதிகம் பேசி அவர்களின் மகிழ்ச்சியான நேரத்தைக் களவாட விரும்பவில்லை என்று கவிஞர் வெண்ணிலா ஆரம்பித்தாலும், மிக எளிதாக குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரையும் தம் கட்டுக்குள் வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்! தாம் குழந்தைகளின் நிகழ்ச்சிகளைக் கண்டு, குறிப்பாக சிறப்புக் குழந்தைகளின் நிகழ்ச்சி மூலம் உள்ளம் நெக்குருகி நிற்பதாக உணர்வு பொங்கக் கூறினார். அதற்காகப் பயிற்சியளித்த ஆசிரியை மற்றும் தாளாளர் ஜெயபாரதி அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். பாரம்பரியம் மாறா நடவடிக்கைகளை விடாமல் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தையும் சவாலாக ஏற்றுச் சாதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திச் சிறப்புரையாற்றினார்.
”பெற்றோர்களே உங்கள் கனவை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். அவன் டாகடர் ஆவதும், என்ஜீனீயர் ஆவதும் அவன் கைகளில் விட்டுவிடுங்கள். குழந்தைகளை நம் எதிர்பார்ப்புகள் அனைத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் என்று எண்ணும் வழக்கத்தை மாற்றுங்கள். அவர்கள் விருப்பத்தை அறிந்து அதற்கேற்றார் போல அவர்கள் வாழ வழிகாட்டுங்கள்” என்று பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பெண் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொடும் ஆசிரியர்கள் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் அது குறித்த பாடங்களை சேர்க்க வேண்டியதன் அவசியம் பற்றிய ஆக்கப்பூர்வமான தன்னுடைய எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.
”குழந்தைகளே ஆம், இல்லை, வேண்டும், வேண்டாம் என்பதை தெளிவாகச் சொல்லிப் பழகுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையின் வெற்றி. யாருக்காகவும் உங்களுடைய இலக்கில் சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை. பாதையில் தெளிவு இருந்தால் பயணத்தில் குழப்பம் இல்லாமல் முன்னேறலாம்” என்ற பொருள்படும்படியாக மிக உற்சாகமாக உரையாடினார்.
bharathy 2
“ஒரு மணி நேரத்தில் உங்கள் வாழ்வில் நிகழப்போகிறது மேஜிக்” என்று ‘மாயப் புத்தகம்’
ஒன்றை அனு ராஜன் என்பவருடன் இணைந்து எழுதி சிறுவர் உலகை உற்சாகமூட்டிக் கொண்டிருக்கும் , தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளருமான திரு. கிருஷ்ண வரதராஜன் அவர்கள் மிகச் சுவையாக, குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையும், கல்வியில் ஆர்வமும் ஏற்படும் வகையில் மிகச் சிறப்பாகவும் சொற்பொழிவாற்றினார்.
’மாயப் புத்தகத்தில்’ , ’இரண்டு ஓநாய்கள்’ என்ற குட்டிக் கதை.
ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்
“ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு ஓநாய்கள் இருக்கின்றன. ஒரு ஓநாய், அன்பு, நம்பிக்கை, உற்சாகம் போன்ற நல்ல குணங்களை கொண்டிருக்கிறது. மற்றொன்று கோபம், அவநம்பிக்கை, வெறுப்பு போன்ற தீய குணங்களைக் கொண்டிருக்கிறது.
மனிதனுக்குள் உள்ள இந்த இரண்டு ஓநாய்களும் எப்பொழுதும் சண்டையிட்டபடியே இருக்கின்றன” என்றவர் மாணவர்கள் ஆர்வமாகக் கவனிப்பதைப் பார்த்துவிட்டு, “உங்களுக்குள்ளும் இந்த இரண்டு ஓநாய்களும் இருக்கின்றன?” என்றார்.
சட்டென்று ஒரு மாணவன் கேட்டான், “சார் இரண்டில் எந்த ஓநாய் ஜெயிக்கும்?”
ஆசிரியர் புன்னகையுடன் சொன்னார், “எந்த ஓநாய்க்கு அதிகம் உணவு கொடுக்கிறாயோ அந்த ஓநாய்தான் ஜெயிக்கும்”
pavala 2
இராமருக்கு பாலம் கட்ட உதவிய சிறு அணில் போன்று, நூல்களின் உருவாக்கத்தின் என்னுடைய  உதவிக்காக எனக்கும் பரிசு கொடுத்து கௌரவித்த சித்தார்த்தா பள்ளி தாளாளர் ஜெ.ஜெயபாரதி அவர்களுக்கு நன்றி. இந்த மூன்று நூல்களும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் பலனளிக்க வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
bharat
bharath 12
நன்றி : வல்லமை

4 comments:

  1. அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க திரு தனபாலன். பள்ளியில் குழந்தைகளிடமும், ஆசிரியர்களிடமும் கட்டாயம் தெரிவிக்கிறேன்.

      Delete
  2. சிறப்பான புத்தக வெளியீட்டை நேரில் கண்ட அனுபவம் கிட்டியது நிகவுகள் குறித்த தங்களது இயல்பான எழுத்துநடையில் ! உங்களுக்கும் இதில் பங்குபற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அம்மா .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், அன்பான வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி அம்மா.

      Delete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...