Friday, January 3, 2014

யாதுமாகி நின்றாய் - சிறுகதைத் தொகுப்புஅன்பு நண்பர்களே,​

​எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் பெருமைக்குரிய , ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’, பிரபல எழுத்தாளரான, அன்பிற்கினிய, சிவசங்கரி அம்மையார் அவர்களின் வாழ்த்துரையுடன் வெளிவந்திருக்கிறது. ​--

ஓயாத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிற இந்த உலகத்தில் ஏதேதோ நடந்து கொண்டுதானிருக்கிறது.  அடடா.. இப்படியும்கூட நடக்குமா?  அறிவியல் வெகு தூரம் முன்னேறிவிட்ட இந்த காலகட்டத்தில்கூட இப்படியெல்லாம் நடக்கிறதா? இது எந்த அளவிற்கு சாத்தியம் என்ற பகுத்தறிவான வினாக்களுக்கு இன்று வரை சரியான விடை கிடைத்ததாகத் தெரியவில்லை. காரணம் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சில சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களும் கிடைக்கத்தான் செய்கிறது. முடிவில்லாத இந்த வினாக்களுக்கு அவரவர் மனதின் மூலமே விடை காண இயலும் என்பதும் உண்மை.  நாம் ஏதோ ஒரு விசயத்தை மனதில் அசை போட்டுக்கொண்டு அதைப்பற்றி ஒரு நண்பரிடம் விரிவாக பேச வேண்டும் என்று வரும்போது, அவரும் அந்தச் சூழலுக்குத் துளியும் சம்பந்தமில்லாத அந்த விசயம் பற்றியே பேசும்போது ஆச்சரியத்தில் அசந்து விடுகிறோம். மனவியல் தொடர்பாக இதற்கு பல பெயர்கள் வைத்திருக்கிறார்கள். ஆயினும் அந்த உள்மன சக்தியின் ஆற்றலை நம்மால் முழுமையாக  உணர்ந்து கொள்ள முடிவதென்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும் புதிராகவே உள்ளது. அந்த வகையில் இது போன்ற சம்பவங்கள் கற்பனை எனும் அரிதாரம் பூசி சிறுகதை என்ற நாமகரணம் சூடி அழகு குழந்தையாக வலம் வருவது மகிழ்ச்சியான விசயம் இல்லையா. 

சிறுகதைகள் என்பதே அக்காலத்தின் சமூக வாழ்வியலின் பிரதிபிம்பம் காட்டும் கண்ணாடி என்பதே சத்தியம். இன்று ஆச்சரியமாகத் தோன்றும் சில விசயங்கள் பிற்காலத்தில் வேடிக்கையாகவும் தோன்றலாம். கால மாற்றத்தின் பரிணாமங்கள் அவைகள். இராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்காப்பியங்கள் தோன்றிய காலந்தொட்டே முற்பிறவி தொடர்பான செய்திகள் ஸ்ரீராமர், சீதாப்பிராட்டியார் போன்ற முக்கிய கதாப்பாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றளவிலும் அந்த நம்பிக்கைகள் பிரகாசமாக இருப்பதுடன், பல மேலை நாட்டு அறிஞர்களும் தங்கள் ஆய்வுகளின் மூலமான ஆதாரங்களை சமர்ப்பித்துக் கொண்டிருப்பதும் இதனை வலுவாக்குகிறது.  நம் இந்து மதத்தில் இதற்கான ஆதாரங்கள் பல இருந்தாலும், இந்த நம்பிக்கையும் அது குறித்த அச்சமும்தான் மக்களிடையே பாவச் செயல்களை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்தி வைக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. 

இலக்கியங்கள் என்பது அந்தந்தக் காலங்களின் கலாச்சாரங்கள், பண்பாடு, நடைமுறை வாழ்க்கை, இன்னல்கள் என அனைத்தையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நச்சென்று வார்த்தைகளால், பளிச்சென்று தம் கருத்தை முன் வைக்கும் கட்டுரைகள் ஒரு விதம் என்றால், அலங்கார வார்த்தைகள் என்ற ஒப்பனையுடன் அழகாகத் தாம் கண்டவற்றை, கேட்டவற்றை, சற்றே கற்பனை கலந்து சுவையான பண்டமாக வழங்கக்கூடியது சிறுகதை. ஆரம்பக் காலங்களில் சிறுகதைகளுக்கு பரவலான அங்கீகாரம் இருந்திருக்கவில்லை. ஆங்கில இலக்கியங்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்ற மொழி இலக்கியங்களுக்கு கிடைப்பது அரிதாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் இலக்கியவாதிகளாக கருதப்பட்ட காலமும் இருந்திருக்கிறது. மேலை நாட்டவர்களின் பிரவேசத்தினால் நமக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவமே சிறுகதை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெரும் காவியங்களில் பல சிறுகதைகள் கிளைக்கதைகளாக வேரூன்றியிருக்கும். நாயன்மார்களின் வரலாறுகள் இன்றளவிலும் இறை நம்பிக்கையை ஊக்குவிக்கக்கூடிய திறன் பெற்றவையாகவே விளங்குவது சிறப்பு. மாபெருங்காவியங்களான இவைகளின் தாக்கம் இன்றைய வாழ்வியலிலும் காண முடிகிறது.


ஹட்சன் என்ற பிரபல எழுத்தாளர், ஒரே மூச்சில் படித்து முடிக்கக்கூடியது நல்ல சிறுகதை என்கிறார். ஒரு சிறு அனுபவமோ, வாழ்க்கையில் நடக்கும் சுவையான நிகழ்ச்சிகளோ, கிடைத்த வெற்றிகள், அதனால் ஏற்படும் சிறு சிக்கல்கள், கவர்ச்சியான காட்சிகள் இப்படி எதுவும் நல்ல சிறுகதையின் அடிப்படையாகலாம் என்கிறார் மு. வரதராசனார். கல்கி காலத்தில் சிறுகதைகள் தனிப்பொலிவுடன் மிளிர்ந்தது. மணிக்கொடி போன்ற அச்சிதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்கான பெரும் பணியாற்றியுள்ளது. ரா. கி. ரங்கராஜன் அவர்களின் ‘எப்படிக் கதை எழுதுவது’ என்ற நூலும், அகிலனின் ‘கதைக்கலை’ என்ற நூலும், மகரம் என்பவரின் தொகுப்பான, ‘எழுதுவது எப்படி’ போன்ற நூல்கள் சிறுகதை எழுதும் கலையை பயிற்றுவித்திருக்கின்றது. எது எப்படியிருந்தாலும், படைப்புத் திறன் என்பது நம்முடனேயே பிறந்து வளர்வது என்பதும் உண்மை. அதனை வளர்த்துக்கொள்வது அவரவர் திறமையைப் பொருத்தது. 


இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பல, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சிறிது கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ளது.  சில சம்பவங்கள் நடந்ததற்கான முகாந்திரம் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போகும்போது, உலக நடப்புகளின் அடிப்படையில் இப்படித்தான் நடந்திருக்கக்கூடும் என்ற கணிப்புடன் எழுத வேண்டியதாகிறது. வாசகர்களின் கற்பனையையும் சேர்த்து அத்தோடு பயணித்து முடிவு காணலாம் என்கிறபடியான சம்பவங்களும் உண்டு. அந்த வகையில் வாசகர்களின் கற்பனையையும் ஊக்குவித்து புதுக்கதை வடிக்கச் செய்யும் வாய்ப்பும் அதிகரிக்கக்கூடிய சம்பவங்களின் தொகுப்பே இச்சிறுகதைகள். 

​அன்புடன்

பவள சங்கரி​

8 comments:

 1. Replies
  1. மிக்க நன்றி கோமதி மேடம். தங்கள் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றி.

   அன்புடன்
   பவளா

   Delete
 2. பாராட்டுக்கள். வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி. அட்டைப்படமே அருமை. தலைப்பும் அழகு.

  // பிரபல எழுத்தாளரான, அன்பிற்கினிய, சிவசங்கரி அம்மையார் அவர்களின் வாழ்த்துரையுடன் வெளிவந்திருக்கிறது. ​//

  இது மேலும் சிறப்பு. சந்தோஷம். ;)

  ReplyDelete
 3. மிகவும் மகிழ்ச்சி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ. தனபாலன்.

   அன்புடன்
   பவளா

   Delete
 4. நல்வாழ்த்துகள் பவளா!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ராம லஷ்மி.

   அன்புடன்
   பவளா

   Delete