பவள சங்கரி
சோதனை எலியாய் இருந்தால் சோகமென்பதே இல்லை
எதையும் சிந்திக்க வேண்டிய தேவையும் இல்லை
புல்லிலும் புதரிலும் ஓடிஓடி வயிறையும் நிரப்பிடலாம்
எல்லாமே குதூகலமாயும் கொண்டாட்டமுமாய் ஆகிடலாம்
வேணிலில் காயலாம், நிழலில் இளைப்பாறலாம்
குளிரானால் வைக்கோலினுள் சுருண்டு கிடக்கலாம்
நாள்முழுதும் எங்கும் கிடக்கலாம் எதிலும் புரளலாம்
தங்கும் இடமும் சலனமின்றி சடுதியில் மாறலாம்
கீரைக்கட்டும் கேரட்டும், புல்லும் வெங்காயத்தாளும்
பழமும் பச்சிலைகளும் அன்றாட உணவாகலாம்
தீராத பசியையும் எப்படியும் தீர்த்திடலாம்
எதற்கும் அடிமையில்லை என எக்காளமிடலாம்.
தங்கக் கூண்டில் சிம்மாசனமிட்டிருந்தாலும்
அனுதினமும் அலட்டலில்லாமல் கழிக்கலாம்
பல நூறாய்ப் பரவிவரும் பிறவிகள் ஆனாலும்
பதட்டமில்லாத பரிணாமங்கள் ஆகலாம்.
வண்ணம் என்ன எண்ணம் என்ன
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்
அதனால் எதிர்ப்பெனும் தொல்லையுமில்லாமல்
சலனமில்லாத நீரோடையாய் வாழலாம்.
சோதனை எலியாய் நீ இருந்தால் சோகமில்லைதான் உனக்கு
எதையும் சிந்திக்க வேண்டிய தேவையும்தான் இல்லை
வயிறு மட்டும் நிரம்பினால் போதும் வேறெந்த தேவையுமில்லை
அதுவே சுகமாய் சொர்க்கமாய் ஆகிடலாம்
ஆம், சோதனை எலியாக இருப்பதில் சுகமே எல்லை
ஐயோ.. கடவுளே அந்தச் சோதனை எலியாக இல்லையே நான்!
No comments:
Post a Comment