Thursday, June 19, 2014

யாருக்கு சொந்தம்?


இன்னொரு ஜென் கதை - யாருக்கு சொந்தம்?


ஒரு  போர் வீரர் இருந்தார். பெரும் வீரரான அவர் வயதானவர். பல போர்க்களம் பார்த்தவர் என்றாலும் அப்போது அதையெல்லாம் விட்டு  ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.வயதானவர் என்றாலும்  உடல் வலிமையும் மனோபலமும்  சற்றும் குறையாத அவருக்கு எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் வல்லமை இருந்தது.

 அந்த கிராமத்திற்கு ஒரு இளம் வீரனொருவன் வந்தான். எப்படியும் இந்த முதிய போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமெனத் துடித்தான். அவனுக்கு உடல் பலத்துடன் எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவனை வீழ்த்தும் அசாத்தியத் துணிவும் இருந்தது. தன் குதர்க்கமான பேச்சால் எதிராளியை தூண்டிவிட்டு, முதல் தாக்குதலுக்காகக் காத்திருப்பான். அதில் எளிதாக எதிராளியின் பலவீனத்தை கண்டுபிடித்துவிடுவான். முதல் தாக்குதலே மிக பலமானதாக்கி எடுத்த எடுப்பில் எதிராளியை வீழ்த்துவதுதான் அவன் சண்டை யுத்தி. இப்படி அவனால் வீழ்த்தப்பட்ட வீரர்கள் எண்ணற்றவர்கள்.


கிராமத்திலிருந்த வயதான வீரரின் அந்த  பயிற்சிக் கூடத்துக்கு வந்த வீரன், தன் திட்டத்தைச் சொன்னபோது மற்ற  மாணவர்கள் அதை கடுமையாக எதிர்த்தனர். இவனுடன் போட்டியிடுவதை அந்த பெரியவரும் விரும்பவில்லை. ஆனால் வருபவனுக்கும், தன் மாணவர்களுக்கும் ஒரு பாடம் கற்றுத்தர விரும்பினார். இளம் வீரனின் சவாலை ஏற்பதாக அறிவித்தார்.

நகரின் முக்கியமானதொரு நாற்சந்தியில் அந்த  மோதல் களம் இருந்தது. களத்துக்கு வந்த இளம் வீரன் முதியவரின் கோபத்தைத் தூண்டிவிட மிகக் கேவலமான வார்த்தைகளால் அவரைத் திட்ட ஆரம்பித்தான். அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். சிறு கற்களை வீசினான். மண்ணை வாரி இறைத்தான். அவரை அவமானப்படுத்தி, கோபப்படுத்தி தன் தாக்குதலைத் துவங்கலாமென்பது அவன் திட்டம். ஆனால் அந்த முதியவரோ அசைவற்று அமைதியாக நின்றிருந்தார். இறுதியில் களைத்துப் போய், தோற்றுவிட்ட மனதுடன் அந்த இளைஞன் களத்திலிருந்து வெளியேறவேண்டியதாகியது.

மாணவர்கள் அனைவரும் தங்கள் குருவைச் சூழ்ந்து கொண்டனர்.  “ஏன் இப்படி செய்தீர்கள்? எப்படி இவ்வளவு அவமானத்தையும்  பொறுத்துக் கொண்டீர்கள்? நீங்கள் தோற்றிருந்தாலும்கூட பரவாயில்லை, பதிலுக்கு உங்கள் வாளை உருவி அவனுடன் மோதியிருக்கலாம் அல்லவா?. இப்படி அமைதியாக இருந்து எங்களை சேர்த்து அவமானப்படுத்திவிட்டீர்களே குருவே?,” என்று பொருமினர்.

குரு அதே அமைதியுடன் சற்றும் கலங்காமல் அவர்களை ஏற இறங்கப் பார்த்து, ஒரு கேள்வியும்  கேட்டார்.  “ சரி.. யாராவது உங்களுக்குப் பரிசு கொடுக்க விரும்புகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களில் உங்கள் எதிரிகளும் இருக்கலாம். அந்தப் பரிசு மோசமானதாகவும் இருக்கலாம். அந்தப் பரிசை நீங்கள் பெற மறுத்துவிட்டால் அது யாருக்குச் சொந்தம்?”

 நீங்கள்தான் சொல்லுங்களேன்? யாருக்குத்தான் அது சொந்தம்? 

No comments:

Post a Comment