பொன் சிறகு

பவள சங்கரி


பெரிய பெரிய ஆசைகளைப் 
பக்குவமாய் பறைசாற்றுவதில் 
பாதகமொன்றுமில்லை.

பாடுபொருட்கள் பரவசமாய்
பரிந்துரைத்தால் பாவலனுக்கு
பரமானந்தம்தான்!

பொன்சிறகு விரித்து வானமேகும்
வார்த்தை வாழ்க்கைக்கு
வாதமும் விவாதமுமேது?

வாழுவதும் வாழ்த்துவதும்
வரமாய்வந்த மாயம்.
வலுவாகிப்போனது நிரந்தரம்.

பொய்மை மெய்மையாவதும்
மெய்மை மயங்கித்திரிவதும்
காலத்தின் கோலம்.

மண்ணில் விழுந்த மழைத்துளியெல்லாம்
முத்தாய் பொன்னாய் வைரமாய் மின்னி
மாலையாய்  காளியவள் பொற்பாதம் சேரும்

மிரளாத வானம் துவளாதத் தூரிகை
தளராத சிந்தை கலங்காத சித்தம்
மயங்காத மானுடமும் மாதவம்!!!
Comments

Post a Comment