Wednesday, March 11, 2015

யாக்கை நிலையாமை! - நாலடியார்


பவள சங்கரி

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்


வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும்
நிலவார் நிலமிசை மேல்



மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்


சென்றே எறிப ஒருகால் சிறுவரை
நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து


கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணம் கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை


நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்து஡டும்
கூத்தன் புறப்பட்டக் கால்


படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்


யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க - யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்


புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்


கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து





உடம்பை உறுதியுடையதாக முன் செய்த நல்வினைப் பயனால் பெற்றவர், அதனால் ஆகும் பயனான நற்காரியங்களைச் செய்வாராக! ஏனெனில் மலை மீது உலாவும் மேகம்போல் காணப்பட்டு நிலை பெறாது இவ்வுடல் அழிந்துவிடும்




நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.     26

(இதன் பொருள்) தோல் பையாகிய உடம்பிலிருந்து, தான் செய்ய வேண்டிய தொழில்களை முழுமையாகச் செய்து, அப்பயனைத் தானே அனுபவிக்கின்ற கூத்தாடியாகிய உயிர் உடலைவிட்டு அப்புறம் சென்றால், பின் அவ்வுடலைக் கயிற்றால் கட்டியிழுத்தால்தான் என்ன? நன்றாகச் சுத்தம் செய்து அடக்கம் செய்தால் தான் என்ன? கண்ட இடத்திலே போட்டால்தான் என்ன? பலரும் பழித்தால்தான் என்ன? (ஒரு செயலைச் செய்யத் தூண்டுவதும் உயிர்தான்; அந்தச் செயலின் பயனை அனுபவிப்பதும் உயிர்தான். அத்தகைய உயிர் இருக்கும்போது மேலான செயல்களைச் செய்க! என்பதாம். ஒவ்வொரு நேரமும் வெவ்வேறு சிந்தனைகளை, செயல்களையுடையதால் உயிரைக் கூத்தன் என்றார்.)

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும் பயனும் ஆற்றவே கொள்க  கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.     34

(இதன் பொருள்) பெறுதற்கு அரிய இம்மனித உடம்பை (இம் மனிதப் பிறவியை) புண்ணியப் பயனால் பெற்றிருக்கிறோம். அப்படிப் பெற்றதைக் கொண்டு சிறந்த புண்ணியத்தை மேலும் மிகுதியாகத் தேடிக்கொள்ள வேண்டும். அப்புண்ணியம், கரும்பிலிருந்து உண்டான சாறுபோல், உயிருக்குப் பொந்தும் உதவும். அக்கரும்பின் சக்கை போல் உடம்பு பயனற்றதாய் அழிந்து போகும்!


மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன்  ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.     40

(இதன் பொருள்) இழிவான காரியத்தைச் செய்து உணவு ஊட்டுவதனாலும் உறுதியுடன் கூடி இவ்வுடம்பு நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பது உண்மையானால் மானம் என்னும் சிறந்த அணிநலனைக் களைந்தெறிந்து விட்டு உயிர்வாழ்வேன் (எப்படி ஊட்டினாலும் இந்த உடம்பு அழியக் கூடியதே 


மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை  யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.     41

(இதன் பொருள்) மாந்தளிர் போலும் நிறமும், இளமையும் உடைய பெண்ணே! என்று மாதரை நோக்கிப் பிதற்றும் அறிவுடையோர், அற்ப உடம்பின் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? அவ்வுடம்பில் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? அவ்வுடம்பில் ஈயின் சிறகு அளவான சிறிய தோல் அறுபட்டாலும், அந்த இடத்தில் உண்டான புண்ணை நோக்கி வரும் காக்கையை விரட்ட ஒரு கோல் வேண்டும். (அறிவுடையோர் என்பது எள்ளல் குறிப்பு.)

தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.     44

(இதன் பொருள்) உள்ளே இருக்கும் நீரை நீக்கிவிட்டால், பனை நுங்கைத் தோண்டியெடுத்தாற் போல் காணப்படும் கண்ணின் இயல்பை அறிந்து, பற்றற்று நடக்கும் நான், மகளிரின் கண்களைத் தெளிந்த நீரிலே உள்ள குவளை மலர்கள் என்றும், புரளும் கயல்மீன்கள் என்றும், வேற்படை என்றும் கூறி அறிவுக் கண் இல்லாத அற்ப மனிதர்கள் எனது மனத்தைத் துன்புறுத்தவிடுவேனா? (ஒழுக்கத்தை விட்டு விடுவேனா? விடமாட்டேன்.)

முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
எல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.     45

(இதன் பொருள்) எல்லோரும் காணுமாறு சுடுகாட்டில் உதிர்ந்து சிந்திக்கிடக்கின்ற பல்லாகிய எலும்புகளைப் பார்த்துப் பற்றற்று ஒழுகும் நான், மகளிரின் பற்களை முல்லை அரும்புகள் என்றும், முத்துக்கள் என்றும் கூறிப் பிதற்றும் மேலான நூலறிவு அற்ற கீழ் மக்கள் எனது உள்ளத்தைத் துன்புறுத்த விடுவேனா? (ஒழுக்கத்தை விட்டு விடுவேனா? விடமாட்டேன்.)


இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம்  மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம்உய்யக் கொண்டு.     53

இல்லற வாழ்வு, இளமை, மிக்க அழகு, செல்வாக்கு, செல்வம், வலிமை என்று கூறப்படும் இவையெல்லாம் நாளடைவில் நிலையில்லாமல் போதலை அறிந்து, சான்றோர்கள் தாம் கடைத்தேறும் வழியை மேற்கொண்டு காலம் தாழ்த்தாது இருவகைப் பற்றையும் துறப்பர்.


குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே,
உடம்போடு உயிரிடை நட்பு - குறள்

பொருள்: உடம்போடு உயிரிடை நட்பு - உடம்புடன் உயிரிடை (உண்டாய) நட்பு (நிலையாமை), குடம்பை தனித்து ஒழியபுள் பறந்தற்று - கூடு (மரத்தின்கண்) தனித்துக் கிடக்கப் பறவை (அதினின்று) பறந்தாற் போலும்.


1 comment: