Monday, July 27, 2015

அடியாரும் ஆன்மீகமும் (2)


பவள சங்கரி
1382426_823390031082957_239293274964935666_n
12914_823390161082944_8842537095226880754_n
ஆன்மீக நெறியில் நயந்து இருப்போரின் உள்ளம் என்றும் எதைக்கண்டும் அஞ்சுவதில்லை. எம்மைக் காக்கும் ஈசன், பரம்பொருள் எம்மை வழிநடாத்துவான் என்ற இறுமாப்பு கொண்டோர்களாகவே, தன்னம்பிக்கையின் சிகரமாக வலம் வருகின்றனர். அந்த வகையில் அப்பரடிகளின் பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் சுதந்திர உணர்வுமிக்க எழுச்சிப் பாடல்களாகவே அமைந்துள்ளன எனலாம். உழவாரப்படை கொண்டு சமூகப் பணியையும் குறைவிலாது நிறைவேற்றியவர். சாதி, குலம், மதம் என எந்தவித வேறுபாடும் இன்றி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற தூய நெறியில் வாழ்ந்தவர். இந்த தன்னம்பிக்கையே இவருக்கு பல்லவ மன்னனையே துணிந்து எதிர்க்கும் வல்லமையைப் பெற்றுத்தந்தது. சமூக நலன் கருதி தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த புரட்சிக் கவிஞர் இவர் என்றால் அது மிகையாகாது!

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.
‘நான் யாருக்கும் அடிமையில்லை; எமனுக்கு கூட அஞ்ச மாட்டேன்…’ என்ற பொருள்படும் வகையில், “நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்” என்ற மறுமாற்றத் திருத்தாண்டகத்தில், அப்பர் பெருமானின் உயரிய இறுமாப்பு பல்லவப் பேரரசனையும் பணிய வைத்த சிறப்பைக் காணலாம்.
அதாவது எவரும் தம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. எமனுக்கும் கூட அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டும் அச்சமில்லை. ஒருவேளை நரகத்திற்கே செல்ல நேர்ந்தாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். அதையே சொர்க்கமாக எண்ணவும் எம் மனம் அறியும். ஏமாற மாட்டோம். பிணியுற்றாலும், அதனால் துவண்டு, அடிபணிய மாட்டோம். இறையருளால், எமக்கு எந்நாளும் இன்பமேயன்றி துன்பம் என்பதே இல்லை.
அப்பரடிகள், தருமசேனராக இருந்தபோது சூலைநோய் எனும் வயிற்று வலியால் மிகவும் துன்பப்பட்ட நேரத்தில்
“ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் இன்பமே ஒருநாளும் துன்பமில்லை..” என்று மன உறுதியோடு அந்த
நிலையிலும் பூரண சரணாகதியுடன் இறை நம்பிக்கை கொண்டிருந்தவர்.
பேரரசர் அலெக்சாண்டரின் அழைப்பையே ஏற்க மறுத்த ஒரு திகம்பரர் குறித்த வரலாறும் உண்டு. பின்னர் அம்மன்னரே தாமே நேரில் சென்று அத்திகம்பரரின் தரிசனம் பெற்றதாகவும் வரலாறு கூறுகின்றன.
ஐயன் வள்ளுவனின் குறள் நெறியைப் பார்ப்போம்:
குறள்:497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்
செய்ய வேண்டியவைகளை குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல்
வேறு துணையும் நாட வேண்டியதில்லை. அதாவது எந்த ஒரு செயலுக்கும் தம் திண்மை அன்றி வேறு ஒரு துணை வேண்டுவதில்லை.
ஒரு ஜென் கதையைப் பார்ப்போமா..
பேரரசன் ஒருவன் இருந்தான். இந்த உலகிலேயே தனக்கு இணை எவருமே இல்லாத மாபெரும் வீரன் தான் மட்டுமே என்று இறுமாப்புடன் இருந்து வந்தான். அவனைச் சுற்றி இருந்த ஒத்து ஊதும் கூட்டமும், புகழில் மயங்கிக் கிடக்கும் அரசனை எப்படியும் கவிழ்த்துவிட முடியும் என்ற பேராசையில் அவனை தகுதிக்கு மீறிய புகழ் போதையில் மயக்கி வைத்திருந்தனர். இதையறியாத அரசனும் ஒருவரையும் மதிக்காமல் ‘தான்’ என்ற அகந்தையில் திரிந்து கொண்டிருந்தான். நாட்கள் செல்லச் செல்ல, நண்பர்களும், சுற்றமும் விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்க அரசனுக்கு ஏதோ ஒரு வெறுமை குடிகொள்ள ஆரம்பித்தது. அவனுடைய செயல்பாடுகளிலும் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஒரு ஜென் துறவியைச் சந்தித்து ஆசி பெற்றால் தம் மனம் தெளிவடையும் என்று நினைத்த அரசன், அந்த ஊரில் இருந்த ஒரு ஜென் துறவியிடம் சென்று, தம் வீரதீர பராக்கிரமங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, தமக்கு ஆசி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். ஆனால் அந்த அரசன் சொன்ன எதையும் காதில் வாங்கியதாகவே தெரியாதது போல் இருந்த ஜென் துறவி, ‘நான்’ செத்த பிறகு வா, இப்போது இந்த இடத்தை காலி செய்’ என்று மட்டும் சொன்னார். அந்த அரசனோ,
‘என்ன இது, நீங்கள் செத்த பிறகு வந்து நான் என்ன செய்வது’ என்று கேட்டான்.
அப்போதும் அந்தத் துறவியார், ‘நான், செத்த பிறகு வா.. போ இங்கிருந்து’ என்றார்.
அரசனும் மேலும் பல முறை கேட்டும், அவரிடமிருந்து இதைத் தவிர வேறு எந்த பதிலும் வரவில்லை. அரசன் உடனே கோபமாக வாளை உருவினான். சுற்றியிருந்த சீடர்களோ, அவரைத் தடுத்து நிறுத்தி, அவருடைய நிலையை புரியச் செய்து, அந்த மகானிடம் அமைதியாகச் சென்று, பணிவுடன், ஆசி வழங்குமாறு கேட்குமாறு எடுத்துச் சொன்னார்கள். கோபம் சற்று குறைந்த அரசன், தன் நிலை உணர்ந்தவனாக பணிவாக, அந்தத் துறவியிடம் சென்று ஆசி வழங்கும்படி கேட்டான். அப்போதும் அவர் அதே பதிலை மட்டுமே கூறினார். ஆனால் அந்த அரசனுக்கு, ‘தான்’ என்ற அகந்தையை அழித்துவிட்டு வந்தால்தான் ஆசி பெற முடியும் என்பது தெளிவாகவே புரிந்தது!


1 comment: