Tuesday, July 28, 2015

அடியாரும், ஆன்மீகமும் (3)



பவள சங்கரி
அடியார்கள் எந்த நிலையிலும் மனம் கலங்கி நிற்கமாட்டார்கள். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் ஒன்றேபோல் பாவித்து அன்பும், பக்தியும் தம் இரு கண்களென வாழ்க்கை நெறியில் சற்றும் தடம் புரளாமல் வாழ்ந்து காட்டுபவர்கள். எக்காலத்தும், எஞ்ஞான்றும் சிவபிரானை வழுவாமல் வாளாக் கிடந்து வாடி நிற்கமாட்டார்கள்.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே 
(திருமந்திரம் : -270)
அன்பும், சிவமும் இரண்டும் ஒன்றே என்று உணரும் உணர்வில் இறைமைப் பேறு வாய்ப்பதாக திருமூலர் அருள்கிறார்.
imagesஅதுகாறும் தருமசேனர் என்ற நாமத்துடன் சமணர்களுக்கு குருவாக இருந்து அவர்தம் வாழ்க்கையை நெறிப்படுத்தியவர், நாவுக்கரசராக சைவ சமயத்திற்கு மாறி, சிவத்திருக்கோலத்துடன் வலம் வருவதைக் கண்டு வெகுண்ட சமணர்கள் அவரை அடி பணியச் செய்ய முடியாமல், ஒரேயடியாக கொல்வதற்கு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக அவரை நீற்றறையிலிட அரசன் கட்டளையிட்டான். ஆனால், அப்பரடிகளோ வீரட்டானேசுவரரைத் தியானித்தபடி “மாசில் வீணையும் மாலை மதியமும்” என்னும் திருக்குறுந்தொகையைப் பாடி அருளியபோது அவரை அடைத்து வைத்திருந்த நீற்றறை குளிர்ந்ததாம். ஏழு நாட்களுக்குப் பின்னும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், இன்முகத்தோடு வெளிவந்தார். சமண சமயத்து மந்திரங்கள் அனைத்தையும் கற்றவர் என்பதை அறிந்திருந்தும், சமணர்கள் நாவுக்கரசருக்கு கொடிய நஞ்சு கலந்த உணவை உண்ணச் செய்தபோதும் இறையருளால் உயிர் பிழைத்தார். அடுத்து, யானைக்காலில் இடறச் செய்ய எத்தனித்தபோது, “சுண்ண வெண்சந்தனச் சாந்து” என்னும் பதிகம் பாடிய அவரை, பெரும் சீற்றத்துடன் வந்த யானை, வலம் வந்து மண்டியிட்டு வணங்கிப் பின் அதே கோபத்துடன், கூட்டத்திலிருந்த சமணத் துறவிகளைத் துதிக்கையால் தாக்கியும், தரையில் அடித்தும் கால்களில் மிதித்தும் கொன்றது.
Thingalur Appar
பல்லவ மன்னன், மகேந்திரவர்மன் (கி.பி. 600 -630) சமணர்களின் பேச்சைக் கேட்டு, நாவுக்கரசரை கல்லுடன் கட்டி கடலில் தள்ளியபோது, கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணை யாவது நமச்சி வாயவே, என்ற கீழ்கண்ட பதிகம் பாடித் துதிக்க, அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து திருப்பாதிரிப்புலியூர் அருகே கரை சேர்த்தது. நகர மக்கள் அனைவரும் அதிசயித்து அப்பரடிகளை வாழ்த்தினர். இன்றும் அப்பரடிகள் கரையேறிய அந்த இடம் ‘கரையேறவிட்ட குப்பம்’ என்ற திருப்பெயரால் சிறந்து விளங்குகிறது.
“சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே”
(நான்காம் திருமுறை – 11 வது பதிகம்)
அதாவது, புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், சோதி வடிவாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனுமாக இருக்கும் சிவபெருமானின் பொன் போன்று பொலிவுற்றிருக்கும் ஐயனின் திருவடிகளை நமது மனத்தினில் இருக்கச்செய்து, கையால் தொழுது வழிபட்டால், நம்மை கல்லுடன் பிணைத்து கடலில் வீசினாலும், சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாயம், எனும் திருவைந்தெழுத்தே நமக்கு பெருந்துணையாக இருந்து நம்மைக் காக்கும் என்பதாம்.
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
இதுவும், சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தியபோது ஓதியருளியது.
மான் கன்றினை இடக்கையில் ஏந்தியும், இடப்பாகத்தில் உமையம்மையை ஏற்றுக் கொண்டும் காட்சியளிக்கும் சிவபெருமானின் திருவடிகளை நமது மனத்தினில் பொருத்தி, மலர்கள் தூவி வழிபடுவதாலும், நமச்சிவாயப் பதிகத்தினை நாவாரப்பாடி தொழ வல்லவர்களை எத்தைகைய துயரங்களும் அண்டாது.
ஒரு ஜென் கதையைப் பார்ப்போமா:
மன உறுதி இல்லாதவரால் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க முடியாது.
மிகவும் புகழ் பெற்ற வில் வித்தைக்கார சென் துறவி ஒருவர் இருந்தார். அவருடன் போட்டியிட்டு எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், திறமைசாலியான ஒரு இளம் வில் வித்தைக்காரர் அந்த சென் துறவியைத் தேடி வந்தார். அத்துறவிக்கு சவால் விடக்கூடியவராய் இருந்த அந்த இளம் வீரர் போட்டிக்கான நாளைக் குறித்தார். மக்கள் முன்னிலையில் போட்டி ஆரம்பமானது. பல கட்டங்களாக நடந்த அப்போட்டியில் இருவரும் சமமாக வென்று முன்னேறிக் கொண்டிருந்தனர்.
தொலைவில் இருந்த ஒரு மாட்டு பொம்மையின் கண்ணில் கச்சிதமாகத் தமது முதல் அம்பால் அடித்தும், பின் அடுத்த அம்பால், முதலில் அடித்த அந்த அம்பையே இரண்டாகப் பிளந்து காட்டியும் சாதனை செய்தார் அந்த இளம் வீரர்.
‘அருமை’ என்று அந்தத் துறவி பாராட்டியதோடு, ‘என்னுடன் நான் சொல்கிற வேறு ஒரு இடத்துக்கு வா. அங்கு வந்து உன் திறமையைக் காட்டு பார்ப்போம்’ என்றார்.
அந்த இளம் வீரரும், அப்படிப்பட்ட இடம் எதுவாக இருக்கும் என்ற அடக்க முடியாத ஆவலுடன் துறவியைப் பின் தொடர்ந்து சென்றார். ஒரு பெரிய மலைச் சிகரத்தில் ஏறிய துறவி, மிக உயரமான இரண்டு மலைகளுக்கு இடையே நடந்து செல்வதற்காகப் போடப்பட்டிருந்த சின்னஞ் சிறு மரப்பாலத்தில் நடந்து அதன் நடுவில் சென்று நின்றார். அந்தப் பாலமோ ஒருவர் மட்டுமே நடந்து செல்லக் கூடியதாக இருந்தது. கீழே அதள பாதாளம். சற்றே சறுக்கினாலும் மரணத்திலிருந்து தப்பிக்க இயலாது.
தன் வில்லை எடுத்த துறவியாரோ, அம்பைத் தொடுத்து தொலைவில் இருந்த ஒரு மரத்தின் கனியில் மிகச் சரியாகக் குறி பார்த்து வீசினார். குறி தப்பாமல் வென்றும்விட்டார்.
‘இப்போது உன் முறை’ என்றபடியே பாலத்தில் இருந்து வெளியே வந்து மலைப்பகுதிக்குச் சென்று நின்று கொண்டார்.
அந்த இளம் வீரருக்கோ அச்சத்தில் கை, கால்களனைத்தும் உதறலெடுக்க ஆரம்பித்தது. அதனால் அக்கனியை சரியாகக் குறி பார்க்க முடியவில்லை. தன் இலக்கையும் அடைய முடியவில்லை அந்த இளைஞனால்.
வருந்திய அவ்வீரரை அணைத்து, அவரது முதுகைத் தடவிக் கொடுத்த துறவி, ‘உன் வில்லில் இருக்கும் உறுதி, உன் மனதில் இல்லை. அதுதான் பிரச்சனை’ என்றார்.
மனம் வலிமை உடையதாக இருந்தால் மட்டுமே உடலும் வலிமையுடன் இருக்கும். மன உறுதி உடையவர்கள் மட்டுமே நினைத்ததை நினைத்தவாறு அடையமுடியும். அதற்கு குழப்பமில்லாத தெளிவான சிந்தனையும், மன அமைதியும் அவசியம். அப்படிப்பட்ட மன உறுதி இல்லாதவர்கள் துன்பத்தில் உழல்வதுடன், பிறருக்கு உதவும் மனப்பான்மையையும் இழந்து, அதனால் மற்றவர்களால் ஒதுக்கப்படவும் செய்கிறார்கள். ஆக ,மன உறுதி இல்லாதவர்களால் எந்த சாதனையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டார் அந்த வீரர்!
குறள் 666:
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் 
திண்ணியர் ஆகப் பெறின்.
தாம் செய்ய எண்ணிய செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால் மட்டுமே தாம் அடைய நினைத்தவற்றை எல்லாம் தம் எண்ணப்படியே அடைவார்.
படங்களுக்கு நன்றி

No comments:

Post a Comment