Thursday, March 24, 2016

புத்திசாலித்தனமும், அறிவும் ஒன்றா?

பவள சங்கரி
images
சாக்ரடீசு மிக யதார்தமான அறிஞர். ஒரு நாள் அவருடைய அபிமானி ஒருவர் அவரிடம் வந்து, ஐயா புத்திசாலித்தனமும், அறிவும் ஒன்றா? இல்லையென்றால் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? என்று வினவுகிறார்.
அவரும் மெல்லிய புன்னகையுடன், “அதோ அங்கு திண்ணையில் உட்கார்ந்திருக்காரே அந்த பெரியவர்கிட்ட போய், இங்கிருந்து அடுத்த ஊருக்குப்போக எவ்வளவு நேரம் ஆகும்னு கேட்டுவிட்டு வா” என்றார்.
அந்த மனிதரும் அப்படியே போய் அந்தப் பெரியவரிடம் கேட்க, அவரோ பதிலேதும் கூறாமல் மேலும், கீழும் பார்த்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டாராம். இவரும் விடாமல் 2,3 முறை கேட்டுவிட்டு, பாவம் மனநிலை சரியில்லாதவர்போல என்று நினைத்து திரும்பிச்செல்ல நான்கு அடி எடுத்து வைத்தார்.
உடனே அந்தப் பெரியவர், ‘யப்பா, நீ ஒரு 15 நிமிடத்தில் அடுத்த ஊருக்குப் போய் சேர்ந்துவிடலாம்’ என்று சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டார்.
இத்தனை முறை கேட்டு பதில் சொல்லாத பெரியவர் திடீரென்று ஏன் சொன்னார் என்ற ஆச்சரியத்துடன், அவரையே அதற்கான காரணமும் கேட்டார்.
‘ஏம்ப்பா நீ எவ்வளவு வேகமாக நடக்கக்கூடியவன் என்று தெரிந்தால்தானே நீ கடக்க வேண்டிய தூரத்திற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று நான் கணக்கிட முடியும்’ என்றவரை ஆச்சரியமாகப் பார்த்ததோடு கும்பிட்டுச் சென்றவன் அதை அப்படியே போய் சாக்ரடீசிடம் சொல்கிறார்.
அதற்கு சாக்ரடீசு அதே புன்னகையுடன், ‘இதற்குப் பெயர்தானப்பா புத்திசாலித்தனம்’ என்றாராம்!

http://www.vallamai.com/?p=67425

No comments:

Post a Comment