Tuesday, March 22, 2016

தேவ வாத்தியம்!



பவள சங்கரி
‘தேவ வாத்தியம்’ என்பது எது? ஏன் அது அப்படி அழைக்கப்படுகிறது?
images (1)
‘கடம்’ என்ற மண்பானை போன்ற தோற்றமுடைய அந்த எளிமையான இசைக்கருவிதான் ‘தேவ வாத்தியம்’ என்று அழைக்கப்படுகிறது. இது கர்நாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று. தோற்றத்தில் சாதாரண மண் பானை போலவே இருந்தாலும் இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. கடம் தயாரிப்பதற்கு மூன்றுவிதமான மண் தேவை. வைகையாற்று வண்டல், கண்மாயில் பதிந்து கிடக்கும் களிமண் மற்றும் மணல். ஒரு மாட்டு வண்டி வண்டலில் 40 கடம் செய்யலாமாம். சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற ‘குடமுழவு’ எனும் இசைக்கருவியே நாளடைவில் மருவி ‘கடம்’ என்று ஆனதாகவும் சொல்கிறார்கள்.

சாதாரண பானையை 4 மணி நேரம் நெருப்பில் வேகவைத்தால் போதும். ஆனால் கடம் உருவாக 16 மணி நேரம் நெருப்பில் வேக வைக்க வேண்டுமாம். 10 கிலோவுக்குக் குறையாமல் இதன் கனம் இருக்கும். பானையைப் போல இதை எளிதாக உடைக்க முடியாது. கடம் அரிவாள் வைத்துக் கொத்தினாலும் சில்லுகள் பெயராது!
சரி இதற்கு ஏன் ‘தேவ வாத்தியம்’ என்று பெயர் வந்தது என்று பார்ப்போமா. ஒரு கஞ்சிரா உருவாக ஒரு உடும்பின் உயிர் தேவையாம். ஒரு தவில் உருவாக ஒரு மாட்டின் உயிர் தேவை. ஆம் மேற்கண்ட இரண்டும் அந்த உயிரினங்களின் தோலினால்தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் கடமோ மண்ணில் இருந்தே உருக்கொள்கிறது. நிலத்திலிருந்து மண், மழையிலிருந்து நீர், காற்றினால் உலரச்செய்து, தீயினால் சுட்டு உருவாக்கப்படும் ஒரு கடத்தில் வெற்றிடமாக அந்த ஆகாயம் இருக்கிறது. ஆக, ஐம்பூதங்களும் இந்த கடத்திற்குள் அடக்கம். அதனால்தான் இதனை ‘தேவ வாத்தியம்’ என்கிறார்கள்.
images (2)
பாரம்பரியமாக இசைக்கருவிகள் தயாரித்து வரும் பல கலைஞர்கள் இன்று அத்தொழிலை விட்டு விலகியதால் பல அரிய இசைக்கருவிகள் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதன் காரணம் இசைக்கருவிகளை இசைக்கும் மீப்பெரும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும் அங்கீகாரமும் அதற்குப் பின்புலமாக விளங்கும் அத்தகைய கருவிகளைத் தயாரிப்பவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான்! சொல்லப்போனால் கடம் தயாரிக்கும் ஒரு சாதாரண மனிதருக்கு அந்த இசையின் முழு பரிமாணமும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதுதான் ஆச்சரியம். ஆம், கடம் செய்வோருக்கும் இசைஞானம் இருந்தால்தான் அதன் சரியான நாதம் மற்றும் சுருதி பேதம் என அனைத்தையும் சரிபார்க்க முடியுமாம்!

இந்தியாவிலேயே சிறந்த கடம் தயாரிப்பாளர் என மானாமதுரையைச் சேர்ந்த மீனாட்சியம்மாளுக்கு இந்திய அரசு அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கையால் விருது பெற்றுள்ளார் என்பது ஆறுதலான விசயம்!
http://www.vallamai.com/?p=67355
இணையப்படங்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment