Sunday, March 27, 2016

’தோன்றிற் புகழொடு தோன்றுக ’



பவள சங்கரி

ஐயாவும், மகளும்
ஐயாவும், மகளும்

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
    புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
    நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
    டெல்லார்க்கும் பெய்யு மழை.
மூதுரை (10)


பூமித்தாயை மகிழ்வித்து இப்புவி வாழ, தாய்த்தமிழ் வாழ,  தன்னலமற்ற தொண்டாற்றி தரணியின் வரலாற்றில் தம் தடம் பதிப்பவர்களில் ஐயா முத்துக்குமாரசுவாமியும் ஒருவர். இவர் பஞ்சநாதம் மற்றும் மாரியம்மாள் தம்பதியினருக்கு  திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்,  1936ஆம் ஆண்டில், தவப்புதல்வனாய் அவதரித்தவர். பள்ளி மற்றும் உயர் பள்ளிக்கல்வி திருப்பராய்த்துறை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீராமகிருஷ்ணர் தபோவனத்திலும் பயின்றுள்ளார். தருமபுரம் பல்கலைக் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பும், முதுபெரும் புலவர் சித்தாந்தசிரோமணி முத்து மாணிக்கவாசக முதலியார், பேரா.குருசாமி தேசிகர், செஞ்சொற்கொண்டல், சொ.சிங்காரவேலனார் ஆகியோரிடம் இலக்கண, இலக்கியம் பயின்றுள்ளார். பின் ஆய்வு நூல்கள், ஆன்மீக நூல்கள், வரலாற்று நூல்கள், என நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். எண்ணிலடங்கா விருதுகளும், பரிசுகளும், பொற்கிழிகளும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1970லிருந்து 2016 வரையில் 107 நூல்கள் படைத்துள்ளார். துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இலக்கிய, ஆன்மீக கருத்தரங்குகளில் பங்குபெற்று வருகிறார். இவையனைத்திற்கும் மேலாக இவர் தம் தவப்பயனாகக் கருதுவது நம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற கப்பலோட்டியத் தமிழர் வ.உ..சிதம்பரனார் அவர்களின் வம்சாவளியில் பிறந்துள்ளதை மட்டுமே.  பல தமிழறிஞர்களும், உற்றார், உறவினரும், நண்பர்களும் புடைசூழ முத்துக்குமாரசுவாமி  ஐயா அவர்களின் முத்து விழா இறையருளால் இனிதே நடந்தேறியது. அதுசமயம் பல்வேறு துறை அதிகாரிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் வாழ்த்துரைகள் அடங்கிய, ‘அன்புத் தவம் செய்யும் அறிஞர்’ என்ற சிறப்பு மலர் வெளியீடு சிறப்பாக நடந்தது.
சிறப்பு மலர் வெளியீடு
சிறப்பு மலர் வெளியீடு
எமது வாழ்த்துரை:
 DSC00962

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று (236)
என்ற ஐயன் வள்ளுவன் வாக்கிற்கேற்ப நிறைபுகழோடு தோன்றியவர் ஐயா முத்துக்குமாரசுவாமிஅவர்கள். ஆம், நம் இந்தியத் திருநாட்டின் பிறந்து வளர்ந்து பாரதத் தாயின் தவப்புதல்வனாய் அவள்தம் பெருமையை நிலை நாட்டிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றலாய் அவதரித்த வல்லார் இவர்.
தம் எண்ணத்திலும், சொற்களிலும் பொலிவு கூட்டி அவற்றை வண்ணமிகு நூல்கள் பல படைத்து, தம் கவின்மிகு நடை மூலம் அழகுத் தமிழின் அருமையை உலகம் முழுதும் பறை சாற்றும் வள்ளல் இவர் என்றால் அது மிகையாகாது! இவர்தம் நூல்கள் யாவும் மக்கள் யாவரும் மாக்கள் ஆகாமல், அறவழிப் பேணி, செம்மைப் பண்பு ஓங்கி, இறை பக்தியில் இனிமை காணும் பண்பு ஓங்கி மனிதம் காக்கும் மனநலம் பெறச் செய்யும் அருஞ்சுவைத் தெள்ளமுதம் என்பதும் வெள்ளிடைமலை. ஐயாவின் நூல்களை வாசிக்கும்போது அவரிடம் பரந்துபட்ட நூலறிவு படர்ந்திருப்பதை அவருடைய நூல்களின் பக்கந்தோறும் காணவியலும். செந்தமிழின்  செழுமையைத் திறம்பட எடுத்தாண்டிருப்பதை உணரவியலும். கவின்மிகு நடையால் மட்டும் நம் கவனத்தைக் கொள்ளைகொள்ளாமல் தம் கருத்தாழம் மிக்க சொற்களால் தம் படைப்புகளை மிளிரச் செய்திருப்பதையும் காண முடிகிறது. அந்த வகையில் அன்னைத் தமிழின் அருந்தவப் பயனாய் அவதரித்த அன்பு மகன் இவர்.
DSC00968
“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்ற ஐயன் நாவுக்கரசரின் வழி நடக்கும் உன்னத ஆத்மா நம் ஐயா அவர்கள்.
மகாபாரதத்தை வியாசர் கூற விநாயகப் பெருமான் தம் கொம்பினை எழுத்தாணியாகவும், மேருமலையை ஏடாகவும் கொண்டு எழுதினார் என்பர். அந்த வகையில் ஐயா முத்துக்குமாரசுவாமி அவர்களின் வாழ்க்கைப் பயணக் குறிப்பை, அவர் பெற்ற விருதுகள், பாராட்டுப் பத்திரங்கள், பட்டங்கள் என அனைத்தையும் எழுத இன்னுமொரு மேருமலை ஏடும், சிறப்புமிக்க எழுத்தாணியும் தேவை. அநாதியான இறையோனைப் போன்றே உலகின் தொன்மை வாய்ந்த சிவநெறி. இந்நெறி எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதும் அறியப்படாத ஒன்று. வாழ்வியல் நெறி மனிதகுலம் உய்ய உயர்ந்த நெறி. அற்புதமான இச்சிவநெறியை அவ்வப்போது தோன்றும் ஐயா முத்துக்குமாரசுவாமி போன்ற அருளாளர்களே பேணிக்காத்து வருவதும் கண்கூடு. நம் தெய்வச் சேக்கிழார் பெருமானார் போற்றிப் பாடிய ‘செழுந் தமிழ் வழக்கு’ என்ற இந்நெறியே தமிழர்தம் தூய செந்நெறியாம். அந்த வகையில் நம் ஐயா முத்துக்குமாரசுவாமி இறை அனுபவத்தைத் தம் தீஞ்சுவைச் சொற்களால் சுவைபட வடித்தருளியவர். அணுவுக்கு அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய் நின்று இயக்கும் பொன்னம்பலக் கூத்தனின் திருவருளை முழுமையாகப் பெற்றவர் இவர் என்பதையும் எளிதாக உணரமுடிகிறது.
ஐயா அவர்களின் நூல்களை வாசிக்கும்போது, ஜி.யூ போப் என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞரின் அருமையான அனுபவம் ஒன்றை நினைவுகூரச் செய்கிறது. திரு போப் அவர்கள் நம் தமிழ் நூல்கற்பால் பேரார்வம் கொண்டு கற்ற சமயத்தில் திருவாசகத் தேன் பருகிய காலகட்டத்தில் தமது நண்பர் ஒருவருக்கு அவ்விறை அனுபவங்களை மடை திறந்த வெள்ளமாகக்கொட்டித் தீர்த்தபோது, அனைத்து வரிகளும் நீரால் அழிந்துபட்டுக் கிடந்து வந்ததை பல கடிதங்களில் கண்டு மனம் பொறுக்காமல் அந்நண்பர் போப் அவர்களை நேரில் சென்று சந்தித்து, “நண்பரே இது என்ன விளையாட்டு? கடிதம் எழுதி தண்ணீர் தெளித்து அனுப்புகிறீர்களே” என்று காரணம் கேட்க, அவரோ, “நண்பரே நான் விளையாடும் பருவத்தைக் கடந்தவன். நான் எப்போதும் கடிதம் எழுதும்போது ‘வெள்ளம் தாழ் விரிசடையாய்’ எனத் தொடங்கும் திருவாசகப் பாடலை எழுதிவிட்டு உங்களுக்கு எழுதிய கடிதத்தை முடிக்கும் முன்பே என் கண்களில் கண்ணீர் வழிகிறது. முற்றுப் பெறாத கடிதத்தில் கலங்கலுக்குத் தண்ணீர் அல்ல காரணம்; என் கண்ணீரே !” என்றாராம். இப்படித்தான் போப் அவர்களின் சிந்தையைக் கரைத்துச் சிவமாக்கிய திருவாசகத் தேன் போன்று ஐயாவின் ஒவ்வொரு நூலும் நம் சிந்தையை முழுமையாக நிறைக்க வல்லது என்றால் அது மிகையாகாது! ஐயா இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து அன்னைத் தமிழுக்கு வெற்றிமாலை சூட்டிக்கொண்டிருக்க வேண்டும் என உளமார எம் இறையைப் பிரார்த்திக்கிறோம்.
எமது வாழ்த்துப்பா!
நற் பாயிரம் பாடிப்பரவும்
கவி யுலகும் கனிந்துருகும்
விண் மீன்கள் மென்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே
பூங்காற்றும் புதுமணம் வீசியே
இசை சாரல் தூவிடுமே
மஞ்சள் வெயிலும் மலரணையால்
பொன்னாடை சூட்டி மகிழுமே.
சந்திரனும் தண்ணொளி வீசி
சங்கதிகள் பலவும் மொழிந்திடுமே.
வேதமும் நாதமும் விண்ணதிர
நித்தம் இன்னிசை  மீட்டிடுமே
விண்மீன்களும் களிப்புற நடமாடி
நல் வாழ்த்துகள் கூறிடுமே!

வாழ்த்துகள் நானும் சொல்ல
வார்த்தைகள் தேடிச் செல்ல
வசமாகிப் போன ஓசைகளாய்
புள்ளினமும் பூந்தளிரும் புவியேழும்
இணைந்து நற்பாமாலை பாடி
தமிழன்னை மடியில் மலர்ந்த
மைந்தனிவனை மனமார வாழ்த்தி
கவின்மிகு சொற்கள் கூட்டி
ஆன்றோர் வாழ்த்துரைக்க ஆயிரம்
ஆயிரமாய் பூச்சொரிந்து புகழ்பரவி
நிலவின் கைபற்றி  நித்தம்
நிறைவிழா கண்டு நீடூழிவாழ்க!
தென்றலின் சுகமான சாமரவீச்சில்
திங்களின் இதமான ஒளிஒத்தடத்தில்
வள்ளலின் வளமான வாழ்த்துரைகள்
திக்கெட்டும் முரசு கொட்டட்டும்!
வாழ்க வளமுடன்! வாழ்க பல்லாண்டு!!
நற்றமிழ் நல்கும் முத்தமிழ் வித்தகர் – பழ.முத்து, நிர்வாக இயக்குநர், பழனியப்பா குழுமம்
’மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பார்கள். இவர் தமிழ்த் தொண்டே தலையாயத் தொண்டு என்று தவம் மேற்கொண்டு நற்றமிழ் நல்கும் முத்தமிழ் வித்தகர். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் வம்சம். தமிழின் அம்சம். காவிரிக் கரையில் காவி உடைகளிடம் கல்வி கற்று தமிழில் புலமை பெற்றவர்; சிறந்த எழுத்தாளர்; தலைசிறந்த பேச்சாளர்; இவர் பேச்சைக் கேட்டாலும், எழுத்தைப் படித்தாலும் தென்றல் வீசும் சுகம் கிடைக்கும். கேட்கவும், படிக்கவும் திகட்டாத இன்பம் வரும். சிறந்த நூலாசிரியர்; சிறந்த ஆய்வாளர்; சிறந்த பேச்சாளர்; பொற்கிழி விருது, இலக்கிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, என இவர் பெற்ற விருதுகள் ஏராளம். உள்நாடு, வெளிநாடு என இவர் ஏறிய மேடைகள் எண்ணிக்கையில் அடங்காது. சிவனுக்கு தொண்டாற்றிய மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு என்று வரம் அருளிய இறைவன், தமிழ் தொண்டாற்றும் இவருக்கு நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வங்களும் தந்து வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் புரியட்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன்.
இவர் எங்களில் ஒருவர் – ப. செல்லப்பன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
தமிழ் கூறும் நல் உலகமே வியந்து பாராட்டுகின்ற அளவிற்கு அனைத்து தமிழ் கவிஞர்களும் பெருமை கொள்ளும் வகையில் பல ஆண்டுகள் நின்று நிலைத்து பேசக்கூடிய ஓர் ஆவணமாக ஐயா அவர்கள் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் உழைத்து ஒரு மாபெரும் தொகுப்பு நூலான “இருபதாம் நூற்றாண்டின் நூறு தமிழ்க் கவிஞர்கள்” என்ற நூலினை 2004 ஆண்டு பிற்பகுதியில் தயாரித்துக் கொடுத்தார். அப்புத்தகத்திற்கு மட்டும் இரண்டு பரிசுகள் கிடைத்தன. தொடர்ந்து எங்களது பதிப்பகத்தில் அய்யா அவர்கள் ஆன்மிக இலக்கியத் திறனாய்வு, வரலாறு, சுய முன்னேற்றம் என பல நூல்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டு வருகிறார். அத்தோடு மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து தலைசிறந்த சிறுகதை ஆசிரியர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், திறனாய்வாளர்கள் போன்ற பெருமக்களிடம் பல நூல்களை எழுதிப் பெற்று எங்கள் பதிப்பகத்தில் பதிப்பிக்கச் செய்த பெருமை அவருக்கு உண்டு. அவருடைய பொறுப்பில் ஏறத்தாழ நூறு நூல்களுக்கு மேல் அவரது உழைப்பால் பல நூலாசிரியர்களிடமிருந்து கிடைத்துள்ளன. அதில் அவர் மட்டும் ஏறத்தாழ எங்கள் நிறுவனத்திற்கு முப்பது நூல்களுக்குமேல் எழுதித் தந்துள்ளார். அதில் அவருடைய பத்து நூல்களுக்கு தமிழக அரசின் விருதுகளும், பரிசுகளும், தமிழ் அமைப்புகளின் பரிசுகளும் கிடைத்துள்ளன என்பது ஒன்றே அவரது தமிழ்ப் புலமைக்குச் சான்றாகும்.
எங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்குகொண்டும் எங்களை மகிழ்வுறச் செய்பவர். புத்தகத் தயாரிப்பில் எங்களை வழிநடத்திச் சென்றிட என்றென்றும் இறைவன் இவருக்கு நல்ல உடல் வளத்தினையும் உறுதியினையும் வழங்கிட வேண்டுகிறோம். எண்பது அகவையைத் தாண்டியும் அன்றாடம் அலுவலகத்திற்கு வந்து மாலைவரை இருந்து தயாரிப்புப் பணிகளை ஏற்றுக்கொண்டு அவர் ஆற்றுகின்ற தொழில் முறை ஈடுபாடும், சோர்வில்லா உழைப்பும், சுறுசுறுப்பும் எங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும். எங்களில் ஒருவராக திகழும் அய்யா அவர்களை எனது மூத்த சகோதரராகவே கருதி இன்றுவரை பழகி வருகிறேன். இத்தகைய பெருமகனாருக்கு இன்று முத்துவிழா நிகழ்கிறது. இந்த நேரத்தில் எங்கள் நிறுவனத்தின் சார்பிலும் என் சார்பிலும் வாழ்த்துக்கூறி, அன்போடு இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்றிட இறையருள் துணை நிற்க வேண்டுகிறோம்.
ஈழத் தமிழர் சார்பில் வாழ்த்துக்கள் – மறவன்புலவுக.சச்சிதானந்தன்
சைவம் ஒரு கண், தமிழ் மற்றொரு கண் என வாழ்பவர். சைவமும் தமிழும் தழைக்க அரிய நூல்கள் பல படைத்தவர். பரிசுகள் பல பெற்றவர். உலகம் முழுவதும் வாழும் சைவத் தமிழ் அன்பர்களின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றவர். இலங்கைத் தமிழரின் துயர் போக்க அங்கு சைவத் தமிழ்ப்பணி ஆற்றுபவர். என் நண்பர் ஈசுவரனின் நல் ஆதரவு பெற்றவர். பல்லாண்டு பல்லாண்டு நலத்தோடு வாழ்வாராக. புகழோடு விளங்குவாராக.
சித்பவானந்தர் மர நிழலில் செழுத்த துளசி! – திருப்பூர் கிருஷ்ணன்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் வம்சாவளியில் வந்தவர் இவர் என்ற முக்கியமான செய்தியை, திருப்பூர் குமரனின் திருப்பூரைச் சார்ந்த நான் சொல்லிப் பெருமைப்படாவிட்டால் எப்படி? தாம் எழுதிய கண்ணதாசன் கவிதைகள் ஒரு மதிப்பீடு என்ற ஆய்வு நூலுக்கான கண்ணதாசன் பரிசைக் காமராஜரிடமிருந்து பெற்றவர்! வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வரலாற்றை இவர் எழுதினார். அப்படி வரலாறு படைத்தார். அந்த நூலுக்கு அணிந்துரை தந்தவர் யார் தெரியுமா? மேனாள் குடியரசுத் தலைவர் ஆர்.கே.நாராயணன். செந்தமிழ் முருகன் என்ற இவரது ஆய்வு நூல் மிக முக்கியமானது. அது தமிழக அரசின் பரிசைப் பெற்றதில் வியப்பில்லை. இவரது இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் என்ற நூலுக்கு எங்கள் திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இதுபோல் இவர் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
நரசய்யா – வாழ்த்துரை
வ.உ.சி. ஒரு பெரிய சூரியன்; அவர் வழித்தோன்றல்கள் முக்கியமான கதிர்கள். அவற்றில் முத்துக்குமாரசுவாமி என்றதொரு ஒளிக்கதிர் தனிச்சிறப்பு வாய்ந்தது; அவர் தொகுத்தளித்துள்ள வ.உ.சியின் வரலாறு நூல் அதற்கான வாழும் சான்று. இவ்வயதிலும் சற்றும் தளராது, ஆர்வம் சற்றும் குறையாது அவர் தமிழுக்குச் செய்து வரும் தொண்டு மிகவும் பாராட்டுதலுக்குரியது. அவர் நீண்ட காலம் வாழ்ந்து தமிழன்னைக்கு தனது தொண்டினைச் செய்து தமிழகம் உய்விக்க வாழவேண்டும் என முருகனை வேண்டுகிறேன்.
 உழைப்பால் உயர்ந்தவர் – செல்லப்பாப்பா கீரன்
2010 இல் சென்னையிலுள்ள எமது இல்லத்திற்கு ஒரு நாள் வந்து, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உங்களை அமுதசுரபிக்காகப் பேட்டி எடுக்க வந்துள்ளேன், நான் தருமையில் உங்களுடன் படித்தேன். பிறகு சர்வோதயாவில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன் என்றார். எங்கள் இருவருக்குமே அப்பொழுது எழுபதிற்கு மேல் ஆகிவிட்டதால் எனக்கு அடையாளம் தெரியவில்லை. ……  நான் பெருமையுடன் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அப்பொழுது அவர் அமர்ந்திருந்த கோலம் முற்றத் துறந்த முனிவரின் கோலம்! முதலாண்டுக் கல்வியில் சேர்ந்திருந்த அவரை சில மாதங்களில் குடும்பத்தினர் வற்புறுத்தல் காரணமாக தந்தை அழைத்துச் சென்று பணி, திருமணம் என்று அமைந்தாகிவிட்டது!
எடுத்துக்கொண்ட அந்த அறம் சென்றாலும் வந்து சுமந்த அந்த இல்லற தருமத்தை பெற்றோர், சகோதரி, சகோதரர் என்ற அனைத்துக் கடமைகளையும் செவ்வனே செய்து; தற்போது தனது பிள்ளைகள், பேரக் குழந்தைகள் என்று பாடுபட்டுக்கொண்டிருப்பவர். இப்படி இடையறாது குடும்பச் சுமைகள் இருந்தாலும் இளைஞர் போல ஓடியாடி சுற்றித் திரிந்து விழாக்களை நடத்துவதும், பங்கு கொள்வதும், நூல்களை எழுதித் தள்ளுவதும் குறைவில்லை! அமைதி, அடக்கம், பண்பு, பாசம், பொறுமை, உழைப்பு, உதவும் பாங்கு எல்லாம் நிறைந்த உருவம்!

http://www.vallamai.com/?p=67466

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...