பவள சங்கரி
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!
இன்று சர்வதேச தாய்மொழி தினம். உறவு, உணவு, உணர்வு என அனைத்தையும் கற்றுத் தரும் தாயின் மொழியே ஒருவரின் முக்கியமான மொழி. ஒருவர் எத்தனைதான் அந்நிய மொழிகள் கற்றிருந்தாலும் வேதனை, ஆபத்து, உணர்வினால் சூழப்பட்ட தருணம் போன்ற காலங்களில் தாய்மொழி மட்டுமே உள்ளத்திலிருந்து வார்த்தைகளாகி வெளிவரும். அப்படி வருவதற்கான வாய்ப்பு அமையப் பெறாதவர்கள் எதையோ இழந்தது போன்றதொரு நிலையில் இருப்பதை உணர்வார்கள். அந்த நிலையில் இதனால் மனக் குழப்பம் மேலும் அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
ஒரு தாயின் கருவறையில் உருவாகும் உயிர் சில மாதங்களுக்குப் பிறகு அத்தாயின் குரல் மட்டுமின்றி, சூழ்ந்திருக்கும் நெருங்கிய ஒலிகளையும் கூர்ந்து கவனித்தவண்ணம் இருப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் பொருட்டே கருவுற்றிருக்கும் தாய்மார்களை நல்ல சிந்தைகளை ஊக்குவிக்கும் படைப்புகள், அதிர்வற்ற மெல்லிய இசைகள் போன்றவற்றை அதிகமாக செவிமடுக்கும்படி அக்காலந்தொட்டே அறிவுறுத்தப்பட்டு வந்ததோடு நம் முன்னோர்கள் வழி இன்றும் தொடர்ந்து வருவதும் கண்கூடு. அந்த வகையில் தாய் வழி வந்த மொழி என்பது ஒவ்வொருவருக்கும் எத்துணை இன்றியமையாததொன்று என்பதைச் சொல்லத் தேவையில்லை.
சர்வதேச தாய்மொழி தினம், 1999ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
பாகிசுதான் நாடு நம் இந்திய நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்றபின் அங்கு உருது மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ஆம் ஆண்டு, தற்போதைய வங்க தேசமான, அன்றைய கிழக்கு பாகிசுதானில் உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை விடுத்தபோதும் அது நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது. அதே ஆண்டில் பிப்., 21ஆம் நாள் தாகா பல்கலைக்கழக மாணவர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 4 மாணவர்கள் உள்பட பலர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிர் நீத்த மாணவர்களின் நினைவாகவே இத்தினத்தை யுனெசுகோ அமைப்பு சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்துள்ளார்கள்.
தாய்மொழி, தேசிய மொழி, தொடர்பு மொழி என்ற மூன்று விதமான மொழிகளின் வல்லமை பெற்றவர்கள் வாழ்வில் பல வகையான வெற்றிகளை எளிதாகப் பெறக்கூடியவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில், பேச்சு வழக்கில் மட்டுமின்றி கல்வித் திட்டங்களிலும் இந்த மும்மொழிகள் சேர்க்கப்பட வேண்டும் என யுனெசுகோ வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது. உலகில் பேச்சு வழக்கில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளதும், இது கண்டம், நாடு, மாநிலம், மாவட்டம், கிராமம் என பல்வகையில் வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் உள்ள தனிப்பட்ட தாய்மொழியின் தனித்தன்மை, அப்பகுதி மக்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கக்கூடியது. அந்த வகையில் ஒரு இனத்தின் அடையாளம் மொழி என்றாகிறது. இனப்பாகுபாடு என்ற பேதங்களின்றி அனைத்து உலக மக்களும் ஒற்றுமையாக வாழ வழி காண்பதே இந்த நாளின் முக்கியத்துவமாகும்.
“தாய்மொழி ஒருவருக்கு கண் போன்றது; மற்ற பிற மொழிகளனைத்தும் கண்ணாடி போன்றது” என்பார்கள். கண் போன்று தாய்மொழியைக் காக்கவேண்டியது ஒவ்வொருவரின் முக்கிய கடமை. தாய்மொழியின் மூலம் சிந்திக்கும்போதே ஒருவரின் சிந்தனா சக்தி பெரிதும் விரிவடைகிறது என்கின்றனர் அறிஞர்கள். குழந்தைகளிடம் மூன்று வயதுவரை ஒரு மொழியில் மட்டுமே, குறிப்பாக தாய்மொழியில் மட்டுமே உரையாடுவது அவர்களின் பேச்சுத் திறனையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கச் செய்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.
ஒரு ஆய்வு நிறுவனம், தமிழில், எளிதாக வாசிக்கக்கூடிய, 8 வரிகள் கொண்ட ஒரு சிறு பத்தியை தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களிடம் கொடுத்து வாசிக்கச் செய்தனர். இந்த ஆய்வின் முடிவில், ஐந்து வயதான, முதல் வகுப்பில் படிக்கும், 43.4 சதவிகித குழந்தைகளால் மட்டுமே தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது என்ற அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர். 2ஆம் வகுப்பு படிக்கும் ஆறு வயது குழந்தைகளில் 43.6 சதவிகித குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளைப் புரிந்து வாசிக்க முடிகிறது என்றும் 5ஆம் வகுப்பு படிக்கும், 29.9 சதவிகித குழந்தைகளால் மட்டுமே 2ஆம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது என்றும் வெளியிட்டனர். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழகத்தில் இப்படியொரு நிலை என்றால் புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளின் நிலை எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. எதிர் காலத்தில் தமிழ் மொழியின் நிலை என்னவாகும் என்று நினைத்து அச்சம் கொள்வதையும் தவிர்க்க முடியவில்லை. இன்னும் 100 ஆண்டுகளில் அழியப் போகிற மொழி என்று சர்வதேச அமைப்பு ஒன்றின் பட்டியலில் உள்ள 25 மொழிகளில் பழம்பெருமை வாய்ந்த நம் தமிழ் மொழி 8வது இடத்தில் உள்ளது என்பதும் அதிர்ச்சியான தகவல். அந்த வகையில் உலகின் மொழிகள் அனைத்தும் அழிவிலிருந்து காக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கம் கொண்ட இந்நாள் போற்றுதலுக்குரியது.
பல மொழிகள் பேசக்கூடிய நம் இந்திய நாட்டில் 74 சதவிகித மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவிகித மக்கள் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளையும் பேசினாலும் இந்திய அரசு 22 மொழிகளையும் அங்கீகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு இனத்தின் மொழி அழிதல் என்பது அந்த பண்பாடு, பாரம்பரியம், மற்றுமந்த இனமே அழிவதாகத்தான் அர்த்தம்.
இந்தியாவில் மொத்த மொழிகள் 1652 (1961ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி) என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில் 5வது இடத்தில் தமிழ் உள்ளது. 216 மொழிகளை 10,000க்கும் குறைவானவர்களே பேசுகின்றனர். இவற்றில் 18 மொழிகள் அரசின் அதிகாரப்பூர்வ மொழிகள். மீதமுள்ள பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. பேச்சு வழக்கில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் இந்தி பேசும் அதிக மக்கள் தொகையாக 41% உள்ளனர். இரண்டாவது இடத்தில் பெங்காலி (6,95,0738). மூன்றாவது இடத்தில் தெலுங்கு மொழி (6,60,17,615). நான்காவது இடத்தில் மராத்தி (6,24,81,681).
5வது இடத்தில் தமிழ் மொழி பேசுபவர்கள். (5,30,06,368). இந்தியாவில் தமிழ் பேசுபவர்கள் 6.32% புதுவையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 89.2%. தமிழகத்தில் 86.7%. கேரளாவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை 2.1% கர்நாடகத்தில் 4வது இடத்தில் தமிழ் பேசுவோர் உள்ளனர்.
5வது இடத்தில் தமிழ் மொழி பேசுபவர்கள். (5,30,06,368). இந்தியாவில் தமிழ் பேசுபவர்கள் 6.32% புதுவையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 89.2%. தமிழகத்தில் 86.7%. கேரளாவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை 2.1% கர்நாடகத்தில் 4வது இடத்தில் தமிழ் பேசுவோர் உள்ளனர்.
நம் தமிழ் மொழி பல்வேறு நாட்டு மக்களின் மொழிகளுடன் பின்னிப்பிணைந்து இருப்பதே நம் மொழியின் பழமைக்கு சான்றாக உள்ளது. உதாரணமாக:
கொரியா – 6,500
சப்பான் – 1400
சீனா – 700
மலேசியா – 1600
தாய்லாந்து – 850
கொரியா – 6,500
சப்பான் – 1400
சீனா – 700
மலேசியா – 1600
தாய்லாந்து – 850
உலகளவில் 136 மொழிகளின் வேர்ச்சொற்களுடன் தமிழ் மொழி கலந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கடல் ஆய்வறிஞர் திரு ஒரிசா பாலு அவர்கள் கூறுகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பல நாடுகளிலும் உள்ள 600 இளைஞர்களுடன் தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரங்களை சேமித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக மொழிகளின் தர வரிசைப்பட்டியலில் நம் தமிழ் மொழி இன்று 14வது இடத்தில் உள்ளதையும், இதனை 6வது இடத்திற்குக் கொண்டு வருவதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் வருகிற 2018 ஆம் ஆண்டின் சர்வதேச அறிக்கையில் நம் தமிழ் மொழி ஆறாவது இடத்தில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் கூறுகிறார். நீர் மேலாண்மை, காடுகள் மேலாண்மை, மரபுசார் அறிவியல், உழவில்மொழிகள், பண்பாடு ஒப்பீட்டுவியல் போன்றவைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருபவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் 19,000ற்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழ் பெயர்களில் உள்ளன என்பதையும் குறிப்பிடுகிறார்.
தமிழ்மொழியில் உள்ள பலதரப்பட்ட உச்சரிப்புகள் கொண்ட எழுத்துக்களால் குழந்தைகளுக்கு நாக்கு நன்கு சுழற்சி அடைவதன் மூலம் அவர்களின் அடிப்படைப் பேச்சுத் திறன் எளிதாக வளர்ச்சியடைகிறது. வாயை நன்றாக திறந்து பேசுவதற்கும் வழிவகுக்கிறது நம் தமிழ்மொழி. அதாவது நாக்கு வாயின் எல்லாப் பகுதிகளைத் தொட்டும், வளைந்தும் நன்கு பேச வழியமைப்பதும் தமிழ்மொழியில் தான். அதாவது பேச்சின் தெளிவு வருவதற்கு தமிழ்மொழி உதவும் என்பதே நிதர்சனம். பல மொழிகள் அறிந்த பெற்றோராக இருந்தாலும், அவர்கள் வெளியில் எந்த மொழியில் பேசினாலும், வீட்டில் குழந்தைகளுடன் தாய்மொழியில் மட்டும்தான் பேசவேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டிருக்கவேண்டும். அப்போது தான் குழந்தைகள் எளிதாக, சொல் வழக்கைப் புரிந்து கொள்வதோடு, தாய்மொழியை மறந்துவிடாமல் பாதுகாக்கவும் வழியமைக்க முடியும். 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் தமிழ் மொழியின் பெருமை பற்றி நம் குழந்தைகளுக்கு ஓரளவேனும் தெளிவுபடுத்த வேண்டியது இன்றைய பெற்றோரின் முக்கிய சவாலாகவே உள்ளது என்பதும் சத்தியம். அறிவியல், வானவியல் சாத்திரம், கணிதம் குறித்த சொற்கள் நம் பழந்தமிழில் இருந்தன என்பதை இலக்கியச் சான்றுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. பள்ளியில் குழந்தைகளுக்கு இரண்டாம் மொழியாக தமிழைத் தேர்ந்தெடுக்காமல் பிறமொழிகளைத் தேர்ந்தெடுப்பது நம் தமிழ் மொழிக்கு நாம் செய்யும் துரோகம் எனலாம். தாய்மொழியில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பவர்களுக்கு வேறு எந்த மொழியையும் எளிதாகக் கற்க முடியும் என்பதே உண்மை. கற்பனைத் திறன் அதிகரிப்பதோடு படைப்பாற்றலும், எதையும் எதிர்கொள்ளும் துணிவும் பெருகும். அதாவது தாய் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரியாமல் பிற மொழிகள் பலப்பல கற்றிருந்தாலும் அது ஏட்டுக் கல்வி என்ற அளவிலேயே இருக்குமே தவிர வாழ்வின் முழுமையான பயன்பாட்டில் இருக்காது என்பதும் சத்தியம். ஆக அப்படிப்பட்டவர்கள் எந்த மொழியிலும் சரளமாக பேசவோ, எழுதவோ முடியாமல் ஏட்டுச் சுரைக்காயாக, பல மொழிகளைக் கற்றதிற்கான சான்றிதழ்களை மட்டுமே வைத்திருப்பார்கள். ஆனால் தாய்மொழியை நேசிப்பவர்கள், அவர்கள் கற்றறிந்த ஏனைய மொழிகளிலும் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.
தம் தாய்மொழியில் புலமை பெரும் ஒருவருக்கு மற்ற மொழிகளைக் கற்கத் தேவையான புரிதல் கிடைப்பதோடு அதன் மூலம் ஒப்பீடு செய்தும், கற்பனை செய்தும் மேலும் கற்றுக் கொள்ளும் ஆற்றலையும் அளிக்கிறது. அந்தந்த மொழிகளுக்கான இலக்கணங்களிலும் ஆழ்ந்த புலமை பெற வழியமைக்கிறது.
உலகில் மொத்த மொழிகள் 6200 . இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுகிறார்கள். 3000 மொழிகள் பத்தாயிரத்திற்கும் குறைவானோர் மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் நம் தமிழ் மொழியைப் பேசுவோர்களின் எண்ணிக்கை 7 கோடிக்கும் அதிகம். உலகளவில், 94 நாடுகளில் தமிழ்பேசும் மக்கள் உள்ளனர். அந்த வகையில் நாம் அனைவரும் நம் மொழியைக் காக்கும் உறுதிமொழி எடுத்தோமானால் இந்தப் பிரபஞ்சம் உள்ளமட்டும் நம் தமிழ் மொழி நீடு வாழும் என்பதில் ஐயமில்லை. நம் தமிழ் மொழியைக் காப்போம். வையம் தலைமை கொள்வோம்!
தாய்மொழியோடு வாழ்ந்து, பிற மொழிகளோடு பயணிப்பதன் மூலம் வாழ்க்கையை வெற்றி கொள்வோம்!
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(புறம்: 192)
கணியன் பூங்குன்றனார்.
கணியன் பூங்குன்றனார்.
வாழ்க தமிழ்!
வெல்க தமிழகம்!!
No comments:
Post a Comment