கதர் ஆடையை அள்ளிச் செறுகிய எளிமையான தோற்றமும், படிய வாரிய தலைமுடியும், அனைவரிடமும், மிக இயல்பாக பழகும் தன்மையும் பார்க்கும் பொழுது, திருமதி அருணா ராய், அவர்கள் நம் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே காட்சியளிக்கும் இவரின் தொடர்ந்த சமூகப் பணிகளுக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் 'மகசேசே விருது' 2001ம் ஆண்டு அளிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் பிறந்து, தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட இவர் தன் இளம் வயதிலேயே வழக்கறிஞரான தந்தையுடன் தில்லியில் சென்று தங்கி விட்டார். இராணுவத் தளபதி கே.சுந்தர்ஜீ அவர்கள் அருணாராயின் தாய்மாமன்.
1967ம் ஆண்டு தில்லிப் பல்கலைக் கழகக் கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ பட்டம் பெற்று, பின்னர் ஐஏஎஸ் படித்து தேர்ச்சி பெற்று 1969ல் தென்னாற்காடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், 1970ல் பாண்டிச்சேரியிலும் பணியாற்றியுள்ளார் ஆயினும் பரவலாகவும் வலுவாகவும் மக்களுக்குச் சேவை செய்யும் வண்ணம் தன் பதவியையே 1975ம் ஆண்டு துறந்து, ராஜஸ்தான் சென்று சமூகப் பணி மற்றும் ஆய்வு மையம் [Social work and research centre SWRC] தன் கணவர் திரு சஞ்ஜித் பன்கர் ராய் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட சேவை அமைப்பில் இணைந்து பணியாற்றினார்.
பின்னர் 1990 ஆண்டு மஸ்தூர் கிசான் சக்தி சங்கத்தினர் [Mazdoor kisan sakthi sangatha MKSS] என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பைச் சிலருடன் இணைந்து நிறுவினார். ராஜஸ்தானில் செயல்படும் இந்த அமைப்பின் மூலம் இவர் அடிமட்ட மக்களுடன் இணந்து, மக்களை வழி நடத்தி , மக்களுக்கான பல முக்கிய உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அருணாராய், இன்று அடிமட்ட மக்களுக்கு சேவை செய்யும் விதமாக அவர்களுள் ஒருவராக ராஜஸ்தானில் ஒருஎளிய குடிசையில் வாழ்ந்து வருவதே இவரது எளிமைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
இந்திய நாடு விடுதலை பெற்றதிலிருந்து இயற்றப்பட்ட பல முக்கியச் சட்டங்களில் மிக முக்கியமானது தகவல் பெறும் உரிமைச் சட்டம்- 2005 [The Right to Information Act 2005]. இது லஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்க வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். இச் சட்டத்தைக் கொண்டுவர பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து குரல் கொடுத்தவர்- இடைவிடாது இதற்கென மக்களைத் திரட்டிப் பல வடிவங்களில் களம் இறங்கிப் போராடியவர் இச் சட்டத்தின் முக்கியத்துவத்தையும், தேவைகளையும் மக்களுக்குப் பல கோணங்களில் எடுத்துச் சொல்லி மக்களிடத்தில் விழிப்புணர்வை உண்டாக்கினார்.
மிக நலிந்தப் பிரிவினருக்கான 'அன்னபூர்னா' திட்டம் மூலம், அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் பெற வேண்டிய ஒரு 75 வயது முதியவர், 12 மாதமாக எதுவும் கிடைக்காமல், மிக நலிந்து, துவண்ட போது, இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வால், அம் முதியவர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம், கடந்த ஓராண்டு காலக் கணக்குகளுக்கான தகவல்களைப்பெறுவதற்கான விண்ணப்பத்தை அனுப்பியவுடன், அடுத்த நாளே அப் பெரியவருக்குரிய 12 மாதத்திற்கான ரேசன் பொருட்கள் உடனடியாகச் சென்று சேர்ந்ததிலிருந்து, இச் சட்டத்தின் சக்தியை மழுமையாக உணரமுடிகிறதல்லவா?
இது மட்டுமல்லாமல் எரிவாயு இணைப்புக்காக பல காலமாகக் காத்துக்கிடந்த ஒருவர், இதே மறையில் விண்ணப்பிக்கவும், உடனடியாக அவருக்கு, இணைப்பு வழங்கப்பட்டது போன்ற பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.இதையெல்லாம் பார்க்கும்போது, மென்மையான இந்த உருவத்திற்குள் இத்தனை உறுதியா என்ற மலைப்புத்தான் தோன்றுகிறது.இன்று நாடெங்கும் வெவ்வேறு பிரச்சனைகளுக்காக வெவ்வேறு மாநிலங்களில் நடைபெறும் பொது விசாரணைகளில் நீதிபதியாக[ jury] பங்கேற்கிறார்.இதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் உயர் மட்டக் குழுக்களின் ஒன்றான தேசிய ஆலோசனைக் குழுவில்[National advisory council] உறுப்பினராக விளங்குகிறார்.
இளம் வயதிலிருந்தே,ஆணுக்குப் பெண் சமம் என்ற சிந்தனையில் மிக உறுதியான நம்பிக்கை கொண்டவரான இவர் தேசிய நெடுஞ்சாலையிலும், கிராமங்களின் பள்ளம் மேடுகள் நிறைந்த பள்ளத்தாக்குகளிலும் அக்காலத்திலேயே திறமையாகவும் வேகமாகவும் ஜீப் ஓட்டுவதிலும் வல்லவராக அனைவராலும் பாராட்டப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக உரத்த குரல் கொடுப்பதோடு களத்தில் இறங்கி பெண் உரிமைகளுக்கு வித்தியாசமான கோணத்தில் தனது அழுத்தமான பங்களிப்பைச் செலுத்தி வருகிறார், இந்த பாரதி கண்ட புதுமைப்பெண்.
கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், என்பது போல ஒவ்வொரு இந்தியரும், தன் உரிமையைப் பெற பேசவேண்டிய இத்தருணத்தைப் பற்றிய விழிப்புணர்வை பெண்களுக்கு, குறிப்பாக அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படுத்துவதையே தன் வாழ்க்கையின் முக்கியக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் இவரால் பெண் குலத்திற்கே பெருமை என்பதே நிதர்சனம். இப்படிப்பட்ட மங்கையர் குல மாணிக்கத்திற்கு நம் ஈரோட்டின் மக்கள் சிந்தனைப் பேரவை பாரதி விருது வழங்கி கொஉரவிதது சாலப் பொருத்தம்.
.
'இருட்டு போனால் திருட்டு குறையும்' என்ற வகையிலும், ஆட்சி முறையின் இதயப் பகுதியில் ஏழ்மை மக்களை கொண்டு வரும் என்பதிலும், தகவல் பெரும் உரிமைச் சட்டம் ,எவ்வளவு முக்கியத்துவம் வய்ந்ததென்பதையும், வாய்ப்பாட்டு, நாடகம், குறுஒபடம் மூலம் பலவகையில் படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கும், அடிமட்ட மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையே தன் லட்சியமாகக் கொண்டு வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவர், தன் திருமணத்தில்கூட கதர் ஆடையே உடுத்தி நகையும் போடாமல், மிக எளிமையாக நடத்தி ஒரு புரட்சியே ஏற்படுத்தியுள்ளார்.
, .
நல்ல பகிர்வுங்க. நன்றி.
ReplyDeleteம்ம்ம்....மிக அவசியமான பகிர்வு...
ReplyDeleteவாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
fine
ReplyDelete