Friday, July 23, 2010

என்னங்க மனசு சரியில்லையா?

ப்........ச்சு........ என்ன வாழ்க்கைங்க..... போர் அடிக்குது. என்னமோ போங்க........
இப்படி பலவிதமாக, பலவிதமான சலிப்புகளை பலரிடம் கேட்க முடிகிறது.வாழ்க்கை என்றால் ஏதோ ஒரு பிரச்சனை, ஏதோ ஒரு கவலை இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்து, கவலைப் பட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தால், அது, டிப்ரஷன் என்கிற மனச் சோர்வில் தான் கொண்டு விடும்.
சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம் பத்துக்கு எட்டு பேர், அதுவும் ஆண்களைவிட,பெண்களே அதிலும் குறிப்பாக குடும்பத் தலைவிகளே அதிகமாக இந்த மனச் சோர்வின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறார்களாம்.
இதற்கான அறிகுறிகள் என்னென்னத் தெரியுமா?
1.நிரந்தரக் கவலை
2.எந்த வேலையிலும் மனம் ஈடுபடாமை
3.சிடுசிடுப்பு
4. பசியின்மை
5.தூக்கமின்மை
6.களைப்பு போன்றவைகள்.
இதன் பின் விளைவுகள், அசிடிட்டி, தலைவலி, உடற் சோர்வு, கை, கால் வலி ஆகியவைகள்.
கணவர், குடும்பத்திலுள்ளவர்கள் பற்றிய கவலைகள், பணப்பற்றாக்குறை, குழந்தைகள் எதிர்காலம், தன்னால் எதுவும் சரி செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம், இது போன்ற காரணங்களினால் மனக்கவலை ஏற்பட்டு, அமைதியை இழக்க நேரிடுகிறது.
எந்த காரணத்திற்காக மனது சஞ்சலப் படுகிறதோ, அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, கவலையில் ஆழ்ந்துப் போவதால் எந்தப் பயனும் இல்லை. எப்பொழுதும் மனச் சோர்வில் தோய்ந்து, முடங்கி விடுபவர்கள், முன்னேற்றப் பாதையை எண்ணிக்கூடப் பார்க்க முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
பென்சில்வேனியா நகர பல்கலைக்கழக மனோத்தத்துவ ஆராய்ச்சியாளர், தாமஸ் போர்கோவெக் என்பவர், கவலைப் படுவது என்று ஆரம்பித்து விட்டால், அதற்கு ஒரு எல்லையே இல்லை என்கிறார்.
உதாரணமாக, நம் வாகனத்தில் பிரேக் சரியாக இருக்குமோ........இல்லையோ..... என்று ஆரம்பித்து, அடுத்து, பிரேக் சுத்தமாக செயலிழந்துப் போனால்,......... வழியில் குழந்தை குறுக்கே ஓடி வந்து விட்டால் என்ன செய்வது என்பது வரை அனாவசியமாக அந்த கவலை விரிந்து கொண்டே போகும். சில நேரங்களில் சாதாரண தலைவலி கூட மூளைக் கட்டியாக இருக்குமோ என்ற சஎதேகப் புயலைக் கூட கிளப்பி விட்டுவிடும்.
சோகமான மனநிலை காரணமாக உற்சாகமின்மை, மற்றும் கண்ணிற்கு கீழ் கரு வளையமும் ஏற்படுகிறது. இதற்கு, குறைவான சுய மதிப்பீடு, குற்ற உணர்வு போன்ற சில காரணங்களும் உண்டு.
சில நேரங்களில் வீட்டிலிருக்கும் குடும்பப் பெண்களுக்கு தினந்தோறும் ஒரே மாதிரியான வேலை செய்வதால் மனச் சோர்வு ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் மாமூலான அன்றாட வேலைகளை சற்றே மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
தோழிகள், கணவர், குழந்தைகளுடன் பிக்னிக் அல்லது கடைத்தெருவிற்குச் சென்று வரலாம்.அழகாக மெகந்தி இட்டுக் கொள்ள, அல்லது குழந்தைகளுக்கு இட்டு விட முயற்சிக்கலாம்.
ஏதாவது பொழுதுபோக்கு, விளையாட்டு அல்லது பெயிண்டிங், சங்கீதம் கற்றுக் கொள்வது போன்றவற்றில் ஈடுபடலாம். காரணம் இரசனைக்குரிய இது போன்ற விசயங்களில் ஈடுபடும்போது, கவலை காத தூரம் ஓடிவிடும். வீட்டில் உள்ள பர்னிச்சர்கள்,அல்லது மற்ற பொருட்களை சற்றே மாற்றியமைத்து, அழகுபடுத்துவது, ஏதாவது புது வகையான சமையல் ஐட்டம் முயற்சி செய்வது போன்ற காரியங்களும் ஓகேதான்.
காலை நேரக் குளிர்ந்தக் காற்று மனதிற்கு ஒரு அமைதியை அளிக்கும்.,அதனால் விடியற்காலை நடைப்பயிற்சி நல்ல பலனைத் தரும். மேலும், பிரணாயாமம், யோகாசனம், ஏரோபிக்ஸ் போன்றவைகள்கூட சூப்பர்தான். பிறகென்ன, மன அமைதியுடன் உல்லாச வாழ்க்கை தையன்னா........தையன்னாதான்.............

3 comments: