Monday, August 2, 2010

ஆனந்தம்.........பரமானந்தம். _ திரு சுகி சிவம்


நேற்று ஈரோடு புத்தகத் திருவிழா முழுவதுமாகக் களை கட்டியிருந்தது. சொல்லின் செல்வர் திரு சுகி சிவம் அவர்களின் பேச்சு, அத்துனை உள்ளங்களையும் கட்டி இழுத்து வைத்திருந்தது என்றால் அது மிகையாகாது. அரங்கு நிறைந்த காட்சியாக மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில், 'pin drop silence', என்பார்கள், அப்படி ஒரு அமைதியாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் புத்தகம் வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போய்க்கொண்டிருப்பதற்கு, இதுவே ஒரு சான்று. காரணம் அரங்கில் இருந்த பெரும்பாலானவர்களின் கைகளில் சில புத்தகங்களாவது இருந்தது.

ஐயா சுகி சிவம் அவர்கள் கூறியது போல, வெளிநாடுகளில் கொடுப்பது போன்ற அங்கீகாரம் நம் ஊர்களில் சமூகச் சேவை ஆர்வலர்களுக்கு வழங்கப் படுவதில்லை என்பதும் வருந்தக் கூடிய விசயம்தான். திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் அருமையான 'விடுதலை வேள்வி' எனும் புத்தகங்களை அடியேனும் ஓரளவிற்குப் படித்திருக்கிறேன். அதற்குப் பின்னால் இத்துனை பெரிய உழைப்பு இருப்பது நேற்றுதான் தெரிந்தது. உயர்ந்த சேவைக்கு உரிய அங்கீகாரம்தான், மற்றவர்களையும் இத்தகையச் சேவைகளுக்கு ஊக்குவிக்கக் கூடியது என்பதுதானே நிதர்சனம்.

திரு. சுகி சிவம் அவர்கள் ஆனந்தம்....பரமானந்தம் எனும் தலைப்பில் வெகு அழகாக , கோர்வையாகப் பேசி அரங்கையே அந்த 1 1/2 மணித் துளிகள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

நம் ஊரில் 'பூப்பு நன்னீராட்டு விழா' என்ற ஒரு விழா, பெண் குழந்தைகள் பூப்படைவதை, ஊருக்கேத் தம்பட்டம் அடிக்கும் வகையில், பெரிய திருமண மண்டபத்தில் 500 முதல் 1000 பேரைக் கூடத் திரட்டி, அந்த' திரட்டி' என்கிறச் சடங்கைச் செய்வார்கள். அதற்கு அவர் சாட்டையடியாக, தினந்தோறும் பூ பூக்கிறது, காய் காய்க்கிறது _ இதிலென்ன விசேஷமிருக்கிறது? அப்படித்தான் பெண்களும் அந்தந்த வயதில் பருவமடைவது இயற்கை. இதற்கு ஒரு விழா அனாவசியமானது என்று நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு செய்தியைச் சொன்னார்.

அடுத்து, வாழ்க்கை என்பது நாம் பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல, வெறும் சம்பவங்களால் ஆனது அல்ல. சம்பவங்கள் பற்றிய அனுபவங்களால் ஆனது என்ற ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயத்தை முன்னிறுத்தி அதற்கு அழகான விளக்கங்களும் அளித்தார்.

வாழ்க்கை ஒரு பயணம் என்றால் அது எதை நோக்கியது? மயானம் அல்லது மரணத்தை நோக்கித்தான் என்றாலும், அது எப்படி ஆரம்பித்ததோ அப்படித்தானே முடிய வேண்டும். அதாவது பிறப்பு என்பது ஆண், பெண் என்ற இரு உயிர்களின், [ அது மனிதனோ அல்லது மிருகமோ, பறவைகளோ எதுவாகவும் இருக்கலாம்] இன்பத்தின் உச்சத்தின் சங்கமம் தான். இப்படி பேரானந்தத்தில் ஜனித்த அந்த உயிர் பரமானந்தத்தில் தானே முடிய வேண்டும், துக்கத்தில் முடிந்தால் அது எப்படி சரியாகும்? என்ற பெரும் தத்துவத்தையும் விளக்கினார்.

'உடல்', என்கிற அருமையான கருவி, மகிழ்ச்சிக்காக அளிக்கப்பட்டதாகும். நல்லதோர் வீணை.இந்தக் கருவியை சரியான முறையில் பயன்படுத்தினால் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம்.

மேற்கோள்களை நம்பி அறிவை வளர்த்துக் கொள்வது முட்டாள்தனத்தின் உச்சமாம்!

தன் உடலை நேசிப்பது மட்டுமே ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சரியான அணுகுமுறை. நோயின்றி இருப்பது மட்டுமே ஆரோக்கியமல்ல. தூங்கி எழும் போது, ஒரு குழந்தையைப் போல துள்ளிக் கொண்டு, ஆனந்தமாக எழுந்திருக்க முடிந்தால் அதுவே ஆரோக்கியமான நோயற்ற நிலை என்று அர்த்தமாம்.

மதம் என்பது, ஒரு எல்லையில் நின்று விடும்.ஆன்மீகம் அப்படியல்ல .மதம் நெடுஞ்சாலை போன்றது.கடந்து செல்வதற்கு மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டியது. குடியிருப்பதற்காக அல்ல. ஆகவே மதம் என்னும் பெயரால் மூட நம்பிக்கைகளை தூக்கி எறிதல் வேண்டும்.

மனம் எப்படி உருவாகிறது? சிறு வயது முதல் நாம் பார்த்த, கேட்ட சொற்கள், செயல்கள் ஆகியவற்றின் பதிவுகளே பிற்காலத்தில் ஆனந்தம், துக்கம் என்பதாக வெளிப்படுகிறது. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைவதைவிட்டு, இல்லாததை எண்ணி ஏங்குவதுதான் துக்கத்திற்கு காரணமாகிவிடுகிறது.

மனதை நிகழ்காலத்தில் நிற்க வைத்தால் மட்டுமே, மகிழ்ச்சியாக இருக்க முடியும். இறந்த காலத்தையோ, எதிர் காலத்தையோ எண்ணிக் கொண்டு நிகழ் கால நிம்மதியை இழக்கக் கூடாது.

முல்லா கதையின் மூலமாக நகைச்சுவையாக, கழுதைகளோடு ஒத்துப் போனால், பிரச்சனையில்லாமல் அமைதியாக வாழ முடியும், என்றார். யாரையும், யாரும் மாற்ற முடியாது. அவரவர் பாரம்பரிய முறையில் ஒவ்வொருவரும் வளர்ந்துள்ளதால் அதனை மாற்றியமைப்பது, எளிதல்ல. அப்படியே ஏற்றுக் கொள்வதே எளிதானதாகும்.

மனதை அடக்கி ஆள நினைப்பதும் தவறானதாகும். மனதை அடக்க நினைப்பதைவிட கடக்க வேண்டியதே அவசியமாகும்.

மனதை, அறிவை பயன் படுத்தி ஆனந்தமாக வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.

ஆனந்தத்தில் பிறந்து, பேரானந்தத்தை அடைவது விழிப்பு நிலை _ AWARENESS அனைத்திலும் விழிப்பு நிலை அதுவே ஆனந்த நிலை!!!!!!!


9 comments:

 1. Useful tips for modern era - very nice

  ReplyDelete
 2. நன்றி, செந்தில். உங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி.

  ReplyDelete
 3. This is my pride to encourage the upcoming writers to the world

  ReplyDelete
 4. நல்ல தொகுப்புங்க... நான் செவ்வாய்க்கிழமைதான் போனேன். லேனா தமிழ்வாணன் வந்திருந்தார்.

  சுகி சிவத்தின் பேச்சை தொகுத்தளித்தமைக்கு நன்றி... பயனுள்ள கட்டுரை...

  ReplyDelete
 5. நன்றி திரு பாலாசி. ஓ அப்படியா.

  ReplyDelete
 6. மனதை அடக்கி ஆள நினைப்பதும் தவறானதாகும். மனதை அடக்க நினைப்பதைவிட கடக்க வேண்டியதே அவசியமாகும்.
  மனதை, அறிவை பயன் படுத்தி ஆனந்தமாக வாழ்வதே சிறந்த வாழ்வாகும்..

  அவசியமான கருத்து.

  ReplyDelete
 7. மிக அருமையான, தெளிவான விளக்கம். இரத்தினச்சுருக்கமாக எழுதிய உங்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள். -ஆசிரியர் தமிழ்குடும்பம்.காம்

  ReplyDelete
 8. நன்றிங்க ரிஷபன்.

  ReplyDelete
 9. தமிழ் குடும்பம் ஆசிரியருக்கு மிக்க நன்றி.

  ReplyDelete