Friday, August 6, 2010

கடவுச்சீட்டு. ...........எங்கே..........?


பயணங்கள் பல நேரங்களில் சுகமான அனுபவங்களைக் கொடுத்தாலும், சில நேரங்களில் சிறு கவனக் குறைவுக் கூட பெரிய பிரச்சனைகளை உருவாக்கிவிடும். அதுவும் அயல் நாட்டுப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். மிக எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
சென்ற டிசம்பர் மாதத்தில் தான் சென்றிருந்தோம். குளிரா அது.....? அம்மாடியோவ்......... நம்ம எடைக்கு மேல இரண்டு பங்கு எடைக்கு உடை வேறு...... அப்பத்தான் அந்த குளிர்ல இருந்து கொஞ்சமாவது தப்பிக்க முடியும். இந்த குளிரில் தான் நியூ ஜெர்சியில் விஞ்ஞானியாகப் பணி புரிந்துக் கொண்டிருக்கும் இருக்கும் என் மகள் வீட்டிலிருந்து, சிகாகோ மாநிலத்தின் ஐயோவா நகரத்தில் கணினி பொறியாளராகப் பணிபுரியும் என் மகன் இருக்கும் இடத்திற்குச் செல்ல முடிவெடுத்திருந்தோம்.ஐயோவாவிற்கு செல்ல நியூயார்க் லகார்டியா விமான நிலையத்திலிருந்து ஐயோவா மோலின் விமான நிலையம் செல்ல இரண்டு விமானங்கள் மாற்றிச் செல்ல வேண்டும்.

நியூஜெர்சியைவிட ஐயோவா நகரத்தில் மிக மோசமான பனியாக (-10dec) இருந்த காரணத்தினால் மேலும் கனமான குளிர் அங்கி எங்கள் இருவருக்கும் வாங்க வேண்டியிருந்தது. நான் என் கணவருக்கு முன்பாகவே அமெரிக்கா சென்று விட்டேன்.அங்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நன்றி நினைவு நாள் [thanks giving day] என்று ஒரு நாள் கொண்டாடுவார்கள். அன்றைய தினத்தில் பொருட்கள் அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கும்.

அப்படிக் கிடைத்த குளிர் அங்கி இரண்டு , ஒரே நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி வைத்து விட்டேன். ஆனால் என்னவருக்கு இப்படி நான் ஒரே நிறத்தில் வாங்கியது பிடிக்கவில்லை. இருந்தாலும் என்னுடைய கட்டாயத்தில் இரண்டு மனதாகத் தான் ஒப்புக் கொண்டார். ஆனால் இந்த ஒரே நிறத்திலான குளிர் அங்கிதான் எங்களை ஒரு இக்கட்டான சூழலிலிருந்து காக்கப் போகிறது என்று அப்பொழுது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் கிளம்பும் நாளும் வந்தது.

அன்று வானிலை மிக மோசமாக இருந்தது. வீட்டிலிருந்து விமான நிலையம் செல்லவே நேரம் அதிகமாகிவிட்டது. அவசர அவசரமாக, ஓடிச்சென்று பாதுகாப்பு ஆய்வை முடித்துக் கொண்டு கடைசி நிமிடத்தில் போய் நின்றால், நாங்கள் வரவில்லையென எண்ணி எங்கள் இருக்கைகளை வேறு இருவருக்குக் கொடுத்து விட்டார்கள்.

இருப்பினும், மேல் வகுப்பு இருக்கைகள் இருந்ததால் எங்களுக்கு அதில் இடம் கொடுத்தார்கள். அட பரவாயிலையே என்று யோசிக்காதீர்கள். அங்குதான் எங்களுக்கு ஆப்பு காத்திருந்தது. ஆனால் மேல் வகுப்பில் இராஜ உபச்சாரம்தான். இட நெருக்கடியால் எங்களுடைய பெட்டிகளை சரக்குப் பெட்டகத்தில் [ கார்கோ] வைத்து விட்டார்கள்.

விமானம் சிகாகோ வந்தடைந்து விட்டது. அங்கிருந்து அடுத்த விமானச்சேவை 40 மணித்துளி இடைவெளிதான். வழக்கமாக உள்நாட்டு விமானச் சேவையில் நம்முடைய உடைமைகளை விமானத்திற்கு வெளியே இறங்கியவுடனேயே பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் அன்று மட்டும் பன்னாட்டு முனையத்தில் [international terminals ] சென்று பெற்றுக் கொள்ளும் படி அறிவிக்கப் பட்டது. நாங்கள் இருந்த நுழைவாயிலிலிருந்து, அடுத்த நுழைவாயிலிலேயே அந்த இடம் இருப்பதான அறிவிப்பைக் கேட்டவுடனே என்னவர் அவசர, அவசரமாக நான் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் என் கைப்பையுடன் தன்னுடைய கைப்பையையும் வைத்து விட்டு, என்னை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, வேகமாக நகர்ந்து விட்டார்.

அடுத்த நுழைவாயிலுக்குச் சென்றவுடன்தான் தெரிந்தது குறிப்பிட்ட நுழைவாயிலுக்குச் செல்ல இன்னும் வெகு தூரம் உள்ளதென்பது. அடுத்த விமானத்திற்கான கால அவகாசம் மிகக் குறைவாகவே இருந்ததால்,அவரும் வேகமாகச் சென்று திரும்புவதையேக் குறியாகக் கொண்டு, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காது, வேகமாகச் சென்றுவிட்டார். அங்குச் சென்றவுடன்தான் தெரிந்தது, தான் தன் கடவுச் சீட்டை கைப்பையிலேயே வைத்துவிட்டு வந்தது. அதற்குள் பாதுகாப்பு ஆய்விற்காக [security checking] அண்ணாச்சிகள் வரவும், இவரிடம் கடவுச் சீட்டு இல்லாததுக் கண்டு, மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

தீவிர வாதம் தலைவிரித்து ஆடுகிற இது போன்ற சமயங்களில் ஒரு சிறு சந்தேகம் கூட அங்கு பெரும் புயலையேக் கிளப்பி விடுகிறது. இவர் கடவுச் சீட்டு என்னிடம்தான் உள்ளதென்பதை எவ்வளவுதான் எடுத்துக் கூறியும், அதனைக் காதில் வாங்காமல் பரபரவென பாதுகாப்பு அதிகாரிகள், ஒன்று கூடி அவரைச் சுற்றி வளைக்கவும் அவரால் அந்த களேபரத்தில் ஏதும் சரியாகப் பேசமுடியவில்லை போலும்! வியர்க்க விறு விறுக்க எதையோச் சொல்லியும் இருக்கிறார்.

ஆனாலும், அவர்கள் அதை காதில் வாங்காமல், அவரை அசையக் கூட விடவில்லை. இந்தக் களேபரத்தில், 2 மணிகள் எளிதாக ஓடிவிட்டது. சென்ற மனிதரைக் காணவில்லையே, எங்குதான் போய்த் தேடுவது, அந்த பிரம்மாண்ட விமான நிலையத்தில் என்று ஒரே தவிப்பாகிவிட்டது.

அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் திரும்பவும் அவர் என்னைத் தேட வேண்டிவருமே என அசையாமல் அங்கேயே இருக்க வேண்டியிருந்தது. அப்பொழுதுதான் என் மகள் கொடுத்த அலைப்பேசியை மறுத்தது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்தேன். அங்கும் இங்கும் அருகிலேயே சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒலி பெருக்கியில் எங்கள் இருவரின் பெயரும் ஒலிபரப்பக் கேட்டவுடன் என் கையும் காலும் ஓடவில்லை. என்னை நான் நிற்கும் அதே இடத்தில் நிற்கச் சொல்லி அறிவித்தார்கள்.

சில நிமிடங்களிலேயே, துப்பாக்கி ஏந்திய ஒரு பாதுகாவலருடன் வியர்க்க, விறுவிறுக்க வருகிறார் என்னவர். அந்தப் பாதுகாப்பு அதிகாரி என் கணவருடையது போலவே என்னுடைய குளிர் அங்கியும் இருப்பதைப் பார்த்து, சற்றே சந்தேகம் தணிந்தவராக, மெலிதாகப் புன்னகைத்துவிட்டு, என்னையும் அழைத்துக் கொண்டு உயர் அதிகாரிகளிடம் சென்றார்.

அங்கு நுழைந்தவுடன் அத்துணை அதிகாரிகளின் முகத்திலும் சிரிப்பு. உடனே, அதில் ஒருவர், Vow, he must be right, this lady must be his wife, see both are wearing the same jacket, oh.......god........ என்றாரேப் பார்க்கலாம்?

இதற்குப் பிறகுதான், அவர்கள் இறுக்கம் குறைந்தவர்களாக, அமைதியாக பேச ஆரம்பித்தார்கள். இத்தனைக் கூற்று நடந்து முடிவதற்குள், ஐயோவா நகரத்திற்கான கடைசி விமானமும், கிளம்பிவிட்டது. திரும்பவும் அடுத்த நாள் மாலைதான் எங்களுக்கு விமானம்.

இதற்கிடையில் எங்களை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்தில் மனைவி குழந்தையுடன் காத்துக் கிடக்கும் எங்கள் மகனோ எங்களைக் காணாமல் தவித்துப் போய், என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்க, நாங்களோ பொது தொலைப்பேசியைக் கூடத் தேடத் திராணியற்றவர்களாக, அந்த விமான நிலைய அதிகாரியின் உதவியுடனே எங்கள் மகனுக்கு விவரத்தைச் சொன்னோம்.

பொதுவாக இதுபோன்ற இறுக்கமானச் சூழலில்தான் என் மகனின் மூளை சுறு சுறுவென வேலைச் செய்யும். அவன் அந்தப் பனிப் புயல், அடை மழையில், மனைவி, குழந்தையையும் கூட்டிக் கொண்டு, 31/2 மணி நேரம் காரில் வந்து பெரும் சாதனையாக எங்களை அழைத்துச் செல்லும் வரை, அந்த பாதுகாப்பு அதிகாரிகளின் பார்வை வளையத்துக் குள்ளேயே குறுகுறுவென, உட்கார்ந்திருந்தது, எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாகிப் போனது.

வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இதைப் படித்துணர வேண்டியது அவசியம்.!

15 comments:

  1. அனுபவத்தை நல்லா எழுதியிருக்கீங்க அம்மா..

    சின்ன திருத்தம் சொல்ல விரும்பறேன் - சிகாகோ மாநிலமல்ல, அது ஒரு நகரம். இல்லினாய் (Illinois) மாநிலத்தின் தலைநகர். ஐயோவா நகரமல்ல (சிகாகோவின் ஒரு பகுதியுமல்ல) அது ஒரு மாநிலம்.

    இந்த நாட்ல ஒரே ஊர் பேர பல மாநிலங்களில் காணலாம், அது மாதிரி இருந்தா சொல்லுங்க, திருத்திக்கறேன்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  2. Everyone needs to read this.....

    ReplyDelete
  3. வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இதைப் படித்துணர வேண்டியது அவசியம்.!\\
    நிச்சயமாக.

    ReplyDelete
  4. நன்றி, ஸ்ரீராம், தவறைத் திருத்தியதற்கு. எனக்குச் சரியாகத் தெரியவில்லை தம்பி, நானும் விசாரித்து தெரிந்து கொள்கிறேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு:)

    ReplyDelete
  6. நன்றி வானம்பாடி அவர்களே.

    ReplyDelete
  7. அனுபவத்தை எல்லாருக்கும் தெரியும்படியா நல்லா பகிர்ந்திருக்கீங்க.. சிலசில விசயங்கள்ல நாம காட்டுற அலட்சியம் பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாயிடுறது உண்டு...

    ReplyDelete
  8. ஆம் சரியாகச் சொன்னீர்கள் பாலாசி. நாம் பட்ட பாடு மறறவர் படக்கூடாதே என்பதற்காகவேதான்.......

    ReplyDelete
  9. story of twin jacket...really great experiance u hav met

    ReplyDelete
  10. அந்த சூழ்நிலையில் உங்களுக்கு இருந்த பதட்டம் புரிகிறது :)

    ReplyDelete
  11. நன்றி மீத்து.உண்மைதான்.

    ReplyDelete
  12. நன்றி திரு மதுரை மோகன். உண்மைதான்.

    ReplyDelete
  13. இங்கேயும் வந்து பாருங்கனு தவறான சுட்டிய அழைச்சுட்டயளே :-) முடிஞ்சப்ப திருத்திடுங்க.

    கொங்கு நாட்டுத் தங்கமா நீங்க? வாழ்க, வாழ்க. தனி மரியாதை தரணும் உங்களுக்கு. சென்னை வரும் பொழுது சொல்கிறேன்; சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். நீங்க இந்தப்பக்கம் உங்க சந்ததியைப் பார்க்க வந்தா மறக்காம செய்தி சொல்லுங்க. சிகாகோ வழியாத் தான் போவணும்.

    ReplyDelete