Saturday, August 7, 2010

ஊர்ப் பழமை..............

ஊர்ப் பழமை..........

நூல் குறிப்பு ;
நூலின் பெயர் _ " ஊர்ப்பழமை "
ஆசிரியர் _ 'பழமைபேசி' [எ] மௌன. மணிவாசகம்
.
பக்கங்கள் _ 320
விலை _ ரூ. 150/
வெளியீட்டாளர் _ அருட்சுடர் பதிப்பகம். ஈரோடு.
அலைபேசி: 9894717185
மின் அஞ்சல்: visuaruran@gmail.com.


இணையத் தமிழில் பழமைபேசியின் பங்களிப்பு சால சிறந்தது என்றும், இவரது இடுகைகளில் தகவல் நிறைவு, வரலாற்றொழுங்கு, நோக்கு நிலைத் தெளிவுகள், தமிழ் மொழி வளம் மட்டுமன்றி, இவருடைய 'நனவுகள்' என்ற நவீனம் படித்துத் தனக்குள் ஒரு நிறைவு உண்டானதையும் மற்றும் அவருடைய பன்முகத் திறமையை சிலாகித்தும், உலகத் தமிழர் அமைப்பின், தலைவர், திரு. நாஞ்சில் இ.பீற்றர் அவர்களின் முன்னுரையுடன்,

பல ஆண்டுகள் அமெரிக்க வாசத்துக்குப் பின்னும், துல்லியமாக, மொழிவளம் குன்றாமல், கொஞ்சும் தேன் தமிழில் தாம் கண்ட, கேட்ட, உணர்ந்த, போற்றிப் பாதுகாத்த நினைவுகளையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து, வலைப் பதிவுகள் வெறும் பொழுதுபோக்காய் மொக்கைப் போட மட்டும் என்றில்லாமல் ஆக்கப் பூர்வமாக எழுதி, அனைவரையும் அரவனைக்கும் பாங்குடன் எழுதும் நண்பர் பழமை பேசி என்று, தமிழ் மணம், தமிழ் வலைத் திரட்டியின் நிறுவனர் திரு. காசி ஆறுமுகம் அவர்களின் மனப்பூர்வமான வாழ்த்துரையையும் பெற்றுள்ள திரு. மௌன.மணிவாசகம் என்கிற இந்நூல் ஆசிரியர், கொங்குச் சீமையில் இருக்கும் உடுமலைப் பேட்டைக்கு அருகண்மையில் உள்ள அந்தியூர் எனும் சிற்றூரில் பிறந்துள்ளார்.

டொரண்டோ நகரின் யார்க் பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்று, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஜெர்மனி, இசுரேல், சைப்ரசு, கனடா போன்ற நாடுகளில் பணிபுரிந்து விட்டு தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் இந்த உலகம் சுற்றும் வாலிபர்.

பதின்மம் கடந்த சில காலங்களிலேயே தாம் பிறந்து, வளர்ந்த கொங்குச் சீமையையும், அதன் கிராமங்களையும் விட்டு, வெகு தொலைவிற்கு புலம் பெயர்ந்தாலும், கிராமியத்தின் தொண்மைகளை அணு அணுவாக அனுபவித்து இரசித்ததன் பொருட்டும், வெள்ளந்தியான கிராம மக்களின் அரவணைப்பில் ஆளானதையும் சதா சர்வ காலமும் நினைத்து, நினைத்து அசை போட்டதுடன் அன்னை தமிழ் பால் கொண்ட மாறாத காதலின் விளைவினாலுமே இத்தகைய அருமையான கொங்கு தமிழ் வட்டார வழக்கு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் சிறு கதைகள் தாங்கிய " ஊர்ப் பழமை..........." எனும் நூலைப் படைத்துள்ளார்.

'பழமை பேசி' எனும் விருப்ப அடை மொழி கொண்ட ஆசிரியர் தன்னுரையில், வட்டார வழக்கினை எழுத்தாக்குவதற்கென்று, ஒரு நெறி முறையும், இலக்கண வரம்பும் இல்லாததால் சில குறைபாடுகள் இருப்பது இயல்பே என்று குறிப்பிட்டிருந்தாலும், தன்னுடைய கொங்குத் தமிழின் அழகு நடையினாலும், தனக்கே உரிய நகைச்சுவை மற்றும் பன்முகத் திறமையினாலும், வாசிப்போரைத், தன் வசம் கட்டியிழுத்து வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

ஆசிரியர் இந்நூலை , எழிலாய்ப் பழமை பேச........., பள்ளயம், மற்றும் நனவுகள் [சிறுகதைத் தொகுப்பு] என்று மூன்று பாகங்களாகப் பிரித்து வடிவமைத்துள்ளார்.

எழிலாய்ப் பழமை பேச...... என்ற பகுதியில், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட கணக்காயிரம் செய்யுளின் மூலமாக, கூப்பிடு தூரம் மற்றும் சாண், முழம் போன்ற பழங்காலக் கணக்குகளின் விளக்கங்களைத் தெள்ளத் தெளிவாகத் தொகுத்திருக்கிறார்.

'கோளாறு சொல்லுறவனைக் கூட்டத்துல சேர்க்காதே ' போன்ற சிந்திக்கத் தூண்டும் ஊர் மொழிகள்.

உழவுத் தொழிலில் இன்று மிக நவீனமான இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், ஆசிரியர் பழந்தமிழ் முறையிலான உழவுத் தொழிலினை '[ தாம்பு ஓட்டுற வேலை ] நம் கண் முன்னே விரித்துக் காட்டியுள்ளார்.

இன்றைய திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் அதிகம் பயன் படுத்துகிற ங்கொக்க மக்கா ' போன்ற வார்த்தைகளைக்கூட நையாண்டியாக விவரித்துள்ளார்.

' என்னோட சல்லடம் கிழிஞ்ச கதை ' என்ற பக்கத் தலைப்பில், ஆசிரியர் நகைச்சுவையாக விளக்கியிருக்கும் சம்பவம் நம் பண்டைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். கொங்குத் தமிழ் அகராதியுடன் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில், பல முக்கியமான வார்த்தைகளுக்கு ஆங்கில விளக்கமும் அளித்துள்ளார்.

கிராமத்துப் பகுதியில் ஆண்கள், மேல் துண்டு அணியும் வழக்கம் பரவலாக உள்ளது. அதன் பலவிதமான பயன்பாடு குறித்த ஆசிரியரின் விளக்கம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுச் செய்தியாகும்.

"கொங்குவள நாட்டிலே அன்புத் தேனும், விருந்தோம்பல் எனும் பழச்சாறும், ஊர் கூடித் தேரிழுக்கும் ஒரு மனம் கொண்ட சமூகப் பற்றும், எங்கும் வியாபித்திருக்கும் பல்வேறுத் தொழில்களை முனைந்துச் செய்யும் மக்கள், -செய்யும் தொழிலாலே மாறுபட்டு அடையாளம் காணப்பட்டாலும் கூட அவர்களிடத்தே சமூகப் பிணைப்பு இருந்தது," எனும் அவருடைய வியப்பில் இன்று அவ்வாறு இல்லையே என்கிற ஆதங்கமும் வெளிப்படுகிறது.

"மேற்கூறிய காரியங்கள் எல்லாம் கடந்த நூற்றாண்டில் நடந்தவை அல்ல, சுமார் பதினைந்து , இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கொங்குவள நாட்டில் ஈடேறியவைதான், இன்றைக்கு இந்த கட்டமைப்பு இருக்கிறதா? தொழில் வளம் பெருகி, சமுதாயம் வேளாண்மையிலிருந்து மற்ற மேம்பட்ட தொழில்களுக்குச் சென்று விட்டாலும் கூட அந்த உளவியல் கூறுகள் இருந்திருக்க வேண்டுமன்றோ ? இல்லை என்பதுதானே நிதர்சனம் ?" என்று தெளிவாக இன்றைய நிலையையும் விமர்சித்துள்ளார்.

கிராமத்தில் சொல்லக் கூடிய ஐந்தொகை, அதாவது விழுமுதல் [முதலீடு ], வரவு, செலவு, இருப்பு, ஆதாயம், இதனை ஒரு சிறு நிகழ்வைக் கொண்டு தெளிவுற விளக்கியிருப்பதுடன், இத்துடன் அமெரிக்கப் பொருளாதாரத்தையும் இணைத்து, ஒப்பிட்டு, சாமர்த்தியமாக விளக்கியுள்ளார், ஆசிரியர்.

தன்னுடைய இளவயதுச் சம்பவங்களையும் நினைவலைகளாக மண்ணின் மணம் மாறாது அழகாகத் தொகுத்துள்ளார். அங்கங்கே இலக்கண விளக்கமும் உண்டு.

பள்ளயம்

இப்பகுதியில் அந்தச் சொல்லுக்கான விளக்கத்துடன், நாட்டுப் புற பாடலும், இனிமையாகப் பதிவாக்கியிருக்கிறார் பழமைபேசி !.

பிறந்த நாள் நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்றும், ஏன் பிறந்த நாள் கொண்டாடுபவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்கும் சில ருசியான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.

கவி காளமேகப் புலவர், அபிராமிப் பட்டர் பாடல்களை ஆய்வு செய்திருப்பதோடு அதனை ஆங்கில ஆக்கமும் முயற்சித்துள்ளார்.

இந்தியப் பாதுகாப்பு என்கிற தலைப்பில் குற்றங்களும், தண்டனைகளும் குறித்துத் தெளிவாகத் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஆசிரியர், இரசியா, சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான திட்டங்கள் மற்றும் பண வீக்கம் வரும் என்பதற்கான எச்சரிக்கை அனைத்தையும் கூறியுள்ளார். [இன்னும் சிறிது விளக்கமாகக் கூறியிருக்கலாமோ ?]

" இந்தியா தன்னோட பாதுகாப்புக்கும், வலுவான பொருளாதாரத்துக்கும் ஆனதைச் செய்யணும், யாருக்கும் வளைஞ்சி கொடுக்கக் கூடாது"............. போன்ற ஆக்கப்பூர்வமான எண்ணங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

எள்ளுத் தாத்தா வைத்தியத்தையும் விட்டு வைக்கவில்லை இந்த வித்தகர்.
போர்க்களத்து வீரர்கள் சிலை குறித்த ஆசிரியரின் வியாக்கியானம், புதியத் தகவல்கள்.

பெண் விடுதலை குறித்த மேன்மைச் சிந்தனை, சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான ஆய்வுக் கட்டுரைகள்.

Blogல் கண்டதையும் எழுதுகிற மொக்கை ஆசாமிகளையும் சாடியிருக்கும் துணிச்சல்.

ஆசிரியரின் பார்வையில் கொடுமைகள் எத்தனை கொடுமையப்பா..............

புலவர்கள் வாழ்ந்த காலம் குறித்த ஆசிரியரின் குறிப்புகளின் மூலம் பல அரியத் தகவல்கள் கிடைக்கின்றன.

உண்மைக்கு எதிர்ப்பதம் பொய் என்பதைவிட இன்மை என்பதே சாலப் பொருந்தும் என்பதற்கான அழகான விளக்கங்களும் அளித்துள்ளார்.

அமெரிக்கத் தலைநகரின் இலக்கியக் கூட்டங்கள், ஆய்வுப் பணிகள் குறித்தக் கண்ணோட்டம் மற்றும் கவி காள மேகப் புலவரின் தாக்கம் அதிகம் கொண்டவரான ஆசிரியர் கனவில் கவி காளமேகம் என்ற தலைப்பில் நகைச்சுவையுடன் கலந்த இலக்கண விளக்கமும் மற்றும் கொங்குத் தமிழ் அகராதியும் அழகாகவேத் தொகுத்துள்ளார்.

நனவுகள்

இப் பகுதியில் கொங்குத் தமிழ் வட்டார வழக்கு நடையில் சுவை மிகுந்த சிறு கதைகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.'சிறுகதை' எப்படி இருக்க வேண்டும் என்பதை சுவை பட தன் பாணியில் விளக்கியுள்ளார்.

ஆக ஆசிரியரின் "ஊர்ப் பழமை......." என்கிற இந்நூல், அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரக் கூடிய , ஜனரஞ்சகமான ஒரு நூலகம் என்றால் அது மிகையாகாது.

"எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும்
கடைசியா இனத்துல வந்துதான் அடையணும் !

இதுவே ஆசிரியரின் தன்னிலை விளக்கமாகக் கொள்ளலாமோ?


13 comments:

  1. இந்நூலும்... அதன் ஆசிரியரும்.... பெரிதும் போற்றத்தக்கவர்கள்....

    நல்ல விமர்சனம்.... பகிர்வுக்கு நன்றி.....

    ReplyDelete
  2. / "எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும்
    கடைசியா இனத்துல வந்துதான் அடையணும் !
    இதுவே ஆசிரியரின் தன்னிலை விளக்கமாகக் கொள்ளலாமோ?/

    தன்னிலை விளக்கம் மட்டுமல்ல. எல்லாருக்கும் மண்டையில குட்டி புரிய வைக்கிற சொலவடை இது.

    ReplyDelete
  3. நன்றி. ஆம் நன்றாகச் சொன்னீர்கள், அகல்விளக்கு.

    ReplyDelete
  4. ஆம், ஆம், கண்டிப்பாக. எத்தனைக் குட்டினாலும், புரிந்தால்தானே.............

    ReplyDelete
  5. மிக்க நன்றிங்க; மற்றவருடன் உங்கள் இடுகையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  6. நன்றிங்க பழமைபேசி. தாங்கள் மற்றவர்களுடன் இடுகையைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே!

    ReplyDelete
  7. புத்தக ஆய்வுக்கு நன்றி; படிக்க வேண்டியவற்றில் சேர்த்துக் கொள்கிறேன்.
    பழைமைபேசி சிகாகோ வந்திருந்த பொழுது சந்திக்க வாய்ப்பு சரியாக அமையாததில் எனக்கு வருத்தம்; உங்கள் பதிவு படித்ததும் அதிகமாகி விட்டது.

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  9. நன்றிங்க அப்பாதுரை. உண்மையிலேயே படித்து சேமித்து வைக்க வேண்டிய புத்தகம்.

    ReplyDelete
  10. நல்ல பகிர்வுங்க... கற்றுக்கொள்ளக்கூடிய எத்தனையோ சொற்கள் இந்த புத்தகத்தில் புதைந்துள்ளன... படித்துக்கொண்டேயிருக்கிறேன்..

    ReplyDelete
  11. நன்றாகச் சொன்னீர்கள். ஒரே மூச்சில் படிக்க முடிந்தது என்னாலும். நன்றிங்க.

    ReplyDelete