Wednesday, September 15, 2010

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்





செவிக்குணவில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.

வயிற்றிற்கு ஈயப்படும் அந்த உணவு நாக்கிற்கும் சுவையாக இருந்தால் மட்டுமே, அது மனதையும் நிறைக்கும். மனது நிறையும் பொழுது, இயல்பான அமைதி நிலை பெற்று விடும். ஆக அமைதியான வாழ்க்கைக்கு சுவையான உணவே அடிப்படையாகும். அதே வேளையில் நல்ல சத்தான உணவும் அவசியமாகும். எந்தெந்த உணவு வகையில் என்னென்ன சத்து உள்ளதென்பதன் விழிப்புணர்வு இருந்தால் போதும். சரிவிகித உணவு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

'நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்', என்று சர்வ அலட்சியமாக சொல்லக் கூடியதாக இருப்பினும், இந்தக் காளான், கொழுப்புச் சத்து இல்லாத, குறைந்த கலோரிகளே உடைய, கனிமச் சத்து நிறைந்த ஒரு சத்தான உணவு வகையாகும். சில வகைக் காளான்கள், நோய் எதிர்ப்புச் சக்தியின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிற தாவர வேதியியல் பொருட்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

இந்த காளான்,[Mushroom] பண்டைய நாகரீகத்திலும் சிறந்த உணவு வகையாகவும், மருந்து வகையாகவும் பயன் படுத்தப் பட்டுள்ளது. கற்காலத்தில், உலர்ந்த காளான்களை மரத்தூள்களைப் போன்று பயன்படுத்தி, பாதுகாக்கப் பட்ட, 5000 வருட பழமையான, பனிக்கட்டி மனித உடல், [Qetsi, the Iceman] ஆஸ்திரிய ஆல்ப்ஸில் கண்டுபிடிக்கப் பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

காளான், ஆசிய உணவு வகைகளில், பல்லாண்டுகளாக முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஜப்பானிய விஞ்ஞானிகள் இந்தக் காளான்களின் ஆரோக்கிய அனுகூலம் குறித்த ஆராய்ச்சியில் முன்னனி வகிக்கிறது. ஜப்பானிய ஆய்வின் படி சில வகைக் காளான்கள், நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிப்பதுடன், புற்று நோயை எதிர்த்துப் போராடுவதிலும் பெரும் பங்காற்றுகிறதாம். மேலும், சரவாங்கி, மூட்டு வலி போன்ற நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாகவும் உள்ளதாம். இதில் உள்ள 'க்ளுடமிக்'[glutamic acid] என்கிற அமினோ அமிலம், தொற்று நோய்களை எதிர்த்துப் போராடக் கூடிய வல்லமை வாய்ந்ததாகும்.

இதிலுள்ள மற்றொரு பொருளான 'எரிடாடினைன்', கொழுப்புச் சத்தை குறைப்பதுடன், அதிகப் படியான
கொழுப்பை வெளியேற்றச் செய்யக் கூடியத் திறனும் படைத்ததாகும். சில ஆய்வுகள் இதய நோய்கள் மற்றும் இரத்தக் கொதிப்பையும் கட்டுப் படுத்துவதாகவும் நிரூபித்துள்ளன. இதிலுள்ள போட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாகும்.

எளிதாகக் கிடைக்கக் கூடிய வெள்ளைக் காளான்களில், பெருஞ்சுரப்பி புற்று நோயைத் [prostate cancer] தடுக்கக் கூடிய 'செலீனியம்' நிறைந்துள்ளது. ஒரு அமெரிக்க ஆய்வின்படி, தங்கள் இரத்தத்தில் மிகக் குறைந்த அளவிலான செலீனியம் கொண்டிருப்பவர்கள், தேவையான அளவிலான [55mcg] செலீனியம் கொண்டிருப்பவர்களைவிட நான்கு அல்லது ஐந்து மடங்கு , அதிகமாக Prostate cancer வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக கண்
டுபிடித்து உள்ளனர்.

அதிகளவில் க்ளுடமிக் அமிலம் நிறைந்திருப்பதன் காரணத்தினாலேயே காளான்கள் இயற்கையிலேயே நறு மணம் உடையதாக இருப்பதால், பல உணவுப் பண்டங்களுக்கு, மேலும், சுவையை
யும், மணத்தையும் அதிகப் படுத்தி, உண்ணும் ஆவலையும் தூண்டுகிறது.

நல்ல சுவையாக உண்ண விரும்புபவர்களே நன்கு சுவையாக சமைக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்பது முதுமொழி. அந்த வகையில் அடியேனும், நன்கு சமைக்கக் கூடியவளே. சில சூப்பரான காளான் ரெசிப்பிக்களைப் பார்க்கலாமா?

காளான் சாப்ஸ் [Mushroom chops]
தேவையான பொருட்கள்;

காளான் - 400 கி. [2 பாக்கெட்]
வெங்காயம் 2 பெரியது.
வெண்ணெய் - வதக்க
புளி - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிது

அரைத்துக் கொள்ளவும்;

பூண்டு - 6 பல்
இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
சிகப்பு மிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை;

1. ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்து கொள்ளவும். இதில் காளான்களைப் போட்டு கழுவி எடுக்கவும். இதே போல் 4 முறை கழுவிக் கொள்ளவும்.

2. ஈரம் போக ஒரு துணியின் மேல் பரப்பி வைக்கவும்.

3. ஒவ்வொன்றையும் ஒரெ மாதிரி அளவாக 6 அல்லது 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

4. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

5. புளியை சிறிது நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

6. அரைத்த பொருட்களை புளிக் கரைசலுடன் சேர்க்கவும்.

7. இந்தக் கலவையில் 1/2 மணி நேரம் காளான்களைப் போட்டு ஊற வைக்கவும்.

8. வெங்காயத் தாளின் மேலே உள்ள வெங்காயத் தாள்களை பொடியாகவும், வெங்காயத்தை வட்டமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

9. நறுக்கிய வெங்காயத் தாள்களை அலங்கரிப்பதற்கு வைத்துக் கொள்ளவும்.

10. வட்ட வடிவ வெங்காயத்தை வெண்ணையில் பொன்னிறமாக வதக்கி தனியே வைக்கவும். [அலங்கரிப்பதற்கு]

11. வாணலியில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

12. அரைத்த கலவையில் ஊற வைத்த காளான்களை கலவையுடன் அப்படியே வாணலியில் சேர்க்கவும்.

13. இதை ஈரம் நன்றாக வற்றும் வரை நன்கு வதக்கி தீயை அணைக்கவும்.

14. பரிமாறும் கிண்ணத்தில் மாற்றியதும் வதக்கிய வெங்காயத்தையும், வெங்காயத் தாளையும் அலங்கரித்து பரிமாறவும்.

11 comments:

  1. வாய்க்கு ருசியாக சமைத்து உண்பதைக் குறித்து நீங்கள் சொல்லி இருக்கும் விதமே அபாரம். அதனுடன், காளான் ரெசிபி வேறு..... சான்சே இல்லை..... தொடர்ந்து இப்படி அசத்துங்க!

    ReplyDelete
  2. நன்றி சித்ரா. கண்டிப்பாக செய்கிறேன்.

    ReplyDelete
  3. வாவ். எனக்கு காளான் ரொம்ப பிடிக்கும். இதுவரை சூப் அல்லது பட்டாணியுடனான சப்ஜியாகவே சாப்பிட்டு வந்தேன். இது வித்யாசமாய் இருக்கிறது. கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. அப்புறம் உங்க பேர் என்ன?

    டிஸ்ப்ளே நேம் பெரிசா இருக்கே. அதான்:))

    ReplyDelete
  5. நன்றி வித்யா, என் பெயர் பவள சங்கரி. நல்லாயிருக்கா வித்யா? நித்திலன் என் பேரன் [மகனின் குழந்தை]. போட்டோ பாருங்க வித்யா. பிளாக்ல இருக்கிற போட்டோதான். உடன் இருப்பது என் மகளின் குழந்தை ஹர்ஷினி. இரண்டு பேரும் எப்படி இருக்காங்க வித்யா?

    ReplyDelete
  6. ஒ. க்யூட்:)

    என் மகனுக்கு மூன்றேகால் வயதாகிறது:)

    ReplyDelete
  7. ஓ அப்படியா, அழகு....அழகு.....

    ReplyDelete
  8. ரொம்ப நல்ல பதிவு... i like mushroom... :x

    ReplyDelete
  9. நன்றி ப்ரியா. இன்னும் 2 ரெசிபி தருகிறேன் முயற்சி செய்து பாருங்கள்.

    ReplyDelete
  10. அருமையான பதிவு நித்திலம்.காளானுக்கு புளி சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.தேசிக்காய் புளி நல்லது.காளானை வதக்கி பிரட்டல் கறியாகச் சமைத்துப் பாருங்கள்.இறைச்சிக் கறிபோலவே சுவையாக இருக்கும்.

    ReplyDelete
  11. நன்றிங்க ஹேமா. பிரட்டல் கறி செய்து பார்க்கிறேன். நன்றி ஹேமா.

    ReplyDelete