Thursday, October 7, 2010

மௌனம் பேசியதே !

நிலாவே வா.........செல்லாதே வா.......
எனை நீதான் பிரிந்தாலும்....நினைவாலே அணைப்பேனே...............கவிஞர் வாலி அவர்களின், நம் நெஞ்சுக் குழியைத் தீண்டிய பாடல் அது......

இன்றைய அதிவேக பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. அதற்கான ஏராளமான வாய்ப்புக்களும் குவிந்துக் கிடக்கிறது......திருமணம், குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை என்று பார்க்கும் போது....... இன்றைய திருமண பந்தம் என்ற கட்டமைப்பின் ஆணி வேரே ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது....... சகிப்புத் தன்மை, சரியான புரிதல், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இதற்கெல்லாம் சிலர் வாழ்க்கையில் அர்த்தமற்றுப் போகிறது.........

என் தோழி மேகலா, ஒரு தனியார் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணிபுரிபவர். பொறுப்பான பதவியில் இருக்கும் இவர் உண்மையான உழைப்பாளி. தன்னுடைய 35 வயதில் கம்பெனியில் தன் திறமையை நிரூபித்து, பதவி உயர்வு, பல போட்டிகளுக்கிடையே பெற்று, அந்த உன்னதமான தருணத்தை கணவருடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற பேராவலுடன் வீடு தேடி ஓடி வருகிறார். வேலை முடித்து வீட்டில் ஓய்வாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் கணவரிடம் உற்சாகமாகத் தனக்குக் கிடைத்த பதவி உயர்வு பற்றிக் கூறியவுடன், அவர், " அப்படியா, வெரிகுட், கங்கிராட்ஸ்" என்று கூறிவிட்டு தொடர்ந்து அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்......

எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் கணவரைக் காண ஓடி வந்த மேகலாவின் வெற்றியில் அவருக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், வழக்கம் போல, அவர் அதிகம் பேசவும், மனைவி பேசுவதைக் கவனிக்கவும் விரும்பவில்லை. நூறாவது முறையாக இது போன்ற பிரச்சனையினால், ஆச்சரியப்பட்டு போனார் மேகலா! அவரிடம், "என்னதான் பிரச்சனை உங்களுக்கு", என்று வெளிப்படையாகக் கேட்டாலும் "அதெல்லாம் ஒன்றுமில்லை நான் நல்லாத்தானே இருக்கேன்", என்று ஓரிரு வார்த்தையில் பதில் சொல்லி மேற்கொண்டு வாதம் வளராமல் முடித்து விடுவார்.

இதில் உண்மை என்னவென்றால், அதிகப்படியான இந்த அமைதி அவர்கள் உறவையே பாதிக்கக் கூடும். கணவனின் இந்த அலட்சியப் போக்கு, தனிமையில் அவர்கள் இனிமையாகக் கழிக்கக் கூடிய பொழுதைக் கூடப் பாதிக்கக் கூடும்.......

50 முதல் 70 சதவிகித திருமணங்களில் பிரச்சனை வருவதற்கு இது போன்று பேச வேண்டிய நேரங்களில் கூட அதீத அமைதி காப்பதும் கூடக் காரணமாகிறது. பெரும்பாலான பெண்களின் பெருங்குறையே தன் கணவர், தன் நண்பரிடமும், உடன் பணிபுரிபவரிடமும் பேசுவது போல தன்னிடம் வெளிப்படையாகப் பேசுவதில்லை என்பதுதான்.

திருமணம் ஆன ஆரம்பக் காலத்தில், மனைவியை வசீகரிப்பதற்கும், தன்னை நிரூபிப்பதற்காகவும் அதிகம் பேசுகின்ற ஆண்கள், வெகு விரைவிலேயே மௌனமாகி விடுகின்றனர். அதாவது தேவையான நேரங்களில் கூட அதிகம் பேச விரும்பாதவர்களாகி விடுகின்றனர். ஆனால் இதற்கு மாறாக, தன் கணவனைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளும் வரை அதிகம் பேசாத பெண்கள் பிற்பாடு, ஏகபோக உரிமை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விடுகின்றனர்.

பெரும்பாலும் கணவன் மனைவிக்குள் பேச்சு வார்த்தைகள் சுமுகமான நிலையில் இல்லாததற்கான ஒரே காரணம் அவர்கள் இருவரும் ஒரே விடயத்தைப் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் கொண்டிருப்பதுதான். மன நிறைவான திருமண பந்தம் இல்லாத பெரும்பாலான மனைவிகள் சொல்லக் கூடிய கீழ்கண்ட மூன்று குற்றச்சாட்டுக்களே அதற்குச் சான்றாகும்.

1. கணவர் தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்வதே இல்லை!

பெரும்பாலான மனைவிமார்களின் குறை, தன் கணவன் தன்னுடைய சோகத்தையும், பிரச்சனைகளையும் தன்னுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் தயக்கம் காட்டுவதுதான்! அவர்களுடைய பிரச்சனையான நேரங்களில் ஆழ்ந்த மௌனம் சாதிக்கும் ஆண்களின் போக்கு பல நேரங்களில் மனைவியை நிலை குலையச் செய்துவிடுகிறது. மனோத்தத்துவ நிபுணர்கள் கூறும் இதற்கான காரணம், ஆண்களும், பெண்களும் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் உள்ள வித்தியாசங்கள் தான். பெண்களைப் போன்று ஆண்கள் வெளிப்படையான எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பதில்லை. அவர்கள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துக் கொள்வது ஆண் தன்மைக்கு பொருத்தமற்ற, தேவையற்ற செயலாக போதிக்கப் பட்டு வளர்க்கப்படுவதுதான். இதனாலேயே பெரும்பாலான ஆண்கள் தங்கள் பிரச்சனைகளை மனைவியுடன் கலந்தாலோசித்து தீர்வு காணும் உபாயத்தை இழந்து விடுகின்றனர்.

2. கணவர் தன்னைப் புறக்கணிக்கிறார்!

பெண்களைப் போன்று ஆண்கள் வெளிப்படையாகப் பேசாசதால்தான் தங்களைப் புறக்கணிப்பதாக மனைவி எண்ணுகிறார்.

ஆண்களுக்கு குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் எதிர்காலம், என்பன போன்ற முக்கிய விடயங்கள் மட்டுமே பேசுவதைத் தவிர, வேறு தன்னுடைய நிதி நிலைமை மற்றும் பிரச்சனைகள் குறித்து தேவையில்லாமல் மனைவியிடம் புலம்புவதில் அவசியம் இல்லை என்று கருதுகின்றனர்.

3. அவர் மற்றவர்களிடம் பேசுவதைப் போல என்னிடம் பேசுவதில்லை!

சில மனைவிகளின் பெரும் குறையே, கணவர் அன்றாடம் வேலையிலிருந்து திரும்பியவுடன், வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் தன்னிடம் நாலு வார்த்தை அனுசரணையாக பேசுவதற்குக் கூட மனமில்லாமல், தான் மிகவும் களைப்பாக இருப்பதாகக் கூறுவதுதான். ஆனால் இதே கணவன், தன்னுடைய நண்பர் வந்தாலோ, தொலைபேசியில் அழைத்தாலோ, உற்சாகத்துடன் பேசுவது கண்டு இவர்கள் நொந்து நூலாகிப் போய்விடுகிறார்கள்!

பெண்களுக்கு, கணவனின் ஆதரவான அந்தப் பேச்சுதான் தன்னிடம் அக்கறையும், நெருக்கத்தையும் உணர்த்துவதாக உள்ளது. தொழில் சம்பந்தமாகப் பேசிப் பேசி அலுத்துப் போய் வீடு திரும்பும் ஆண்கள் எந்த விதமான கருத்துப் பரிமாற்றமும் இல்லாமல் அமைதியாக இருக்கவே விரும்புகின்றனர்.

இது போன்ற வேறுபாடுகளைத் தவிர்த்து, கணவனும், மனைவியும் சுமுகமாகப் பேசி ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கண்டு, ஆனந்தம் அடைய ஒரு சில வழிகள் உண்டு. அது பற்றிப் பார்க்கலாம்............

1. சரியான நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்!

ஏதாவது முக்கியமான விடயம் பற்றி பேசி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில், கணவனுக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாலும் அவர் வந்தவுடன் பிரச்சனையை ஆரம்பிக்காமல், இன்னும் சற்றே பொறுத்திருந்து, அவருக்கு ஏதாவது காபி, பலகாரம் கொடுத்து உபசரித்து, பின்பு அவர் அமைதியானவுடன் பேச ஆரம்பிக்க வேண்டும்.

2. அவகாசம் கொடுக்க வேண்டும்......

பல நேரங்களில் கணவன் முக்கியமான, தன்னுடைய கேள்விக்கு விடையளிக்காமல் மௌனம் சாதிப்பதைக் கண்டு பொறுக்காத மனைவி, திரும்பத் திரும்ப அதையேக் கேட்டு நச்சரிப்பதால் மேலும் இறுக்கம் அதிகமாவதுடன், அவருக்குச் சலிப்புத்தான் ஏற்படும். இது போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டுமானால், கணவர் பதில் சொல்ல விரும்பாத அந்த அமைதியை கலைக்காமல், அவரைப் பொறுமையாக அமைதியாகப் பார்க்க வேண்டும். அதாவது, பார்வையால் பேச வேண்டும். அப்பொழுதும் பதில் கிடைக்கவில்லை என்றால், அவரை மெதுவாக பேச வைக்கும், விதமாக, அவர் மனதில் நினைப்பதை பேசுவதில் என்ன சிரமம் என்பதை அனுசரணையாகக் கேட்க வேண்டும். அதற்கும் பதில் இல்லையென்றால், அந்தக் குறிப்பிட்ட விடயம் பற்றி அடுத்த நாள் பேசலாம் என்று, அதற்கான பதிலைத் தான் அடுத்த நாள் எதிர்பார்ப்பதை புரியவைக்க வேண்டும்.

3. பயணங்கள் செல்லலாம்!

பொதுவாகக் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் பெற்றோர், அது தவிர மற்ற விடயங்களைப் பற்றி பேசுவதற்கு அதிக நேரம் செலவிட முயற்சிப்பதில்லை. பொழுதுபோக்குகள், தோட்டப் பராமரிப்பு அல்லது சுற்றுலாப் பயணங்கள் என்பன போன்ற குடும்பத்துடன் சேர்ந்து செலவிடும் சூழ்நிலைகளை நல்லவிதமாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

4. அக்கறையும், ஈடுபாடும் தேவை.

இவை அனைத்தையும் விட மிக முக்கியமானது கணவர் பேசும் போது அந்தப் பேச்சில் கவனம் வைத்து மற்ற வீட்டு விடயங்களைப் பற்றி மனதை அலை பாய விடாமல், அதிக வாதம் செய்யாமல், தேவையான விடயங்களுடன், அக்கறையுடன் பேச ஆரம்பித்தாலே, நல்ல முறையில் உரையாடல், ஆக்கப்பூர்வமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

5. புகார் வேண்டாமே?

பொதுவாகப் பெண்கள் எப்பொழுதும் புகார் கூறுபவர்களாகவே இருப்பதால்தான் சண்டை வரும் வாய்ப்பு ஏற்படுவதாகக் கூறுகின்றனர் மனோத்தத்துவ நிபுணர்கள். இதனாலேயே பல ஆண்கள் உரையாடலைத் தவிர்க்க முயற்சிக்கிறார்கள். இதனைத் தவிர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான, நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய வாதத்தைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நடந்து முடிந்த பழைய தவறுகளையே சுட்டிக் காட்டி குறைகூறிக் கொண்டிருப்ப்பது, " நீங்க எப்பப் பார்த்தாலும் இப்படித்தான்", என்பன போன்ற வசனங்களையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

எந்தத் தவறாக இருந்தாலும் முழுப்பழியையும் தூக்கி கணவர் மீதே போடக் கூடாது. உதாரணமாக, கணவர் விரும்பாத ஒரு விருந்திற்கோ, விசேசத்திற்கோ, போக வேண்டியச் சூழலில், அவருடைய வெறுப்பான முகபாவத்தைத் தாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும், அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயல வேண்டும். தன்னுடைய எண்ணத்தைப், பொறுமையாக, இனிமையாக, எடுத்துரைத்து, அந்தச் சூழ்நிலையை யதார்த்தமாகக் கையாள வேண்டும். இதற்கு மிகுந்த சுய கட்டுப்பாடு அவசியமென்றாலும் இதற்குரிய பலன் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

மேற்கண்ட இத்தனை முயற்சிகளுக்கும் பலன் இல்லாவிட்டால், கண்டிப்பாக கணவனின் நடவடிக்கையில் அக்கறையுடன் கவனம் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திருமண கவுன்சிலிங் தெரபி மூலம் முயற்சி செய்யலாம்.

21 comments:

  1. இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

    ReplyDelete
  2. //தன் கணவனைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளும் வரை அதிகம் பேசாத பெண்கள் பிற்பாடு, ஏகபோக உரிமை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விடுகின்றனர்.//

    அட...அட....!!!!!சரியாச் சொன்னீங்க

    இவை அனைத்திற்கும் மேலாக, கேட்டால் மட்டுமே யோசனை சொல்லும் மனப்பக்குவம் பெண்களுக்கு வேண்டும். நடந்து முடிந்த அல்லது நமக்கு சம்மந்தமே இல்லாத ஒரு விடயத்தைப் பற்றி பேசினால் கூட அதற்கும் ஒரு யோசனை சொல்லுவதாலே ஆண்கள் எதைப்பற்றியும் பேச முடியாத நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.

    நல்ல பகிர்வு...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அப்படீங்களா ஆரூரரே, இனிமேல் சாப்பிடுவதற்காக மட்டும் வாய் திறக்க முடிவெடுத்தால் கூட சந்தோசப்படுவீங்களா அப்பூ.......நன்றி.

    ReplyDelete
  4. இன்றைய சூழலில், கணவன் மனைவிக்குள் புரிதல் என்பது மிகக் குறைந்து வருவதே பல பிரச்சனைகளுக்கு வித்திடுகிறது. அவசியமான பகிர்வு.

    ReplyDelete
  5. நன்றிங்க அம்பிகா.

    ReplyDelete
  6. // வெகு விரைவிலேயே மௌனமாகி விடுகின்றனர்//

    பேச வாய்ப்பு கிடைகிறது இல்லையாம்

    ReplyDelete
  7. பேசினால் தான் பிரச்சனையே இல்லையே.......நன்றிங்க நசரேயன்.

    ReplyDelete
  8. பிரச்சினையின் மையத்திற்கே போயிருக்கிறீர்கள்.. காதல் திருமணங்களில் கருத்தொருமித்தல் அதிகம் என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும் துணையின் நலனையும் வெற்றியையும் கொண்டாடும் பக்குவம் அதிகம் என்று நினைக்கிறேன்.

    திருமணம் வெருமணமாகப் பொருளாதார வளர்ச்சியா காரணம்?

    ReplyDelete
  9. நித்திலம்..மிகத் தெளிவான பதிவு.நிச்சயம் மனதில் படியவைக்கவேண்டியதும்கூட.

    இன்றைய இளம் தம்பதியினருக்கு பேசவே நேரமில்லை.பிறகெப்படி மனம்விட்டுப் பேசுவது !

    ReplyDelete
  10. நன்றிங்க அப்பாதுரை சார். நீங்கள் சொல்வதும் சரிதான். துணையின் நலம் கொண்டாடும் பக்குவம் எதுவரை என்பதுதானே கேள்வி? வெகு எளிதாக எல்லாமே மாறி விடுகிறதே! பொருளாதாரமும் ஒரு காரணமாக இருக்கிறதே? ஓடி, ஓடி உழைத்துக் கொண்டு, மனம் விட்டுப் பேசக்கூட நேரமில்லாமல்........

    ReplyDelete
  11. நன்றிங்க ஹேமா. நன்றாகச் சொன்னீர்கள். பேசுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா?

    ReplyDelete
  12. இன்றைய காலத்திற்கு ஏற்ற அறிவுரைகள். நன்றி

    ReplyDelete
  13. அழகிய ஐந்து யோசனைகள்...

    ReplyDelete
  14. நன்றிங்க ஸ்ரீராம்.

    ReplyDelete
  15. 50 முதல் 70 சதவிகித திருமணங்களில் பிரச்சனை வருவதற்கு இது போன்று பேச வேண்டிய நேரங்களில் கூட அதீத அமைதி காப்பதும் கூடக் காரணமாகிறது.////

    உண்மைதான்

    ReplyDelete
  16. நன்றிங்க அமைச்சரே.

    ReplyDelete
  17. தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
    http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_09.html

    ReplyDelete
  18. நன்றிம்மா வித்யா.

    ReplyDelete
  19. நல்ல கருத்துகள் , தெளிவான சிந்தனை... வாழ்த்துகள். / தொடர்ந்து என் தளத்திற்கும் வருகைதாருங்கள்...

    ReplyDelete
  20. நன்றிங்க தங்கதுரை.

    ReplyDelete